12

12

ரமழான் நோன்பு இன்று ஆரம்பம்

ramadan.jpgபுனித ரமழான் மாதத்தின் தலைப்பிறை நேற்று புதன்கிழமை மாலை நாட்டின் பலபகுதிகளிலும் தென்பட்டதால் இன்று வியாழக்கிழமை முதல் புனித நோன்பு ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று மாலை மஃரிப் தொழுகையின் பின்னர் கூடிய பிறைக் குழுக்கூட்டத்தில் பெரியபள்ளிவாசல் உட்படக் கொழும்பு மாநகரின் பல பள்ளிவாசல்களின் நிருவாகிகளும் ஜெம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகளும் பிறைக்குழுவினரும் கலந்துகொண்டனர்.

நாட்டின் பல பகுதிகளிலும் ரமழான் தலைப்பிறை தென்பட்டதாக உறுதி செய்யப்பட்டதன் பின்னர் இன்று வியாழக்கிழமை முதல் ரமழான் நோன்பு ஆரம்பமாவதாகப் பிறைக்குழுவும் பெரியபள்ளிவாசலும் அறிவித்துள்ளது.

நாட்டின் பால் தேவையின் அதிக அளவை உள்ளூரிலேயே உற்பத்தி செய்ய திட்டம்

mr-p.jpgதேசிய பால் பண்ணையாளர் களை ஊக்குவிப்பதுடன் 2015 ஆம் ஆண்டில் இலங்கையின் பால் தேவையின் அதிக அளவை உள்ளூரிலேயே உற்பத்தி செய்யும் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சுக்கு ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை செலவு முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை உப குழு நேற்று முன்தினம் (10) அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடியபோதே ஜனாதிபதி மேற்கூறிய ஆலோசனையை வழங்கினார்.

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து உதவிகளை யும் வழங்குமாறு அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அதன் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

2010 : சர்வதேச இளைஞர் ஆண்டு International Year of Youth in 2010 – உலகில் 120 கோடி இளைய தலைமுறையினருக்காக இன்று ஆரம்பம் – புன்னியாமீன்

f-1-1.jpg ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச இளைஞர் ஆண்டு  இன்று  ஆகஸ்ட் 12. 2010 ஆரம்பமாகிறது.

இந்த இளைஞர் ஆண்டின் தொனிப்பொருள் ‘சம்பாஷணையும் பரஸ்பர புரிந்துணர்வும்’ என்பதாகும். இளைஞர் ஆண்டு; ஆகஸ்ட் 11. 2011ம் திகதி நிறைவு பெறும்.

2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச இளைஞர் வருடத்தை பிரகடனம் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை நிறைவேற்றியது. இதற்கான உத்தியோகபூர்வமான அறிவித்தலை டிசம்பர் 18.2009இல் விடுத்தது.

சர்வதேச ஆண்டுகள் பொதுவாக ஜனவரி மாதத்தில் தான் ஆரம்பமாகும். ஆனால், இளைஞர் தினம் சர்வதேச இளைஞர் தினமான ஆகஸ்ட் 12ஆம் திகதி ஆரம்பமாவது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச இளைஞர் ஆண்டை குறிக்கும் வகையில் பிரதேசிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு உலகளாவிய ரீதியில் அரசுகளையும் சிவில் சமூகங்களையும்,  தனிநபர்களையும் ஐக்கிய நாடுகள் சபை கோரி நின்றது.

சர்வதேச இளைஞர் ஆண்டானது பல சந்ததிகள், கலாசாரங்கள், மதங்கள், நாகரிகங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் சமாதான கோட்பாடுகளை ஊக்குவித்து மனித உரிமைகளுக்கும் ஒருமைப்பாட்டுக்கும் மதிப்பளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தீவிர வறுமை,  பட்டினி போன்றவை முதற்கொண்டு தாய்- சேய் மரணம்,கல்வி, சுகாதார பராமரிப்பை பெறுவதற்குரிய வசதியீனங்கள் போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு 2015ம் ஆண்டளவில் தீர்வுகாண முனையும் ஐ.நா. மில்லேனிய அபிவிருத்தி இலக்குகளை அடைதல் உள்ளடங்கலாக முன்னேற்றத்தை போஷிப்பதற்கு தம்மை அர்ப்பணித்துக் கொள்ளுமாறு இளைஞர் ஆண்டு இளைய தலைமுறையை ஊக்குவிக்கிறது.

