02

02

ஜோன் ரெக்கின் இலங்கைக்கான புதிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

british.jpgதற்போது பிரித்தானிய உயர்ஸ்தானிகராக உள்ள பீட்டர் ஹெய்ஸுக்குப் பதிலாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராக ஜோன் ரெக்கின் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜோன் ரெக்கின் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வாழ்க்கை என்பது ஒரு தவம். அதில் கல்வி என்பது ஒரு வரம். – எனக்குத் தெரிந்த நியாயம் : சஹாப்தீன் நாநா

Fishermen_Kurunagarகடந்த நாலு வாரமாக கேபி அண்ணாவின் பேட்டிகளைப் பார்த்து தலை சுத்தோ சுத்தென சுத்துகின்றது. எனக்கென்னவோ அண்ணா செய்வார். ஆனா செய்ய மாட்டார் என்பது போல்தான் தெரிகின்றது. கழுவுற மீனுல நழுவுற மீனாகத்தான் பதில்கள் இருக்கின்றதே தவிர. நொட் ஸ்ரோங். இரண்டாயிரத்து ரெண்டுல என்ன விலக்கிட்டாங்க, நான் பிள்ளையும் குட்டியுமா வாழ்ந்திட்டிருந்தன், அப்புறம் ரெண்டாயிரத்து எட்டுல கூப்பிட்டாங்க. ஆனா எனக்கு காஸ்ட்ரோ அண்ணாவும் உதவல. நெடியவன் தம்பியும் உதவல. நான் ரொம்ப நொந்து போனன். அதனால போராட்டம் தெச மாறிப் போச்சென்கிறார். அப்ப தலைவருக்கு பவர் இருக்கலயா ? அவர்ர வொய்ஸ ஏற்கனவே யுரோப்பிய புத்திஜீவிகள் அமுக்கிட்டாங்களா? அப்ப மகின்த சகோதரர்கள் முள்ளிவாய்க்காலில் அமுக்கிய அந்த நபர் யார் என்ற சங்கதியையும் சொல்லிடுங்கோ.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் அலுவலகத்துக்கு தான் ரொம்ப பயந்து கொண்டு போனதாகவும், அங்கு சிரித்த புத்தர் சிலையை கண்டு தன் மனம் ஆறுதல் அடைந்ததாகவும் சொல்லுகின்றார். அதற்கு முதல் 25 வருடம் மக்களை மாக்களாக நினைத்துக் கொண்டு, சூரசம்ஹாரமாடிய ஒரு கூட்டத்துக்கு ஆயுத சப்ளை செய்த போது, பௌத்த நாடான பெங்கொக்கிலும், கம்போடியாவிலும் புத்தர் சிலைகள் என்ன ரத்தம் கக்கிக்கொண்டா இருந்தது. எனக்கு இது நியாயமா படல்.

வெள்ளயன்கள் ஒரு பழமொழி சொல்வார்கள். நண்பர்கள் எப்போதும் நெருக்கமாக இருப்பார்களாம். எதிரிகள் இன்னும் மிக, மிக நெருக்கமாக இருப்பார்களாம். அந்த தலைவனுடன் இறுதிவரையும், மிக மிக நெருக்கமாக இருப்பதாக காட்டிக்கொண்டிருந்த யுரோப்பிய புத்திஜிவிகள் எல்லாம்? பரமண்டலத்தில் இருக்கும் பிதாவே உன் நாமமும், எங்கள் நாமமும் பரிசுத்தமடைவதாக. ஆனால் ஒரே ஒரு விடயத்தில் நாம் எப்போதும் அந்த மறவனுக்கு ஸலாம் போட்டுக்கொண்டே இருப்போம். ஆம் இறுதிவரையும், இறுதிவரையும் இந்த புலம் பெயர் புண்ணாக்குகள் போலல்லாது, இறுதிவரையும் மக்களுடன் இருந்து மரணித்தவன். இறந்த வேலுப்பிள்ளையருக்கும், நோயுடனிருக்கும் அந்த தாய், பார்வதியம்மாளுக்கும் ஒரு சல்யூட் அடித்துத்தான் ஆக வேண்டும்.

கேபி அண்ணா, இப்ப யூரோப்புல இருக்கிற நம்மவன்கள் எல்லாம் முன்னமாதிரி இல்ல. முதல்ல, ஒரு ஓடர், ஒரு தலைவர், ஒரு எச்சரிக்கை. இப்போ எல்லோரும் தண்டல்காறர்கள். மனதுக்குள்ளால கேள்வி கேட்டவன்கள் எல்லாம், இப்ப வாயத் தொறந்து கேட்கத் தொடங்கிட்டான். இது ஒரு பெரிய முன்னேற்றமண்ணா.

வாயத்தொறந்து எப்ப எதிர் கேள்வி கேட்கத் தொடங்குகின்றானோ! அவ்விடத்தில் இருந்துதான் ஊற்றுக்கள் தொடங்கும் என்கின்றார் விரைவில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக வரயிருக்கும் ஐயா ரத்னஜீவன் ஹூல். எதிர்க் கேள்வி கேள், புரியலயா விவாதம் செய், உனக்கு ஆங்கிலம் தெரியலயா? தெரிந்ததை சொல்லிக்கொடு. இப்ப உள்ள, இந்த ஜெனரேசன் மாணவன் புரிந்து கொள்வான் அல்லது புரிய முயற்சி செய்வான் என்கின்றார்.
என்ன ஒரு சிம்பிளிசிற்றி, எத்தனையோ டிகிரிகளையும், உள்ளக்கிடக்கைகளையும், ஆதங்கங்களையும் அடக்கிக் கொண்டு, சின்னப்பிள்ளத்தனமா கருத்துக்களை முன் வைக்கின்றார். வெல்டன், வெல்டன். இப்படி ஒரு நாலு பேர் இப்போது சிறிலங்காவுக்கு தேவை.

