09

09

இலங்கையில் இன உறவுகள் – எனக்குத் தெரிந்த நியாயம்: சஹாப்தீன் நாநா

Tamil_Muslim_Communityஎல்லோரையும் அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்.

விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை.
கெட்டுப் போபவன் விட்டுக் கொடுப்பதில்லை.

பாரதி எழுத ஆரம்பித்த பின்னர்தான் மொழிகளுக்கெல்லாம் மீசை முளைத்ததாம். அவன் சிந்திக்க ஆரம்பித்த பின்புதான் திசைகளுக்கெல்லாம் தீப்பிடித்தததாம். அந்த தீயில் வெள்ளயனுக்கான வெப்பம் இருந்ததாம். முழு இந்தியனுக்குமான வெளிச்சம் இருந்தததாம் எண்டு நிறைய பேர் கதை சொல்றாங்க. ஆனால் எங்களுக்கு மீசை வைக்கவும் யாரும் கெடைக்கல, தீப்பந்தம் பிடிக்கவும் யாரும் உதவல, வந்தவனெல்லாம் பம்மாத்தும், சுத்துமாத்தாகவும்தான் இருந்தார்கள். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன்தோன்றிய பரம்பரையிலும் சரி, ஆதிமனிதன் ஆதமின் பிள்ளைகள் நாங்கள், நாரே தக்பீர், அல்லாஹ் அக்பர் எனக் கூறிக்கொண்டு அரசியலுக்கு வந்தவர்களின் பரம்பரையிலும் சரி, எறும்புக்கும் தீங்கிழைக்காதே என்ற போதிசத்துவனின் வழிகாட்டலில் வந்தவர்களும் சரி யாருமே, யாருக்குமே வழி காட்டல. வாழ வழி சொல்லல. ஆனால் எல்லாருமே, இந்த வழிகாட்ட புறப்பட்டு வந்த எல்லோருமே, தங்கள் வயிறுகளையும், உறவுகளையும் நன்றாகவே கவனித்துக் கொண்டார்கள். பாவம் மனிதன். ஆம் பாவம் பாவப்பட்ட மனிதர்கள்.

திரும்ப தொடங்கிவிட்டது நட்டுவாங்கம். அதுதான் கோழிக்குள்ள இருந்து முட்டை வந்ததா, இல்ல முட்டைக்குள்ள இருந்து கோழி வந்ததா. தீர்வுக்கு பின் அபிவிருத்தியா, அபிவிருத்திக்கு பின் தீர்வா. அனைவரும் முட்டையில மயிர் புடுங்க கிளம்பிட்டாங்க. இந்த மயிர புடுங்குங்கடா எண்டுதான், மொத்தமா ஒங்களுக்கிட்ட எல்லாத்தையும் கொடுத்துப்போட்டு, இஞ்ச வெள்ளயைனுகளுக்கிட்ட புடுங்கி, ஒங்களுக்கு காசா எறச்சி தள்ளினோம். ஒண்டும் யாரும் புடுங்கல. மிஞ்சியது கண்பொண்டாட்டிகளும், முண்டச்சிகளும், முழங்கால் ஒடைஞ்சவனுகளும்தான்.

அது ஒரு பக்கம் கெடக்க, இப்ப புதுசா இன்னொரு கதையும் தொடங்கிட்டாங்க. முஸ்லீம்கள் மீது நீண்ட ஒரு பார்வை வைக்க வேண்டுமாம். கடந்த 25 வருடங்களாக நடந்த நிறைய விடயங்களுக்கு சிறிலங்கா முஸ்லீம்களும் காரணமாம். பஸ்தியாம்பிள்ளை காட்டிக்கொடுத்தார் எண்டுபோட்டு, அவரை தேடிப் போய் கொண்டயள். சரி. அமிர்தலிங்கம் பிழை செய்கிறார் எண்டுபோட்டு, அவரை குறிபார்த்து சாக்காட்டினயள். அதுவும் சரி. நீலன் திருச்செல்வம் தொப்பி புரட்டுறார் எண்டு போட்டு, அவரை சுக்கு நூறா கிழிச்சயள். நியாயம். வாஸ்தவமும் கூட. ஆனால், ஒரு சோனி பிழை செய்தால், மொத்த சோனிக்கும் ஆப்படிக்கிறியள். இதை நாங்க கேட்கவும் கூடாது. கதைக்கவும் கூடாது. அதுதான் நியாயம். இனி நாங்க கேட்கல. கதைக்கவும் மாட்டம்.

நல்லூர், கள்ளியங்காடு, தின்னவேலி போன்ற இடங்களில் உள்ள ஆடியபாதம் ரோட்டு, பொற்பாதம் வீதி, தபால்பெட்டி ஒழுங்கை, மணல்தரை ரோட்டு, குமாரசாமி ரோட், இராமநாதன் வீதி, கலட்டி வீதி, டச்சு ரோட்டு, சட்டநாதர் கோவில் ரோட், பிறவுண் வீதி, சிவன் கோவில் வீதி, வைமன் வீதி, கோயில் வீதி, ராஜ வீதி, கொலனி வீதி, கோணாவலை வீதி, அரசடி வீதிகளிலும், கொட்டடி, கந்தர்மடம், ஓட்டுமடம், வண்ணார் பண்ணை, நாச்சிமார் கோயிலடி, சிவலிங்க புளியடி, சுண்டிக்குளி, கொய்யாத் தோட்டம், மணியம் தோட்டம், பாசையூர், கரையூர், கொழும்புத்தறை, முத்திரைச்சந்தை, ஆனைப்பந்தி, பண்ணை, நல்லூர் போன்ற இடங்களிலும், ஆட்சிசெய்த முண்ணாள் சண்டியர்களான, தின்னவேலி மகான், டானி ( இவர் பின்னாளில் டெலோ உறுப்பினர்), கொட்டடி தெய்வேந்திரம், ஆரியகுளம் பொன்ராசா போன்றவர்களிடம் எங்கடவன், நிறையவே அடி வாங்கியிருக்கின்றார்கள். இதற்காக எம்மவன் எல்லாம், ஓ இந்த யாழ்ப்பாணமே வேண்டாம் என்று கூறிக்கொண்டு அங்கிருந்து வெளியேறவும் இல்லை. அந்த யாழ் மக்களை ஒருக்காலும் இகழ்ச்சியாகப் பேசவும் இல்லை. சோனகதெருவில் (பொம்மைவெளி) வண்டில் என்ற பெயரில் ஒரு முஸ்லீம் ரவுடியும் இருந்தார் என்பதையும் இங்கே பதிவு செய்து கொள்வோம். சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் இக்பால் அவர்களால் இவரது கொட்டம் அடக்கப்பட்டதும் ஒரு தனிக்கதை.

