03

03

வன்னியில் முந்நூறுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பயிற்சி பெறும் வகையில் தொழில்நுட்ப நிறுவனங்கள்

வன்னிப் பிரதேசத்தில் இம்மாத முடிவுக்குள் பத்து தொழிற் பயிற்சி நிலையங்களை அமைப்பதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இத் தொழிற் பயிற்சி நிலையங்களை அமைப்பதற்கான கட்டடங்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் இன்று 2ம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபையின் வன்னி பிராந்திய பணிப்பாளர் ரி. விணோதராஜா நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார்.

இத் தொழிற் பயிற்சி நிலையங்கள் கனடா நாட்டின் உலக பல்கலைக்கழக சேவைகள் நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப் படவிருப்பதாகவும் அவர் கூறினார். இதேவேளை, இந்திய அரசாங்கம் சகல வசதிகளையும் கொண்ட தொழிற் பயிற்சி நிலையமொன்றை இரண்டு ஏக்கர் நிலத்தில் வவுனியா ஓமந்தையில் அமைப்பதற்கு முன்வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், வன்னிப் பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்துள்ள இளைஞர், யுவதிகளுக்குத் தொழிற் பயிற்சி அளிக்கும் நோக்கில் இம்மாத முடிவுக்குள் பத்து தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.

இந்த தொழிற் பயிற்சி நிலையங்கள் மாந்தை கிழக்கு, பூநகரி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று, மன்னார் மாவட்டத்தில் இரண்டு என பத்து நிலையங்கள் அமைக்கப்படும். தற்போது வன்னி பிரதேசத்தில் ஒரே ஒரு தொழிற் பயிற்சி நிலையம் கிளிநொச்சி நகரில் அமைக்கப்பட்டு இயங்குகின்றது.

இத் தொழிற் பயிற்சி நிலையங்களின் அமைப்பு பணிகள் பூர்த்தியானதும் உடனடியாக ஆறு மாத கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படும். மேசன், தச்சுத் தொழில், அலுமினியம் பொருத்துதல், வெல்டிங்க், மோட்டார் சைக்கிள் திருத்துதல், படகுகளில் இணைக்கப்படும் மோட்டார்களைத் திருத்துதல் ஆகிய கற்கைகள் தொடங்கப் படவுள்ளன.