06

06

போதி மாதவா? : நோர்வே நக்கீரா

Budha_in_Jaffnaபோதி மாதவா?

வன்னிவானத்தை இருள் கவ்வியது
ஈழத்தமிழர் வாழ்வு போல்

வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன
வெளிநாடுகளில் இருந்து
தருவிக்கப்பட்ட இடியும் மின்னலும்

சிவப்புக் கௌபோய் (cowboy)படம் எடுக்க
சீன இந்திய நடிகர்கள்

குறும்பார்வைக் குறையால்
வன்னிமந்தைகள் புலிகளாக
கண்ணீர்கள் வரிகளாக
மேய்போரே மந்தையை மேய்ந்தபோதும்
உருப்பெருக்கு வில்லைதேடி அலைந்தார்கள்
புவியியலாளர்கள்.

கண்வில்லைகள் போதாது என்று
வானவில்லைகள்

விலையுயர்ந்த வில்லைகளுக்குக் கூட
மனிதவிலைகள் தெரியவில்லை

உருப்பெருக்க வில்லைகள் ஐ.நாவிடம் இருந்தும்
கண்டுபிடிக்க முடிந்ததா மரணம்தரும் வைரசுக்களை.

வானமே வெடிகுண்டானது
அவதார புரிசர்களுக்கே
அடைக்கலம் தேவைப்பட்டது.

தலைகள் எல்லாம் கணனிகொண்டு
கொலைக்களங்கள் திரிந்தன.

கொம்பியூட்டர் கண்களில்
மக்கள் மறைந்தனர்
கணனியில் வைரசாம்

புதிய கணனியில்
புலத்துப் பணத்தில்
பணவீழம் அமைக்க
இன்றும் பலவைரசுகள்

அகதியாடு நனைகிறது என
ஓலமிடுகின்றன ஓநாய்கள்
நிலத்திலும் புலத்திலும்.

உதிரவெள்ளம் ஓடி அடங்க
பிணக்குவியல்களில் புழுக்கள் கிளம்ப
நிசப்தத்தின் மத்தியில் ஒரு நித்திய புருசன்
பிணங்களில் இருந்து பிரிந்து எழுந்தான்

உதிரம் வடியும் கண்களோடு
மனிதம் நிமிர்ந்த மார்புகளோடு
மேய்பனாக புத்தன்
விசுபரூபத்தில் போதிமாதவனாய்

மாயவனான மாதவன் கண்டு ஆதவன் அலற
சுடுகலன்கள் அனைத்தும் சுருண்டு போயின.

நிஸ்டையின் விரல்களை
நீட்டீயே காட்டி
வடக்கு கிழக்கு பிணங்களின் குவியல்
தெற்குத்திசையில் பசி பட்டிணியின் அவியல்
இதுவா தர்மம்!!
இதுவா நீதி!!!
இதுவா மனிதம்!!!!

மீண்டும் மறைந்தான்
உறைந்தது உலகம்
அறைபட்டது ஆத்மா.

விஸ்வமாக வளர்ந்த அசரீரி
அஸ்திரமாக நின்றது சமநீதி

”உலகம் எங்கணும் எல்லைகள் இல்லை
எல்லை உரிமை எவனுக்குமில்லை
மாதவ மனதில் சூனியம் இல்லை
வானம் பூமியில் வஞ்சகம் இல்லை
மனித மனங்களில் வஞ்சம் இருந்தால்
மீண்டும் வருவேன்
எரிக்கும் ஆதவனாக
சுழலும் சூறாவளியாக
சுனாமியாக.
அடங்காது போனால் கல்கியாக

எல்லா உடமையும் அனைவற்குமாகுக
பொல்லா மனநோய்கள் அணைந்து போகுக
வேதனம் என்பது வாழ்வுக்கானபின்
சீர்-தனம் எதற்கு சீர்கெட்ட மனிதா?

விகாரைகள் கட்டி
மனித விகாரம் எதற்கு
மனிதா (ஆ)லயம் கட்டு
ஆத்மா இலயிக்கும்

அரசு நடத்த அரசமரம் எதற்கு
அன்பை வளர்த்து அகிலத்தை ஆள்
ஆணவம் அழித்து கல்கியைக் கொல்

மனிதத்தின் மடியில் உலகம் உருள
அன்பின் அடியில் அடங்கும் அகிலம்”

மாதவனோடு
நோர்வே நக்கீரா
2.10.2010

“வடக்கு கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதன் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்” –மாவை சேனாதிராஜா

வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டிருப்பதால் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை காண்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணந்திருப்பது அவசியம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய் கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மாகாணசபைகள் திருத்தச்சட்ட வரைவு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு கடந்த 18 வருடங்களாக இணைந்த மாகாணங்களாகவே அவை நிர்வகிக்கப்பட்டு வந்தன. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்போது பிரிக்கப்பட்டுள்ள நிலையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. எனவே, இம்மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட்டு அவற்றிற்கு பொலிஸ், மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதன் மூலமே தீர்வினைக்காண முடியும் என மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