அன்னதானம் செய்தால் பசியோடிருந்த ஒரு வயிறுக்கு சோறூட்டிய சந்தோசம் ஏற்படுமாம், இரத்ததானம் செய்தால் ஒரு உயிருக்கு உயிர் கொடுத்த சந்தோசம் ஏற்படுமாம், கண்தானம் செய்தால் இருட்டுக்குள் இருக்கும் ஒருவனுக்கு, இந்த உலகத்தை காட்டிய சந்தோசம் ஏற்படுமாம், உறுப்பு தானம் செய்தால் மரணத்தின் விளிம்புக்கே சென்ற ஒருவனுக்கு மறுவாழ்வு கொடுத்த சந்தோசம் ஏற்படுமாம், ஆனால் கல்விதானம் செய்தால், ஒருத்தனை அல்ல ஒரு தலைமுறையையே தூக்கிவிட்ட சந்தோசம் ஏற்படுமாம். அதை நான் செய்கின்றேன், செய்யப் போகின்றேன், அந்த சந்தோசத்தை பெற நீங்களும் என்னுடன் கைகோருங்கள் என்கின்றார். ரொம்ப நியாயமான, ஆரோக்கியமான சந்தோசம்.

நாம் கனிகளை மட்டுமே உண்ணப்பழகிவிட்டோம். அதனால் நமக்கு வேர்களின் வேதனை தெரிவதே இல்லை. எல்லாக் கசமாலங்களையும் உட்டுப் போட்டு, கொஞ்ச நாளைக்காவது வேர்களுக்கு தண்ணி பாய்ச்சுவோம். தகப்பனை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த தாய்மார்கள், அண்ணனை இழந்த தங்கைகள், தங்கைகளை தொலைத்த இளைஞர்கள், அவயங்களை தொலைத்த மனிதர்கள் என சிறிலங்கா முழுதும் புரையோடிப் போயுள்ள வேர்களுக்கு நீர் பாய்ச்சுவோம். அதற்கு கல்வி ஒரு திறவுகோல்.

இல்ல, எங்கள் முயற்சி மகின்தவை, சிங்கள அரசுகளை பழிவாங்குவதுதான் என்றால் அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. உன் முயற்சி, மலையைத் தோண்டி எலியை பிடித்ததாக இருக்கக் கூடாது. மலையைத் தோண்டி, தங்கச் சுரங்கங்களை கண்டு பிடித்ததாக இருக்க வேண்டும் என்பார்கள். நாம் நிறைய மலைகளைத் தோண்டி, தாண்டியும் வந்துவிட்டோம். ஒரு பூச்சி, பூரானைக் கூட எம்மால் பிடிக்க முடியல. ஆனால் மனதுக்குள்ளால் சிறிலங்கா சோனிகளின் முன்னேற்றம் பற்றி ஒரு ஆய்வு செய்து கொண்டிருக்கின்றோம்.

எப்படி சிறிலங்கா முஸ்லீம்கள் காய்களை நகர்த்துகின்றார்கள். வெரி சிம்பிள். வளைந்து கொடு நிமிர்ந்து நிற்கலாம் என்ற ஒரு சிம்பள் தத்துவம். சிறிலங்கா ஒரு நாடு. அதில் மூவின மக்கள் வாழ்கின்றார்கள். சிங்களவர்கள் பெரும் பான்மை, அடுத்து தமிழர், அடுத்து முஸ்லீம்களும், பறங்கியரும் ஒரு சொட்டுண்ணு இருக்கின்றோம். இது நாம் ஆள வந்த நாடில்லை. வாழ வந்த நாடு. அதனால் ரொம்ப அமைதி. தருவதை பெற்றுக் கொண்டு, அவர்கள் தர மறுப்பதை நாங்களாகவே தேடிக்கொண்டு வாழ்கின்றோம். வாழப்பழகி விட்டோம். தொப்பிகள் மாற்றப்படுகின்றன, அல்லது தொப்பிகள் புரட்டப்படுகின்றன. முந்தா நாள் கூட காக்கா ரவூப் ஹக்கீம் தொப்பி புரட்டியுள்ளார். அதில் எந்த தப்பும் இருப்பதாக தெரியலயே. நியாயமாத்தான் தெரியுது.

