October

October

வடமராட்சிக் கிழக்கில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மீனவர்களுக்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் உதவி.

வடமராட்சிக் கிழக்கில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில், அப்பிரதேச கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் உதவிபுரியம் என்றும், அதற்கு பல நிறுவனங்கள் முன்வந்தள்ளன எனவும் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கே.தர்மலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கிலுள்ள பத்து கிராமசேவையாளர் பிரிவுகளிலுள்ள 915 குடும்பங்களுக்கு யு.என்.டி.பி, சோஆ, போரூட், பாஸிக், சேவ் த சில்ட்ரன் ஆகிய நிறுவனங்கள் உதவி வழங்க முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிறுவனங்களின் செயற்திட்டத்திற்கு ஜனாதிபதி விசேட செயலணியின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாஸிக் நிறுவனம் 202 மீன்பிடி வலைகளையும், 85 படகுகளையும், 85 வெளியிணைப்பு இயந்திரங்களையும், 70 கட்டுமரங்களையும் வழங்க முன்வந்துள்ளது. போரூட் நிறுவனம் 342 மீன்பிடி வலைகளை வழங்க முன்வந்துள்ளது. சோஆ நிறுவனம் 100 தெப்பங்களையும், அதற்கான மீன்பிடி வலைகளையும் வழங்க முன்வந்தள்ளது. இதே போன்று ஏனைய நிறுவனங்களும் உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கபபட்டுள்ளது.

நல்லூரில் கட்டப்படவிருக்கும் விடுதி ஆடம்பரவிடுதியாக இல்லாமல் யாத்திரிகர் மடம் போல் அமையுமாம்.

நல்லூரில் உல்லாச ஹோட்டல் ஒன்றை கட்டுவிருப்பது தொடர்பாக பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று சனிக்கிழமை ஹோட்டல் கட்டவிருக்கும் நிர்வாகத்தினருக்கும் இந்து அமைப்புக்களின் ஒன்றியத்திற்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. இக்கலந்துரையாடலின் போது குறித்த ஹோட்டல் கட்டடம் உல்லாச விடுதியாக இல்லாது ஒரு யாத்திரிகர் மடம் போன்ற வடிவத்தில் கட்டுவதற்கு ஹோட்டல் நிர்வாகத்தினர் இணங்கியுள்ளதாக இந்து அமைப்புக்களின் ஒன்றியத்தின் செயலாளர் சு.பரமநாதன் தெரிவித்துள்ளார்.

நல்லூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் கட்டுவது தொடர்பாக அதன் நிர்வாகத்தினருக்கும் இந்து அமைப்புக்களின் ஒன்றியத்திற்குமிடையில் நேற்று சனிக்கிழமை நல்லை ஆதீனத்தில் வைத்து கலந்துரையாடல் நடைபெற்றது. புனித பிரதேசமான நல்லூரில் உல்லாச விடுதி கட்டுவதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து அதில் விவாதிக்கப்பட்டது. அதே வேளை, இவ்விடுதி அமைக்கப்படுமானால் நல்லூரின் சூழல் மாசடைவது குறித்தும். இவ்விடுதியை வேறு விசாலமான பகுதியில் கட்ட முடியும் என்பது குறித்தும் இந்து அமைப்புக்களின் ஒன்றியப்பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், அந்த விடுதியை நல்லூரில் அமைப்பதால் யாழப்பாணத்தில் பல்வேறு அபிவிருத்திகள், தொழில் வாய்ப்புக்கள் ஏற்படும் என ஹோட்டல் அமைக்கவிருக்கும் நிர்வாகத்தினரால் கூறப்பட்டது.

கலந்துரையாடல்களின் முடிவில் நல்லூரில் கட்டப்படவுள்ள இந்த விடுதியில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. அசைவ உணவுகள் சமைப்பதில்லை எனவும், அவ்விடுதி யாத்திரிகர் விடுதி போல் அமைக்கப்படும் எனவும், கழிவு நீரை அகற்றுவதற்காக நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் எனவும் முடிவெடுக்கப்பட்டதாக மேற்படி ஒன்றியத்தின் செயலாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் இதுவரை 20,200 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த 28,473 குடும்பங்களில் 20,200 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 18ம் திகதி வரை இவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் நிறைவடைந்ததும் ஏனையவர்களும் விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் எனவும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னியில் சட்டவிரோத மதுபான விற்பனை.

வன்னியில் மீள் குடியேற்றப்பட்ட பகுதிகளில் கசிப்பு எனப்படும் கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழில்கள் நடைபெற்று வருகின்றமை பொலிஸாரினால் கண்பிடிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்பவர்களும் பிடிக்கப்பட்டு வருகின்றனர்.

வன்னியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் மிள்குடியேற்றப்பட்டுள்ளதோடு அவர்களுக்கான உதவிப்பணம். மற்றும் வீடமைப்புப்பணிகள் என்பனவும் நடைபெற்று வரும் நிலையில் இச்சட்ட விரோத சாராயம் காச்சும் தொழிலினாலும், சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்பவர்களாலும் சமூகச் சீர்கேடுகள் ஏற்படத் தொடங்கியுள்ளமை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மதுபானங்களை சட்டபூர்வமாக விற்பனை செய்யும் வியாபார நிலையங்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வடமாகாண சபையை யாழ்ப்பாணத்தில் இயங்க வைக்க ஏற்பாடு

lanka.jpgவடக்கு மாகாண சபையை யாழ்ப்பாணத்தில் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 தற்போது திருகோணமலையில் இயங்கும் மாகாண சபையைக் கிளிநொச்சிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்கமைய மாகாண சபையின் சில திணைக்களங்கள் கிளிநொச்சிக்கு மாற்றப்பட்டிருந்த போதும் அனைத்து திணைக்களங்களையும் அவற்றின் அலுவலகங்களையும் கிளிநொச்சியில் இயங்கச் செய்வதற்குரிய போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் வடக்கு மாகாண சபையைக் கிளிநொச்சியில் இயங்க வைப்பதில் சிக்கலான நிலை தோன்றியது.

வடக்கின் தலைநகராக மாங்குளம் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும் அங்கு மாகாண சபையை இயங்க வைப்பதற்குரிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நீண்டகாலம் செல்லுமென்பதாலும் வடக்கு மாகாண சபைக்கு அடுத்த வருட முற்பகுதியில் தேர்தலை நடத்த அரசு உத்தேசித்துள்ளதால் தேர்தலின் பின் தொடர்ந்தும் மாகாண சபையைத் திருகோணமலையில் இயங்கவைக்க முடியாதென்பதாலும் தற்போதைக்கு மாகாண சபையை யாழ்ப்பாணத்தில் இயங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தில் மலையக மக்கள் முன்னணி இணையும்

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ள நிலையில் இந்த அமைப்பில் மலையக மக்கள் முன்னணியை இணைத்துக் கொள்வது பற்றி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறியவருகிறது.

மலையக மக்கள் முன்னணி தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்து செயற்படுவது தொடர்பில் முன்னணியின் தலைவி சாந்தினி சந்திரசேகரனுக்கும் அரங்கத்திலுள்ள தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கத்துக்குமிடையில் பேச்சுவார்த்தை கடந்த வாரம் இடம்பெற்றது. இதன்போது மலையக மக்கள் முன்னணியை இணைத்துக் கொள்வது குறித்து அடுத்த தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டத்தின்போது அரங்கத்தில் அங்கம் வகிக்கின்ற ஏனைய கட்சிகளுடன் பேசி தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் சாந்தினி சந்திரசேகரனிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை தமிழ்க் கட்சிகளின் அரங்கம் கூடவிருந்தது. எனினும் இக்கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியுடன் வடக்கு, கிழக்கை சேர்ந்த கட்சிகள் அமைப்பு என பத்து நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன.இதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை இணைந்து செயற்படுமாறு அரங்கத்தினர் அழைப்பு விடுத்து வருகின்றனர். அரங்கத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிப்பதன் மூலம் அது வலுவுள்ளதாக அமையுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் தெரிவித்தார்.

யாழ். வாக்காளர்களுக்கு மற்றொரு சந்தர்ப்பம்

யாழ். மாவட்ட, வாக்காளர் இடாப்பு மீளாய்வின்போது தமது பெயரை வாக்காளர் இடாப்பில் பதிவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்காமல் இருந்தால் அவர்களைப் பதிவு செய்ய மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இதற்கான விண்ணப்பப்படிவங்கள் டிசம்பர் மாதம் விநியோகிக்கப்பட்டு ஜனவரி மாதம் வாக்காளர் இடாப்பில் சேர்க்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.இப்பணி யாழ்.மாவட்டத்தில், 435 கிராம சேவையாளர் பிரிவிலும் கிளிநொச்சிமாவட்டத்தில் 96 கிராம சேவையாளர் பிரிவிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஏற்கனவே பெறப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் மூலமான வாக்காளர் இடாப்பு மீளாய்வுப்பணி முடியும் தருவாயில் உள்ளது

புலி ஆதரவு இலங்கை எழுத்தாளர்களும் தமிழக எழுத்தாளர்களும் கொழும்பு எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிராக கையெழுத்துப் போர்!

அடுத்த ஆண்டு ஜனவரி கொழும்பில் நடைபெறவுள்ள எழுத்தாளர் மாநாடு அதற்கு எதிராக எழுத்துள்ள எதிர்ப்பலையால் தேவைக்கு அதிகமான விளம்பரத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஆதரவாகவும் எதிராகவும் இணைய வலையில் கடந்த ஆறு மாதங்களாக பல கட்டுரைகள் வெளியாகி உள்ளன.

தற்போது கொழும்பு எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிராக 130 பேர் வரை கையெழுத்திட்டு உள்ளனர். இவர்களில் நூறுக்கும் அதிகமானவர்கள் தமிழக எழுத்தாளர்கள். ஏனையவர்கள் 30ற்கும் குறைவானவர்கள் இலங்கையைத் தாயகமாகக் கொண்டவர்கள். இவர்களில் ஒருசிலர் தவிர பெரும்பாலும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அவர்களுடைய அரசியலையும் முழுமையாக ஏற்றுக்கொண்டவர்கள்.

இது தொடர்பாக தேசம்நெற்றில் பதிவிடப்பட்ட கட்டுரை: ( யாதும் ஊரே யாவரும் கேளீர்! தீதும் நன்றும் பிறர்தர வாரா! : முருகபூபதி (அமைப்பாளர், சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு )

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து அவர்களுடைய கலை கலாச்சாரப் பிரிவில் இயங்கிய அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் மீது மென்போக்குடைய கி. பி. அரவிந்தன், இ. பத்மநாப ஐயர், இங்கிலாந்து; அருள் எழிலன், இந்தியா; பிரான்ஸ் மு. புஷ்பராஜன், காலம் செல்வம், கனடா; யமுனா ராஜேந்திரன், இங்கிலாந்து; கண. குறிஞ்சி, இந்தியா; கீற்று நந்தன், இந்தியா.போன்றோரால் ஒருங்கிணைக்கப்பட்ட இக்கூட்டறிக்கையை தேசம்நெற் விவாதக் களத்திற்குப் பதிவிடுகிறோம்.

தேசம்நெற்

._._._._._.

கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்கள் கூட்டறிக்கை

வரலாறு நெடுகிலும் படைப்பாளிகள், கலைஞர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவுமே சார்புநிலை எடுத்திருக்கிறார்கள். ரஷ்யப் புரட்சியைச் சாட்சியமாக இருந்து கண்டு சொல்ல, அமெரிக்க எழுத்தாளர் ஜோன் ரீட் மொஸ்கோ சென்றார். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் குடியரசுவாதிகளுக்கு ஆதரவாகச் சார்புநிலையெடுத்து, அவர்களுக்காகப் போராட ஸ்பெயினுக்கு விரைந்தனர் எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜோர்ஜ் ஓர்வெல், கிறிஸ்ரோபர் கோட்வெல் போன்ற படைப்பாளிகள். வியட்நாம் மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடினார்கள் தத்துவவாதிகளான பேர்ட்ரண்ட் ரஸ்ஸல், ழீன் போல் ஸார்த்தர் போன்றோர். ஈராக் யுத்தத்தின்போது, “அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை அழிக்க வந்த ஒரு பிசாசு” எனத் தனது நோபல் பரிசு உரையில் பிரகடனப்படுத்தினார் நாடகாசிரியரான ஹரோல்ட் பின்ரர்.

படைப்பாளிகள், கலைஞர்கள் எந்த மதிப்பீடுகளுக்காக நிற்கிறார்கள்? இவர்கள் கருத்துச் சுதந்திரத்திற்காகத் தம்மை உறுதியாக நிலைநிறுத்திக்கொண்டவர்கள். “வாளை விடவும் எழுதுகோல் வலிமையானது” என்று நிரூபித்தவர்கள்.

சிறிலங்காவில் எழுதுபவர்கள் தேர்ந்துகொள்ள இன்று என்ன இருக்கிறது? லசந்த போன்ற மனச்சாட்சியுள்ள சிங்கள, தமிழ்ப் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தமது உயிராபத்துக் கருதி சிறிலங்காவிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். மாற்றுக் கருத்து ஊடகங்கள் அனைத்தும் தாக்கப்படுகின்றன. கலைஞர்கள் காணாமல் போனோராக அறிவிக்கப்படுகிறார்கள். படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத நாடு சிறிலங்கா என உலக ஊடகங்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றன.

தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினைப் பயங்கரவாதமாகச் சித்திரித்து, தமிழின அழிப்பை நடத்தி முடித்துள்ளது சிறிலங்கா பயங்கரவாத அரசு. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை அழிக்க எடுத்த இராணுவ நடவடிக்கையின்போது, சர்வதேச யுத்த விதிகளை மீறி, தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் போராளிகளையும் தமிழ் மக்களையும் வகைதொகையின்றிக் கொலைசெய்தும், பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்தவர்களை மண்மூடிக் கொன்றும், சரணடைந்தவர்களைச் சல்லடையாக்கி நரபலியாடி நின்றது இந்தச் சிங்களப் பயங்கரவாத அரசு. யுத்தம் முடிவடைந்த பின்பும் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு சாட்சியங்கள் இல்லாமல் ஆக்குவதற்காக, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை யுத்தபூமியில் பார்வையிட தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருகிறது.

சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பெற்ற போர்க்குற்றங்களும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டு, சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கப்படவேண்டும் என்று உலகின் மனித உரிமை அமைப்புக்கள், டப்ளின் தீர்ப்பாயம் போன்ற நீதியமைப்புக்கள் தொடர்ந்தும் குரலெழுப்பிவருகிறன.

தமிழர்களின் குருதியில் தோய்ந்துபோய் இருக்கும் இனவெறிச் சிங்கள அரசு, நீதிக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள, தனது நிரந்தரச் செயற்பாடான பொய், ஏமாற்று, வஞ்சக நடிப்பு ஆகியவற்றை மீண்டும் அரங்கேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசியல் களத்தில் மட்டுமல்லாது, தமது பொருளியல் நலன் கருதிய வகையில் கலை, இலக்கியம், விளையாட்டு, கேளிக்கை ஆகியவைகளின் மூலம் தனக்கான அதிகார வெளியைச் சிறிலங்கா அரசு ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறது.சிறிலங்கா பயங்கரவாத அரசின் இந்தத் திட்டத்தின் சங்கிலித் தொடர்ச் செயற்பாடுகளாகக் கொழும்பில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழா, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கேளிக்கை, சிறிலங்கா இராணுவத்தினர்களுடனான இந்திய நடிகர்களின் கிறிக்கெற் விளையாட்டு ஆகிய களியாட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன.

சிங்கள மேலாதிக்கத்தால் இறுகிப்போன சிறிலங்கா அரசு, பல்வேறு மனித உரிமை அமைப்புக்களைக் கொழும்பில் அனுமதிக்க மறுத்துவரும் நிலையில், தனது பகை இனத்தின் இலக்கிய மாநாட்டை, அதுவும் உலகெங்கிலுமிருந்து திரட்டப்பட்ட சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டைக் கொழும்பில் நடத்த அனுமதித்திருக்கிறது என்றால், சிங்கள அரசிற்கு அதனால் ஏற்படும் அரசியல் அனுகூலம்தான் இதற்கான அடிப்படையாக இருக்குமே தவிர, தமிழ் எழுத்தாளர்களது செயற்பாட்டு நலன்களின்பால் கொண்ட அக்கறையாக இருக்க முடியாது.

2011 ஜனவரியில் கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்துவதற்கான அதனது ஏற்பாட்டாளர்களின் ஜனநாயக உரிமையை, மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள எழுத்தாளர்கள் கலைஞர்கள் எனும் வகையில் நாங்கள் மதிக்கிறோம் என்றாலும், இன்றைய நிலையில் சிறிலங்கா பயங்கரவாத அரசினால், தன் நலன் சார்ந்து உருட்டப்படும் சதுரங்கக் காய்களாகவே இந்த எழுத்தாளர்கள் ஆகிப்போவார்கள் என்பதற்கும் அப்பால் வேறெதுவும் நிகழப்போவது இல்லை என்றும் நாங்கள் கருதுகிறோம். சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களை மாநாட்டில் பங்குகொள்ள அனுமதிப்பதன் மூலம் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள் அனைவரும் தனது பக்கமே எனும் தோற்றப்பாட்டினை சிறிலங்கா அரசு தனக்கான அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்க முனையலாம். இதற்கு நாம் எவரும் பலியாகிவிடக்கூடாது.

இன்னும் உலர்ந்துவிடாத எமது மக்களின் குருதிச் சுவடுகளின் மீதும், எமது பெண்களதும் எமது பச்சிளம் குழந்தைகளினதும், முதியவர்களினதும் மரணித்த, எரியூட்டப்பட்ட உடலங்களின் மீதும் நடத்தப்படும் சிறிலங்கா அரசின் அரசியல் நாடகத்திற்கு துணைபோகக் கூடிய வகையில், நடைபெற்ற மனிதப் பேரழிவுக்குக் காரணமான சிறிலங்கா கொடுங்கோல் அரசு குறித்த எந்த நிலைப்பாட்டையும் முன்வைக்காத, இந்தச் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை எல்லா வகையிலும் புறக்கணிப்பதே மனச்சாட்சியுள்ள படைப்பாளிகளாக, கலைஞர்களாக உள்ளவர்களது வரலாற்றுக் கடமையாகும் என நாங்கள் கருதுகிறோம். நீதியின்மேல் பசி தாகம் உடைய படைப்பாளிகள், கலைஞர்கள் தார்மீக நிலையில் மனிதகுல மனச்சாட்சியாகவே இருப்பவர்கள். அநீதிகளை, சிறுமைகளைக் கண்டு பொங்குபவர்கள். நொந்துபோன மக்கள் வலியின் குரலை ஓங்கி ஒலிப்பவர்கள். நீதிக்காக அதிகாரத்தை எதிர்ப்பவர்கள். வரலாறு நெடுகிலும் நிமிர்ந்து நிற்கும் இந்தத் தார்மீக அடிப்படைகளில் நின்று எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாகவும் நாங்கள் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நிராகரிக்கிறோம்.

கோவை ஞானி கோட்பாட்டாளர், இந்தியா எஸ். வி. ராஜதுரை கோட்பாட்டாளர், இந்தியா ஏ. ரகுநாதன், திரைப்படக் கலைஞர், பிரான்ஸ் தமிழவன் கோட்பாட்டாளர், இந்தியா நா. முத்துமோகன் கோட்பாட்டாளர், இந்தியா நாஞ்சில்நாடன் நாவலாசிரியர், இந்தியா பொன்னீலன் நாவலாசிரியர், இந்தியா இன்குலாப் கவிஞர், இந்தியா சிற்பி பாலசுப்ரமணியம் கவிஞர், இந்தியா புவியரசு கவிஞர், இந்தியா பா. செயப்பிரகாசம் சிறுகதையாசிரியர், இந்தியா கலாப்ரியா கவிஞர், இந்தியா பழமலய் கவிஞர், இந்தியா சேரன் கவிஞர், கனடா மாலதி மைத்ரி கவிஞர், இந்தியா மகேந்திரன் கோட்பாட்டாளர், இந்தியா கவிதாசரண் பதிப்பாளர், இந்தியா தேவிபாரதி எழுத்தாளர், இந்தியா புனித பாண்டியன் இதழாளர், இந்தியா காமராசன் பொதுச்செயலாளர்,கலை இலக்கியப் பெருமன்றம், இந்தியா கௌதம சித்தார்த்தன் பதிப்பாளர், இந்தியா அசோக் யோகன் பதிப்பாளர், அசை, பிரான்ஸ் காலம் செல்வம் கவிஞர், பதிப்பாளர், கனடா க. முகுந்தன் இதழாசிரியர், மௌனம், பிரான்ஸ் சுகிர்தராணி கவிஞர், இந்தியா அரசெழிலன் இதழாளர், நாளை விடியும், இந்தியா க. விஜயகுமார் பதிப்பாளர், இந்தியா நிழல் திருநாவுக்கரசு பதிப்பாளர், இந்தியா அ. விஸ்வநாதன் பதிப்பாளர், பதிவுகள், இந்தியா கே. வி. ஷைலஜா பதிப்பாளர், இந்தியா வேனில் கிருஷ்ணமூர்த்தி பதிப்பாளர், இந்தியா அய்யநாதன் ஊடகவியலாளர், இந்தியா புகழேந்தி ஓவியர், இந்தியா பொள்ளாச்சி நசன் ஆவணக்காப்பாளர், இந்தியா கி. பி. அரவிந்தன் கவிஞர், பிரான்ஸ் தமிழ்நாடன் கவிஞர், இந்தியா கண. குறிஞ்சி பதிப்பாளர், இந்தியா பொதியவெற்பன் பதிப்பாளர், இந்தியா எ. நாராயணன் இதழாளர், இந்தியா ம. செந்தமிழன் ஊடகவியலாளர், இந்தியா அமரந்தா மொழிபெயர்ப்பாளர், இந்தியா.