முஸ்லீம்களால் நிறைய தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்ற விடயத்துக்கு வருவோம். மொத்த முஸ்லீம்களும் சேர்ந்து இந்த ரவுடியிஷத்தை செய்வதற்கு எங்களுக்கும், தமிழர்களுக்கும் எந்த பகையும் கிடையாது. குறுகிய நோக்கம் கொண்ட சில முஸ்லீம்காடையர்களே இதை செய்தனர். ஒரு முறை அதாவது பள்ளிவாசல்கள் எல்லாம் தகர்க்கப்பட்டு, முஸ்லீம்கள் நிறைய பேர் கொல்லப்பட்டு, ஆம் திட்டமிட்டு நேர்த்தியாக களையெடுக்கப்பட்டு கொண்டிருந்த போது, ஜிகாத் இயக்கம் 1984 களில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஜிகாத் இயக்கத்துக்கும், கிழக்கில் அப்போது இருந்த ஈபிஆர்எல்எப், ஈரோஸ், டெலோ அமைப்பினருக்குமிடையே ஒரு புரிந்துணர்வு இருந்தது எனலாம். அதாவது முஸ்லீம்களில் யாராவது கடத்தப்பட்டாலோ அல்லது அவர்களது வாகனங்கள் பறிக்கப்பட்டாலோ, அடுத்த தினமே, ஜிகாத் அமைப்பு எதிர் நடவடிக்கை எடுத்து, தமிழ் மக்களை கடத்தியது, வாகனங்களையும் பறித்தது. இது உண்மை. நிஜமும் கூட. பறித்தவுடன் தமிழ் பகுதிகளில் தைரியமாக துண்டுப் பிரசுரங்களும் வினியோகித்தது. அதாவது எமது பொருட்களை அல்லது உயிர்களை, கடத்தப்பட்ட உயிர்களை எழுபத்திரண்டு மணிநேரத்துக்குள் ஒப்படைத்தால், உங்கள் பொருள் அல்லது உயிர் ஒப்படைக்கப்படுமென. அதன்படி நிறைய காரியங்கள் சுமுகமாக கைமாறியது. நடு இரவுகளில் பல பேச்சுவார்த்தைகளும் மானசீகமாக நடந்தது.

ஒரு முறை மட்டக்களப்பிலிருந்து, யாழ்ப்பாணத்துக்கு சென்ற லொறியையும், சாரதி உதவியாளர்களையும், பல லட்சம் கேட்டு புலிகள் கடத்திய போது, காத்தான்குடியில் வைத்து எதிர்நடவடிக்கை எடுத்து, உடம்புக்கும் நோகாமல், மருந்துக்கும் வலிக்காமல் பக்குவமாக மீட்ட கதையெல்லாம் நிறையவே இருக்கின்றது. அப்போதிருந்த சிறிலங்காவின் காவல்துறை அல்லது புலானாய்வுத்துறை, ஜிகாத் நடவடிக்கைகளில் (அரச உதவியுடனேயே ஜிகாத் அமைப்பு உருவானது, உருவாக்கப்பட்டது என்பதை இங்கு வெட்கத்தை விட்டு சொல்லலாம்) திருப்தி காணாமல், ரவுடிகளையும், காவாலிகளையும் ஜிகாத் பெயரில் உருவாக்கி, நெருப்பில் நெய்வார்த்தனர். அக்ரைப்பற்றைச் செர்ந்த ஒரு முஸ்லீம், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கடத்தி வைக்கப்பட்டார். அவர் கடத்தி வைக்கப்பட்ட இடம். இப்போதைய பியசேன எம்பியின் அடுத்த வீடு. அதற்காக ஜிகாத் எதிர்நடவடிக்கை எடுத்தது. தமிழ் அமைப்புகள் தாங்கள் கடத்தவில்லை என தலையிலடித்து சத்தியம் செய்தார்கள். ஜிகாத்தும் விடுவதாக இல்லை. இறுதியில் ஐந்து நாள் அவகாசத்தில், உண்மையை கண்டறிந்து, உரிய நபரை மீட்டு, ஒப்படைத்து பிரச்சனையை சுமுகமாக தீர்த்தனர்.

இதற்காக அப்போதைய புலி, டெலோ, ஈரோஸ், ஈபிஆர்எல்எப் அமைப்பினரை பாராட்டியே ஆகவேண்டும். எல்லோரிடமும் ஒருநேர்மையும், புரிந்துணர்வும் இருந்தது. இதே போல் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த ஒரு தமிழ் சகோதரரையும், இரண்டு உழவு இயந்திரங்களையும் இதே முஸ்லீம் கட்டாக்காலிகள் கடத்தி நிந்தவூர் என்ற ஊரில் மறைத்து வைத்தனர். இதுவும் 24 மணிநேரத்தில் கண்டு பிடிக்கப்பட்டு, தமிழ் சகோதரர்களின் உயிரும், உடமைகளும் ஒப்படைக்கப்பட்டதுடன், ஜிகாத் அமைப்பினர் நேரடியாக சென்று பகிரங்க மன்னிப்பும் கேட்டனர். இது ஒருவகை நாகரிகம். மனிதம் என்றும் இதற்கு பெயரிடலாம்.

ஆனால் அமைப்பு ரீதியாக, திட்டமிட்டு, கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்ட, துரத்தப்பட்ட, சூறையாடப்பட்ட எங்களிடம், யாரும், எவரும், ஒரு நாயோ, பேயோ, பிசாசோ, புண்ணாக்கோ மன்னிப்பு கேட்கல.

அது…….வந்து…….ஓ……உங்களுக்கு………… நாங்க அநியாயம். செய்திட்டமா………ஓ…..சாறி……அது ஒரு துன்பியல் சம்பவம்டாப்பா………. அது சரி. இதை எந்த நாகரிகத்தில் சேர்ப்பது. எங்கிருந்து மனுநீதிச் சோழர்களை அழைப்பது.

இந்த சோனிக்காக்காமாருக்கு இன்னும் புத்தி வரல. அல்லது புத்தி புடிபடல. ரோட்டோரத்துல ரெண்டு மாடில பள்ளிகட்டி, வாணிஷ், பெயின்ற் பண்ணி, ஓ என்று எங்கிட பாங்கொலி உலகம் முழுக்க கேட்கணும் என்று புத்தி கெட்டு போய் திரியிறானுகள். ஆடை, அணிகலன், ஆடம்பரங்களை ஆண்டவன் விரும்புவதில்லை, அங்கொரு கண்ணும், இங்கொரு கண்ணும் ஆலைய வழிபாடில்லை என்ற சங்கதி இவனுக்கு இன்னமே புரியல. இனியும் புரியாது. புரிய நாளெடுக்கும். தமிழ் சகோதர்கள் நினைப்பது போல் அமைப்பு கட்டி, ஆராவாரம் பண்ணி, துண்டக்காணோம், துணியக்காணோம் என்று ஓடுவதற்கு முஸ்லீம்களுக்கு, சிறிலங்கா முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல, உலக முஸ்லீம்களுக்கே திராணி கிடையாது. அவனே ஒன்று ரெண்டாகி, ரெண்டு நாலாகி, துப்புக் கெட்டுப் போய்கிடக்கின்றார்கள்.