தானும் முன்னேறிக்கொண்டு (ரவுப் ஹக்கீம் சகோதரயா மீண்டும் ஒரு ஐஸ்கிறீம் கம்பனி திறக்கப் போகின்றார் போல் தெரிகின்றது), தனது தொகுதியையும் முன்னேற்றி, தனது சமூகமும் முன்னேற, வேறு என்ன வழியிருக்கின்றது. இல்ல தொப்பி மாற்றக் கூடாது, அரசுடன் மல்லுக்கு நிற்க வேண்டும் என்றால், சிறிலங்காவில் சோனிக்காக்காமார் என்ற சமூகம் வாழ்ந்த தடமே இருக்காது. இன்னேரம் புல்லு மொளைச்சிருக்கும். கம்பளையில் 1957ல் எங்களுக்கு முதல் அடி விழுந்த போது நாங்க ஆயுதம் தூக்கியிருப்போம். தூக்கல, தூக்க விடல. எங்களுக்கு யாவாரம் சொல்லிக் கொடுத்த வாப்பாமாரும் சரி, எங்களுக்கு பொது அறிவு சொல்லிக் கொடுத்த வாத்திமாரும் சரி ஆயுத தர்பார் பற்றி சொல்லித் தரல. நல்லகாலம் அந்தக் காலங்களில் எங்களிடம் லோயர்கள் இருக்கல.

ஆனால், 2009 நவம்பர் 13, 14 திகதிகளில் நமது ஜனாதிபதி கிட்டத்தட்ட 157, வெளிநாட்டுவாழ் சிறிலங்கா பிரஜைகளை அழைத்து, ஜனாதிபதி செயலகம், கோள்பேஸ் ஹோட்டல், ஜனாதிபதி மாளிகை ஆகிய இடங்களில் கலந்துரையாடல்களையும் நடாத்தி, மூக்கு முட்ட, முட்ட சாப்பாடும் தந்தார்கள். வியாபார நோக்கமாக, முதலிட வாங்கோ என அழைக்கப்பட்ட இந்த கலந்துரையாடல்களுக்கு, முக்காலே மூணுவீசம் பேர் அரசியல் காய்களை நகர்த்துபவர்கள்தான் வந்திருந்தார்கள். மீதி ஒரு வீசம் வியாபார நோக்கம் உள்ளவர்கள்.

இங்கு கனடாவில் இருந்து வந்த ஒரு புத்த பிக்குவை சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. என்னுடன் ஈபிடிபியைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியும் (லண்டனில் வாழ்ந்து, இப்போது கொழும்பில் தொழிலை தொடங்கியுள்ளவர்), புளட் அமைப்பின் நோர்வே பிரதிநிதி ஒருவரும், அமெரிக்கா லாஸ்ஏன்ஜலீஸ்சில் இருந்து வந்த ஒரு புத்தி ஜீவியும் இருந்தார்கள். சிறிலங்கா முஸ்லீம்களின் ஒவ்வொரு முன்னேற்றம் பற்றியும் விபரித்த அந்த புத்த பிக்கு, நாம் இங்கு அடிபட்டுக் கொண்டு அனைத்தையும் இழந்து நிற்கின்றோம், இவர்கள் வேகமாக முன்னேறிக் கொண்டு வருகின்றார்கள் என்பதில் தொடங்கி, புள்ளி விபரங்களுடன் கதைகள் பல சொன்னதுடன், நாளை மறுதினம், நான் கல்முனை சென்று சிங்களவர்களை எப்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் குடியேற்றுவது என மூன்று மாதம் வேலை செய்யப் போகின்றேன் என அழுத்தம் திருத்தமாக சொன்னார். ஒரு மணிநேரத்துக்கு பிறகு, மற்றவர்கள் நான் ஒரு முஸ்லீம் என்று கூறியதும்: அவர் தனது பேச்சை வேறுதிசைக்கு திருப்பிவிட்டார். இதுதான் இன்றைய முஸ்லீம்களின் நிலமை.

அவர்கள் சொல்வதில் எனக்கு எந்த தப்பும் தெரியவில்லை. ஆனால் சிங்களவர்கள் இன்னும் முஸ்லீம்களை மதித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். நம்மவர்களோ கூட்டம் கூட்டமாக சுட்டுக் கொன்றும், நாடுகடத்தியுமல்லவா விட்டார்கள். குடிக்கத் தண்ணியுமில்லாம நாங்க இருக்கோம், நீங்க என்னடா என்றால், நிலாவில இருந்து நாங்க தண்ணி கொண்டாறம் என்ற கதையை சொல்லி, வன்னிச் சனத்தயும் ஏமாற்றி, புலம் பெயர் நல்ல உள்ளங்களையும் ஏமாற்றி,
ஒன்றாக, ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்த எங்களையுமல்லவா புரட்டி எடுத்து விட்டீர்கள்.

இனி நம்முட வித்துவ திறமையை காட்டுவோம். சிறிலங்காவில் எங்க வாயத் தொறந்தாலும், யாழ்ப்பாணம் போகலயா, இன்க இருந்து உழைக்க முடியாது. யாழ்ப்பாணம்தான் இன்றைய வியாபார இலக்கு எனச்சொல்லிக்கொண்டு ஒவ்வொரு சிங்களவனும், சோனியும் ஆலாய் பறந்து கொண்டிருக்கின்றார்கள். கொழும்பில் 170 ரூபாய்க்கு சேர்ட்டுகளை வாங்கி மலையகத்தில் 225 ரூபாய்க்கு வித்துக் கொண்டிருந்த ஒரு மூணாங்கிளாஸ் காக்கா, இப்ப என்னடா என்றால் அதே சேர்ட்டை யாழ்ப்பாணத்தில் 450 ரூபாவுக்கு விற்றுக் கொண்டிருக்கின்றார். நாலு மாதத்துக்கு முன் அவர்ர கெப்பிட்டல் ஆறாயிரம் ரூபா, இப்ப பதினெட்டாயிரம் ரூபா.

