தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் இரண்டாவது மாநாடு ஒக்ரோபர் 23ல் லண்டனில் வெஸ்ற்மினிஸ்ரர் பல்கலைக்கழகத்தின் ஹரோ கம்பஸில் இடம்பெற்றது. ‘உலகமயமாகி உள்ள உலகில் தமிழர் பிரச்சினையும் ஊடகங்களும்’ என்ற தலைப்பில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. ( லண்டனில் வன்னிப் போரில் மக்களை பணயம் வைத்த தமிழ் ஊடகங்களின் 2010 மாநாடு! – அருள் சகோதரர் எழிலனும் ஒரு பேச்சாளர்! : த ஜெயபாலன் ) இந்த மாநாடு இரு அமர்வுகளாக ஒன்றில் பிரச்சினையான விடங்களையும் இரண்டாவதில் ஊடகக் கொள்ளளவு பற்றியும் ஆராய்ந்தது.
இந்த மாநாடு துரதிஸ்டமாக உலகத் தமிழ் சமூகத்தை பல்வகைப்பட்ட மக்கள் குழு என்று கூறிய போதும் இதில் உள்ள இருபெரும் பிரிவு இந்திய – இலங்கை தமிழ் சமூகங்கள் என்ற அளவிலே மட்டுமே பார்க்கப்பட்டது. தமிழ் மக்களுக்குள் உள்ள பன்முகத்தன்மையை புரிந்துகொள்வதில் இருந்து இந்த மாநாடு வெகுதொலைவிலேயே இருந்தது. அதனால் பிரச்சினையான விடயங்கள் என்று ஆராயப்பட்ட ‘பார்வைக்குத் தெரியாதவை – மறக்கப்பட்டவை – கைவிடப்பட்டவை’ என்ற அம்சங்கள் வெறுமனே சர்வதேச ஊடகங்கள் இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினையை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்பதன் அடிப்படையிலேயே பார்க்கப்பட்டது.
இப்பார்வையானது இம்மாநாட்டின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படைத்தவறு. தமிழ் சமூகம் பன்மைத்துவ சமூகம் என்பதனையோ ஏனைய சமூகங்கள் போன்று தமிழ் சமூகமும் பன்மைத்துவமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றது என்பது பற்றியோ இம்மாநாடு கவனம் செலுத்தத் தவறியது. ‘யூரொப்’ ஆசிரியர் மயூரன் மட்டுமே இவ்விடயத்தைத் தொட்டுச் சென்றிருந்தார். ஆனாலும் ரமேஸ் சுட்டிக்காட்டியது போல் ‘வெளியிலும் சிந்தனையிலும் தனியதான வலயமாக்கப்பட்டு’ உண்மைகளை வெளிப்படுத்துவது கடினமானதாகவே இருந்தது. இலங்கைத் தமிழ் சமூகத்தை ஒற்றைப் பரிமாணம் கொண்ட சமூகமாகவும் எது எதிர்கொள்கின்ற பிரச்சினையும் ஒற்றைப்பரிமாணம் கொண்டது என்ற வகையிலுமேயே இந்த மாநாடு பிரச்சினைகளை அணுகியது.
வி தேவராஜா, வினோதினி கணபதிப்பிள்ளை, ஆனந்தி சூரியப்பிரகாசம், அருள்எழிலன் ஆகியோரின் பேச்சுக்கள் மே 18 2009யை நோக்கி தமிழ் மக்களை வழிநடத்திய அதே கருத்தியல் – புலியியல் அம்சங்களின் பாதிப்பில் இருந்து இன்னமும் விடுபட்டு இருக்கவில்லை என்பதனையே காட்டியது. வன்னிப் போரில் மக்களைப் பணயம் வைத்த இந்த ஊடகங்கள் அது பற்றிய எவ்வித மீளாய்வும் இன்றி சர்வதேச ஊடகங்கள் தமிழ் மக்களைப் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டுக்களை வைத்தன. தமிழ் ஊடகங்களின் நம்பகத்தன்மை கேலிக் கூத்தாகி ஊடகத்தின் அடிப்படை விதிகளையே கைவிட்டு வெறும் பொய் பிரச்சார ஊடகங்களாக ஆன பின்னர் வினோதினி கணபதிப்பிள்ளை தமிழ் ஊடகங்களின் நம்பகத்தன்மையைப் புகழ்ந்து கொண்டார். மயூரனின் சேரனனின் மேலோட்டமான மிக மென்மையான விமர்சனங்களைக் கூட வினோதினி ஏற்றுக்கொள்ள முடியாதவராகவே காணப்பட்டார்.
