01

01

க.பொ.த உயர் தர பரீட்சை 9ம் திகதி ஆரம்பம், சகல ஏற்பாடுகளும் பூர்த்தி; புலமைப் பரிசில் 22 இல்

commissoner.jpgக. பொ. த. உயர்தர பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை என்பன முறையே எதிர்வரும் 9ம் திகதி மற்றும் 22ம் திகதி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் செப்டம்பர் 3ம் திகதி வரை நடைபெறவுள்ள க. பொ. த. உயர்தர பரீட்சைக்கு இம்முறை 55,000 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உட்பட 2 இலட்சத்து 68,000 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

1,940 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சைகள் நடைபெறுவதுடன் தேசிய அடையாள அட்டையை பரீட்சார்த்திகள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்றும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்தார். புனர்வாழ்வு முகாமிலுள்ள 400 முன்னாள் போராளிகளும் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். புனர்வாழ்வு முகாமிலேயே பரீட்சை நிலையங்கள் அமைக்கப் படவுள்ளன.

எதிர்வரும் 22 ஆம் திகதி 3500 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ள 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் இம்முறை 3,14,000 மாணவர்கள் தோற்றவுள்ளனர். கடந்த காலங்களில் நடைபெற்றதைப் போன்றே இம்முறையும் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

இடம்பெயர்ந்துள்ளவர்களுள் சுமார் 500 மாணவர்கள் இம்முறை இப்பரீட்சைக்கு தோற்றவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். க. பொ. த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றுபவர்களுக்குரிய அனுமதி அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன என்றும் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்