15 முதல் 24 வரையிலான வயதெல்லைக்கு உட்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை இளைய தலைமுறையாக வரையறை செய்கிறது. இந்த அடிப்படையில் சமகாலத்தில் உலக சனத்தொகையின் 18 சதவீதமானவர்கள் அல்லது 120 கோடி மக்கள் இளைய தலைமுறையினர்.

இவர்களில் வளர்முக நாடுகளைச் சேர்ந்த 87 சதவீதமானவர்கள் வளங்கள், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, பயிற்சி, தொழில் வாய்ப்பு,  பொருளாதார வாய்ப்புக்கள் போன்றவற்றைப் பெறுவதற்குரிய வசதியீனங்களால் சவால்களை எதிர்கொள்கிறார்கள்.

சகல நாடுகளையும் சேர்ந்த இளைஞர், யுவதிகள் அபிவிருத்தி,ஆக்கபூர்வமான சமூக மாற்றம், தொழில்நுட்ப ரீதியான புதுமுயற்சிகள் போன்றவற்றிற்குரிய பாரிய மனித வளங்களாகத் திகழ்கிறார்கள் என்பதை ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடுகள் அங்கீகரிக்கின்றன. இவர்களின் கொள்கைகள், பலம், தொலைநோக்கு போன்றவை தொடர்ச்சியான சமூக அபிவிருத்திக்கு அத்தியாவசியமானவை.

இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பயனாளிகளாக மாத்திரம் இல்லாமல் மாற்றத்திற்குரிய வினைத்திறன் மிக்க முகவர்களாக இருக்கிறார்கள். அர்ப்பணிப்பு, ஆர்வம், ஆக்கத்திறன் ஆகிய பண்புகளைக்கொண்ட இளைஞர், யுவதிகள் சமூகத்தின் சவால் மிக்க விவகாரங்களை எதிர்கொண்டு அபிவிருத்தியில் பங்களிப்பு நல்குகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரப் பிரகாரம் சர்வதேச இளைஞர் தினம் International Youth Day (IYD)  ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி கொண்டாடப்படுகின்றது. இளைஞர்கள் ஒரு நாட்டின் நிர்ணய சந்ததிகள். இளைஞர்களை ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தலாம். அதேநேரம், அழிவுபூர்வமாகவும் பயன்படுத்தலாம். பொதுவாக ஒரு நாட்டின் சொத்துக்களாகக் கருதப்படும் இளைஞர்களை நெறிப்படுத்தி அவர்களை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி சௌபாக்கியமான எதிர்காலமொன்றுக்கு வழிகாட்டுவதும் அவர்களது உணர்வுகளை சிறந்த முறையில் நெறிப்படுத்துவதும், நம்பிக்கை உணர்வினையும்,  வெற்றி மனப்பாங்கினையும் ஏற்படுத்துவதுடன், இளைஞர்களின் செயற்பாடுகளை கௌரவித்து மதிப்பளிப்பதும் இளைஞர் தினத்தின் முக்கிய நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது.

1998ம் ஆண்டு ஆகஸ்ட் 08ம் தேதி முதல் 12ம் தேதி வரை லிஸ்பன் நகரில் நடைபெற்ற உலக நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் குழு சர்வதேச ரீதியில் இளைஞர்களின் பிரச்சினைகளையும், இளைஞர்களின் செயல்பாடுகளையும் கவனத்திற் கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கான சர்வதேச தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என சிபாரிசு செய்தது. இதன்படி 1999 டிசம்பர் 17ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 54/120/ ( resolution 54/120)  இலக்க பிரேரணைப்படி சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12ம் தேதி கொண்டாடப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய 2000ம் ஆண்டு முதல் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலக இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பிரதானமாக கவனத்தில் ஈர்க்கும் முகமாக உலகளாவிய ரீதியில் அரசுகள், அரச நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் செயல்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறாக ஆகஸ்ட் 12ம் தேதி சர்வதேச ரீதியில் இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டாலும்கூட, சர்வதேச தினம் என்பதை விட ஒவ்வொரு நாடுகளும் தேசிய ரீதியில் இத்தினத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவதை அவதானிக்கலாம். உதாரணமாக இந்தியாவில் விவேகானந்த அடிகளாரின் பிறந்த தினத்தை மையமாகக் கொண்டு 1985ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜனவரி 12ம் தேதி தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்படுகின்றது. எவ்வாறாயினும் சர்வதேச ரீதியிலும் சரி,  தேசிய ரீதியிலும் சரி, பிரதேச ரீதியிலும் சரி இவ்வாறு கொண்டாடப்படும் விழாக்கள் ஒரே அடிப்படையினைக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.

