வன்னியில் மக்களை மீள்குடியமர்த்தும் அரச அதிகாரிகளுக்கும் படையினருக்குமிடையில் இணைந்த செயற்பாடுகள் இல்லாத காரணத்தினால் மீள்குடியேற்றத்திற்காக அழைத்து வரப்படுகின்ற மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வகையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மயில்வாகனபுரம். குமாரசாமிபுரம் பகுதிகளில் மீள்குடிமர்த்தப்படுவதற்காக அழைத்துச செல்லப்பட்ட 301 குடும்பங்கள் படையினர் அனுமதி மறுத்தமையினால் குடியமர முடியாத நிலை எற்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வெடிபொருட்கள் இன்னமும் அகற்றப்படாமலுள்ளதால் அப்பகுதிகளில் மக்கள் மீள்குடியமர அனுமதியில்லை என படையினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அம்மக்கள் பாடசாலைக் கட்டங்களில் அடிப்படை வசதிகளின்றி தங்கயிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளிலுள்ள படையினருடன் சரியான அனுமதியினைப் முதலிலேயே பெற்று மக்களை மீள்குடியமர்த்தும் பணிகளை மேற்கொண்டால் மக்கள் இவ்வாறு அலைக்கழிக்கப்படுவதும், துன்பங்களுக்குள்ளாவதும் தவிர்க்கப்படலாம் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கிளிநொச்சி பொன்னகரில் மீள்குடியமர அழைத்துச் செல்லப்பட்ட பொதுமக்கள் படையினரால் திருப்பியனுப்பப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி பொன்னகரில் மக்கள் மீள்குடியமர படையினர் தடைவிதித்துள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு!