06

06

அமுதுப் புலவர் பற்றிய ஆய்வுநூல் ஒன்று. : என் செல்வராஜா (நூலகவியலாளர்)

Selvarajah_Nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்புக் கலைமாணிப் பட்டதாரிகளை உருவாக்கி வெளியேற்றி வருவதை நாம் அறிவோம். பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளிலும் பயிலும் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தேர்வுக்காக ஒவ்வொருவரும் துறைத்தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட, தெரிந்தெடுத்த ஒரு விடயத்தை வைத்து விரிவான ஆய்வினை மேற்கொண்டு 100 பக்கம் வரையிலான ஆய்வாக அதனைத் தமது இறுதித் தேர்வின் ஒரு பகுதியாக தாம் சார்ந்த துறைப்பீடத்திற்கு வழங்குவதுண்டு.

மற்றைய பல்கலைக்கழகங்களைப் போலல்லாது  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமக்கென்று ஒரு பதிப்பகப் பிரிவினை ஒருபோதும் கொண்டிராததால், இவ்வாய்வுகளை நூலுருவில் கொண்டுவந்து அதனைத் தான் சார்ந்த சமூகத்திற்கு வழங்கித் தமது கல்விசார் அடைவினை சமூகமயப்படுத்துவதற்கும், அவ்வாய்வேடுகள் பரவலாக சமூகத்தின் பிற புத்திஜீவிகளிடம் சென்றடையச்செய்து பல்கலைக்கழகத்தின் கற்றல் கற்பித்தல் மற்றும் ஆய்வுப் புலமையை பட்டைதீட்டிக்கொள்வதற்கும் இன்றளவில் வாய்ப்பில்லாது போய்விட்டது. இதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தான் சார்ந்துள்ள தமிழ்ச் சமூகத்துடன் மேற்கொள்ளக்கூடிய ஒரு உறவுப்பாலத்தை போக்குவரத்திற்காகத் தடைசெய்துவருகின்றது.

இதனால், ஆய்வினை மேற்கொள்ளும் பட்டதாரிகள் தாம் பெரும் பணச்செலவினதும் உடல் உழைப்பினதும் கால விரயத்தினதும் பெறுபேறாக உருவாக்கிய ஆய்வுகள் கிணற்றில் போட்ட கற்களாக பல்கலைக்கழக பீடங்களின் துறைத்தலைவர்களின் இறாக்கைகளில் தஞ்சமடைவதுடன் தமது பிறவிப் பெரும்பயனை எய்திவிடுகின்றன. ஒரு சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் ஆய்வு மாணவரின் சுயமுயற்சியால், அல்லது இவ்வாய்வு பற்றிய தகவல் அறிந்த சிலரால் வெளியாரின் உதவியுடன் நூலுரவாக்கி வெளியிட்டுள்ளனர். இத்தகைய ஆய்வுகளை நூலுரவாக்கி வெளியிடுவதில் மற்றைய பதிப்பகங்களைவிட, கொழும்பு குமரன் புத்தக இல்லம் அதீத அக்கறை காட்டிவருவதும் இங்கு குறிப்பிடப்படவேண்டும்.

இந்நிலையில் நூலுரவாக்கப்பட்ட அய்வுகள் பற்றிய பட்டியலையோ, அவற்றின் இருப்பு பற்றிய தகவல்களைக்கூட பல்கலைக்கழகங்கள் பேணிவருவதாகத் தகவல் இல்லை. பல்கலைக்கழக வட்டாரத்தின் மூலமல்லாது, தினசரிப் பத்திரிகைச் செய்திகளின் வாயிலாகவே இவ்வாய்வுநூல்களின் இருப்பு பற்றி அறியமுடிகின்றமை கவலைக்குரியதாகும்.

அமுதுப் புலவருக்கு அஞ்சலி: விடைபெறுவீர் அமுதுப் புலவரே….. : என்.செல்வராஜா (நூலகவியலாளர், லண்டன்.)