நமது வாழ்க்கையை உடலியல் அடிப்படையில் குழந்தைப் பருவம், இளமை, முதுமை என மூன்று பிரதானப் பிரிவுகளாக வகுக்கலாம். குழந்தைப் பருவத்தில் உடலாலும் மனதாலும் நமது தேவைகளை நிறைவு செய்ய மற்றவர்களைச் சார்ந்துள்ளோம். இந்தப் பருவம் ஒவ்வொருவரின் எதிர்கால வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. நல்ல பழக்கங்கள், துணிச்சல் தன்னம்பிக்கை ஆகியன ஆழ்மனதுக்குள் செலுத்தப்பட வேண்டிய பருவம். சொந்த அனுபவங்கள் இல்லாத பருவம். பாகுபாடு காணத் தெரியாத உழைக்க முடியாத பருவம்.

விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்டமாகும். இப் பருவத்துக்கான வயதெல்லை எல்லாப் பண்பாடுகளிலும் ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை. பல காலமாகவே பருவமடைதல் என்பது விடலைப் பருவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுவந்துள்ளது. அண்மைக் காலங்களில் பருவமடைதல் காலம் விடலைப் பருவத்துக்கு முன்னதாகவே தொடங்கி விடலைப் பருவத்துக்கு அப்பாலும் போவதைக் காணக்கூடியதாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் விடலைப் பருவத்தை 10 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட காலம் என வரையறை செய்துள்ளது.

விடலைப் பருவத்துக்கு பின்னர் வரும் பருவம் இளமை ஆகும். பொதுவாக 18 – 24 வயது வரை இளமைப் பருவம் அமைகின்றது. சில அறிஞர்களின் கருத்துப் பிரகாரம்  29 வயதுவரை இளமைப் பருவம் வரையறுக்கப்படுகின்றது.

இவர்களை இளையோர் அல்லது வாலிபர் என்பர். பிற பருவத்தினருடன் ஒப்பிடுகையில் இளயோரிடம் குறிப்பிடத்தக்க சில பண்பியல்புகள் உண்டு. இளைய பருவம் மாற்றத்தை இலகுவில் ஏற்று தன்னை மாற்றியமைத்துக்கொள்ள கூடியதுää துணிவுமிக்கது, செயற்பாட்டை முதன்மைப்படுத்துவது. இப்பருவத்தில் பாலியல் கவர்ச்சியும் ஈடுபாடும் அதிகம் இருக்கும். இளையோரை பெரும் சதவீதமாக கொண்ட ஒரு சமூகம் வன்முறைப் போக்கு எடுப்பதற்கு கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு என்றும் கூறப்படுகின்றது. அனேக நாடுகளில் இளையோரே அதிகம் வேலையற்றோராக இருக்கின்றார்கள்.

முதுமை என்பதை 60க்கு மேல் எனக் கூறுவதே பொருத்தமாய் இருக்கும். பெரும்பாலும் 60 வருடம் என்பது பணி நிறைவுக்கான வயது. அதன்பின் ஓய்வு என்பது நடைமுறையிலுள்ள அரசு விதி, முதுமையில் பணிபுரிவதில் சக்தியின்மை இருந்தாலும் வாழ்க்கை அனுபவத்தால் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் வாய்ப்பு உண்டு.

ஒரு தடவை சுவாமி விவேகானந்தர், “இளைஞர்கள் 100 பேரை என்னிடம் கொடுங்கள்; இந்திய நாட்டையே நல்ல நாடாக மாற்றிக் காட்டுகிறேன்” என்று கூறியது இளைஞர் தம் சிறப்பு. உத்வேகம், அர்ப்பணிப்பு, நாட்டுப்பற்று மிக்க இளைஞர்களை வழிநடத்திச் செல்லக் கூடிய இளமை, துடிப்பு, சுயநலமில்லாது பாடுபடும் அர்ப்பணிப்பு, ஞானம் மிகுந்த விவேகானந்தரைப் போல் ஒரு வழிகாட்டியைக் கண்டுகொள்வதுதான் இன்றையச் சு10ழலின் தேவையாகிறது.

