தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பதற்காக அரசியல் அமைப்பின் 13வது திருத்தச்சட்ட மூலத்தை முழுமையாக நிறைவற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகள் இணைந்து அரசாங்கத்திற்கு முன்வைக்கவுள்ளன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நேரடியாக இக்கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக இக்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
தமிழ் கட்சிகளின் அரங்கம் கடந்த 14ம் திகதி மட்டக்களப்பில் கூடியபோதே இவ்வாறு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐந்தாவது தடவையாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் பங்கு வகிக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், தமிழ்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியைச் சேர்ந்த இரா.தரைரத்தினம், சிறிரெலோ கட்சியின் பி.உதயராசா மற்றும் எஸ்.சந்திரகாசன் ஆகியோர் கையெழுத்திட்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் பல பாகங்களிலும் உள்ள சிறைச்சாலைகள். தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விசாரணைகளுக்குட்படுத்தப்பட வேண்டும் அல்லது விடுவிக்கப்பட வேண்டும்.
தமிழ் பிரதேசங்களில் இராணுவக் குடியேற்றங்கள் தடுத்து நிறத்தப்பட்டு. அhத்தமுள்ள மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படுதல். சிவில் நிர்வாகத்ததை முழுமையாக நடைமுறைப்படுத்தல், போரின் போது ஏற்பட்ட அழிவுகளுக்கு நட்டஈடு வழங்குதல், வடக்கு கிழக்கின் இனப்பரம்பலில் மாற்றத்தை எற்படுத்தும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டதாகவும், இவை தொடர்பான கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைப்பதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கோரிக்கைள் தொடர்பான திட்டவரைவு ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பை இணைத்துக்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளதுடன், அடுத்து நடைபெறும் சந்திப்புகளில் முஸ்லிம், மலையக கட்சிகளை இணைப்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.
இது இவ்வாறிருக்க. தமிழ் கட்சகிளின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு உத்தியோக பூர்வமாக அழைப்பு எதவும் விடுக்கப்படவில்லை என கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டாலும் இதில் கலந்து கொள்வது குறித்து கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் பங்கு கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் பங்கு வகிக்கும் தமிழ்த்தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இரா.சம்பந்தனின் கொழும்பு இல்ல முகவரிக்கு தபால் மூலம் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டதாகவும். அவர் இந்தியா சென்றிருப்பதால் அவ்வழைப்பிதழ் கிடைக்காமல் போயிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், சம்பந்தர் நாடு திரும்பியதும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் தூதுக்குழு கூட்டமைப்பை நேரில் சந்தித்து அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பினை விடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.