இம்மாநாட்டில் தமிழ் ஊடகங்கள் என்று பொதுப்படையாகப் பேசப்பட்டாலும் இம்மாநாடு முற்றிலும் புலியியலுக்கு ஆதரவான ஊடகங்களின் மாநாடே. இங்கு தமிழ் ஊடகங்கள் எனும் போது புலி ஆதரவு ஊடகங்களையே அது குறித்து நின்றது. மேலும் இம்மாநாட்டு அமைப்பாளர்களாக பேச்சாளராக கலந்துகொண்டவர்களில் அம்ரித் லால், ஹீதர் பிளேக், ரமேஸ் கோபாலகிருஸ்ணன் தவிர்ந்த அனைவருமே வேறு வேறு காரணங்களுக்காக புலியியல் கருத்தை ஏற்றுக்கொண்டவர்களாகவே இருந்தனர். இவர்களில் அருள்எழிலன் ஒருபடி மேலே சென்று, ‘விடுதலைப் புலிகளே தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் நிறையவே இருக்கின்றது. நான் (புலிகளைத் தவிர) யாருக்கும் விலை போக மாட்டேன்’ என்று உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்.
புலியியல் கருத்தியல் மீதோ அதனை மணம் முடித்த ஊடகங்கள் பற்றியோ காத்திரமான விமர்சனமோ மதிப்பீடோ மேற்கொள்ளப்படாமலேயே இம்மாநாடும் முடிவடைந்தது. 2008ல் இடம்பெற்ற மாநாடும் எவ்விதமான சாதகமான பாதிப்பையும் அந்த ஊடகங்களில் ஏற்படுத்தவில்லை. மாறாக எதிர்மறைவிளைவையே அது ஏற்படுத்தியது. தமிழ் தேசியத்தின் பெயரால் உண்மையை மறைக்கவும் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்வதிலும் இந்த ஊடகங்கள் முன்நின்றன. மே 18 2009 விளைவுகளுக்கு இந்த ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. இவற்றில் இருந்து எவ்வித படிப்பினைகளும் இன்றி 2010 மாநாடு நடந்து முடிந்துள்ளது. மீண்டும் தமிழ் தேசியத்தின் பெயரால் ஒரு குடையின் கீழ் அணிசேர அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியமும் இந்த மாநாட்டின் பெரும்பாலான பேச்சாளர்களும் மட்டுமல்ல இதில் கலந்து கொண்டவர்களுமே ஒற்றைப்பரிமாண புலியியல் அரசியலைக் கொண்டவர்களே. சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியமும் மாநாடும் ஒரு பேப்பர், தமிழ் கார்டியன், ஜரிவி என்பனவற்றைச் சுற்றியே இருந்தது. 2008ல் ரிரிஎன் இருந்த இடத்தை தற்போது ஜீரிவி மாற்றீடு செய்ததைத் தவிர குறிப்பிடப்படும் படியான மாற்றங்கள் இருக்கவில்லை.
பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி வாசிப்போர், கேட்போர், பார்ப்போர் அவற்றில் வந்து கருத்துச் சொல்வோர், தேவாரம், கவிதை பாடுவோர் எல்லோரும் ஊடகவியலாளர் என்றால் இம்மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருமே ஊடகவியலாளர்கள். ஆனால் முழுநேரமாகவோ பகுதிநேரமாகவோ சுயாதீனமாகவோ ஊடகத்துறையில் பணியாற்றுபவர்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் கலந்துகொண்ட 100 வரையானவர்களில் 10 வீதமானவர்கள் கூட ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் அல்லர். கலந்துகொண்டவர்களில் ஊடகவியலாளர்களிலும் பார்க்க நாடுகடந்த தமிழீழப் பாராளுமன்றப் பிரதிநிதிகளும் அத்தேர்தலில் போட்டியிட்டவர்களும் அதிகம். தேசம்நெற், லண்டன் குரல் ஆசிரியர் குழுவில் இருந்து த ஜெயபாலனும் ரிபிசி பணிப்பாளர் வி ராம்ராஜ் உம் மட்டுமே இம்மாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மாற்றுக் கருத்துடைய தளத்தில் இருந்து பங்குபற்றி இருந்தனர். சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் என்றும் அதன் மாநாடு என்றும் ஏற்பாடு செய்யப்படும் போது லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்குகின்ற பிபிசி தமிழோசை, தீபம் தொலைக்காட்சி, சண்றைஸ் வானொலி, காலைக்கதிர், புதினம் போன்ற ஊடகங்களின் ஊடகவியலாளர்களே கலந்துகொள்ளவில்லை. இம்மாநாட்டில் இருந்த பல்வேறு பலவீனங்களில் இதுவும் முக்கியமான பலவீனமாகும்.
சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் அதன் பெயருக்கேற்ற சர்வதேச தமிழ் ஊடகப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கவில்லை. தமிழ் மக்களினதும் ஊடகங்களினதும் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கவில்லை. இதே போக்கில் மற்றுமொரு மாநாட்டை 2011ல் நிகழ்த்துவது அர்த்தமற்றது. coperate நிறுவனங்களின் பிடியில் உள்ள ஊடகங்களை விடுவிக்க றடிக்கல் லிபரல் டெமொகிரசியைக் உருவாக்கக் கேட்கும் சேரன் புலி ஆதரவுப் பிடியில் இருக்கும் இந்த தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தை விடுவித்து தமிழ் ஊடகங்களின் பன்முகத்தன்மைக்கு வழிவிட முயற்சிப்பது யதார்த்தமானதாகவும் பயன்மிக்கதாகவும் இருக்கும்.
தமிழ் ஊடகங்கள் பல்வேறு விடயங்களில் குறைநிலையில் இருப்பதை சரியாகவே இனம் கண்ட சேரன் தான் வழங்கிய நீண்ட presentationல் குறைந்தபட்ச தொழில்நுட்பத்தைக் கூடப் பயன்படுத்தவில்லை. குறைந்தபட்சம் தனது உரையை கணணிப்படுத்தி அதன் பிரதிகளைக் கூட வழங்கவில்லை. இது சேரனின் தவறு மட்டுமல்ல இந்நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களதும் தவறு. 10க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் வழங்கிய அத்தனை பேச்சுக்களையும் பார்வையாளர்கள் முழுமையாகக் கிரகித்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. அதனால் அவர்களுடைய உரைகளை முன்னதாகவே பெற்று அவற்றினை நூலாகவோ அல்லது பிரதிஎடுத்தோ பார்வையாளர்களுக்கு வழங்கி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் எவ்வித செலவும் இன்றி மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது தங்கள் இணையத்திலோ பிரசுரித்து இருக்கலாம். கடந்த மாநாட்டிலும் இந்நடைமுறை கடைப்பிடிக்கப்படவில்லை. இம்மாநாட்டிலும் கடைப்பிடிக்கப்படவில்லை. எதிர்வரும் காலங்களில் ஏற்பாட்டாளர்கள் இது பற்றிக் கூடியகவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பல்வேறு விமர்சனங்கள் இருந்த போதும் இவ்வாறான ஊடக அமைப்பு ஒன்று அவசியமானது. அதற்கான முன்முயற்சியை எடுத்துக் கொண்டமைக்காக சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் பாராட்டப்பட வேண்டும். அவர்கள் முன் பலதடைகள் உள்ளது. அதனைத் தாண்டுவதற்கு இளமைத் துடிப்பும் புதிய சிந்தனையும் உத்வேகமும் உடைய மயூரன் விவேகானந்தன் போன்ற இளம்தலைமுறை ஊடகவியலாளர்கள் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முக்கிய பொறுப்புகளுக்கு வரவேண்டும். இம்மாநாட்டில் ஊடகவியலாளர்கள் தங்களை இணைத்துக்கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. எவ்வாறான முரண்பாடுகள் இருந்தபோதும் ஊடகவியலாளர்கள் தங்களை இவ்வமைப்புடன் இணைத்துக் கொள்வதும் இவ்வமைப்பு ஜனநாயக அடிப்படையில் செயற்படுவதை உறுதிப்படுத்துவதும் தமிழ் ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் கடமையும் கூட.
சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் 2010 மாநாடு
சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் செயலாளர் கோபி ரட்ணத்தின் வரவேற்புரையுடன் மாநாடு ஆரம்பமானது. இரு அமர்வுகளாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
‘பார்வைக்குத் தெரியாதவை – மறக்கப்பட்டவை – கைவிடப்பட்டவை’ என்ற விடயங்கள் முதல் அமர்வில் ஆராயப்பட்டது. ‘உலகமயமாகி உள்ள உலகில் தமிழ் தேசியப் பிரச்சினையும் ஊடகங்கள் எதிர்கொள்ளும் சவாலும்’ என்ற தலைப்பில் வி தேவராஜா உரையாற்றினார். றோஹித பாசன அபயவர்த்தன மாநாட்டில் தொலைத் தொடர்பு மூலமாக கருத்துக்களை முன் வைத்தார். ‘ரைம்ஸ் ஒப் இந்தியா’ பத்திரிகையின் இலங்கைப் பிரிவுக்கான பொறுப்பாளர் அம்ரித் லால் ஆகியோர் இவ்வமர்வில் உரையாற்றினர். (நிகழ்வுக்கு காலதாமதமாகிச் சென்றதால் இவர்களின் உரைபற்றிய குறிப்பை எடுக்கவில்லை.)
எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பு:
எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பின் சார்பில் ஹீத்தர் பிளேக், ‘இலங்கையில் வன்முறைகள் குறைந்திருக்கின்றது. ஊடகவியலாளர்களின் தரவரிசையில் இலங்கை முன்னேறி இருக்கின்றது. ஆனாலும் வழமையான சூழலில் இருந்து இலங்கை வெகு தொலைவில் இருக்கின்றது’ எனத் தெரிவித்தார்.
ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த இலங்கை பின்வரும் விடயங்களைக் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார்:
1. காணாமல் போன ஊடகவியலாளர்கள் பற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும்
2. 2000 ஆண்டு முதல் 25 ஊடகவியலாளர்கள் வரை கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களின் கொலைகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
3. ஊடகவியலாளர்கள் சித்திரவதைக்கு உள்ளாவது நிறுத்தப்பட வேண்டும்.
4. ஊடகவியலாளருக்கு எதிரான வன்முறைகள் மற்றும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
5. ஊடக சுதந்திரத்தைப் பாதிக்கின்ற சட்டவிதிகள் நீக்கப்பட வேண்டும்.
6. ஆயுதக் குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும்.
ரமேஸ் கோபாலகிருஸ்ணன்:
முன்னாள் பிபிசி ஊடகவியலாளரும் சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்தியப் பிரிவுக்குப் பொறுப்பானவருமான ரமேஸ் கோபாலகிருஸ்ணன் ‘மாறுபட்ட கூறுகளின் சேர்க்கை உங்களுடைய உலகங்கள் – ‘ என்ற தலைபில் உரையாற்றினார். ‘நான் உங்களுடைய தலைவர்களின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் கண்டவன். நான் சென்னையில் ஊடகவியலாளராக இருந்த போது நேர்கண்டவர்கள் பலர் இப்போது இல்லை. எல்லாம் மைனஸாகிக் கொண்டு வருகின்றது’ என்றார் ரமேஸ்.
‘வெளியிலும் சிந்தனையிலும் தனியதான வலயமாக்கப்பட்டு’ இருப்பதைச் சுட்டிக்காட்டிய ரமேஸ் ‘உண்மைகள் ஒழிந்திருக்கின்றது. அதனைச் சொல்வது கடினமாக உள்ளது’ எனத் தெரிவித்தார். ‘இன்றைய உலகில் தமிழர்களுக்கு நண்பர்கள் எவரும் இல்லை’ என்பதைச் சுட்டிக்காட்டிய அவர் தனக்கு நடந்து முடிந்த யுத்தம் தொடர்பாக இலங்கை அரசு மீதும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் விமர்சனங்கள் உண்டென்பதை அங்கு வெளிப்படுத்தினார்.
தமிழ் ஊடகங்கள் பற்றிக் குறிப்பிட்ட அவர் எப்போதுமே செய்திகளை சூடாகவே வழங்கிப் பழக்கப்பட்டு உள்ளது என்றும் இதமாக செய்திகள் வழங்கப்படுவதில்லை என்றும் செய்திகளின் உள்ளடக்கம் சூடானதாகவே அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அதனால் செய்திகள் பற்றிய உள்ளடக்க மதிப்பீடு குறைந்ததாகவே காணப்படுவதாகவும் கூறினார்.
இந்திய ஊடகங்களின் போக்கை ஆராய்ந்த ரமேஸ் இந்திய ஊடகங்கள் ஈழப்பிரச்சினை பற்றி மட்டுமல்ல காஸ்மீர் பிரச்சினையிலும் மேம்போக்கான ஒரு நிலையையே கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டினார். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது 2 மில்லயன் மக்கள் கொல்லப்பட்டதைக் குறிப்பிட்ட ரமேஸ் இந்திய அரசியல் அமைப்பில் இந்தியா பிறந்து சொல்லப்பட்டு உள்ளது ஆனால் எவ்வாறு பிறந்தது என்பதும் அதன் வலியும் சொல்லப்படவில்லை என்றார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் ‘இந்திய அரசியல் அமைப்பு வரலாற்றை மறந்துவிட்டது’ எனத் தெரிவித்தார். தமிழ், காஸ்மீர் வரலாறுகளும் அவ்வாறே ஆகும் என்பதை அவர் உணர்த்திச் சென்றார்.
கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ரமேஸ் இலங்கைக்கும் இந்தியாவிற்குமான வர்த்தகத் தொடர்புகள் அதிகரித்து இருப்பதையும் இந்திய முதலாளிகள் பாரிய முதலீடுகளைக் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். தற்போது இலங்கையின் பெற்றோலியச் சந்தையை நடாத்துகின்றவை இந்திய நிறுவனங்களே என்பதைச் சுட்டிக்காட்டிய ரமேஸ், இந்தியாவால் பங்களாதேஸ் இலங்கை போன்ற நாடுகளையே வாங்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார். இவ்வாறான தமிழகத்தில் உள்ள முதலீட்டாளர்களும் தமிழ் தலைநகரத்தில் இருப்பதாகக் கருதுவதில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், இவர்கள் உல்லாசப் பயணமாக இலங்கை செல்வதையும் குறிப்பிட்டார். முதலீடுகள் தேசிய எல்லைகளை மீறி பரந்து விரிவதை அவர் அங்கு சுட்டிக் காட்டினார்.
‘உணர்நிலை – புதுமைகள் – கொள்ளளவு’ என்ற தலைப்பில் இடம்பெற்ற இரண்டாவது அமர்விற்கு சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் துணைத் தலைவரும் ஜிரிவி நிகழ்ச்சி வழங்கனருமான தினேஸ் குமார் தலைமை தாங்கினார்.
மயூரன் விவேகானந்தன்:
‘ஊடக வெளியை விரிவுபடுத்தல்’ என்ற தலைப்பில் மயூரன் விவேகானந்தன் தனது ஊடக அனுபவங்களினூடாக விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். நோர்வேயில் இருந்து வெளியாகும் பல்கலாச்சார இதழான ‘யூரொறப்’ இன் ஆசிரியரான இவர் தமிழ் ஊடகத்துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் வெளியிட்டார். ‘தமிழில் எழுதுபவர்கள் மட்டுமல்ல தமிழ் தவிர்ந்த மொழிகளில் எழுதபவர்களும் தமிழ் ஊடகவியலாளர்களே’ என்றும் நோர்வேஜிய மொழியில் எழுதும் தானும் ஒரு தமிழ் ஊடகவியலாளனே எனத் தெரிவித்தார். இளம்தலைமுறை எழுத்தாளரான இவர் தனக்கான புளொக் ஒன்றை ஆரம்பித்து எழுதத் தொடங்கி, தற்போது ‘யூரொப்’ இதழின் ஆசிரியராக வளர்ந்துள்ளார். ஏனைய நாடுகளில் உள்ள ஊடகவியலாளர்களும் தங்கள் நாடுகளில் உள்ள ஊடகங்களில் இணைந்து பணியாற்றுவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
தங்கள் ஊடகத்தில் அரிதாகவே இலங்கைப் பிரச்சினைகள் பற்றி எழுதுவதாகத் தெரிவித்த அவர், தமிழ் ஊடகங்கள் இலங்கைப் பிரச்சினையை எழுதுகையில் பிரச்சாரத் தன்மையுடன் எழுதுவதாகத் தெரிவித்தார். உண்மைகளிலும் பார்க்க பிரச்சாரம் மேலோங்கும் போது அவை தரமற்றுப் போவதை மயூரன் சுட்டிக்காட்டினார். சார்பு நிலையற்று உண்மைகளை வெளிப்படுத்துவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மயூரன் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், தமிழ் ஊடகங்களில் இந்த அரங்கிலும் கூட பெண்களின் பங்குபற்றுதல் மிகக் குறைவாகவே காணப்படுவதைச் சுட்டிக்காட்டிய மயூரன் சர்வதேச செய்தியாளர் ஒன்றியம் போன்ற ஊடக அமைப்புகளிலும் பெண்களின் பங்குபற்றுதல் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான கருத்துக் கணிப்பை தங்கள் ஊடகமே முன்னின்று மேற்கொண்டதைச் சுட்டிக்காட்டிய அவர் இவ்வாறு உண்மைகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் செயற்பாடுகள் ஊடகங்களுக்கு அவசியம் என்றார்.
மேலும் தமிழ் ஊடகங்கள் உலகின் பல்வேறு பாகங்களில் இருந்து வந்தாலும் அவை எப்போதும் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள் பற்றிய செய்திகளை மட்டுமே தாங்கி வருவதாகத் தெரிவித்த அவர், தங்கள் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளைக் கவனிப்பதில்லை எனத் தெரிவித்தார். தாயகச் செய்திகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சமூகப் பிரச்சினை தொடர்பான செய்திகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
பேராசிரியர் சேரன்:
‘உலகமயமாக்கல் காலத்தில் ஜனநாயகம், தொழில்நுட்பம், மாற்று ஊடகம்’ என்ற தலைப்பில் பேராசிரியர் சேரன் உரையாற்றினார். உலகமயமாக்கலில் ஊடகங்கள் பெரும் ஸ்தாபனங்களினால் கட்டுப்படுத்தப்படுவது பற்றியும், அவையே தீர்மானிக்கின்ற சக்தியாக அமைவதையும் சேரன் சுட்டிக்காட்டினார். தொழில்நுட்பத்தின் விளைவாக உருவான இணையங்களும் ஏனைய தொழில்நுட்ப அம்சங்களும் கூட பெரும் ஸ்தாபனங்ககளின் நோக்கங்களுக்கே சேவகம் செய்வதாக சேரன் குற்றம்சாட்டினார்.
தற்போதுள்ள லிபரல் ஜனநாயகம், தனிமனித உரிமைகள், மேற்கின் நடைமுறை என்பன உண்மையான ஜனநாயகத்தை வெளிப்படுத்தவில்லை எனக் கூறிய சேரன் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகள் மனித உரிமைகளுடன் சமரசம் செய்யப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.
இவற்றில் இருந்து விடுபடுவதற்கு புதிய மாற்றத்துடனான லிபிரல் ஜனநாயகத்தின் அவசியத்தை சேரன் வலியுறுத்தினார். இவ்வாறான ஒரு ஜனநாயகப் பண்பே உண்மையான சுதந்திரம், சமத்துவம் வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம், மாற்றுக் கருத்து, மேலாதிக்கம் அற்ற நிலை, தொடர்பாடல் ஜனநாயகம் என்பவற்றை உறுதிப்படுத்தும் என சேரன் குறிப்பிட்டார்.
தமிழ் ஊடகங்கள் உள்ளடக்கம், வடிவமைப்பு என பல்வேறு அம்சங்களிலும் குறைபாடுடையவையாக இருப்பதாகவும் சார்பு நிலையுடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார். தமிழ் ஊடகங்களிலும் செய்தியைப் பார்க முன் மரண அறிவித்தல் விளம்பரத்தைப் பார்த்த பின்னரே செய்திக்குள் செல்லும் நிலை இருப்பதையும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக வீரகேசரி பத்திரிகையை உதாரணத்திற்கு எடுத்த அவர் செய்தி ஆசிரியர்களை விளம்பரப் பகுதியினர் மேலாண்மை செய்வதையும் சுட்டிக்காட்டினார்.