சீயா, சுன்னி, அகமதியா, முகமதியா, தப்லிக், ஜமாஅத் ஏ இஸ்லாம் என ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சொல்கின்றார்கள். நாங்க இதற்குள்ள எந்த வகையறா என்பதே புரியாமலிருக்கின்றது. முகம்மது நபி அலை அவர்கள் சொன்ன இஸ்லாம். ஐந்து நேரம் தொழு, வருடத்தில் 30 நாள் நோன்பு பிடி, கலிமாச் சொல், லாஇலாஹ இல்லல்லாஹு முகம்மது றசூலுல்லாஹ். வணக்கத்துக்கு பாத்திரமான நாயன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாரும் இல்லை. முகம்மது நபி அவர்கள் அவனது திருத்தூதர் ஆகும், சக்காத் கொடு, உனது உழைப்பின், லாபத்தில் ஒரு பகுதியை வருடா வருடம் தானமாக கொடு, ஹஜ்ஜு செய். அதாவது, உன்னிடம் அதிகப்படியான பணம் இருந்தால். அது உனக்கு போதுமானதாக இருந்தால் மக்காவுக்கு சென்று எனது பள்ளியில் ஆசுவாசமாக அமர்ந்து ஒரு குட்டி பிரார்த்தனை செய். உனது அடுத்த வீட்டில் அல்லது தெருவில், ஒரு ஏழை பெண் முதிர்கன்னியாக இருந்தால் அந்த பணத்தை, அப்பெண்ணின் திருமணத்துக்கு செலவிடு. ஹஜ் செய்வதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

இதைத்தான் முகம்மது நபி சொன்னாரே தவிர. வாளெடுத்து அடுத்த மதத்தவனை தாக்கு, அடுத்த இனத்தை மதியாதே என்று எங்கும் எப்போதும் சொல்லவில்லை. ஒரு முறை முகம்மது நபி தன் தோழர்களுடன் ஒரு பள்ளிவாசலில் அமர்ந்திருக்கும் போது, அவ்வழியால் இன்னொரு மதத்தை சார்ந்த ஒருவரின் மரண ஊர்வலம் போய்க் கொண்டிருந்து இருக்கின்றது. உடனே நபி அவர்கள் மரண ஊர்வலம் போய் முடியும் வரை எழுந்து நின்றிருக்கின்றார்கள். இதைக்கண்ட தோழர்கள், அது வேற்று மதத்தவரின் மரண ஊர்வலம் என்று சொல்லி இருக்கின்றார்கள். எம்மதம் என்றாலும் அதற்கு மரியாதை செய்வதுதான் மனித பண்பு என அவர்கள் கூறியுள்ளார்கள். அது மட்டுமல்ல அம்மரண ஊர்வலம் சென்ற பின்னர், அவ்வுடல் புதைக்கப்பட்ட இடத்துக்கு சென்று, ஒரு குட்டி மரக்கன்றை அவ்விடத்தில் நாட்டியுமுள்ளார். இந்த பண்புகளைத்தான் இஸ்லாம் சொன்னதே தவிர, பின்லாடன் சொல்வதுபோல் அல்லது யாசீர் அரபாத் அழுதது போல் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்பதெல்லாம் பொய்கதை, புருடா. அப்படி சொன்ன யாசீர் அரபாத் கூட, இறுதியில், ஒலிவ் இலையை கையில் ஏந்திக்கொண்டுதான் அய்யன்னா நாவன்னாவுக்குள் நுழைந்தார்.

இஸ்லாம் ஒரு மதம் என்பதை விட, நல்லதை நல்லபடியா செய்யுங்க என்று சொல்கின்ற ஒரு விருட்சம். அது தானே தன் பாட்டுக்கு வளரும். கொழும்பில் நிறைய ஹெரோயின் வியாபாரிகளும், ஹெரோயின் பாவிப்பவர்களும் முஸ்லீம்களே. இதை தடுக்க இந்த தப்லீக்காறரும், ஜமா அத் ஏ இஸ்லாம் காறரும், அகமதியா, முகமதியா காறரும் பல வருடகாலமாக தலையால தண்ணி குடிச்சி பார்த்தினம். எதுவும் நடக்கல. ஒரு இம்மி கூட நகரல. நம்ம மகின்த மகராசா வந்து, அதற்கென ஒரு ரீம் அமைச்சு. நார்கொடிக் தடுப்பு பிரிவு. முழுக்க முழுக்க முஸ்லீம் உயரதிகாரிகளை நியமித்து, இரண்டு வருட இடைவெளியில், 147 தூள் வியாபாரிகள் நட்டநடு வீதியில் மரணத்தை தழுவிக் கொண்டார்கள். நம்ம பாஷையில சொல்லப் போனா, போட்டுத்தள்ளப் பட்டார்கள். ஒரே ஒரு நபர்பாக்கி. அவர் பெயர் பொட்ட நவாஷ். பனாகொடையில சேப்ரியாக இருக்கின்றார். எந்த சோனிக்காக்காவும் நடு ரோட்டுக்கு வந்து சோனிய போட்டுட்டானுகள் என்று ஆர்ப்பாட்டம் பண்ணல. இங்கே எங்கிட அல்லாஹ்வோ, திருப்பரங்குன்றத்துல எழுந்தருளியிருக்கின்ற முருகப்பெருமானோ, பொலன்னறுவையில் 40 அடி நீளத்தில் நீட்டி தூங்கிக் கொண்டிருக்கின்ற புத்த பகவானோ ஆப்பு வைக்க வரவில்லை. தெய்வம் மனித ரூபயணா. ஆம் கடவுள் மகின்த ரூபத்தில் வந்து தூள் வியாபாரிகளுக்கு ஆப்பு வைத்துள்ளார்.

கடந்த பல வருடங்களாக, குறிப்பாக 83/84/85/86 காலப்பகுதியில் நிறைய தப்பு தண்டாக்கள் பல இடங்களிலும், பல பகுதிகளிலும் நடந்தது. உண்மையிலேயே 83 ஜூலை கலவரத்தில் கொழும்பிலும், 84/85 காலப்பகுதியில் கிழக்கிலும் முஸ்லீம் காடையர்களால், தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதை, ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால் இங்கு முஸ்லீம் காடையர்களால் தாக்கப்பட்டவர்களைவிட, முஸ்லீம் மக்களால் காப்பாற்ப்பட்டவர்கள்தான் அதிகம் என்பதையும், இங்கு நுனிப்புல் மேய்பவர்கள் உணர வேண்டும்.

இப்போது, மகின்த கிழிப்பாரா, கேபி அண்ணா சாதிப்பாரா, தோழர் டக்ளஸ் பிடித்துள்ள வடம் சரிதானா, கருணா அம்மான் தேறுவாரா என்று பழையபடி பல்லவிகளை தொடங்கிவிட்டனர் நமது புலம் பெயர் புத்தி ஜீவிகள். பாவம், பாவப்பட்ட மக்கள். எல்லோரும் குற்றம் கண்டு பிடித்து பெயர்வாங்கும் புலவர்களாக இருக்கின்றார்களே தவிர. பசித்த வாய்க்கு பாலூட்டுபவர்கள் யாரையுமே காணல. ஆனால் இங்கே சிறிலங்காவில் எல்லாமே நன்றாகத்தான் நடக்கின்றது.