ஒரு காலத்தில் மொத்த சிறிலங்கா மக்களின் மீன் தேவையையும் பூர்த்தி செய்த வட, கிழக்கு இப்போதுதான் மீண்டும் தலைநிமிரத் தொடங்கியிருக்கின்றது. ஆனால் அவர்கள் இன்னும் பழைய மீன்பிடி உபகரணங்களையும், முறைகளையும்தான் பயன் படுத்துகின்றார்கள். பழைய மரத்தோணி, அது ஓட்டையானால் குங்கிலியத்தை அரைத்து, கொஞ்ஞம் கிசிள் (கறுப்புத்தார்)யும் எடுத்து ஒட்டுவது, அதே சம்மட்டியார், ஓட்டையான வலைகளை 2ம், 3ம், 4ம் நம்பர் நைலோன் நூல்களை, நாலுகால் பாய்ச்சலில் இருந்து பொத்துவது ( இது மீனவர் பாஷை.பொருத்துவது எனவும் சொல்லலாம் ), அதே தூண்டில், 2ம் நம்பர் தொடக்கம் 23ம் நம்பர்வரை, அந்த தூண்டில்களில் இரையை ( புழு, பூச்சி, குட்டி மீன்) குத்துவது, எட்டு முழ வீச்சு வலை, முறுக்காத்தி, குறுலொன் கயிறு, ஈயம், மாயவலை, கடல் வலை என கொழும்பில் செட்டியார்தெரு ஜெபி பெர்னான்டோ புள்ளெ, மாழுகடை இப்றாகீம் அன் சன்ஸ், வெல்லம்பிட்டிய ஜபர்ஜீ பிறதர்ஸ் போன்றவற்றில், காசுகளை தண்ணியாக இறைத்து, வரவு எட்டணா செலவு ஏழணா என கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

பைபர் கிளாஸ் போர்ட் வந்துவிட்டது. முன்னர் அதை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம். இப்போது நம்மவர்களே நீர்கொழும்பிலும், பேருவளையிலும் செய்யத் தொடங்கிவிட்டார்கள். விலை 20 லட்சத்தை தொடும். பேரம் பேசினால் இன்சோல்மென்ட்டுக்கு நம்ம வீட்டுக்கதவை வந்து தட்டுவார்கள். மீன்பிடிவலைகள் கொரியாவில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றது. இந்திய வலைகள் ஸ்ரோங் பத்தாது. அறுக்குளா, தளப்பத்து, சுறா போன்ற பாரிய மீன்கள் பிடிப்பதற்கு இந்திய வலைகள் நல்லது. காரணம் விலை குறைவு. கூனி இறால், இறால், நெத்தலி, விரால், கெழுத்தி போன்ற ஆற்று மீன், களப்பு மீன்கள் பிடிப்பதற்கு கொரியா இஸ் பெற்றர். இந்தியாவை பகைத்துக் கொள்ளக்கூடாது என்று எல்லோருமே இப்போது சொல்லத் தொடங்கிவிட்டார்கள். நாம் எப்பவுமே பகைக்கல. எங்களையும் கொஞ்சம் யாவாரம் செய்ய உடுங்கப்பா என்றுதான் சொல்லுறோம்.

வலைகளை மணந்து பார்த்துவிட்டே நம்ம மூத்தப்பாமார் சொல்வார்கள். இது எந்த நாட்டு வலை என்ற சூட்சுமத்தை. கொரியன்ட வலையில ஒரு சூப்பர் பெற்றள்ற வாசனை வரும். இந்தியாட வலையில மெட்ராஸ் கூவம் மணக்கும். ஆனால் ஒரு காலத்தில் வெல்லம்பிட்டியில் பாக்கிஸ்தானிய மோறா முஸ்லீம்களின் வலை பெக்டரியே சிறிலங்காவின் மொத்த மீன்பிடித் தொழிலையும் தீர்மானித்தது. அப்புறம் என்எம் பெரேரா வந்து, சிறிமாவோ அம்மையார் புகுந்து, குண்டன்மால்ஸ், ஹைதராமணிகளை கழுவிலேற்றிய போது ( ஜனவசம, உசவசம) : இந்த பெக்டரி உரிமையாளர்களும், தொழிலாளர்களும் சோபை இழந்தார்கள். அதற்குப் பின் உருவானதுதான் குருநகர் வலை உற்பத்தி தொழிற்சாலை.

வாப்பாவின் அதட்டலையும் மீறி, பத்துவயதில் வாப்பாவின் கையை பிடித்துக் கொண்டு, எனக்கு எழுத்தறிவித்த தமிழாசிரியரின் துணையுடன்: 350 மைல் கடந்து, யாழ் பஸ் நிலையம் வந்து, காலையில், வாப்பாவின் முன்னாள் கொழுத்த பணக்காற நன்பரின் வீட்டுக்கு சென்று உட்கார்ந்தவுடன் : எனக்கும் வாப்பாவுக்கும் வெள்ளித் தாம்பாளத்தில் ரீயும், எனது ஆசானுக்கு, நிற்க வைத்து, ஏதோ ஒரு தகரப் பேணியில் தேனீரும் வளங்கப்பட்ட போதுதான், யாழ் ஜாதி வெறியின் மகத்துவம் தெரிந்தது. ஒரு வெறிபிடித்தது.