இவ்வகையில் அண்மையில் எனக்குக் கிட்டிய பத்திரிகைத் தகவல்- 2006ஆம் ஆண்டு தமிழ்த்துறையில் இறுதித்தேர்வினை மேற்கொண்ட டயானா மரியதாசன் என்பவர் தனது சிறப்புக் கலைமாணித் தேர்வுக்காக லண்டனில் புலம்பெயர்ந்து வாழ்ந்து அண்மையில் 23.2.2010 அன்று மறைந்த இளவாலை அமுதுப் புலவர் பற்றிய விரிவான ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளார் என்பதாகும். இவரது ஆய்வு தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற தலைப்பில் 99 பக்கங்களில் ஒரு நூலாக வெளிவந்துள்ளது. இதனை அருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டுள்ளார். 2006இல் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வென்ற வகையில் இது அவரது மறைவுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், இளவாலைக் கிராமத்தை வாழ்விடமாகவும் கொண்டவர் அமுதுப் புலவர். இளவாலை தம்பிமுத்து –சேதுப்பிள்ளை தம்பதியினரின் மகனாக 1918ம் ஆண்டு செப்டெம்பர் 15ம் திகதி பிறந்த இவர், தன் ஆரம்பக் கல்வியை புனித சார்ள்ஸ் வித்தியாலயத்திலும், இடைநிலைக்கல்வியை யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும், உயர் கல்வியை கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையிலும், பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டவர். யாழ்ப்பாணம் காவிய பாடசாலையிலும், நாவலர் பாடசாலையிலும் தமிழ்த்துறைப் பண்டிதர் வகுப்பில் பயின்றிருந்த இளவாலை அமுது, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் பட்டத்தையும், இலங்கைக் கல்வித் திணைக்களத்தின் பண்டிதர் பட்டத்தையும் பெற்றவர்.
ஓய்வுபெற்ற முதலாம் தர ஆசிரியரான இவர், இளவாலை அமுது என்று ஈழத்துத் தமிழ்; இலக்கிய உலகில் பரவலாக அறிமுகமானவர். 1984ம் ஆண்டு முதல் தாயகத்திலிருந்து குடும்பத்துடன் புலம்பெயர்ந்து வந்து லண்டன் மிடில்செக்ஸ் பிரதேசத்திலுள்ள ஹரோ நகரின் நோர்த்ஹோல்ட் பகுதியில் தான் மரணிக்கும்வரை வாழ்ந்துவந்தார்.

அமுதுப் புலவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டினைக் கெளரவிக்கும் வகையில் பல்வேறு அறிவுசார் நிறுவனங்களும் அவரைக் கௌரவித்திருக்கின்றன. இவரின் சமய இலக்கியத் தொண்டினை கௌரவித்து 2004ம் ஆண்டில் ரோமாபுரியில் பரிசுத்த பாப்பரசரினால் செவாலியர் விருது வழங்கப்பட்டது. பின்னர் 2005இல் இலங்கை அரசு கலாபூஷணம் விருதையும் அமுதுப் புலவருக்கு வழங்கியிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கொளரவ இலக்கிய கலாநிதிப் பட்டத்தையும் அதே ஆண்டில் வழங்கியிருந்தது. 2006இல் கனடாவிலிருந்து தமிழர் தகவல் நிறுவனம், தமிழர் தகவல் விருதினையும் வழங்கியிருந்தது.

அமரர் இளவாலை அமுது பற்றிய ஆறு இயல்களைக்கொண்ட இவ்வாய்வு நூலின் இயல் ஒன்றில் அமுதுப் புலவரின் வாழ்க்கை வரலாறும், இயல் இரண்டில் அவரது கவிதைப் படைப்புகள் பற்றியும், இயல் மூன்றில் அவரது ஆய்வு நூல்கள் பற்றியும், இயல் நான்கில் அவரது வாழ்க்கை வரலாற்று நூல்கள் பற்றியும், இயல் ஐந்தில் அவரது பிற பணிகள் பற்றியும் பேசும் இவ்வாய்வின் ஆறாம் இயல் அமுதுப் புலவரின் வாழ்வும் பணிகளும் பற்றிதொரு விரிவான மதிப்பீடாக அமைந்துள்ளது. அமுதுப் புலவரின் இலக்கிய உலா, விருது வழங்கல், பிறந்த தினம், மேடைப் பேச்சுக்கள் என்பன பற்றிய புகைப்படக்காட்சிப் பதிவுகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 

இலங்கையில் இந்நூல் 200 ரூபாவுக்கு புத்தக விற்பனை நிலையங்களில் பரவலாக விற்பனையிலுள்ளன.

அரசமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பாக கூட்டமைப்பு இன்று கூடி ஆராய்வு.

TNAநாளை மறுதினம் 8ஆம் திகதி அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ள 18வது அரசமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பதா ஆதரவளிக்காமல் விடுவதா என்பது குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் இன்று கொழும்பில் கூடி ஆராய்ந்து வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கூடி ஆராய்ந்து முடிவொன்றை எடுக்கவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

இதே வேளை, அரசாங்கம் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள 18வது அரசமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும், ஜே.வி.பி இற்கும் அரசாங்கம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் டி.எம். ஜயரட்ன இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

அரசமைப்புத் திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றில் சமர்பிக்கவுள்ள 8ஆம் திகதியை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி கொழும்பில் அதற்கெதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக ஐக்கியதேசியக் கட்சியின் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளமயும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நாட்டின் சகல அரச அதிபர்களும் கூடும் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது.

இலங்கையின் சகல மாவட்டங்களைச் சேர்ந்த அரசாங்க அதிபர்களும் கலந்து கொள்ளும் மாநாடு ஒன்று இன்று (06-09-2010) யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. இதற்காக சகல அரசாங்க அதிபர்களும் நேற்று மாலையே யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தனர். இன்று நடைபெறும் இம்மாநாட்டில் பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ணவும்  கலந்து கொள்கின்றார்.

இன்று காலை 9 மணிக்கு யாழ். செயலகக் கேட்போர் கூடத்தில் இம்மாநாடு ஆரம்பமானது. இன்றைய மாநாட்டில் அரசாங்க அதிபர்கள் அனைவரும் ஒன்று கூடி எதிர்கால அபிவிருத்திப் பணிகள் குறித்து ஆராயவுள்ளதாகவும், மாவட்ட ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அராயப்பட்டு அவற்றைத் தீர்ப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்.நகரில் வாகனங்களின் நெரிசல் தற்போது மிகவும் அதிகரித்துள்ளது.

Jaffna_Trafficயாழ் நகரின் பல வீதிகளில் அதிகளவு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் பொதுமக்கள் போக்குவரத்தில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக பொலிஸார் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ். நகரின் பிரதான வீதிகளில் நீண்ட நேரம் வாகனங்களை நிறுத்தி வைப்பதைத் தவிர்க்கமாறும், போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்குமாறும் வாகனப் பயன்பாட்டளர்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 Jaffna_Traffic

தற்போது நல்லூர் ஆலய உற்சவம் நடைபெறுவதாலும், தென்னிலங்கையிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கனங்களும் அதிகரித்துள்ளதாலும் யாழ். நகரில் வாகனங்களின் நெரிசல் என்றுமில்லாதவாறு அதகரித்துள்ளது. இதனால்  விபத்துக்களும் இடம்பெற்று வருகின்றன.

வன்னியில் வீசும் கடும் காற்றினால் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் கூடாரங்கள் பல சேதம்!

Rehabilitation_Wanniவடக்கில் வன்னிப் பகுதிகளில் கடும் காற்று வீசிவருவதால் தரப்பாள் கூடாரங்களில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மீளக்குடியமர்த்தப்பட்டு தங்கள் காணிகளில் கூடாரங்கள் அமைத்துத் தங்கியுள்ள மக்களும், இன்னமும் தங்கள் காணிகளில் குடியேற அனுமதியின்றி வேறு இடங்களில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ள மக்களும் இக்கடும் காற்றினால் அவல நிலைக்குள்ளாகி வருகின்றனர். பல கூடாரங்கள் காற்றினால் சேதமுற்றுள்ளன. கூரைகளின்றி வெறும் கட்டடங்களுக்கு மேல் தரப்பாள்களை மூடி அதற்குள் குடியிருக்கும் மக்களுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.

மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான  வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் செயற்பாடுகள் மிகவும் மந்தகதியிலேயே நடைபெற்று வருவதால் எதிர்வரும் மழைக்காலத்தில் இம்மக்கள் பல இடர்பாடுகளை எதிர்கொள்ளவேண்டிவரும் என்பது பல தடவைகள் அரச அதிகாரிகளுக்கும், வீடமைப்பு பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கும் சுட்டிக்காட்டப்பட்டும் இதுவரை எதுவித துரித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தலைமைகள் தங்கள் அரசியல் தவறுகளுக்காக படுகொலை அரசியலுக்காக தமிழ் மக்கள் முன் மன்னிப்புக் கோர வேண்டும்! : த ஜெயபாலன்

Sitharthan_Speaking_at_Memorialதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் வி தர்மலிங்கம் அவர்களின் 25வது நினைவு தின நிகழ்வுகள் யாழ். கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அவரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 நடைபெற்றது.

தர்மலிங்கமும் சக பாராளுமன்ற உறுப்பினருமான ஆலாலசுந்தரமும் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வினால் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களது படுகொலைகளுக்கு முன்னரும் பின்னரும் தமிழ் விடுதலை அமைப்புகள் அரசியல் படுகொலைகளை ஒரு அரசியலாகவே முன்னெடுத்தனர்.

தமிழரசுக் கட்சி (தமிழர் விடுதலைக் கூட்டணி) அல்பிரட் துரையப்பாவுடன் பிள்ளையார் சுழியிட்டு ஆரம்பித்து வைத்த அரசியல் படுகொலைக் கலாச்சாரம் அவர்களையே பலியெடுக்க முற்பட்டபோது அவர்களுக்குப் பிறந்த ஞானம் காலம் கடந்ததாகி விட்டது. இக்கலாச்சாரத்திற்கு வித்திட்ட இன்றைய அரசியல் தலைவர்களான இரா சம்பந்தன் மாவை சேனாதிராஜா ஆகியோர் இதுவரை தமது அரசியல் தவறுகளை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. அதற்காக வருந்தவும் இல்லை. 

Selvam Adaikalanathan TNA_TELOபாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் ஆலாலசுந்தரம் ஆகியோரை படுகொலை செய்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவராக இருக்கின்ற செல்வம் அடைக்கலநாதன் இது தொடர்பாக மெளனமாகவே உள்ளார். இவர்களது படுகொலைகள் மட்டுமல்ல தமிழீழ விடுதலை இயக்கத்தினுள் இடம்பெற்ற உட்படுகொலைகள் அவர்களால் படுகொலை செய்யப்பட்ட ஏனைய இயக்கப் போராளிகள் பொது மக்கள் என இக்கொலைப் பட்டியலும் நீளமானது. இவை தொடர்பாக அவ்வமைப்பிற்கு தலைமை தாங்கும் ஜனநாயக வழிக்குத் திரும்பிய செல்வம் அடைக்கலநாதனுக்கும் தனது கடந்த காலம் பற்றிய பொறுப்புணர்வு உண்டு.

அல்பிரட் துரையப்பாவுடன் ஆரம்பமான இவ்வாறான அரசியல் பழிவாங்கல்கள் அதனை முன்னின்று நடாத்திய வே பிரபாகரனின் படுகொலையில் முடிவடைந்துள்ளது. வே பிரபாகரனின் படுகொலைக்குப் பின்னான 15 மாதங்களில் குறிப்பிடத்தக்கதான அரசியல் படுகொலைகள் நிகழவில்லை. இருப்பினும் இப்படுகொலை அரசியல் ஏற்படுத்திய அச்சம் இன்னமும் மக்கள் மனங்களில் இன்னமும் ஆறாத வடுவாக உள்ளது.

Memory_of_Dharmalingam_Vஅமரர் வி தர்மலிங்கத்தின் நினைவு நிகழ்வு கௌரிகாந்தன் தலைமையில் மெளன அஞ்சலியுடன் ஆரம்பமானது. மலராஞ்சலி நிகழ்வும் நடைபெற்றது. புளொட் தலைவரும் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் குலநாயகம், முன்னாள் தபாலதிபர் கணேசவேல், முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி தற்பரானந்தன், முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வை பாலச்சந்திரன், வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜி ரி லிங்கநாதன், வவுனியா நகரசபை உறுப்பினர்கள் சுரேந்திரன், குமாரசாமி மற்றும் பல முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். 