இன்று உலகின் எல்லா நாடுகளிலும் இளைஞர்கள் தம் திறமையை வெளிப்படுத்தி அந்த நாடுகளின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக உள்ளனர். கடும் குளிர், மிகுந்த வெப்பம் என எந்தவிதமான நிலையிலும் பணிபுரியும் தகுதியுள்ளவர்கள். உடல் ஆற்றலுடன் அறிவாற்றலில் சிறந்து விளங்குபவர்கள் நம் நாட்டு இளைஞர்கள். உலகின் பல முன்னோடி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளைத் தம் தகுதியால் அலங்கரித்து வருபவர்கள். பணிபுரிய சுய கௌரவம் பார்க்காமல் குடும்பப் பொறுப்புடன் செயல்படும் இளைஞர் பட்டாளம் நம்மிடையே உள்ளது. சிக்கலான கல்வி கற்பதிலே முன்னணியில் நிற்பவர்கள் நம் இளைஞர்கள். தமக்கென தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, அதில் திறமையுடனும், துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் பயணிப்பவர்கள்தான் நம் இளைஞர்கள்.

இவ்விடத்தில் சோக்ரடீஸின் வரலாற்றுடன் இணைந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. ஓர் இளைஞன் சோக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான். அதற்கு சோக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். சோக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார். கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார். அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார். சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான். சோக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்?” என்று கேட்டார். அந்த இளைஞன் “காற்று” என்று பதிலளித்தான். சோக்ரடீஸ், “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்” என்று சொன்னார். இதைத் தவிர வேறு எந்த இரகசியமும் இல்லை.

இந்த உதாரணம் இளைஞர்களின் உணர்வுக்களிக்கப்படும் முக்கியத்துவத்தை படிப்பினையுடன் கூடி எடுத்துக் காட்டுகின்றது. ஒவ்வொரு இளைஞனும் தன்னம்பிக்கையுடன் தனது பணியினை முன்னெடுக்கக் கடமைப்பட்டுள்ளான்.

இன்றைய இளைஞர்கள் ஒருவரைப் பின்பற்றும்போது முழுக்க முழுக்க அவராகவே மாறிவிடக்கூடாது. மாறாக, நல்ல குணங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை விவேகானந்தர் அழகாகக் கூறுகிறார். ‘ஒரு விதையை நிலத்தில் போடுகிறோம். அதன் வளர்ச்சிக்குத் தேவையான எருää தண்ணீர் ஆகியவற்றை அளிக்கிறோம். அவ்விதை எருவாகவோ, தண்ணீராகவோ மாறாமல் தன் இயல்பிலேயே எடுத்துக்கொண்டு பிரம்மாண்ட மரமாகிறது’. அது போல, ‘கற்றுக்கொள்ள வேண்டியதை மட்டும் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வழி சொல்கிறார்.‘அளவற்ற தன்னம்பிக்கை உடையவர்களாக இருங்கள். நான் இளமையில் அத்தகைய நம்பிக்கை உடையவனாக இருந்தேன். அதுதான் இப்பெரிய காரியங்களைச் செய்யக்கூடிய சக்தியை எனக்களித்து இருக்கிறது. இளமையும், சக்தியும், நம்பிக்கையும் இருக்கும் காலத்தில்தான் உங்கள் எதிர்கால இலட்சியத்தை நீங்கள் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி தன்னம்பிக்கை ஊட்டுகிறார்.

உங்களின் மீதும் உங்கள் திறமைகளின் மீதும் உங்களுக்கு உள்ள ஆழமான நம்பிக்கைதான் உங்கள் கனவுகளை நிறைவேற்றும். உங்கள் கனவைச் சொல்லும்போதுää உங்கள் வார்த்தைகளில் உயிர் துடிப்பு இருக்க வேண்டும். உங்களின் ஆர்வம் கேட்போரைத் தொட வேண்டும். உங்கள் கனவு எதுவாக இருந்தாலும் அதை சாத்தியமில்லாது என்று ஒதுக்க வேண்டாம். “சாத்தியமில்லாதது” என்று எதுவுமேயில்லை.