2ம் நம்பர் 90 வளையம் தொடக்கம் 110 வளையம் உள்ள வலைகளைக் கொண்டு பிடிக்கப்படும் இறால்களையும், நெத்தோலி மீன்களையும் பிடித்து உடனடியாக விற்பதில்தான் எம்மவர்கள் கவனம் செலுத்துகின்றார்கள். வறுமை இதற்கொரு காரணமாக அமையலாம். இனி அதுமாறும். மாறணும். பேங்கொக்கிலும், இந்தியாவில் தூத்துக்குடி போன்ற இடங்களிலும், சிறு மீன்பிடித் தொழிலாளர்கள் இதை பதப்படுத்தி பல லட்சம் ரூபா உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இறாலை உரித்து காயவைத்து பவுடராக மாற்றுகின்றனர். அதே போல் நெத்தோலி மீனையும் தலையையும், வாலையும் வெட்டி விட்டு, காய வைத்து பவுடராக மாற்றுகின்றனர். காயவைப்பதற்கு இடமில்லாதவர்கள் புறுட் றையரை (பழங்களை காயவைக்கும் இயந்திரம்) உபயோகப்படுத்துகின்றார்கள். இந்த இயந்திரம் 20 நிமிடத்துக்கு 5 கிலோ இறாலை உலரப்பண்ணும். விலையும் குறைவு. மின்சாரம் 6 வோல்ட் மட்டுமே.

வெட்டி வீசும் மீன் தலைகளையும், வால்களையும் உலரவைத்து கோழித்தீன், ஆட்டுத்தீன் உற்பத்தியாளர்களுக்கு விற்றுக் கொண்டிருக்கின்றார்கள். ஒரே கல்லில் இருமாங்காய் பிளஸ் மும்மடங்கு இலாபம். மேலும் அரசு இன்னும் ஆழ் கடல் மீன் பிடிக்க அனுமதி தரல என்ற வாதம் எல்லாம் இனி வேண்டாம். அவர்கள் ஆறுதலா அனுமதி தரட்டும். அதுவரை நம்ம வயிறு பொறுக்காதே. ஆம் இதற்கு நோர்வேயிலும், ஜப்பானிலும் இருக்கும் நம்மவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். பிஸ் பைன்டர் ( எங்க மீன் இருக்கு என்று கண்டு பிடிக்கும் கருவி), பிஸ் மியூசிக் என இரு கருவிகள் வந்து இந்நாடுகளில் கொட்டை போடு போட்டுக் கொண்டிருக்கின்றது.

ஜஸ்ட் பன்ரெண்டு டாலர். 100 கடல் மைல் தூரம், 150 கடல் மைல் தூரம் எல்லாம் இப்போதைக்கு ஓட வேண்டியதில்லை. ஒரு பிஸ்பைன்டர், எட்டுமுழ வலை ( 1200 ரூபா), இரண்டு கிலோ ஈயம், 4 மில்லிமீற்றர் குறுலோன் கயிறு எட்டு முழம், 18ம் நம்பர் நைலோன் நூல் 100 கிராம் இருந்தால், மீன் தேடி ஆழ்கடலுக்கு போக வேண்டிய அவசியம் இல்லை. மீன் வேலணைக்கோ, மயிலிட்டிக்கோ உங்கள் வீடு தேடி வரும்.

கொழும்பு காக்காமார் பெரியகடை மீன்சந்தையில் மீன் செதில்களை அள்ளுவதை போனமாதம் கண்டேன். அங்கு வேகவேகமாக மீன்களை கூறு போட்டு வெட்டி, ஒரு மீன் வெட்ட பத்து ரூபா கூலி வேண்டும் அந்த சகோதரர்களுக்கு ஒரு செய்தி அனுப்புங்கள். நீங்கள் வெட்டி வீசும் மீன்செதில்கள் உலக சந்தையில் தங்கத்தின் விலை. அது உங்கள் மண். உங்களுக்கு அந்த வருமானம் வரவேண்டும். யாரோ நீர்கொழும்பு காக்கா வந்து அள்ளிக்குப்போறான். சாக்கிரதை. சிங்கள இளைஞர்கள் சத்தமில்லாமல் எமென் ( அரபு நாடு ) சென்று கடற்கரை ஓரங்களில் உட்கார்ந்து, கொட்டிலும் அமைத்து பாரிய அறுக்குளா, தளப்பத்து மீன்களை இலவசமாக அள்ளுகின்றனர்.

எப்படி.. இப்போது உலக சந்தையில் மீன் செட்டைக்குத்தான் மதிப்பு. பிஸ் சூப் தயாரிக்க அதை வெட்டி எடுத்துவிட்டு, எமென் வியாபாரிகள் மீனின் நடுப்பாகத்தை அள்ளி வீசுகின்றனர். அதை சேகரித்து, பிளந்து, அதற்குள் உப்பை அரைத்து போட்டு, இருபது நாளில் அறுக்குளா கருவாடு, தளப்பத்து கருவாடு என சிறிலங்காவுக்கு அனுப்பி கொள்ளை லாபம் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். கிலோ 1400 ரூபா சில்லறை விலை. ஹோள்சேல் 1000ரூபா. அங்கு வேலை செய்பவன் நம்ம தமிழன். பத்தாயிரம் ரூபா சம்பளத்துக்கு. உப்புகாற்றில் கரைந்து கொண்டிருக்கின்றான். யுத்தம் தந்த வடு. 18, 20, 22 வயது பால்குடி மாறா இளைஞர்கள். சண்டிலிப்பாய், பளை, காங்கேசன்துறை இளைஞர்கள்.

