24

24

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் ஏ9 வீதியால் செல்வதற்குத்தடை இல்லை

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் தரைவழியாக வடபகுதி செல்வதற்குப் பாதுகாப்பு அமைச்சால் தடை விதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவ்வாறான எந்தத் தடையும் அமுலுக்குக் கொண்டு வரப்படவில்லை என அரசாங்கம் நிராகரித்துள்ளது.

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் ஏ9 பாதையூடாக யாழ்.குடாநாட்டுக்குச் செல்வதற்கே இந்தத் தடைப் பாதுகாப்பு அமைச்சினால் விதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் பரவியிருந்தன.

எனினும் அவ்வாறான புதிய விதிமுறைகள் எதுவும் அமுலுக்குக் கொண்டு வரப்படவில்லையென தேசியப் பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல மற்றும் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.

இது பற்றி லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறுகையில் “அவ்வாறான எதுவும் இல்லை. யாழ்ப்பாணம் செல்லத் தரை வழியைப் பயன்படுத்த முடியும். எனினும் வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் அதற்கு முன்னதாகப் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும். அதை விடுத்து தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை. அத்துடன் இது பொலிஸாருடன் சம்பந்தப்பட்ட விடயமல்ல. இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட விடயம் என்றார்.

இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் மெதவல இது பற்றி தெரிவிக்கையில்; “உத்தியோகபூர்வமாக அவ்வாறான எந்தத் தடை உத்தரவும் பாதுகாப்பு அமைச்சிலிருந்து பிறப்பிக்கப்படவில்லை. வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருப்போர் வடபகுதிக்குச் செல்வதற்குச் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் கூறும் காரணத்திற்கு ஏற்ப அவர்களை எந்த வழியில் அனுமதிப்பதென அமைச்சு தீர்மானிக்கும். எனவே ஆதாரமற்ற தகவல்களில் குழப்பமடையத் தேவையில்லை என்று கூறினார்.

யாழ்.குடாநாடு செல்லும் வெளிநாட்டுக் கடவுச்சீட்டை கொண்டோர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பத்தை கொழும்பு காலி முகத்திடல் பகுதியிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் நுழைவாயிலுள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் மேர்வின் சில்வா

mervyn.jpgசமீபத்தில் பிரதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மேர்வின் சில்வா நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்த மக்களைப் பார்வையிட்டுள்ளார்.

அன்பளிப்புப் பொருட்களுடன் அவர் அங்கு சென்று பார்வையிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரு நாட்களாக அவர் நாட்டிலுள்ள பல பௌத்த ஆலயங்களுக்கு சென்று அங்கு வர்ணம் தீட்டும் பணிக்கு அனுசரணை வழங்கியதாகவும் இப்பணியின் சில அரச தரப்பு உறுப்பினர்களும் பங்கேற்றதாகவும் அவரின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

தற்போது யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள மேர்வின் சில்வா ராமாவில் பகுதியிலுள்ள இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நிலையத்திற்குச் சென்றதுடன் பாடசாலைப் பிள்ளைகளுக்கு புத்தகங்களை வழங்கியுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை களனிய விகாரையில் வர்ணம் தீட்டும் நடவடிக்கைக்கு அனுசரணை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தனது மக்களுக்காக பணியாற்றும் செயற்பாட்டை தொடர்ந்து மேற்கொள்வார் எனவும் ஆங்கில இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

மிருகங்கள் பலி சத்தியாக் கிரக போராட்டம்

மிருகங்கள் பலி கொடுக்கப்படுவதனை தடுப்பதற்காக சத்தியாக் கிரக போராட்டம் நடத்தப்பட உள்ளதாக பௌத்த பிக்குகள் எச்சரிக்கை விடுத்துள்ளனனர்.

உருளை கிழங்குகளுக்கு புதிதாக 30 ரூபாய் வரி

potatoes.gifஇறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு கிலோகிராம் உருளை கிழங்குகளுக்கும் புதிதாக 30 ரூபாய் வரி விதிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , நிதி அமைச்சு செயலாளரிடம் பணித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

திருமலை நகர சபை பதில் தலைவராக செல்வராஜா

திருகோணமலை நகர சபையின் பதில் தலைவராக கே.செல்வராஜா நேற்று திங்கட்கிழமை காலை பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். திருகோணமலை நகரசபையின் உபதலைவராகப் பணியாற்றிவரும் இவரைப் பதில் தலைவராக கிழக்குமாகாண முதலமைச்சரும் உள்ளூராட்சி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பணித்திருந்தார்.

நகரசபைத் தலைவராகப் பணிபுரிந்த எஸ்.கௌரிமுகுந்தனை அவர் மீது சுமத்தப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பாக பதவி நீக்கம் செய்து விட்டு, அவர் மீதான ஒழுக்காற்று விசாரணை முடியும் வரை பதில் தலைவராகப் பணிபுரியும் படி உபதலைவரான செல்வராஜாவை முதலமைச்சர் நியமித்தார். அதற்கிணங்கவே உபதலைவர் செல்வராஜா, பதில் தலைவராகப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.