க. வாசுதேவன் கவிஞர், பிரான்ஸ் மே. து. ராசுகுமார் ஆய்வாளர், இந்தியா செழியன் திரைப்பட ஒளிப்பதிவாளர், இந்தியா தளவாய் சுந்தரம் ஊடகவியலாளர், இந்தியா பாலா கார்டூனிஸ்ட், இந்தியா பாஸ்கர் சக்தி எழுத்தாளர், இந்தியா ஜனநாதன் திரைப்பட இயக்குநர், இந்தியா அழகிய பெரியவன் சிறுகதையாசிரியர், இந்தியா எஸ். சிறிதரன் சிறுகதையாசிரியர், ஐக்கிய அமெரிக்கா ராஜுமுருகன் திரைப்பட இயக்குநர், இந்தியா யுகபாரதி திரைப்பட பாடலாசிரியர், இந்தியா ஏக்நாத் ஊடகவியலாளர், இந்தியா பிரேமா ரேவதி ஊடகவியாலாளர், இந்தியா லெனின் ஊடகவியலாளர், இந்தியா மு.சந்திரகுமார் விமர்சகர், இந்தியா முனைவர் பஞ்சாங்கம் விமர்சகர், இந்தியா தமிழியம் சுபாஷ் திரைப்பட இயக்குநர், நோர்வே ஆ. சிவசுப்ரமணியன் ஆய்வாளர், இந்தியா டானியல் ஜீவா சிறுகதையாசிரியர், கனடா ச. பாலமுருகன் நாவலாசிரியர், இந்தியா நிழல்வண்ணன் மொழிபெயர்ப்பாளர், இந்தியா பேராசிரியர் கோச்சடை மொழிபெயர்ப்பாளர், இந்தியா எஸ். வேலு விமர்சகர், இங்கிலாந்து சன். தவராசா விமர்சகர், ஸ்விட்சர்லாந்து டி. எஸ். எஸ். மணி பத்திரிக்கையாளர், இந்தியா இரா. முருகவேள் மொழிபெயர்ப்பாளர், இந்தியா குட்டி ரேவதி கவிஞர், இந்தியா லெனின் சிவம் திரைப்பட இயக்குநர், கனடா அருள் எழிலன் பத்திரிக்கையாளர், இந்தியா ஆர். ஆர். சீனிவாசன் ஆவணப்பட இயக்குநர், இந்தியா வளர்மதி நாடகாசிரியர், இந்தியா அறிவன் விமர்சகர், இந்தியா நடராஜா முரளிதரன் பதிப்பாளர், கனடா ஜமாலன் கோட்பாட்டாளர், சவூதி அரேபியா ஹெச். பீர் முகமது கோட்பாட்டாளர், இந்தியா சுப்ரபாரதி மணியன் நாவலாசிரியர், இந்தியா மெலிஞ்சிமுத்தன் கவிஞர், கனடா பெருமாள் முருகன் நாவலாசிரியர், இந்தியா ரோஸா வசந்த் விமர்சகர், இந்தியா ரூபன் சிவராஜா வில்லிசைக் கலைஞர், நோர்வே வி. உதயகுமார் மொழிபெயர்ப்பாளர், இந்தியா ஆர். பாலகிருஷ்ணன் மொழிபெயர்ப்பரளர், இந்தியா லிங்கராஜா வெங்கடேஷ் விமர்சகர், இந்தியா பாமரன் விமர்சகர், இந்தியா அருள்மொழிவர்மன் விமர்சகர், கனடா