இந்திய முதலாளிகள் வருகின்றார்கள், சீன வியாபாரிகள் கிளிநொச்சியில் நடமாடுகின்றார்கள், பசித்த வாய்களுக்கு பாரியளவு இல்லாவிட்டாலும், குறைந்தளவு மகின்த அரசு ஊட்டுகின்றது, சிங்கள பொதுமக்கள் வடக்கை எந்த பயமுமின்றி தரிசித்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லீம்கள் பழைய இரும்புகளை விசுவமடுவிலும், கிளிநொச்சியிலும், ஐந்து சந்தியிலும் வாங்கி குவித்துக் கொண்டிருக்கின்றார்கள், நாடே ஒரு களை கட்டிப் போய்க்கிடக்கின்றது அப்புறம் உங்களுக்கு வேறு என்ன தேவைப்படுகின்றது. உரிமை.

பொண்ணே பார்க்கலயாம், இவர்கள் பிள்ளைக்கு பெயர் வைக்க சாதகம் பார்க்கின்றார்கள் என்ற கதையாக இருக்கின்றது நமது நிலமை. ஊருக்குள்ள திடீரென்று பல பேருக்கு, ஏதோ இனம் தெரியாத நோய் புடிச்சிப் போய், டாக்கடருக்கிட்ட வந்திருக்காங்க. டாக்டரும் என்ன மருந்து கொடுப்பதென தெரியாமல், ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு மருந்தை எழுதிக் கொடுத்திருக்கின்றார். இதைப் பார்த்த ஓடலியார், என்ன சார் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு மருந்தை எழுதிக் கொடுக்கின்றீர்களே, இது சரியா எனக் கேட்டிருக்கின்றார். எனக்கே இது என்ன நோய் என தெரியாமல் இருக்கின்றது. ஆளுக்கொரு மருந்தை கொடுப்போம். யாராவது ஒருவருக்கு நோய் சுகப்படும். அந்த மருந்தை, இனி தொடர்ந்து கொடுப்போம் என்றாராம். அதுபோலதான் இருக்கின்றது எங்கள் கதையும்.

இருபத்தஞ்சு வருசமாக, சிங்கள அரசுகள் சுடுதண்ணி ஒத்தணம், மயிலெறகு வருடல், ஆமெணக்கெண்ணை தடவல் எனக்கொடுத்து போதாமல்தான், மகின்த சகோதரர்கள், மகியங்கன, மரமஞ்சள் கசாயம் குடுத்து நோயை குணப்படுத்தியிருக்கினம். குணப்படுத்திட்டம் எண்டு சொல்லினம். ஆனால் நோயாளிகள் வாயே தொறக்கல. ஆனால் புதினம் பார்க்க வந்தவர்கள்தான் ஆயிரம் மருந்து சொல்லினம். இவர்கள் எல்லாம் ஏற்கனவே, சிறிலங்காவில் இருந்து கொண்டு வேப்பிலை அடித்தவர்கள்தான். இப்ப வெள்ளயனுகளுக்கிட்ட, இருந்து கொண்டு அமொக்சிலுனும், புரூபனும், வொட்காவும் பழகிப் போட்டு, இதே மருந்தை உடனே கொடு என வியாக்கியானம் பண்ணினம்.
ஏன் நமதுநாட்டு வைத்தியத்துக்கு என்ன குறை. நாட்டு வைத்தியம் உடன் பலன்தராதுதான். ஆனால் நீண்டகாலத்தில் அது கைகொடுக்கும். மெள்ள மெள்ள சுளுக்கெடுத்து, நோயாளியை ஆசுவாசப்படுத்தி, அது முறிவா, அல்லது சுளுக்கா என கண்டு பிடித்து, சுளுக்கென்றால், சித்தாமட்டி வேர், ஆடா தோடை இலை, கொஞ்சம் வேப்பிலையை, மயிலெண்ணெயில் அரைத்து, இளஞ்சூட்டில் பூசி, நல்லெண்ணை தடவிய வெள்ளை துணியை கட்டினால் நோய் சுகம். இல்ல அது பெரிய, பாரிய முறிவு என்றால், அம்மிக்குளவியை எடுத்து முறிவில் ரெண்டு தட்டு தட்டி, பச்சை மஞ்சள், மரமஞ்சள், கொஞ்சூண்டு அசமதாகம் ( ஓமம் ), சூடம் ஒரு நாலு வில்லையளவு, எடுத்து உரலில் போட்டு உளக்கி, வேப்பெண்ணையில் வேகவைத்து, காலில்வைத்து கட்டி, அதற்கு துணையாக பனைமட்டையை கட்டினால்தான் மூன்று மாதத்தில் நோயாளி எழும்பி நடப்பான்.

என்ன நோய் என்பதை நோயாளிதான் சொல்ல வேண்டும். பெரிய சீக்காளி கேபி அண்ணாவே வாய் தொறக்கல. அப்புறம் அன்றாடம் காய்ச்சிகள் எப்படி வாய் தொறப்பார்கள். ஆனால் அவன் நிச்சயம் வாய் தொறப்பான். அவன் முதலில் அவனை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் பீனிக்சுகள் கிளம்பும். சுதந்திர சிறிலங்கா உதயமாகும். அதில் சிறிலங்காவின் இரண்டாவது தலைநகரமாக கிளிநொச்சி இருக்கும். அங்கே ஆங்காங்கே புத்தர் சிலைகள் இருக்கும். நிறைய பள்ளிவாசல்கள் கட்டப்படும்.

கதிர்காமத்தில் பௌத்த காணியில், கந்தனுக்கு ஆலயமும், பால்குடி பாபாவுக்கு பள்ளிவாசலும், கண்டியில் பத்துநாள் பெரஹரவில் இரண்டாவது நாள் பெரஹர முருகப்பெருமானுக்கும், வள்ளிக்கும் சிங்களவன் செய்யும் போது, கிளிநொச்சியில் ஒரு குட்டி பெரஹரா நடப்பதில் என்ன தவறு இருக்கின்றது. காரியங்களை தலையை தடவித்தான் செய்ய வேண்டுமே தவிர, கழுத்தில் கத்தி வைத்துக் கொண்டு செய்யக்கூடாது.

இதைத்தான் முஸ்லீம்கள் தனித்தனியாக செய்து கொண்டிருக்கின்றார்கள். யாரும் இங்கே இயக்கம் கட்டி, அறிக்கை விட்டு செய்யல. கொழும்பு கண்டி வீதியில், கொழும்பிலிருந்து கண்டி டவுண் வரை, நட்ட நடு வீதி ஓரங்களில் 17 பள்ளிவாசல்கள், 6 ஹிந்துக் கோயில்கள் இருக்கின்றது. ஆனால், மூன்றே மூன்று புத்தர் சிலை. கிரிபத்கொடவில் ஒன்று, கடவத்தையில் இன்னொன்று, பேராதனையில் மற்றொன்று. பாவம் புத்தர். அவர் அமைதியாக நிஷ்டையில் இருக்கின்றார். ஆனால் இந்த முஸ்லீம்களோ, இந்த புத்தர் சிலைகளுக்கு முன்னால் இன்டர்கூலர்களில் 120 மைல் வேகத்தில் பறக்கின்றார்கள். ஆனால் சிங்கள சகோதரர்கள், பள்ளி வாசல்களையும், கோயில்களையும் கடக்கும் போது, வண்டியை நிறுத்தி, அல்லாஹ் தெய்யோவுக்கும், கந்தசாமி முது ஹாமுறுணிக்கும் உண்டியலில் பணம் போட்டு, இதயத்தை தடவிக் கொள்கின்றனர்.