ஆற்று மீன்களை நீர்த் தொட்டிகளிலும், வீட்டில் தொட்டில் அமைத்து வளர்த்தும், புத்தளத்திலும், பொலன்னறுவையிலும் சிங்கள, முஸ்லீம் இளைஞர்கள் பணத்தை அள்ளிக் கொண்டிருக்கின்றார்கள். சிறிலங்கா அரசே ஆறு, குளங்களில் மீன்கள் குறைந்து விட்டது, எங்களுக்கு மீன் தாங்கோ என இவர்களிடம் வாங்கி, நீர்நிலைகளில் விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அந்தக்காலத்திலேயே தனது வீட்டுக்குள்ளும், தனது தோட்டத்திலும் விழும் குப்பைகளை சேர்த்து செயற்கை உரம் தயாரித்த வடக்கு மக்களை கண்டிருக்கின்றேன். அவனுக்கு, அவன்ட பரம்பரைக்கு இப்போது இவைகளை சொல்லிக் கொடுத்தாலே போதும். அவன் ரோட்டு போடுவான். போட வேண்டும்.

( அனுபவமும், அட்வைசும் தொடரும்………)

1-9-2010

எச்சரிக்கை.

இல்மனைட். திருகோணமலை, புல்மோட்டை கடற்கரையில் நிரம்பிவழியும் இல்மனைட்டுக்காகத்தான் யுத்தமே நடக்கின்றது என ஒரு காலத்தில் மக்கள் பேசியது உண்டு. ஆனால் யாருக்குமே இல்லாமல் அந்த இல்மனைட் இப்போது தனியாருக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கடந்த மாதம் ஏலம் விடப்பட்டு: மெட்டிக் தொன் 64 யுஎஸ் டொலர் என இரண்டு காக்காமார் ஏலம் எடுத்துள்ளனர். ஒன்று கொழும்பு தொப்பி புரட்டி, மற்றது ( ஹி, ஹி, ஹி) இன்னொரு தொப்பி புரட்டி. அந்த இல்மனைட்டின் இன்றைய மார்கட் விலை 213 யுஎஸ் டாலர். வெட்கத்தைவிட்டு வேதனையுடன் சொல்லுகின்றேன். இந்த ஏலத்தில் நம்மவங்க யாரும் கலந்து கொள்ளல. எல்லோரும் உண்டியல் குலுக்குறதிலேயே கவனமாக இருக்கினம்.

வன்னி மக்களின் வாழ்விடங்கள் இராணுவத்தினரால் அபகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பு நிருபமா ராவிடம் கோரிக்கை!

Suresh_Piremachandranவன்னியில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவம் அபகரிப்பதைத் தடுக்க வேண்டும் எனவும், இரணுவம் பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முன் மக்களின் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இந்திய வெளியுறவு அமைச்சர் நிருபமா ராவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இடம்பெயர்ந்து முகாம்களிலிருக்கும் மக்கள் அவர்கள் வசித்த காணிகளில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும அவர்கள் பாம்பரியமாக வாழ்ந்த காணிகளை இராணுவத்தினர் அபகரித்து வருகின்றனர். இதனைத் தடுக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் கொழும்பில் இந்தியத்தூதுவர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாமளுமன்ற உறுப்பினர்களின் குழ இவ்விடயங்கள் குறித்து நிரபமா ராவிடம் தெளிவு படுத்தியது.

வன்னியில் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்னமும் மீள்குடியமர்த்தப்படாமல் அகதி முகாம்களிலும், இடைத்தங்கள் முகாம்களிலும் தங்கியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சாந்தபுரம், இந்துபுரம், பொன்னகர், திருமுறிகண்டி. விசுவமடு முதலான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றத்திற்கென அழைத்து வரப்பட்டு அவர்களின் சொந்தக் காணிகளுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இடைக்கால தங்ககங்களில் தங்கியுள்ளனர். அவர்கள் வாழ்ந்த இடங்கள் இராணுவத் தேவைகளுக்காக அபகரிக்கப்பட்டு வருகின்றன என கூட்டமைப்பினர் விளக்கினர்.

இவ்விடயம் தொடர்பாக இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது எனவும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் கூட்டமைப்பினரிடம் நிருபமா ராவ் தெரிவித்ததாக கூட்டமைப்பின் நாமாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதே வேளை, மீளக்குடியமர்ந்த மக்களுக்கு இந்தியா அமைத்துக் கொடுக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீடுகளுக்கான உதவிகள் குறித்த மக்களுக்கு நேரடியாகவே வழங்கப்படவுள்ளதாக தெரிவித்த நிருபமா ராவ் இவ்வீடுகளை அமைப்பதற்காக 20 ஆயிரம் இந்தியப் பணியாளர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக வெளியான தகவல்களை மறுத்துள்ளார் எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி நீதிமன்ற மாடியிலிருந்து குதித்ததில் படுகாயம்.