மேலும் அவர் உரையாற்றுகையில், வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட முறை தவறானது என்றுதான் உச்ச நீதிமன்றம் கூறியதே தவிர அவற்றைப் பிரிக்கும்படி உத்தரவிடவில்லை அரசாங்கமே இம்மாகாணங்களைப் பிரித்தது. வடக்கு கிழக்கில் வாழ்ந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை இராணுவம் கைப்பற்றி முகாம்களை அமைத்து வருகின்றது. வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரம் இல்லாததாலேயே இந்த நில ஆக்கிரமிப்பு நடைபெறுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் 120 பாடசாலைகளை தரமுயர்த்தலில் இணைத்துக் கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் கல்வி அமைச்சிடம் கோரிக்கை.

இலங்கையில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள ஆயிரம் பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளை கல்வியமைச்சு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், வடக்கில் 120 பாடசாலைகளை அதற்காக தெரிவு செய்யுமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி கல்வியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆயிரம் கிராமப்புற பாடசாலைகளைத் தெரிவு செய்து அவற்றை நவீன முறையில் புனரமைத்து தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின் நிலையில், வடக்கில் 90 பாடசாலைகளைத் தெரிவு செய்து அவற்றைத் தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் 120 பாடசாலைகளை இதற்காக தெரிவு செய்யுமாறு வடமாகாண ஆளுநர் கல்வியமைச்சிடம் கேட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளைத் தரமுயர்த்தும் திட்டத்தில் தெரிவு செய்யப்பட வேண்டிய பாடசாலைகளின் விபரம் தொடர்பாக ஆராயும் கூட்டம் ஒன்று எதிர்வரும் 10ஆம், 11ஆம் திகதிகளில் வவுனியாவில் நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வன்னியில் மணலுக்கு திடீர் தட்டுப்பாடு. வீடமைப்புப் பணிகள் பாதிப்பு.

வன்னியில் திடீரென மணலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வீடமைப்புப்பணிகள் பாதிப்படைந்துள்ளன. கடந்த காலங்களிலும், மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் வன்னியில் மணலுக்கு பெரிதாகத் தட்டுப்பாடு ஏற்படவில்லை. ஒரு உளவு இயந்திரத்தில் ஏற்றப்படும் மணலை சுமார் 2500 ரூபாவிற்கு பொதுமக்கள் கொள்வனவு செய்யக்கூடியதாக இருந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக திடீரென மணலுக்கு தட்டுப்பாடு எற்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் தற்போது வீடமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், மணலுக்கு எற்படுத்தப்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக இப்பணிகளில் தடை எற்பட்டுள்ளதாக வீடமைப்பு பயனாளிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

யாழ்.குடாநாட்டில் இடம்பெறுவது போல் மணலுக்கான அனுமதி நடைமுறைகளை வன்னியிலும் கொண்டுவரும் நோக்கிலேயே மணலுக்கான தடையும், தட்டுப்பாடும் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சரத்பொன்சேகாவின் விடுதலைக்காக வீதிகளில் இறங்கிப் பேராடுவதில் பயனில்லை. அமைச்சர் சுசில் பிறேம்ஜயந்த.

சரத்பொன்சேகாவை விடுவிக்குமாறு கோரி வீதிகளில் இறங்கிப் போராடுவதில் எவ்வித பயனும் எற்படப் போவதில்லை என அமைச்சர் சுசில் பிறேம்ஜயந்த தெரிவித்துள்ளார். சரத்பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டுமானால் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவரை விடுதலை செய்யும்படி ஜனாதிபதியிடமே மேன்முறையீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது ஜனாதிபதி நீதிமன்ற வழிமுறைகளின்படி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார். இதனை விடுத்து எதிர்க்கட்சியினர் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்துவதிலும், கையெழுத்து வேட்டை நடத்தவதிலும் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு நேற்று செவ்வாய்கிழமை உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சரத்பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி ஆகியன மக்களைத் திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ்.குடாநாட்டில் அனுமதி பெறாமல் நடத்தப்படும் விடுதிகள் மீது நடவடிக்கை! அரசாங்க அதிபர் அறிவிப்பு.

