கைது செய்யப்பட்டுள்ள சக்வித்தி ரணசிங்க என்றழைக்கப்படும் அபய ரணசிங்கலாகே சந்தன வீரகுமாரவை தடுத்து வைத்து இரகசிய பொலிஸாரினால் விசாரணைக்குட் படுத்துவதற்கான உத்தரவு நேற்று பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார். நிதி மோசடி யில் ஈடுபட்ட தாகக் கூறப்படும் இவருக்கு எதிராக 1870 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
மிரிஹான பொலிஸாரினால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கைதான இவர் இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். கோட்டும் சூட்டுமாக திரிந்த அவர் அடர்ந்த தாடி வளர்த்த நிலையில் முற்றாக தன்னை மாற்றிக் கொண்டிருந்தார்.
சக்தி ஹவுஸ் கண்ஸ்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடட், ஐ. ரி. மெனேஜ்மண்ட் சொலியூஷன் இன்ஸிடியூட், சக்ஸஸ் இன்டர்னேஷனல் ஸ்கூல் அன்ட் சக்வித்தி செகுரீடி மேன்பவர் சொலியூஷன் போன்ற நிறுவனங்கள் சக்வித்தி ரணசிங்கவுக்கு சொந்தமான நிறுவனங்கள் என கண்டறியப்பட்டுள்ளன.
சக்வித்தி ரணசிங்கவுக்கு எதிராகவுள்ள முறைப்பாடுகளுள் 18 பேர் 30 லட்சம் ரூபா வீதம் முதலீடு செய்துள்ளனர். சுமார் 24 பொலிஸாரும் முதலீடு செய்துள்ளனர். நாவல வீதி இலக்கம் 8 நுகேகொடையில் சக்வித்தி ரணசிங்கவின் பிரதான அலுவலகம் அமைந்திருந்தது. இங்கு ஏற்கனவே 18 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்பட்டிருந்தனர். இதில் சிலர் விடுதலையும் செய்யப்பட்டனர்.
பெருந்தொகையாக மோசடி செய்த பணம் தொடர்பாகவும் வெளிநாட்டில் தங்கியிருந்த காலத்தில் மேற்படி பணம் எங்கு வைக்கப்பட்டது என்பது தொடர்பாகவும் இரகசிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளனர். அத்துடன் அவருக்கு எதிராக பதியப்பட்ட 1870 முறைப்பாடுகளும் ஒவ்வொன்றாக விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இலகுவில் ஆங்கிலம் கற்கலாம் என்ற விளம்பரங்களுடன் அறிமுகமாகிய சக்வித்தி ரணசிங்க சக்வித்தி என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார். இந்த நிதி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் பல இலட்சங்கள் முதலீடு செய்திருந்தனர். முதலீடு செய்யும் பணத்துக்கு அதிகளவு வட்டி பெற்றுத்தருவதாக கூறியதை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்தனர்.
கடந்த ஒருவருடத்துக்கு முன்னர் தனது நிதி நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு குடும்பத்துடன் தலைமறைவானார். நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் சிலர் தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றனர். சிலர் மாரடைப்பினால் கூட உயிரிழக்கவும் நேரிட்டது. இந்த நிலையிலேயே இவர் 9000 மில்லியன் ரூபா வரை மோசடி செய்தமை அம்பலத்துக்கு வந்தது. பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த இவர் நாட்டைவிட்டு தப்பி வெளிநாடொன்றில் தலைமறைவாகி யிருந்தார்.
இந்த நிலையிலேயே நேற்று முன்தினம் இவர் கைதாகியுள்ளார்.
கைது செய்யப்பட்ட போது சக்வித்தியினதும் அவரது மனைவியினதும் உண்மையான பெயருடன் கூடிய கடவுச் சீட்டுகள் கைப்பற்றப்பட்டன. இலங்கைக்கு வந்ததாக கூறப்படும் போலிக் கடவுச் சீட்டுகள் வத்தளையில் இருப்பதாக கூறியதையடுத்து அவற்றை கைப்பற்ற பொலிஸார் நேற்று முன்தினம் அங்கு விரைந்தனர்.