தனது மூன்று வயது மகனைக் கொலை செய்த வழக்கில் மரணதண்டனை வழங்கப்பட்ட கைதி ஒருவர் நீதிமன்றக் கட்டட மாடியிலிருந்து குதித்ததில் படுகாயமடைந்தார். நேற்று (01-09-2010) யாழ்.மேல் நீதிமன்றத்தில் வைத்து இச்சம்பவம் நடைபெற்றது.

2003ம் அண்டு பருத்தித்துறை வல்லிபுரக் கோவில் பகுதியில் வசித்து வந்த குறிப்பிட்ட நபர் தனது மூன்று வயது மகனை இரு கால்களிலும் பிடித்தத் தூக்கி நிலத்திலடித்து கொலை செய்தமைக்காகவும், அவரது மனைவியின் கையை வெட்டியமைக்காகவும கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிவில் மகனைக் கொலை செய்த குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டதோடு  மனையிவின் கையை வெட்டியதற்காக 25ஆயிரம் ரூபா தண்டப்பணமும் அறவிடப்பட்டது. தண்டப்பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் இரு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டம் எனவும் நீதிமன்றம் தீhப்பளித்தது.

இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டதன் பின்பு குறித்த கைதி யாழ். மேல்நீதிமன்றத்தின் இரண்டாம் மாடியிலிருந்து நிலத்தில் குதித்து படுகாயமடைந்தார். வடமராட்சி வல்லிபுரம் கோவிலடியைச் சேர்ந்த இராஜராஜன் இராஜகுமார் (வயது37) என்பவரே இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் மாடியிலிருந்த குதித்தவராவார்.

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானங்களின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு!

LTTE_Aircraftவிடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானங்களின் பாகங்கள் முல்லைத்தீவில் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக படையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விமானப் பாகங்கள் எரியூட்டப்பட்ட நிலையிலேயே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

இறுதிப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால். அம்பலவன் பொக்கணைப் பகுதிகளில் கொள்கலன்களில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விமானப் பாகங்கள் இலகுரக விமானங்களுக்குரியவை என இலங்கை விமானப்படையினர் தெரிவிக்கின்றனர். யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் இவற்றிற்குத் தீவைத்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கில் இராணுவ முகாம்கள் மீண்டும் பலப்படுத்தப்படுகின்றன!

Check_Pointகிழக்கில் மீண்டும் இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் முடிவடைந்து அமைதி நிலை தோன்றியதற்குப் பின்னர் கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

படைமுகாம்களைச் சுற்றி முள்வேலிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகளும்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில காலமாக கைவிடப்பட்டிருந்த சோதனைச் சாவடிகளும் மீண்டும் திறக்கப்பட்டு முன்னர் போல் வாகனங்கள் சோதனையிடப்படுவதோடு, பொதுமக்களும் சோதனையிடப்படுகின்றனர்.

அண்மையில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த  இரு பெண் பொலிஸார் உட்பட மூவர்  மட்டக்களப்பு ரயில் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அவ்வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்களிடமிருந்த ரி-56 ரக துப்பாக்கியை பறித்துச் சென்ற சம்பவம், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளமை மற்றும், அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்பட்ட உரப்பசளைகள், அரிசி மூடைகள் எனபன லொறிகளில் கடத்தப்பட்ட சம்பவம். மரங்கள். கஞ்சா போன்றவை கடத்தப்படுகின்ற சம்பவங்கள் என்பவற்றைத் தொடர்ந்தே இப்பாதுகாப்பு மற்றும் வீதிச் சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்திற்கும் இந்தியாவினால் 10,000 வீடுகள். நிருபமாராவ், முதலமைச்சர் சந்திப்பில் ஆராய்வு

nerupama.jpgகிழக்கில் இடம் பெயர்ந்த, மீளக்குடி யமர்த்தப்பட்ட, வீடுகளை இழந்தவர்களுக் கும் சுமார் 10,000 வீடுகளை இந்தியா கட்டிக் கொடுக்கும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நம்பிக்கை வெளியிட்டார்.

திருகோணமலையில் நேற்று இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவ் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை அவரது அலுவலகத்தில் சந்தித்து உரையாடினார்.

இச் சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை அமைப்பது தொடர்பாகவும் இடம் பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மீளக்குடியமர்த்தப்பட்ட வட பகுதி மக்களு க்கு இந்தியா சுமார் 51,000 வீடுகளை வழங் குகிறது. அதேபோல, கிழக்கு மாகாணத் திற்கும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் சந்திரகாந்தன், நிருபமாராவ்விடம் கேட்டுக் கொண்டார்.

முதலமைச்சரின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் இந்தியா இதற்கு சாதகமான பதிலை அளிக்கும் என உறுதியளித்தார்.

