02

02

லக்ஷ்மன் ஜயக்கொடியின் இறுதிக்கிரியை இன்று

laxman.jpgமறைந்த முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் ஜயக்கொடியின் இறுதிக்கிரியைகள் இன்று (02) பிற்பகல் திவுலபிட்டியவில் இடம்பெறும்.

பூதவுடல் தற்போது திவுலபிட்டிய பலகல்லவில் உள்ள அன்னாரின் இல்ல த்தில் வைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக 20 இலட்சம் துண்டுப்பிரசுரங்கள் ஜே.வி.பி. நடவடிக்கை

அரசாங்கத்தின் உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களைத் தெளிவுபடுத்தும் முகமாக நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை 20 இலட்சம் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவுள்ளதாக ஜே.வி.பி.தெரிவித்துள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒருவர் இரு தடவைகளே வகிக்க முடியுமென தற்போதைய அரசியலமைப்பில் உள்ளது. எனவே அப்பதவியை வகிக்கக் கூடிய தடவைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்காகக் கொண்டு வரப்படும் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களைத் தெளிவுபடுத்தும் முகமாகவே இந்தத் துண்டுப்பிரசுர விநியோக நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஜே.வி.பி.விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று இந்தத் துண்டுப்பிரசுர விநியோக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், இதன் பிரதான நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக நடைபெறுமென்றும் இதில் ஜே.வி.பி.தலைவர்கள் பங்கு கொள்வார்கள் என்றும் அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

வீரர்களின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை அணியிலிருந்து விலக்கும் எண்ணம் இல்லை – பாகிஸ்தான் கிரிக்கெட் சபை

cricket.jpgகிரிக்கெட் சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை முடிவு தெரியும் முன் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி லோர்ட்சில் நடந்த 4 வது டெஸ்ட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. கோடிக் கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு நோ- போல் வீசியது வெட்ட வெளிச்சமானது.

பாகிஸ்தான் அணியின் கப்டன் சல்மான்பட், வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆமிர், முகமது ஆசிப், விக்கெட் காப்பாளர் கம்ரன் அக்மல் உட்பட 7 வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வற்புறுத்தி உள்ளனர்.

இதனால் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் இடையே அடுத்து நடைபெற வேண்டிய இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் நிலவியது. இந்த போட்டி தொடர் ரத்து ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கு சுமார் ரூ. 90 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைகளிடம் ஆலோசனை நடத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் போட்டி திட்டமிட்டபடி தொடரும் என்று அறிவித்துள்ளது.  ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் மற்றும் ஐ.சி.சி. இலஞ்ச தடுப்பு பிரிவு அதிகாரிகளின் விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் வீரர்கள் மீது கருணை காட்டாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் சூதாட்ட புகாரில் சிக்கிய 7 வீரர்களில் 4 பேரை அணியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று ஐ.சி.சி. மற்றும் இங்கிலாந்து வீரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  பாகிஸ்தான் அணியில் விக்கெட் காப்பாளர் கம்ரன் அக்மல் மட்டும்தான் உள்ளார். அவரை நீக்கினால் அணிக்கு மாற்று விக்கெட் காப்பாளர் இல்லாத நிலை உள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் இஜாஸ் பட் அளித்த பேட்டியில், ‘வீரர்கள் மீதான புகார் குறித்து ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இவை அனைத்தும் குற்றச்சாட்டுகள் மட்டுமே. எந்தவொரு குற்றச்சாட்டும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. எனவே இந்த சூழ்நிலையில் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் அளித்த பேட்டியில், ‘இந்த சம்பவம் நடந்து இருக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவோ அல்லது பாகிஸ்தான் நாட்டின் புகழை கெடுக்கவோ சதித் திட்டம் எதுவும் தீட்டப்பட்டு இருக்கிறதா என்பதை தீர்மானிக்க நாங்கள் விரும்புகிறோம்.

முந்தைய காலகட்டங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இதுபோன்ற சதி திட்டங்கள் எங்களுக்கு எதிராக கிளம்பியதை நாங்கள் அறிவோம். அந்த கோணத்திலும் நாங்கள் இந்த விவகாரத்தை பார்க்கிறோம். உண்மை வெளிவந்து எங்கள் வீரர்கள் குற்றச்சாட்டில் இருந்து விடுபட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.  எங்கள் வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால் வீரர்கள் மீது முன்மாதிரியான நடடிவக்கை எடுப்பதில் உறுதியாக இருக்கிறோம்’ என்றார்.