நம்ம நாடு நண்டு மனிதர்கள் வாழும் நாடாகிவிட்டது. அதிலும் புலம் பெயர்ந்தவர்களே கெட்டிக்காறர்களாக இருக்கின்றனர். கூட்டுக்குள்ள நண்ட போட்டா, சலசல என்று ஓடித்திரியும். அப்புறம் அமைதியாகிவிடும். கொஞ்ச நேரத்துக்கப்புறம், ஒரு நண்டு மெதுவாக, கூடையில் ஏறி வெளியெ வர எத்தனிக்கும். உடனே மற்ற நண்டுகள், அதன் காலை வாரிவிடும். அதில நாமதான் கில்லி. பௌத்தர்களையும், முகலாயர்களையும் 1200 ஆண்டுகள் ஆளவிட்ட ஹிந்துக்கள், பிராமணர், பிராமணர் அல்லாதவர் என்ற கதைகளை கூறி, அகண்ட இந்தியாவை, ஒரு 30 ஆண்டுகள் கூட ஆள அனுமதிக்கவில்லை, நமது இந்திய ஹிந்து நண்டுகள். நமது அரிச்சுவடியும் அங்கிருந்துதான் ஆரம்பமாகின்றது.

3000 ஆண்டுகளுக்கு முன் முத்து, பவளம், சக்கரை, அரிசி, சந்தனம், பாக்கு, தேக்கு, ஏலம், சிறுத்தை, புலி, தந்தம் என்பவற்றை ரோமாபுரி, எகிப்து, கிரேக்கம் போன்ற நாடுகளுக்கு ஏற்றியவன் தமிழன், கம்பூச்சியாவில் காரைக்கால் அம்மையாருக்கு கோயில் இருக்கின்றது, கம்போடியாவில் 7ம் ஜயவர்த்தனே கட்டிய அங்கேர்வா கோயில் அமைந்திருக்கின்றது, சீன அரச அவையில் சோழ தூதருக்கு இருக்கை இருந்திருக்கின்றது, தாய்லாந்து அரசவையில், திருவெம்பாவையின் ஒளிச் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது என்ற கதைகளையே இன்னும் சொல்லிக் கொண்டிருக்கின்றோமே தவிர, உள்நோய்க்கு யாரும் மருந்து சொல்லக் காணோம்.

யுரோப்புல இருந்து மகின்த ராஜபக்ஷவுக்கு ஒருதிட்டு, பசில் ராஜபக்ஷவுக்கு ரெண்டு திட்டு, டக்ளஸ் தேவானந்தாவுக்கு மூன்று திட்டு, கருணா அம்மானுக்கு நாலு திட்டு, கேபி சகோதரயாவுக்கு அஞ்சு திட்டு, நம்ம இளிச்சவாயர்களான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மொத்த திட்டு என திட்டுவதை விட்டுவிட்டு, அந்த பொன்னான நேரத்தில் ஒரு வாழ்வையிழந்த உறவுக்கு ஆலோசனையாவது சொல்லலாமே. அதுதான் மாடு வாங்கி வளர்க்க சொல்லலாமே.

நம்ம நாட்டுல உள்ள மக்கள், இருவகையான மாடுகளை வளர்த்து பணம் உழைக்கின்றார்கள். வெப்ப வலயப்பகுதியில் உள்ளவர்கள் நாட்டு மாடுகளை வளர்த்தும், மத்திய மலைநாட்டுப் பகுதியில் உள்ளவர்கள் இறக்குமதி செய்யப்பட்ட சீமை, பிறேசிலியன், ஜேசி, அயசன் மாடுகளை வளர்த்தும் பணம் உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இறக்குமதி செய்யப்பட்ட சீமை ( கறுப்பு/சிகப்பு), பிறேசிலியன் ( கறுப்பு/வெள்ளை), ஜேசி (பிறவுண்/றோஸ் ), அயசன் (சிகப்பு) கறவைமாடுகள்தான் இன்று மத்திய மாகாணத்திலும், கொழும்பபை அண்டியபகுதிகளிலும் மக்களால் வளர்க்கப்பட்டு தினமும் பணத்தை கொட்டோ கொட்டென கொட்டிக் கொண்டிருக்கின்றது. சிறிய முதலில், வீட்டுக்குள் இருந்து கொண்டே பலர் பணத்தை உழைத்துக் கொண்டிருக்கின்றனர். எப்படி ?
கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபா முதல் 65ஆயிரம் ரூபா விலையான இம்மாடுகள், குட்டி ( கன்று ) போடுவதற்கு முன்னர், தினமும் 17 லீற்றர் முதல் 20 லீற்றர் வரை பால் தருகின்றன. காலையில் 8 லீற்றர், மாலையில் 8 / 9 லீற்றர் என ஒரு நாளைக்கு இரு முறை பால் தருகின்றன. ஒரு லீற்றர் பாலின் விலை 30 ரூபாவில் தொடங்கி, 31 ரூபா அல்லது 31 ரூபா 80 சதம் என, இலங்கை பால் சபையே தினமும் காலையும், மாலையும் வீட்டு வாசற்படிக்கே வந்து பாலைக் கொள்வனவு செய்கின்றது.

இவ்வகையான மாடுகளில் தொடர்ந்து எட்டு மாதங்களுக்கு பால் கறக்கலாம். அடுத்த ஓரிரு மாதத்தில் அது கன்று போடும். கன்று போடும் வரை பால் கறக்க மாட்டார்கள். கன்று போட்டு அடுத்த நாளே மீண்டும் பால் தரத் தொடங்கி விடும். கன்று போட்ட பின் முன்னரை விட 3/4 லீற்றர் கூடுதலாகவே பால் கறக்க முடியும். கன்று, பசுக்கன்றானால் அதுவும் அடுத்த ஒரு வருடத்தில் பால் தரத்தொடங்கிவிடும். அது காளையானால் இரண்டு, மூன்று வருடத்தில் அதை நல்ல விலைக்கு விற்கலாம்.