தொழிற்சங்க மகா சம்மேளனம் உத்தேச திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு

உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தால் அரசதுறை அரசியல் மயப்படுத்தப்படுமென கவலை தெரிவித்துள்ள தொழிற்சங்க மகா சம்மேளனம் இதனை நிறுத்துமாறும் கோரியுள்ளது. அத்துடன் இதற்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் அரச ஊழியர்கள் தொழிற்சங்கம் அரசியல்வாதிகளுடனான கருத்தரங்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடத்தவுள்ளதாகவும் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தொழிற்சங்க மகா சம்மேளனம் நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் செயலாளர் சமன் ரத்னபிரிய, தலைவர் அன்டன் மார்க்கஸ், பொருளாளர் என்.ஜி.ஆர்.அத்துல்ல, தேசிய அமைப்பாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர் நவரட்ண பண்டார ஆகியோர் பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இரு தடவைக்கு மேல் அதிகரிப்பதற்காக  அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தை நாம் எதிர்க்கின்றோம். தற்போதைய அரசியலமைப்பிலுள்ள ஜனாதிபதி முறைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இல்லாதொழிப்பதாக கோரியே இந்த அரசாங்கம் 1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது இந்நிலையில் இதனைச் செய்யாது இந்த முறைமை அதிகரிக்கப்படுவதையிட்டே எதிர்க்கின்றோம்.

ஆரியவதி சித்திரவதை விவகாரம்: சவூதி வெளிநாட்டமைச்சிடம் இலங்கை முறைப்பாடு கையளிப்பு

maid.jpgசவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஆரியவதிக்கு ஆணிகள், ஊசிகள் ஏற்றப்பட்ட விடயம் தொடர்பாக உண்மை நிலையைக் கண்டறிய சவூதி சென்ற இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைவர் உள்ளிட்ட குழுவினர் சவூதியிலுள்ள இலங்கைத் தூதுவர் ஊடாக சவூதி வெளிநாட்டமைச்சுக்கு தமது முறைப்பாடுகளை நேற்று உத்தியோகபூர்வமாக கையளித்தது.

சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் சவூதி வெளிநாட்டமைச்சிடம் முழுமையான அறிக்கைகளைக் கையளித்தார். இலங்கை திரும்பிய ஆரியவதியின் மருத்துவ அறிக்கைகள் உட்பட முறைப்பாடுகள் அடங்கிய அறிக்கைகளில் ஆரியவதியின் உடலில் ஊசி, ஆணிகள் ஏற்றப்பட்ட நிலையிலுள்ள எக்ஸ்ரே படங்கள், அறுவைச் சிகிச்சையின் அறிக்கைகள் என்பவற்றையும் சமர்ப்பித்தனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க மற்றும் பணியகத்தின் இரண்டு உயரதிகாரிகள் சவூதி சென்றனர். சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் விசேட சந்திப்பொன்றை நடத்திய பின்னர் குறிப்பிட்ட சவூதி எஜமானர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் விதத்தில் இந்த அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். சவூதி அரசிடம் வேண்டுகோளாகவே இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கைப் பெண் ஆரியவதி மீது சவூதி அரேபியாவில் வைத்து மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு சவூதி அரேபிய அதிகாரிகள் முன்வந்துள்ளதாக சவூதி சென்றுள்ள இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சவூதி சென்ற இக்குழுவினர் நேற்று சவூதி அரேபியாவில் வேலைக்கு ஆள் சேர்ப்போரின் தேசிய கமிட்டியின் தலைவர் சரத் அல்பாத் சந்தித்து பேசியதுடன், இவ்வாறான சம்பவம் மீண்டும் இடம்பெறா வகையில் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் ஆரியவதி எதிர் நோக்கிய பயங்கர அனுபவத்தின் காரணமாக அவர் உள மற்றும் உடல் ரீதியாக ஏற்பட்ட பாதிப்புக்கு உரிய வகையில் அவருக்கு நஷ்டஈடு வழங்கப்படவேண்டும் என்று இலங்கை குழுவினர் சவூதி அதிகாரிக்குக் கூறியுள்ளனர்.

அத்துடன், இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதை தடுக்க இரு நாடுகளுக்கிடையிலும் புதிதாக ஆட்சேர்ப்பு நிபந்தனைகளை அறிமுகப்படுத்துவது பற்றியும் கலந்துரையாடியுள்ளனர். அதனையடுத்து மத்திய கிழக்கில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை பார்ப்பதற்காக மேற்படி குழுவினர் தமாம் மற்றும் ஜெத்தாவுக்கு செல்லவுள்ளனர்.

15 லட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கில் பணிப்பெண்களாகவும், சாரதிகளாகவும் பணிபுரிகின்றனர். சவூதி அரேபியாவில் மட்டும் 4 லட்சம் இலங்கையர்கள் இவ்வாறு பணிபுரிகின்றனர்.

சேமமடு, பாலமோட்டையில் நடமாடும் சேவை

வவுனியா மாவட்டத்தில் மீளக் குடியேறிய சேமமடு, பால மோட்டை கிராமங்களில் நடமாடும் சேவைகள் இன்றும் நாளையும் மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்படவுள்ளது.

வியாழக்கிழமை இன்று 2 ஆம் திகதி சேமமடு மகாவித்தியாலயத் திலும், நாளை 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாலமோட்டை அரசினர் பாடசாலையிலும் நட மாடும் சேவைகள் இடம்பெறுமென மாவட்ட அரச அதிபர் திருமதி சாள்ஸ் தெரிவித்தார்.

பொது மக்கள் நடமாடும் சேவையின் போது வருகை தந்து தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாமெனவும் அவர் தெரிவித்தார்.