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது. தன்னம்பிக்கையோடு திட்டமிட்டு, விடாமுயற்சியோடு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.“Never, neer, neer give up’ என்று வின்ஸ்டன் சர்ச்சில் சொல்வதுண்டு. வீட்டில் சன்னலருகே வைக்கப்பட்டுள்ள செடியானது வெளிச்சம் தேடி வெளியே வளைந்து செல்வதைப் போல, விடா முயற்சியுடையவர்கள் புதிய பாதைகளைத் தேடிக்கொண்டு தொடர்ந்து முன்னேறுவர்.

வெற்றி பெற்றவர்கள் அனைவரும் மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது தாங்கள் மட்டும் விழித்திருந்து உழைத்தவர்களே. சலிப்புக்கு இடங்கொடாமல் கடும் உழைப்பை உணவாக உட்கொண்டவர்கள், “ஒளி படைத்த கண், உறுதிகொண்ட நெஞ்சம், களிபடைத்த மொழி, கடுமை கொண்ட தோள், தெளிவு பெற்றமதி” என்றெல்லாம் முகமன் கூறிய பாரதியின் வார்த்தைகளை இளையபாரதம் மெய்ப்பிக்க வேண்டும். குறுகிய சிந்தனையில் வாழ்வைக் குலைத்துக்கொள்ளாமல் சமுதாய நோக்கில் சிந்தித்து செயல்பட்டால் இளைஞர்களுக்கு வெற்றி நிச்சயம்.

சர்வதேச இளைஞர் தினம் கலைவிழாக்கள், போட்டி நிகழ்ச்சிகள், இளைஞர் பாசறைகள், கலாசார நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களினூடாக முன்னெடுக்கப்படுகின்றன. 2000ம் ஆண்டில் முதலாவது சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்பட்ட போது இத்தினத்தை முறைப்படி கடைபிடிப்பதற்கு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதேபோல இளைஞர் ஆண்டிலும் பல்வேறு திட்டங்களை ஒவ்வொரு நாடுகளின் அரசாங்கங்களும் தனியார் அமைப்புகளும் ஐக்கிய நாடுகள் சபையும் ஒழுங்கு செய்துள்ளது.

2001ம் ஆண்டில் வேலையின்மை, சுகாதாரம் ஆகியவற்றில் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், 2002ம் ஆண்டில் நிகழ்க்காலத்திலும், எதிர்காலத்திலும் அபிவிருத்தி செயற்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப்புகள் குறித்தும், 2003ம் ஆண்டில் இளைஞர்களுக்கு பண்புமிக்கதும்,உற்பத்தித் திறனுடையதுமான தொழில் வாய்ப்புக்களை தேடிக் கொடுப்பது பற்றியும், 2004ம் ஆண்டில் சமூக அபிவிருத்தியில் இளைஞர்களின் பங்கு பற்றியும், 2005ம் ஆண்டில் இளைஞர்களின் பணிகள் பற்றியும், 2006ம் ஆண்டில் வறுமை ஒழிப்பில் இளைஞர்களின் பங்கு பற்றியும், 2007ம் ஆண்டில் அபிவிருத்திப் பணிகளில் இளைஞர்களின் கடப்பாடு பற்றியும், 2008ம் ஆண்டில் காலநிலை மாற்றம், நேரமுகாமைத்துவம் ஆகியவற்றில் இளைஞர்களின் பங்களிப்பு பற்றியும், 2009ம் ஆண்டில் அபிவிருத்தி, உற்பத்தி செயற்பாடுகளில் இளைஞர்களின் சவால்களும்,  எதிர்காலம் பற்றியும் கருப்பொருளாகக் கொள்ளப்பட்டன.

குறிப்பாக சுழல், சமூகம், பொருளாதாரம் ஆகிய செயற்பாடுகளில் இளைஞர்களின் மனோநிலை விருத்தியை வளர்ப்பது குறித்தும், இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வது குறித்தும் இத்தினத்தில் விசேடமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்றன.

இளைஞர் தினத்தின் தொணிபொருள்களை பின்வருமாறு ஒரு பார்வையில் நோக்கலாம்.

