24

24

கிளிநொச்சியில் நடைபெற இருக்கும் முத்தமிழ் விழாவை ரத்து செய்யுமாறு தவிகூ வி ஆனந்தசங்கரி கோரிக்கை

TULF Leader V Anandasangareeஅரசாங்க அதிபர் அவர்கட்கு            
கிளிநெச்சி

கிளிநெச்சி முத்தமிழ் விழா

அன்புடையீர்

தங்களின் அனுசரணையுடன் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து முன்று நாட்களுக்கு கிளிநெச்சியில் முத்தமிழ் விழா நடைபெறவுள்ள செய்தி கிடைத்து திகைப்படைந்தேன். இந்நிகழ்ச்சியை உங்களுடன் தொடர்பு கொண்டு இரத்து செய்யுமாறு என்னிடம் பல மக்கள் கேட்டுள்ளனர். கிளிநெச்சி பொதுமக்களில் கணிசமானவர்கள், இது மகிழ்ச்சி கொண்டாட்டங்களுக்கு உகந்த நேரம் அல்ல எனக் கூறி இவ்விழாவை இரத்துச் செய்யுமாறு கோருகின்றனர். கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது விசாரணைகளை கிளிநெச்சியிலும் முல்லைத்தீவிலும் நடத்திய போது அவர்கள் முன் கூடி நின்ற பெரும் தொகை மக்கள் எனது கூற்றுக்கு சான்று பகர்வார்கள்.

மக்கள் தமது தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளைகளைப்பற்றியும், காணாமல் போய் உள்ள உறவினர்களைப் பற்றியும் சொல்லண்ணாத் துயரில் இருக்கும் போது அவர்கள் எதுவித கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ளும் மன நிலையில் இல்லை. மேலும் மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் எனக் கூறப்படும் இவர்கள் சொல்லெணா கஸ்டங்களை அனுபவித்துக் கொண்டு இன்றும் இருக்கின்றனர். அவர்களின் அனேகமான வீடுகள் கூரை அற்ற நிலையிலும், மனித சஞ்சாரத்துக்கு தகுதியற்றவைகளாகவே இன்றும் இருக்கின்றன். பிள்ளைகள் உள்ள குடும்பங்கள்  அதிகளவான  கஸ்டங்களை அனுபவிக்கின்றனர். தொடர்ந்து முகாம்களில் உள்ள அவர்களுக்களுடைய உறவுகள் படும் கஸ்டமோ மிக மோசம்.

தயவு செய்து இந்நிகழ்ச்சியை நடத்துவதில் உங்களுக்குள்ள கஸ்டங்களை அதிகரிகளுக்கு எடுத்துக் கூறி  இந் நிகழ்ச்சியை இரத்துச் செய்யவும். யாழ் மத்திய கல்லூரி அதிகரிகளுக்கும், திருமறை கலாமன்றத்தினருக்கும் எனது வேண்டுகோளை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி!
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
வீ.ஆனந்தசங்கரி
தலைவர் – தமிழர் விடுதலைக் கூட்டணி 

“புலிகளின் உறுப்பினர்கள் எவரும் இரகசியமான முறையில் தடுத்து வைக்கப்படவில்லை” – இராணுவப் பேச்சாளர் உபயமெதவல

புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் எழிலன் உட்பட புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எவரும் தடுத்து வைக்கப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார்.

 எழிலனும் மற்றும் புலிகளின் ஏழு சிரேஸ்ட உறுப்பினர்களும் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும்  அவர்களை படையினர் மறைமுகமான இடத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரான எழிலனின் மனைவி ஆனந்தி சசிகரனின் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானதெனவும் அவை படையினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.

எழிலன் உள்ளிட்ட குழுவினர் படையினரிடம் சரணடையவில்லை எனவும், படையினர் இரகசிய தடுப்பு முகாம்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும்  வைத்திருக்கவில்லை எனவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தவர்கள் படையினரால் அச்சுறுத்தல், துன்பறுத்தல்களுக்கு ஆளாவதாகவும்,  நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த பொதுமக்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். பாராளுமன்றில், அவசரகாலச்சட்டதை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

‘நமது ஈழநாடு’ அச்சகம் பொலிஸாரால் சீல் வைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் வெளியான ‘நமது ஈழநாடு’ பத்திரிகையின் அச்சகத்திற்கு பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதனை தற்போது சுரபி அச்சகம் என்ற பெயரில் நடத்தி வந்த 62 வயதான சின்னத்துரை குருதேவ் என்பவரையும் பொலிஸார் கைது செய்து கொழும்பிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

கடந்த செவ்வாய் கிழமை கொழும்பிலிருந்து யாழப்பாணம் சென்ற குற்றப்புலனாய்வுப்பிரிவினர் இவ்வசகத்திற்கு சீல் வைத்ததோடு அதனை நடத்தி வந்த குருதேவ் என்பவரையும் கைது செய்துள்ளனர். இவ்வச்சகம் யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸில் சேர்வதற்கு நான்காயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் விண்ணப்பம்!

Police_Logoபொலிஸ் பணியில் இணைந்து கொள்வதற்காக நான்காயிரத்திற்கும் அதிகமாக தமிழ் இளைஞர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக பொலிஸ் மாஅதிபர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். இவ்வாறு விண்ணபித்தவர்களில் 340 பேர் பொலிஸில் இணைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு வருவதாகவும் பயிற்சி நிறைவடைந்ததும் அவர்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமைக்கமர்த்தப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.

‘5000 தமிழ்ர்கள் பொலிஸ் படையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்’ என்றும் அதன் முதற்கட்டமாக ஒரு தொகையினருக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் லண்டன் வந்திருந்த பா உ ரஜீவ விஜயசிங்க தேசம்நெற் க்கு வழங்கிய நேர்காணலில் (Sep 18 2010) தெரிவித்து இருந்தார்.

பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில் வடக்க கிழக்கில் மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேர்க்கப்படவுள்ளதாகவும், இவர்கள் பரீட்சை ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்படுவர் எனவும், தெரிவு செய்யப்படுபவர்களுக்கு ஆங்கிலம், சிங்களம் ஆகிய இரு மொழிகளும் கற்பிக்கப்படும் எனவும், சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகள் கற்பிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

”மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் தாமதமாவதற்கு கூட்டுறவுச் சங்கங்கள் காரணமில்லை” கூட்டுறவுச் சங்கம்

Co-operavtive_Shop_Jaffnaமீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் தாமதமாவதற்கு கூட்டுறவுச் சங்கங்கள் காரணமில்லை எனக் கூட்டுறவுச் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உலருணவு நிவரணப்பொருட்கள் தாமதமடைவதற்கு கூட்டுறவுச் சங்கங்கள் காரணமில்லை என கூட்டுறவுச்சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  மீள்குடியேற்றப்பட்டு இரு மாதங்களுக்கு மேலாகியும் உலக உணவுத்திட்டத்தால் வழங்கப்படும் நிவாரண உணவுப் பொருட்கள் தாமதமாவதற்கு என்ன காரணம் என்று கேட்டபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச்செயலகத்தின் பணிகள் தாமதம் காரணமாகவே கூட்டுறவுச் சங்கங்களுக்கு பட்டியல் வருவது தாமதமாகின்றதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னைய பதிவு : 22 செப்ரம்பர் 2010

‘வன்னியில் மீள்குடியேற்றப்படும் மக்களுக்கான உதவிப்பொருட்கள்  எவையும் கிடைப்பதில்லை’ – மக்கள் கவலை

வன்னியில் தற்பொது மீள்குடியேற்றம் செய்யப்படும் மக்களின் உடனடித் தேவைகளுக்கான கூரைத்தகடுகள், தறப்பாள்விரிப்புகள் எவையும் வழங்கப்படுவதில்லை என மீள்குடியமர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் மீள்க்குடியமரும் மக்களுக்கான நிவாரண உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதும் தாமதப்படுத்தப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Co-operavtive_Shop_Jaffnaகிளிநொச்சிப் பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் பலருக்கு நிவாரண உணவுப்பொருட்கள் வழங்கப்படவில்லை எனவும், மீள்குடியேற்றத்திற்காக பதிவுகளை மேற்கொள்ளும் மக்களுக்கு உடனடியாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக நிவாரண அட்டைகள் பதிவு செய்யப்படும் இடங்களிலேயெ வழங்கப்பட்டு வருகின்ற போதும், நிவாரண உணவுப்பொருட்கள் வழங்கப்படமலுள்ளதாகவும், கூட்டுறவச்சங்களுக்கு செல்லும் போது அதற்கான பட்டியல் தமக்கு வரவில்லை என நிவாரணப் பொருட்களை வழங்கும் கூட்டுறவுச் சங்கங்கள் தெரிவித்து வருவதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர். 

அமைச்சரை முற்றுகையிட்டதற்காக நான்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமறியல்!

Tissanayakka_S_P கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்கவை முற்றுகையிட்டு தடுத்துவைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு மாணவர்களை இரு வாரகாலம் விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிமன்ற நீதவான் நேற்று வியாழக் கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இரு மாதங்களுக்கு முன்பு அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சென்ற பொது. அவரை இம்மாணவர்கள் முற்றுகையிட்டு சில நிமிடங்கள் தடுத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாணவர்கள் நேற்று கண்டி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது. இவர்களை இரு வாரங்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். புகிடிவதைச் சட்டத்தின் கீழ் இம்மாணவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி ஜனவரி மாதம் ஆரம்பமாகும்

இந்தியாவினால் மேற்கொள்ளப்படவுள்ள வீடமைப்புப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதமே ஆரம்பமாகும் என யாழ்ப்பாணம் வந்துள்ள இந்திய அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பாக ஆராய்வதாற்கென நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட இந்திய அதிகாரிகள் குழுவினர் இந்திய அசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள் ஜனவரி மாதமே ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தனர்.

 நேற்று முன்தினம் மாலை யாழ்ப்பாணம் வருகை தந்த இந்தியக்குழுவினர் நேற்றுக்காலை யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை சந்தித்து வீட்டுத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடினர்.