ஒரு மாட்டிலிருந்து முழு வருடமும் பால் கறக்க முடியாது. அதி கூடியது ஒன்பது அல்லது பத்து மாதம் பால் கறக்கலாம். ஆம் ஒரு நாளைக்கு 18 லீற்றர் பால் என ஒன்பது மாதம் ( 9 x 30 =270 நாட்கள் ) பால் கறந்தால், வருடத்துக்கு ( 270 x 18 ) 4860 லீற்றர் பால் கறக்க முடியும். ஒரு லீற்றர் பால் 30 ரூபாவாக பால் சபைக்கு கொடுத்தால், 4860 x 30 = 1,45,800 ஒரு லட்சத்து நாற்பத்தி ஐந்தாயிரத்து எண்ணூறு ரூபாவிற்கு பால் விற்க முடியும். இது மொத்த வரவு. அப்படியானால் செலவு எப்படி இருக்கும்.

ஆம் தினமும் புண்ணாக்கு, விற்றமின், பச்சைப் புல் என்பன இவற்றுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும். மில்கோ புண்ணாக்கு, மோர்லக் புண்ணாக்கு என பிரசித்தி பெற்ற புண்ணாக்குகள் இங்கு மலையகம் எங்கும் கிடைக்கும். புண்ணாக்கு 25 கிலோ பேக் ஒன்றின் விலை 450 ரூபா. ( ஒரு கிலோ 18 ரூபா ) அதே போல் மிடிமிக்ஸ், எமினோல் போன்ற விற்றமின் வகையறாக்களும் உண்டு. இந்த விற்றமின் ஒரு கிலோ பேக் 160 ரூபா.

தினமும் புண்ணாக்கு காலையில் 1.5 கிலோவும், மாலையில் 1.5 கிலோவும் இளம் சூட்டு நீரில் கலந்து 50 கிறாம் விற்றமினையும் கரைத்து இம்மாடுகளுக்கு கொடுக்க வேண்டும். ஆம் ஒரு நாளைக்கு 3கிலோ புண்ணாக்கு, 100 கிராம் விற்றமின் வழங்க வேண்டும். அத்துடன் பச்சைப்புல் ஒரு நாளைக்கு இரண்டு கட்டு வழங்க வேண்டும். இது கூலியாளை வைத்து இரண்டு நாட்களுக் கொருமுறை வெட்டி வழங்க வேண்டும். இக்கூலியாளுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபா வழங்க வேண்டும்.

புண்ணாக்கு ஒரு கிலோ 18 ரூபா, விற்றமின் 100 கிராம் 16 ரூபா, ஒரு நாளைக்கு 3 கிலோ புண்ணாக்கு, 100 கிராம் விற்றமின், கூலியாளுக்கு 100 ரூபா ( இரண்டு நாளைக்கு 200 ருபா ) ஆம், ஒரு நாளைக்கு ஒரு மாட்டுக்கு உணவுச் செலவு 54,16,100 மொத்தம் 170 ரூபா. ஒரு வருடத்துக்கு 365 x 170 = 62.050
மாட்டுக்கு அடுக்கடி நோய்வந்து தொலைக்குமா ? கிடையவே கிடையாது. ஆடிக்கொரு முறை, அமாவாசைக் கொருமுறை காய்ச்சல் போன்ற நோய்கள் வரும். அதற்கு இருக்கவே இருக்கின்றது பனடோல். பத்து பனடோலை எடுத்து அரைத்து கரைத்து, போத்தலில் இட்டு கொடுத்தால் காய்ச்சல் பறந்துவிடும். சில சமயங்களில் வயிற்றுளைவு போன்ற ஒரு நோய்வரும். அதற்கு நாட்டு மருந்தை கொடுத்து அடக்கிவிடுவார்கள்.
ஆம். வெள்ளைப்பூடு, இஞ்சி, பெருங்காயம், ஓமம் ( அசமதாகம் ), மிளகு, வெத்திலை என்பவற்றை எடுத்து, மைபோல அரைத்து, வெள்ளைத் துணியில் வடிகட்டி, பால் போத்தல்களில் ஊற்றி கொடுத்துவிட்டால் வயிற்றுளைவு பறந்துவிடும்.

அதுமட்டுமல்ல நாம் மாடு வாங்கியிருக்கின்றோம் என்ற சங்கதியை அப்பகுதி மிருக வைத்தியருக்கு அறிவித்து விட்டால் போதும், அவர் வாரா வாரம் வந்து நமக்கு அறிவுரையும், ஆலோசனையும் வழங்குவார். இந்த விடயத்தில் நமது அரச ஊழியர்கள் ரொம்ப சுத்தமாகவே இருக்கின்றார்கள்.

மாட்டை நடு றோட்டில் வைத்துக் கொண்டு வளர்க்க முடியுமா ? முடியாது. அதற்கென ஒரு “செட்” அடிக்க வேண்டும். ஆம் சாதாரணமாக மூன்று மாட்டுக்கு 175/190 புளக் கல், 5 சீமெந்து பேக், 10 அஸ்பெஸ்டாஸ் சீற், மணல் என்பன வாங்கி ஒரு குட்டி செட் அடிக்க வேண்டும். ஒரு புளக் கல் 39 ரூபா, சிமென்ட் ஒரு பேக் 800 ரூபா, சீற் ஒன்றுக்கு 1500 ரூபா.
190 புளக் கல் ( 190 x 39 ) = 7,410 ரூபா, 5 சீமெந்து பேக் ( 800 x 5 ) = 4,000ரூபா, 10 சீட் ( 1500 x 10 ) = 15,000ரூபா, மணல் ஆயிரம் ரூபா, மொத்த செலவு 27,410 ரூபா.
ஒரு மாடு வளர்த்து பணம் உழைக்க வேண்டுமானால் எவ்வளவு உழைக்கலாம்.
ஒரு மாடு 50,000 ஆயிரம் ரூபா, உணவுக்கு வருடம் 62,050 ரூபா, செட்டுக்கு 27,410 ரூபா, மொத்த செலவு இவ்வளவே. ஒரு மாட்டை ஆறு , ஏழு வருடம் வரை வைத்துக்கொண்டு பால் கறக்கலாம். நிச்சயமாக வருடத்துக்கொரு கன்று போடும். அக்கன்றும் பசுவானால், அதுவும் ஒரு வருடத்தில் பால் தர தொடங்கும். ஒரு வருடத்துக்கு 1,45,000 ரூபாவிற்கு பால் விற்கலாம்.
நிலையான செலவு, மாட்டுக்கு 50,000 ரூபா, செட்டுக்கு 27,410 ரூபா. ஆக மொத்தம் 77,410 ரூபா மட்டுமே. உணவுக்கு செலவு வருடம் 62,050 ரூபா. மொத்த பால் விற்பனை வருடத்துக்கு 1,45,000 ரூபா. ஆம் வருட நிகர வருமானம் 1,45,000 – 62,050 = 82,950
அது மட்டுமல்லாமல், வருடத்துக்கு ஒரு கன்று என ஏழு அல்லது எட்டு கன்றுகளும் கிடைக்கும். இவைகளும் பால்தரத் தொடங்கினால் இலாபம் இருமடங்கு, மும்மடங்கு என வருடா வருடம் கூடிக் கொண்டே செல்லும். முதல் வருடம் 80,000 ஆயிரம் நிகர இலாபம், இரண்டாவது வருடமும் 80 ஆயிரம் நிச்சயம் கிடைக்கும், மூன்றாவது வருடம் (கிட்டத்தட்ட) 1,20,000 ரூபா (கன்றும் பால் தரத் தொடங்கிவிடும்), நாலாவது வருடம் 2,20,000 ரூபா (மற்ற கன்றும் பசுவானால் பால் தரத் தொடங்கிவிடும்) என ஒரு மாட்டின் மூலம் உழைக்கலாம்.