2009 – SUSTAINABILITY: OUR CHALLENGE. OUR FUTURE.
2008 – Youth and Climate Change: Time for Action
2007 – Be seen> Be heard: Youth participation for development
2006 – Tackling Poverty Together
2005 – WPAY+10: Making Commitments Matter
2004 – Youth in an Intergenerational Society
2003 – Finding decent and productive work for young people everywhere
2002 – Now and for the Future: Youth Action for Sustainable Development
2001 – Addressing Health and Unemployment

வவுனியா: மாவட்ட நீதிமன்றத்தில் ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

வவுனியா மாவட்ட நீதிமன்ற வளவினுள் ஆயுதங்களும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது பற்றி பொலிஸார் நீதிமன்ற பதிவாளருக்கு அறிவித்துள்ளனர். மைக்ரோ கைத்துப்பாக்கி, அதற்குரிய ரவைகள், கிளேமோர் குண்டுகள் என்பனவற்றையே பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

நீதிமன்ற வளவிற்குள் இவை எவ்வாறு கொண்டுவரப்பட்டது என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். நீதிமன்ற வளவினுள் கிடக்கும் பலகைகளுக்கு கீழேயே இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கண்டி எலச பெரஹரா பாதுகாப்பு கடமையில் 6000 பொலிஸார்

kandy-perahera.jpgகண்டி எசல பெரஹரா உற்சவத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஆறாயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப் படவிருப்பதாக மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

விசேட கடமைகளுக்காக வெளியூர்களி லிருந்து சேர்த்துக்கொள்ளப்படும் பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் பக்தர் கள் மீது நீதிநேர்மையாகவும் அன்புடனும் நடந்துகொள்ள வேண்டும். தமது கடமைகளை துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

சக்வித்தியை பிடிக்க உதவியோருக்கு இன்று பணப்பரிசில்

sakvithi.jpgநிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சக்வித்தி ரணசிங்க மறைந்திருந்த இடம் தொடர்பாக தகவல் வழங்கிய சிவில் பாதுகாப்பு குழுவினருக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைமையகம் பணப்பரிசில்கள் வழங்கவுள்ளது.

சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவர் உட்பட சிவில் பாதுகாப்பு குழுவினருக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைமையகத்தில் இன்று காலை பொலிஸ் மா அதிபரினால் பணப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

கண்டியில் – பரீட்சை எழுத வந்த மாணவி கட்டப்பட்ட நிலையில் மீட்பு

கண்டியில் உள்ள முன்னணி பெண்கள் பாடசாலையொன்றின் உயர்தர வகுப்பு மாணவியொருவர் நேற்று க. பொ. த. உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்காக வந்திருந்த போது, பாடசாலை வகுப்பறையொன்றில் வாயும் கைகளும் கட்டப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்க ப்பட்டார். குறிப்பிட்ட மாணவி பரீட்சை மண்டபத்தில் காணப்படாத நிலையில் பரீட்சை அதிகாரிகள் அவரைப் பற்றி மற்றைய மாணவிகளிடம் விசாரித்துள்ளனர்.

அந்த மாணவி பரீட்சையில் தோற்றுவதற்காக பாடசாலைக்கு வந்ததை கண்டதாக சில மாணவியர் பரீட்சை அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்து அதிகாரிகள் தேடுதல் நடத்திய போது, குறிப்பிட்ட மாணவி வாயில் பழந்துணி அடைக்கப்பட்டு கைகள் பிணைக்கப்பட்டு, நாற்காலி ஒன்று டன் சேர்த்து வெறுமையாக இருந்த வகுப்பறையொன்றில் இருந்ததை அதிகாரி கள் கண்ணுற்றுள்ளனர். பரீட்சை தொடங்கி அரை மணி நேரத்துக்கு பின்னரே இந்த மாணவி கண்டுபிடிக்கப்பட்டிருந்த போதும் பரீட்சை ஆணையாளரின் அங்கீகாரத்துடன் அந்த மாணவி பரீட்சைக்கு தோற்ற அதி காரிகள் அனுமதி வழங்கினர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் பொலிஸார் இந்த மாணவி பாடசாலை அதிபர் ஒருவரின் மகள் என்றும் நன்றாக படிக்கக் கூடியவர் என்றும் தெரிவித்தனர். விசாரணைகள் தொடர்கின்றன.