இந்திய அரசாங்கமே இந்த வீடுகளைக் கட்டித்தர வேண்டுமா? அல்லது அதற்கான நிதியை மட்டும் வழங்கினால் போதுமா? இது குறித்த மக்களின் கருத்து பற்றி இந்தியக் குழுவினர் அரசாங்க அதிபரை வினவியதாகவும், யாழ்ப்பாண மக்களின் பண்பாட்டிற்கு ஏற்ற விதத்தில் வீடுகள் அமைக்கப்பட வேண்டும் என தாம் தெரிவித்தமைக்கு இந்தியக் குழுவினர் இணக்கம் தெரிவித்ததாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

அடுத்து வரும் மூன்று மாதங்களில் களநிலை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஜனவரி மாதம் வீடமைப்புப் பணிகள் ஆரம்பமாகும் என இந்தியக் குழுவினர் அரசாங்க அதிபரிடம் உறுதியளித்துள்ளனர்.

ஐந்து ஆண்டுகளின் பின் அமெரிக்காவில் மரண தண்டனை

24-teresa-lewis.jpgஅமெரிக்கா வில் 41 வயதுப் பெண்ணுக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் நபர் இவர்தான். விர்ஜீனியாவைச் சேர்ந்த அவரது பெயர் தெரசா லூயிஸ். இவர் தனது கணவரின் இன்சூரன்ஸ் பணத்தை (இரண்டரை லட்சம் டாலர்) பெறுவற்காக அவரையும், வளர்ப்பு மகனையும் கொன்றதாக கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்குப் பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து விஷ ஊசி போட்டு அவருக்குத் தண்டனையை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் இதற்கு அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இருப்பினும் இந்த எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் தற்போது தண்டனையை நிறைவேற்றி விட்டனர். உள்ளூர் நேரப்படி, விர்ஜீனியாவில் காலை 9.13 மணிக்கு அவருக்க விஷ ஊசி போட்டு தண்டனையை நிறைவேற்றினர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக ஒருவருக்கு அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேசமயம், விர்ஜீனியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது கடந்த நூறு ஆண்டுகளில் இதுதான் முதல் முறையாகும். கிரீன்ஸ்வில்லி சீர்திருத்த மையத்தில் தெரசாவுக்கு விஷ ஊசி போட்டு கொல்லும் நிகழ்ச்சியை அவரது உறவினர்களும், குடும்பத்தினரும் நேரில் பார்த்தனர்.

தெரசாவைக் காப்பாற்றுவதற்காக கிட்டத்தட்ட 7300 அப்பீல் மனுக்கள் மாகாண ஆளுனருக்குப் அனுப்பப்பட்டன. ஆனால் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி தீர்ப்பு ஒரு வாரம் ஒத்திவைப்பு

ayodha.jpgஅயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்  தீர்ப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் ஒரு வாரம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அடுத்த விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அயோத்தி வழக்கில், தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி ரமேஷ் சந்திர திரிபாதி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், எச்.எல். கோகலே ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பை வெளியிடுவதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு ஒரு வாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரச்னைக்கு சுமுகமாக தீர்வுகாண்பதற்கான வாய்ப்புகளைப் பரிசீலிக்குமாறு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதையடுத்து நாடு முழுவதும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மத உணர்வுகள் சம்பந்தப்பட்டது என்பதால் கலவரம் ஏற்படலாம் என்று கருதி பதற்றமான இடங்களில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில்தான், இந்தத் தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரி ரமேஷ் சந்திர திரிபாதி உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தார்.

அயோத்தி தீர்ப்பால் மத நல்லிணக்கம், அமைதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் காமன்வெல்த் போட்டி, காஷ்மீரில் வன்முறை, பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் என முக்கியமான நிகழ்வுகள் நடைபெறும் இந்த நேரத்தில் இந்தத் தீர்ப்பு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று திரிபாதி தனது மனுவில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, கடந்த வாரம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் திரிபாதி ஏற்கெனவே தாக்கல் செய்த மனு  தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தார்.

18ஆவது திருத்தம் நேற்று 23.09.2010 முதல் சட்டமாகியுள்ளது – சபாநாயகர்

chamal1.jpgஅரசி யலமைப்புக்கான 18ஆவது திருத்தம் நேற்று (23ம் திகதி) முதல் நாட்டின் சட்டமாகியுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று சபையில் அறிவித்தார்.

பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் நேற்று பிற்பகல் கூடியது. இச்சமயம் அமர்வின் ஆரம்ப நிகழ்வின் போது சபாநாயகர் மேற்படி அறிவிப்பை சபையில் விடுத்தார். அரசியலமைப்புக்கான 18வது திருத்தம் கடந்த 08ம் திகதி சபையில் மூன்றிலிரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மையுடன் நிறைவேறியது.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு சபாநாயகர் கையெழுத் திட்டதும் அது நாட்டின் சட்டமாகும். அதற்கு ஏற்ப அரசியலமைப்புக்கான 18வது திருத்தமும் நேற்று முதல் நாட்டின் சட்டமாகியுள்ளது.