இலங்கையின் இனவாதக் கட்சிகளாகக் கொள்ளப்படும் ஜேவிபி மற்றும் ஜாதி ஹெல உறுமய ஆகிய கட்சிகள் பெயருக்காகவேனும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளன. ஆனால் தமிழரசுக் கட்சியோ தமிழர் விடுதலை இயக்கமோ இதுவரை தங்கள் அரசியல் தவறுகளுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. தந்தையைப் பலிகொடுத்த தனயனின் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இதுவரை தங்கள் அமைப்பு மேற்கொண்ட அரசியல் படுகொலைகளுக்கு மன்னிப்புக் கோரவில்லை.

TULF Leader V Anandasangareeதமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி ஆனந்தசங்கரி தேசம் சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலில் அல்பிரட் துரையப்பாவின் படுகொலையைத் தூண்டியதற்காகவும் அவரது இறுதிக் கிரியைகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளாததும் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிட்டது என்று தனது மனவருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் (ஈபிஆர்எல்எப்) தங்கள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் படுகொலைக்களுக்காக பகிரங்கமாகவே மக்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தனர்.

தங்கள் தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்பதன் மூலம் ஏற்கனவே விடப்பட்ட தவறுகளை திருத்தவோ மாற்றி அமைக்கவோ அல்லது இழக்கப்பட்ட உயிர்களை மீளளிக்கவோ முடியாது. ஆனால் எதிர்காலத்தில் அவ்வாறான தவறுகள் விடப்படமாட்டாது என்ற நம்பிக்கையைப் பெறமுடியும். பாதிக்கப்பட்டவர்களுடன் மீளுறவை ஏற்படுத்தவும் வழியேற்படும்.

ஆனால் தங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்தும் தங்கள் அரசியலை நியாயப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்திலும் இவ்வாறான தவறுகளுக்கு இவர்கள் இடமளிப்பார்கள் என்பதும் அதனையும் அவர்கள் நியாயப்படுத்துவார்கள் என்றே கொள்ளவேண்டி உள்ளது.

People_at_Memorialதமிழ் அரசியல் தலைமைகள் முதலில் தங்கள் அரசியல் தவறுகளை தமிழ் மக்கள் முன் ஒப்புக்கொள்ளவும் அவ்வாறான தவறுகள் இனி இடம்பெறமாட்டாது என்ற உறுதிமொழியை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறான அரசியல் பொறுப்புணர்வை தமிழ் அரசியல் தலைமைகள் உருவாக்கினால் மட்டுமே தமிழ் மக்கள் இலங்கை அரசை அதன் தவறுகளுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்த முடியும். இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் தமிழ் மக்களின் எதிரியாகவே கருதப்பட்டு வரும் எதிரியாகவே உள்ள இலங்கை அரசிடம் தமிழ் மக்கள் நியாயம் கேட்பதற்கு உள்ள உரிமையைக் கூட தமிழ் தலைமைகள் தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை. அதனை வழங்கவும் தயாரில்லை.

ஆகவே தமிழ் தலைமைகள் தமிழ் மக்களிடையே உண்மையையும் மீளுறவையும் ஏற்படுத்தும் சுயமுயற்சியில் உடனடியாக இறங்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகால போராட்டத்தில் விடுதலை அமைப்புகளாலும் இலங்கை அரசபடைகளாலும் கொல்லப்பட்ட மற்றும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். ஆண்டுதோறும் இவர்களை நினைவுகூருவதற்கான நினைவுநாள் ஒன்று அறிவிக்கப்பட வேண்டும். கடந்த காலம் பற்றிய உண்மைகளை குழிதோண்டிப் புதைப்பதனால் தமிழ் மக்கள் மத்தியில் மீளுறவை ஏற்படுத்த முடியாது. உண்மைகளை வெளிக்கொணர்ந்து தவறுகளை ஏற்றுக்கொண்டு மட்டுமே மீளுறவை ஏற்படுத்த முடியும்.