எச்சரிக்கை:
1972 இல் வியட்நாமில், நவாப் குண்டுகளை போட்டு, வியட்நாமையும், மக்களையும் சீரழித்த அமெரிக்க யாவாரி, இப்ப அதெல்லாத்தையும் உட்டுப் போட்டு, மரபணு விதை யாவாரம் பண்ண தொடங்கிருக்கிறானாம். அதாவது நீங்க விழைவிக்கின்ற ஐஆர் எய்ட், எச் போர் நெல்லு விதைகள், உங்களூர் தென்னங்கன்று, உங்க வீட்டு மாங்கொட்டை எல்லாம் கனிந்து பயன் தர நாளெடுக்கும், காலமெடுக்கும். நம்மளுக்கிட்ட அதே சரக்கு லேட்டஸ்ராக இருக்கு, அதை வாங்கி நடுவுங்கோ குறைந்த காலத்தில் கூடிய பயன் கிடைக்கும், அதாவது நாலு மாதத்தில் புள்ள பெத்துக்கலாம் என்று கூறிக் கொண்டு வாற மாதம் நம்ம ஊருக்கு ஒரு நடை வரப் போறானாம். சாக்கிரதை, சாக்கிரதை. 30 வருஷம் கருக்கட்டிய புள்ளயையே பெத்துக்க முடியாம இருக்கம். இந்த மானுடத் துரோகி வந்து இருக்கிறதயும் கெடுக்க போறான்.

டெல்லி கொமன்வெல்த் போட்டியில் ஒரு ஈழத்தமிழரின் தங்க வேட்டை

commonwealt_logo.jpgஅவுஸ் திரேலியாவுக்காக தங்கப் பதக்கங்கள் வென்ற இலங்கைத் தமிழன் பிரஷாந்த் கொமன்வெல்த் போட்டியில் சாதனை டெல்லி கொமன்வெல்த் போட்டியில் ஒரு தமிழர் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் இலங்கை பிரஷாந்த் செல்லத்துரை. அவுஸ்திரேலியாவுக்காக விளையாடி வருகிறார் இந்த ஜிம்னாஸ்ரிக்ஸ் வீரர்.
சர்வதேச அரங்கில் தமிழர்களின் முத்திரை தற்போது அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் இப்போது டெல்லி கொமன்வெல்த் போட்டியில் பதக்க வேட்டையில் முதலிடத்திலிருக்கும் அவுஸ்திரேலியாவுக்காக ஒரு தமிழர் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அவரது பெயர் பிரஷாந்த் செல்லத்துரை. பூர்வீகம் இலங்கை. இவரது குடும்பத்தினர் இலங்கையில் இனக்கலவரம் பெரிதாக வெடித்த 1983 ஆம் ஆண்டு அங்கிருந்து இடம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்றனர். தற்போது சிட்னியில் வசித்து வருகிறது செல்லத்துரையின் குடும்பம். பிரஷாந்த் அவுஸ்திரேலிய ஜிம்னாஸ்ரிக்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரர். அவுஸ்திரேலியாவுக்காக டெல்லி கொமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் வென்று கொடுத்துள்ளார்.

டெல்லி கொமன்வெல்த் போட்டியில் இரு போட்டிப் பிரிவுகளில் கிட்டத்தட்ட 15,000 புள்ளிகள் வரை பெற்றுள்ளார் பிரஷாந்த். ஜிம்னாஸ்ரிக்ஸ் போட்டிகளில் இந்தளவுக்கு அதிக பட்ச புள்ளிகள் கிடைப்பது மிகவும் அரிதான விடயம். அந்தளவில் பிரஷாந்த் ஒரு சாதனையே படைத்துள்ளார்.

24 வயதேயாகும் பிரஷாந்த் “ரேடியோலோ” மாணவர் அவுஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்தது பிரஷாந்த்துக்கு எளிதாக இருக்கவில்லையாம். கடும் போராட்டங்கள், கடின பயிற்சி, கடுமையான முயற்சிக்குப் பின்புதான் அணியில் இடம்கிடைத்தது. கடந்த மெல்போர்ன் கொமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் பிரஷாந்த். இந்த முறை தங்கத்துடன் திரும்புவேனென சபதமே போட்டிருந்தாராம். சொன்னபடி வாங்கியும் விட்டார். டெல்லி கொமன்வெல்த் போட்டியில் ஒரு ஈழத்தமிழர் அதுவும்  தங்க வேட்டையாடி வருவது பெருமைக்குரிய விடயம் தான்.

அடிப்படை வசதிகள் எதுவுமின்றி புதுக்குடியிருப்பில் மீள்குடியேற்றம்

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் இதுவரை 824 குடும்பங்களைச் சேர்ந்த 2525 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். செட்டிகுளம் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 549 குடும்பங்களைச் சேர்ந்த 1,784 பேரும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வசித்து வந்த 215 குடும்பங்களைச் சேர்ந்த 731 பேருமே விஸ்வமடு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் செட்டிகுளத்தில் நலன்புரி நிலையத்திலிருந்து வந்தவர்களுக்கேதறப்பாள் வழங்கப்பட்டுள்ளது.

மன்னகண்டல்,மாணிக்கபுரம்,வள்ளுவர்புரம் கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் அடுத்த வாரம் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.தயானந்தா தெரிவித்தார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகமும் தற்காலிகமாக விஸ்வமடு மகாவித்தியாலய நூலகக்கட்டிடத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது.

அடிப்படை அத்தியாவசிய வசதிகள் எதுவும் செய்யப்படாமலேயே மீள்குடியேற்றம் இடம்பெறுவதாகவும் மழைகாலம் தொடங்கியுள்ளதால் மீள்குடியேற்றப்பட்டவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்காலிக கொட்டகையாவது அமைக்க தகரம், தடி,கம்புகள்,கிடுகுகள்,விவசாய உபகரணங்கள் உலருணவுப் பொருட்கள் உடனடியாக வழங்க ஆவன செய்யப்படவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் பகுதிகளுக்குச் சென்று முஸ்லிம்களின் நிலமைகளை ஆராய்ந்தார்.