வினோதினி கணபதிப்பிள்ளை
‘தகவலும் பரப்பலும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய தமிழ் கார்டியன் பத்திரிகையின் ஆசிரியர் வினோதினி கணபதிப்பிள்ளை பெரும்பாலும் மயூரன், சேரன் ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்கே தள்ளப்பட்டார். மிகவும் அரசியல் மயப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு தகவல்களையும் செய்திகளையும் வழங்கும் ஊடகங்கள் காத்திரமான முறையிலேயே செயற்பட்டு வருவதாகவும் முன்னேற்றத்திற்கான இடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழர்களுடைய போராட்டத்தைப் பொறுத்தவரை பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டிய தேவையும் அவசியமும் இருந்ததாகத் தெரிவித்த வினோதினி ஆனால் உண்மைகள் எப்போதும் சமரசம் செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் தமிழ் மக்கள் தங்கள் தகவல் – செய்தித் தேடலுக்கு ஒரு ஊடகத்தில் மட்டும் தங்கி இருப்பதில்லை எனத் தெரிவித்த வினோதினி, அவர்கள் ஏனைய ஊடகங்களுடன் ஒப்பிட்டே செய்திகைள உறுதிப்படுத்திக் கொள்வதாகத் தெரிவித்தார். அதனால் தமிழ் ஊடகங்கள் தங்கள் உண்மைத் தன்மையைப் பேண வேண்டிய கட்டாயம் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழபேசத் தெரியாத தமிழர்கள் மீது தமிழ் சமூகத்திடம் ஒரு கீழான பார்வை இருந்தது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த வினோதினி தமிழர்களுடைய அடையாளம் வளர்ந்து வருவதாகவும் முன்னர் தமிழ்பேசத் தெரியாதவர்கள் மீது இருந்த அவ்வாறான பார்வை, இப்போது இல்லை எனவும் தெரிவித்தார். தமிழர்கள் கட்டாயம் தமிழ் பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை இப்போது இல்லை என்றார் வினோதினி.
தோமஸ் அருள்எழிலன்:
‘தமிழர் பிரச்சினையும் ஊடகங்களின் நிலையும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய குங்கும் சிரேஸ்ட ஆசிரியர் அருள்எழிலன் சபையில் இருந்தவர்களுக்கு, ‘இந்தியா மீது கோபமும் இருக்கு. எதிர்பார்ப்பும் இருக்கு’ என்றார். ‘அரசு ஒரு போதும் போராடும் சக்திகளுக்கு ஆதரவாக இருக்காது’ எனக் குறிப்பிட்ட அருள்எழிலன் மாவிலாறு சம்பவத்திற்குப் பின் ஐந்தாறு தடவைகள் தான் தமிழ்ச்செல்வனுடன் தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரிவித்தார். அப்போது தமிழ்ச்செல்வன் மாவிலாறை சாதாரண ஒரு பிரச்சினையாகவே சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்தார். ‘அந்தப் பிரச்சினையின் ஆழத்தை அறிந்திருக்க வேண்டும் ஆனால் அறிந்திருக்கவில்லை’ என்றார் அருள்எழிலன்.
‘தமிழ் மக்களுடைய பிரச்சினையில் தமிழ் மக்களே முடிவெடுக்க வேண்டும். அதற்கு என்னுடைய முழு ஆதரவு இருக்கும்’ எனத் தெரிவித்த அருள்எழிலன், ‘நான் ஒரு போதும் விலை போகமாட்டேன்’ என உறுதி அளித்தார். ‘தமிழ் மக்களைப் பொறுத்தவரை இலங்கை அரசாங்கத்துடன் செல்வதிலும் பார்க்க விடுதலைப் புலிகளுடன் இருப்பதே சரியானது. வன்னி யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளை தமிழ் மக்களை விடுவிக்கும்படி கேட்டிருக்க முடியாது’ என்றவர், ‘விடுதலைப் புலிகளே தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்’ எனத் தெரிவித்தார்.
சேந்தன் செல்வராஜா:
‘புதிய ஊடகம்: எல்லைகடந்த தமிழ் அரசியலின் சக்தி’ என்ற தலைப்பில் சேந்தன் செல்வராஜா உரையாற்றினார்.
தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் தலைவி ஆனந்தி சூரியப்பிரகாசம் நடந்தவற்றைப் பற்றி பேசாமல் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக தமிழர்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் கருத்து வெளியிட்டார். இவருடைய பேச்சு நன்றியுரையாக அமைந்த போதும் அருள்எழிலனுக்கு முன்னதாகவே இடம்பெற்றது. சேந்தனின் உரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.