இலங்கையின் வடமாகாணத்தில் தொழிற்சாலைகளை அமைக்க 30 அமெரிக்க நிறுவனங்கள் தயாராகி வருவதாக அமெரிக்க தெற்காசிய பிராந்திய வர்த்தக கட்டமைப்பின் பிரதிநிதி மைக்கல் டெலணி தெரிவித்துள்ளார். இவ்வாறு தொழிற்சாலைகளை அமைக்க விரும்பும் நிறுவனங்களின் தொகை அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘வடமாகாணத்தின் முதலீட்டுக்கான வாய்ப்புகள்’ என்ற தொனிப்பொருளில் நேற்று செவ்வாய் கிழமை அமெரிக்க முதலீட்டாளர்களுடனான சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடைபெற்றது. அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்துடனும் யாழ்ப்பாண பொதுமக்களுடனும் இணைந்து செயற்பட அமெரிக்கா விரும்புகின்றது. அபிவிருத்திப் பாதையை நோக்கிப் பயணிக்கும் இலங்கையின் வெற்றிக்காக அமெரிக்கா பக்கபலமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு அமெரிக்க நிறுவனங்கள் வடக்கில் தொழிற்சாலைகளை அமைக்கும் போது பல்லாயிரக் கணக்கானோருக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.