ரஃபேல் கோட்பாட்டாளர், கனடா சிவதாசன் இதழாளர், கனடா இரவி அருணாசலம் சிறுகதையாசிரியர், இங்கிலாந்து எம். சி. லோகநாதன் கவிஞர், டென்மார்க் பா. சிறிஸ்கந்தன் விமர்சகர், கனடா டி. தயாநிதி நாடகக் கலைஞர், பிரான்ஸ் அ. முருகையன் கல்வெட்டாய்வாளர், பிரான்ஸ் நாச்சிமார்கோவிலடி ராஜன் வில்லிசைக் கலைஞர், எழுத்தாளர், யேர்மனி சாந்தினி வரதராஜன் எழுத்தாளர், யேர்மனி முல்லை அமுதன் கவிஞர், இங்கிலாந்து அய்யனார் விஸ்வநாத் சிறுகதையாசிரியர், இந்தியா கவிமதி கவிஞர், துபாய் பொன்.சந்திரன் விமர்சகர், துபாய் பாரதி தம்பி ஊடகவியலாளர், இந்தியா ஜென்ராம் ஊடகவியலாளர், இந்தியா அன்பாதவன் கவிஞர், இந்திய அடூர் ஷா நவாஸ் ஆவணப்பட இயக்குநர், இந்தியா சச்சிதானந்தன் சுகிர்தராஜா ஆய்வாளர், எழுத்தாளர், இங்கிலாந்து கௌதமன் திரைப்பட இயக்குர், இந்தியா ஜெயபாஸ்கரன் விமர்சகர், இந்தியா குணா திரைப்பட இயக்குநர், பிரான்ஸ், கஜேந்திரன் ஊடகவியலாளர், இந்தியா கழனியூரான் நாட்டுப்புறவியலாளர், இந்தியா ஈரோடு தமிழன்பன் கவிஞர், இந்தியா அ. முத்துக்கிருஷ்ணன் விமர்சகர், இந்தியா தொ. பரமசிவம் ஆய்வாளர், இந்தியா சேரன் திரைப்பட இயக்குநர், இந்தியா தங்கர்பச்சான் திரைப்பட இயக்குநர், இந்தியா ஓவியா விமர்சகர், இந்தியா தமிழ்நதி கவிஞர், கனடா ராம் திரைப்பட இயக்குநர், இந்தியா இராஜேந்திர சோழன் சிறுகதையாசிரியர், இந்தியா மா. மதிவண்ணன் கவிஞர், இந்தியா என். டி. ராஜ்குமார் கவிஞர், இந்தியா பாரதி கிருஷ்ணகுமார் ஆவணப்பட இயக்குநர், இந்தியா வீ. அரசு ஆய்வாளர், இந்தியா அ. மங்கை நாடகாசிரியர், இந்தியா சிபிச்செல்வன் கவிஞர், இந்தியா தா. பாலகணேசன் கவிஞர், பிரான்ஸ் அஜயன் பாலா சிறுகதையாசிரியர், நடிகர், இந்தியா தேடகம் தோழர்கள், தேடகம், கனடா கீற்று நந்தன் பதிப்பாளர், இந்தியா நேமிநாதன் எழுத்தாளர், இங்கிலாந்து மு. புஷ்பராஜன் கவிஞர், இங்கிலாந்து யமுனா ராஜேந்திரன் கோட்பாட்டாளர், இங்கிலாந்து இ. பத்மநாப ஐயர் பதிப்பாளர், தமிழியல், இங்கிலாந்து.