Risath_Bathiyutheen_Ministerவர்த்தக மற்றும், கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதிகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள முஸ்லிம் மக்களின் நலன் குறித்து ஆராய்ந்தார். யாழ்ப்பாணத்தில் 20 வருடங்களுக்குப்பின் நேற்று மானிப்பாய்   வீதியிலுள்ள பெரிய முகைதீன் பள்ளிவாசலில் இடம்பெற்ற ஜும்ஆ வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டதுடன், கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற இஸ்லாமிய கலை நிகழ்வில் பங்கு பற்றியதோடு, யாழ். ஒஸ்மானியாக் கல்லூரிக்குச் சென்று அங்கு முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரிச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார். அங்கு முஸ்லிம் பள்ளிவாசல் காணியில் வசிக்கும் எட்டு குடும்பங்களுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

பின்னர் யாழ்.சோனகத்தெருவிற்கு சென்று அங்குள்ள வீதிகளை அபிவிருத்தி செய்தல், வடிகால் புனரமைப்பு, மின்சார வசதிகளை சீர்செய்தல் முதலான பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்ககு பணிப்புரை விடுத்தார்.

யாழ்.வருவதற்கு முன்னதாக கிளிநொச்சிக்குச் சென்ற அமைச்சர் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளான நாச்சிக்குடாவிற்குச் சென்று அங்குள்ள முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில் அடுத்த மாதம் 10ஆம் திகதி யாழ். மாநகரசபையின் பிரதி மேயராக முஸ்லிம் ஒருவர் பதவியேற்கவுள்ளதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் படி ஒரு வருடத்தின் பின் பிரதி மேயர் பதவியை முஸ்லிம் ஒருவருக்கு வழங்குவது என முடிவெடுக்கப் பட்டமையையும் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தத்தை  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நினைவு படுத்துவதற்காக தாம் யாழ்ப்பாணம் வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சரஸ்வதி பூஜை

sri-lankan-parliament.jpgபாராளு மன்றத்தில் சரஸ்வதி பூஜை நேற்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பாராளுமன்ற முன்வாயில் மண்டபத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமான சரஸ்வதி பூஜையில் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், பிரதி சபாநாயகர் பிரியங்க ஜயரட்ண மற்றும் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கலந்து கொண்டனர்.

சரஸ்வதி பூஜையைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. சரஸ்வதி பூஜைக்காகப் பாராளுமன்ற முன்வாயில் மண்டபம் வாழை,மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பாராளுமன்ற ஊழியர்கள் பலரும் கலந்துகொண்ட அதேவேளை, வெளியிலிருந்தும் பலர் வந்திருந்தனர்

எழுதுமட்டுவாழ் பகுதிகளில் பொதுமக்களின் பல வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் 15 நாட்களுக்கு முன்னர் காணப்பட்ட வீடுகள் தற்போது அழிக்கப்பட்டுள்ளதாக எழுதுமட்டுவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எழுதுமட்டுவாழ் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள் தங்களது வீடுகளை பார்வையிடுவதற்காக சென்ற போது நாகர்கோவில் வீதியிலிருந்த 267 வீடுகளில் இரு வீடுகள் தவிர்ந்த ஏனைய வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ளதாக தெரிவித்தனர். தங்கள் காணிகளிலிருந்த பயன்தரு மரங்களும் தறிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் குடியிருப்புக்கள் மழைய நிலைக்குத் திரும்ப நீண்டகாலம் எடுக்கும் எனவும் இம்மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் மாற்று வலுவுள்ளோர் சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு விண்ணப்பம்.

Jaipur_Artificial_Limbயாழ்ப்பாணத்தில் மாற்று வலுவுள்ளோர் (ஊனமுற்றோர்) சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் செயற்கை உறுப்புக்களை வழங்கும் ஜெய்ப்பூர் நிறுவன அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

250 மாற்று வலுவுள்ளோர்  சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட பொறிமுறையின் கீழ் மாற்று வலுவுள்ளோருக்கு சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் அதிகாரி, இவ்வாறானோருக்கு  மருத்துவ சான்றிதழ்களை வழங்கும் மருத்துவ அதிகாரி ஆகியோர் கொழும்பிலேயே இருப்பதால் யாழ்ப்பாணத்தில் பரீட்சைகளை நடத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்வதிகாரிகள் யாழப்பாணத்திற்கு வருகை தந்து மாற்று வலுவுள்ளோருக்கான சாரதி பரீட்சைகளை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடும்பு கொண்டு சென்றவருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம்.

உடும்பு கொண்டு சென்ற நபர் ஒருவருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது. தமது காணியைத் துப்புரவாக்கிய போது அங்கு காணப்பட்ட உடும்பு ஒன்றைப் பிடித்து வீட்டிற்கு கொண்டு செல்லும் வழியில் பொலிஸாரிடம் அவர் சிக்கிக்கொண்டார். கொடிகாமம் பொலிசார் மிருகவதைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதவான் எம்.எம். அப்துல்லா குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பின்பு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதித்ததோடு உடும்பை விடுவிக்குமாறும் உத்தரவிட்டார்.
வடக்கின் கிராமங்களில் காணப்படும் உடும்புகளைப் பிடித்து இறைச்சியாக்கி உண்பது கிராம மக்களின் சாதாரண பழக்க வழக்கமாகவுள்ள நிலையில்,  உடும்பைப் பிடித்தால் மிருகவதைச் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும் என்பது சாதாரண கிராம மக்களுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவினர் வடமராட்சிப் பகுதிக்கு வரவுள்ளனர்.

ICRC_Logoசர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவினர் எதிர்வரும் 18ஆம் திகதி யாழப்பாணத்திற்கு வந்து வடமராட்சிப் பகுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளை பார்வையிடவுள்ளனர். 21ஆம் திகதி வரை இப்பகுதிகளைப் பார்வையிடும் செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேசக்குழுவினர் வடமராட்சியில் 1.6 மில்லியன் நிதிச்செலவில் குடிநீர்விநியோகத்திட்டம் ஒன்றை தேசிய வடிகாலமைப்புச்சபையுடன் இணைந்து செயற்படுத்தவுள்ளமை குறித்தும்  ஆராயவுள்ளனர்.

அவுஸ்திரேலிய செஞ்சிலுவைச்சங்கம் வடமராட்சிக்கிழக்கில் மீள்குடியமர்ந்தவர்களுக்கு வழங்குவதற்கென கட்டப்பட்டு பின் இடைநிறுத்தப்பட்ட வீடைப்புத் திட்டத்தை மீளவும் தொடர்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் யாழ்.பிரிவின் செயலாளர் எஸ்.பாலகிருஸ்ணன் இத்தகவல்களை தெரிவித்துள்ளார்.

நாட்டில் 28,720 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாக கணிப்பீடு

dinesh.jpgதொழில் அமைச்சு மேற்கொண்ட ஆய்வின் படி 2010 ஆம் ஆண்டாகும் போது 28,720 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு தொழில் வழங்குவதற்கு தனியார்துறையுடன் இணைந்து வேலைத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார்.

வாய் மூல விடைக்காக தொழில் அமைச்சரிடம் வினவப்பட்டிருந்த கேள்விக்கான பதிலை அமைச்சர் சபையில் சமர்ப்பித்தார். 2010 ஆம் ஆண்டாகும் போது இலங்கையில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் குறித்தும் அவர்களுக்கு தொழில் வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஐ. தே. க. எம். பி. தயாசிரி ஜயசேகர கேள்வி எழுப்பியிருந்தார்.