உள்ளுராட்சி சபைகளிடம் உரிய அனுமதிகளைப் பெறாமல் யாழ்.குடாநாட்டில் இயங்கும் விடுதிகள், தங்குமிடங்கள் என்பனவற்றை ‘சீல்’ வைத்து மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்பாக விடுதிகள், தங்குமிடங்களை நடத்துபவர்கள் உள்ளுராட்சி சபைகளிடம் பதிவுகளை மேற்கொண்டு அவற்றின் ஆலோசனைகளுக்கு அமைய நடக்க வேண்டும். பொருத்தமான சுற்றாடல், நீர்வழங்கல், கழிவகற்றல் வசதிகளை எற்படுத்தியிருத்தல் முக்கியமானது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ்.குடாநாட்டிற்கு இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் குடாநாட்டில் பல வீட்டு உரிமையாளர்கள் அவர்களுக்கு தங்கள் வீடுகளை வாடகைக்கு கொடுத்து வருமானமீட்டி வருகின்றனர். பொருத்தமில்லாத இடங்களில் அயலவர்களுக்கு சிரமங்களை எற்படுத்துவதாகவும் இவை அமைகின்றன. இதேவேளை, பல வருடங்கள் வாடகைக்கு இருந்தவர்களை அகற்றிவிட்டு அதிக வருமானம் தேடும் வகையில் தங்கள் வீடுகளை விடுதிகளாக மாற்றும் நடவடிக்கைகளிலும் பல வீட்டு உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

வன்னியில் தொலைபேசி பாவனையாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

வன்னியில் கணிசமான மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில் தொலைபேசி பாவனைகளும் அதிகரித்துள்ளன. எனினும் கைத்தொலைபேசிகளில் உரையாடுவதில் மக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். கிளிநொச்சி உட்பட வன்னியில் பல இடங்களில் தெளிவான தொலைபேசி உரையாடல்களை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. தொலைபேசி நிறுவனங்கள் வன்னியில் தங்களுக்கான விளம்பரங்களை அதிகளவில் மேற்கொண்டு வருகின்ற போதும், தெளிவான உரையாடல்களை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப வேலைகளை மேற்கொள்வதில் தாமதம் காட்டி வருவதாக கைத்தொலைபேசி பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை, கிளிநொச்சி மாவட்டம் உட்பட வன்னியில் பல இடங்களில் இன்னமும் மின்சாரம் வழங்கப்படாதால் தொலைபேசிகளுக்கு மின்னேற்றுவதிலும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மின்பிறப்பாக்கிகள் மூலம் சில வணிக நிலையங்கள் பணம் அறவிட்டு பொதுமக்களின் கைத்தொலைபேசிகளுக்கு மின்னேற்றிக் கொடுக்கின்றமையை வன்னியில் பல இடங்களிலும் அவதானிக்க முடிகின்றது. கிளிநொச்சி நகர்ப் பகுதிகளிலேயே இன்னும் பல இடங்களுக்கு மின்சார விநியோகம் வழங்கப்படாமலுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பாலியல் படங்களில் நடித்த இலங்கை நடிகைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு!

பாலியல் திரைப்படங்களில் நடித்த உள்ளுர் நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதிமன்றம் பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும், பெண்களுக்கான பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.

இணையத்தளங்களில் வெளியாகும் பாலியல் படங்களில் இலங்கையைச் சேர்ந்த பெண்கள் ஈடுபட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் சில உள்ளுர் நடிகைகள் நடித்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் பொலிஸ் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

ஆபாச வீடியோப் படங்களை வெளியிடும் 180 இணையத்தளங்களுக்கு இலங்கையில் தடைவிதிப்பதற்கான நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாவீரர் தினத்தை கொண்டாடத் தயாராகுமாறு குறுந்தகவல் அனுப்பிய யுவதி கிளிநொச்சியில் கைது

விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் தொடர்பாக தனது கையடக்கத் தொலைபேசியில் குறுந் தகவல்களை (எஸ்.எம்.எஸ்.) வேறு ஆட்களுக்கு அனுப்பியதாகக் கூறி கிளிநொச்சியில் பெண் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த மாவீரர் தினத்தைக் கொண்டாட ஆயத்தமாகும் படியும் அதில் அந்த யுவதி குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிளிநொச்சிப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இப்பெண் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

3000 பேருக்கு இன்று ஆசிரிய நியமனம்

bandula.jpgகல்வியியல் கல்லூரிகளில் இருந்து பயிற்சி பெற்று வெளியேறும் 3000 பேருக்கு இன்று (06) ஆசிரியர் நியமனம் வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் கூறினார். ஏற்றத் தாழ்வு ஏற்படாத வகையில் ஜனவரி மாதம் முதல் ஆசிரியர் இடமாற்றங்களை செயற்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வாய் மூல விடைக்காக ஐ. தே. க. எம்.பி. சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :-பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங் களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி 554 ஆங்கில ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது. இது தவிர அழகியற்கலை ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகப் போட்டிப் பரீட்சையூடாக ஆசிரியர்களை தெரிவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3174 அழகியற்கலை ஆசிரியர்களை நியமிப்பதற்காக ஒக்டோபர் 9 ஆம் திகதி போட்டிப் பரீட்சை நடத்தப்படும். இது தவிர கல்வியியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் 3000 பேருக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கி ஆசிரியர் வெற்றிடமாக உள்ள பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட உள்ளனர்.

சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ள தோடு, சில பாடசாலைகளில் பற்றாக்குறையாக உள்ளனர். எனவே, இடமாற்றக் கொள்கையின் பிரகாரம் 8 வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் பணி புரிந்த ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் என்றார்