கூட்டறிக்கை ஒருங்கிணைப்பாளர்கள் : மு. புஷ்பராஜன், இங்கிலாந்து; காலம் செல்வம், கனடா; கி. பி. அரவிந்தன், பிரான்ஸ்; யமுனா ராஜேந்திரன், இங்கிலாந்து; இ. பத்மநாப ஐயர், இங்கிலாந்து; கண. குறிஞ்சி, இந்தியா; அருள் எழிலன், இந்தியா; கீற்று நந்தன், இந்தியா.

ஒலுவில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் நேரடியாக தலையிடும்படி ஜனாதிபதிபதியிடம் உலமா கட்சி கோரிக்கை

சமீப காலமாக அம்பாரை மாவட்டத்தின் ஒலுவில் பிரதேச ஆலிம் நகர் முஸ்லிம்களின் வயற்காணிகளை அபகரிக்கும் முயற்சியில் சில அதிகாரிகள் ஈடுபடுவதாக அம்மக்கள் முறைப்பாடு செய்கின்றனர். இது சம்பந்தமாக அண்மையில் அவர்கள் ஆர்ப்பாட்டமும் செய்தார்கள்.
 
யானைக்கான வேலிகளை அமைத்தல் என்ற பெயரில் காணிகளையும்ää மக்கள் நடமாட்டத்துக்கெனவுள்ள பாதைகளையும் மறைக்கும் முயற்சிகள் நடைபெறுவதாக மக்கள் குற்றம் சொல்கின்றனர்.  யானைகள் வயல் நிலங்களுள் புகாமல் இருக்கவே வேலி தேவை. ஆனால்  வயற்காணிகளுள் அவற்றின் சொந்தக்காரர்கள் செல்கின்ற வழியை மறைத்து வேலியை அமைப்பது  அரசாங்கத்தின் மீது களங்கம் கற்பிப்பதற்காக எதிர்க்கட்சிகளுக்கு மறைமுக ஆதரவான சில அதிகாரிகளின் நடவடிக்கையாகவே நாம்  நினைக்கிறோம்.

கடந்த 2005 ஜனாதிபதி தேர்தல் தொடக்கம் தங்களுக்கு பகிரங்கமாகவே ஆதரவு தெரிவித்து வரும் நாம் கடந்த காலங்களில் முஸ்லிம்களின் காணிகள் பறிக்கப்படுவதாக அரசின் மீது சில கட்சிகள் குற்றம் சாட்டியபோது அது தவறானது என்பதை பகிரங்கமாக மறுத்தவர்கள் நாம். ஆனால் தற்போது சில மாதங்களாக நடைபெறும் இத்தகைய நிகழ்வுகள் எம்மை கவலைக்குள்ளாக்குகின்றன. எம்மை பொறுத்தவரை எமது அரசியல் பணி மூலம் எமது சுய தேவைகளை கருத்திற்கொள்ளாது நாட்டினதும், மக்களினதும் நலன்களையே கருத்திற்கொள்பவர்கள். இதன்காரணமாகவே பயங்கரவாதத்துக்கெதிரான தங்களின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு வழங்கினோம்.
 
ஆகவே இக்காணிகள் விடயத்தில் நல்லதோர் தீர்வு கடைப்பதற்காக தாங்கள் நேரடியாக இது விடயத்தில் அவதானம் செலுத்தி 1990ம் ஆண்டுக்கு முன் வடக்கு கிழக்கு மற்றும் நாடு முழுவதிலும் எவர் எந்தக்காணிக்கு உரிமையாளரோ அவருக்கு அக்காணியை அனுபவிக்க எவரும் எந்த வழியிலும் தடைபோடாதிருப்பதற்கான தங்களின் நேரடி தலையீட்டை வேண்டுகிறோம். என்று உலமா கட்சி தலைவர், மௌலவி முபாறக் அப்துல் மஜீத் ஜனாதிபதிபதியிடம் 30.10.2010   ம் திகதி கோரிக்கை விடுத்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழு முன் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழு முன்னிலையில் அடுத்த வாரம் சாட்சியமளிக்கிறார்.

யுத்த காலத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய அவர் எதிர்வரும் நவம்பர் நான்காந் திகதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பாரென்று அதன் இணைப்புச் செயலாளர் ஜீ. ஏ. குணவர்தன  தெரிவித்தார்.

இதேவேளை, கண்டி மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் இயக்குநர் பீ. முத்துலிங்கம் நாளை மறுதினம் (முதலாம் திகதி) ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கிறார். அதனைத் தொடர்ந்து 03ஆம், 04 ஆம் திகதிகளிலும் 8 ஆம் திகதி முதல் 10 ஆந் திகதி வரையிலும் கொழும்பில் விசாரணைகள் நடைபெறும்.

எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 15 ஆந் திகதி வரை யாழ்ப்பாணத்தில் பகிரங்க அமர்வு நடைபெறவுள்ளது. பொதுமக்களிடம் சாட்சியங்களைப் பெறுவதற்காக ஆணைக்குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா மற்றும் உறுப்பினர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம் செல்கின்றனர்.