பெற்றோரிடம் ஒப்படைப்பு

m.jpgவவுனியா, பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற 508 பேர் நேற்று முன்தினம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது தொடர்பான நிகழ்வின் போது எடுத்தபடம். பிரதியமைச்சர் விஜயமுனி சொய்ஸா, வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன உட்பட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். இவர்களில் பரீட்சை எழுதிய 246 மாணவர்கள், 50 தம்பதிகளும் அடங்கும்.

திருத்தத்திற்கு ஆதரவாக கம்பளையில் பேரணி

அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள அரசியலமைப்பு திருத்த சட்டத்தை ஆதரிக்கும் வகை யில் பிரதமர் டி.எம்.ஜயரட்ன தலைமையில் நேற்று முற்பகல் கம்பளை நகரில் பேரணி ஒன்று நடை பெற்றது. கம்பளை நகரிலிருந்து நுவ ரெலியா வீதி வழியாக கம்பளை மணிக்கூட்டு கோபுர சந்திவரை இப் பேரணி சென்றது.

இப் பேரணியில் ஐக்கிய தேசியக்கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர். அப்துல் காதரும் கலந்து கொண்டிருந்ததுடன் சுமார் ஆயிரம் பேருக்கும் அதிகமா னோர் பங்கு கொண்டிருந்தனர்.

பொறுப்புடன் முடிவெடுப்போம் – அரியநேத்திரன் எம்.பி

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது வடக்கு கிழக்கில் பலம் பொருந்திய கட்சி. தமிழ் மக்கள் நலனில் பொறுப்புடன் செயற்பட வேண்டிய கட்சி என்பதால் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக, விரிவாக ஆராய்ந்து முடிவு எடுப்போம் “தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. அரியநேத்திரன் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கின்றது என்பதற்காக ஆதரிக்கவும் முடியாது, ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கின்றது என்பதற்காக எதிர்க்கவும் முடியாது. இன்று கூடி முடிவெடுப்போம் என அவர் கூறினார்.

கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை: பயிற்சி நிலையம் ஆரம்பம் 1500 யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு

workers.jpgகிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 1500 யுவதிகளுக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடடிவக்கை எடுத்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதற்கமைய ட்ரைஸ்டார் நிறுவனம் கிளிநொச்சியில் தொழிற்சாலை ஒன்றை அமைக்கவுள்ளதுடன் எதிர்வரும் 13ம் திகதி பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தனியார் ஆடைத் தொழிற்சாலையில் தொழில்வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 80 யுவதிகளுக்கும் கொழும்பில் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சுமார் ஐம்பது மில்லியன் ரூபா செலவில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட வுள்ளது. முதற்கட்டமாக தேர்ந்தெடுக்க ப்பட்ட 80 யுவதிகளுக்கு பயிற்சி வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று இரத்மலானை யிலுள்ள ட்ரைஸ்டார் நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது.

மூன்று மாத காலம் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. உணவு, தங்குமிட வசதிகளுடன் மாதமொன்றுக்கு ஒருவருக்கு தலா 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது என்று ஆளுநர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விடுத்த வேண்டு கோளுக்கமைய இந்த தொழில் வாய்ப்பை வழங்க மேற்படி நிறுவனம் முன்வந்துள்ளதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் 13ம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலைக்கு அடிக்கல் நடப்படவுள்ள துடன் அங்கு ஆரம்பிக்கப்படவுள்ள பயிற்சி நிலையத்திற்கு 50 தையல் இயந்திரங்களும் வழங்கப்படவுள்ளன.

தொழிற்சாலை அமைக்கப்படும் இடம் தொடர்பாக இரு தரப்பினரும் இன்னும் ஓரிரு தினங்களில் கலந்து ஆலோசித்து இவ்வார இறுதிக்குள் உரிய தீர்வை காணவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை ஏனையோ ருக்கு கிளிநொச்சியிலேயே பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு தொழிற் பயிற்சி வழங்குவதன் மூலம் இந்தப் பிரதேச மக்களுக்கும் மேலும் ஊக்குவிப்பாக அமையும் என்றும் தெரிவித்தார்.