‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசியம், சுயநிர்ணயம் என்று இரண்டு கோசம் வைத்திருக்கிறார்கள். தேசியம் சுயநிர்ணயம் தமிழீழம் எங்களுக்கு சாத்தியப்படாது. மே 18க்கு முன்னும் மே 18க்கு பின்னும் அரசியல் தீர்வு விடயத்தில் நான் ஒரே முடிவிலேயே உள்ளேன்.’ என்று தேசம்நெற் க்கு வழங்கிய நேர்காணலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி தெரிவித்தார். ‘எங்களுக்காகக் (தமிழர்களுக்கு) குரல் கொடுத்து வந்தவர்களுக்கு ஆதரவளிக்கவில்லை. இப்ப எங்களுக்கு (தமிழர்களுக்கு) குரல்கொடுக்க யாரும் இல்லை’ என்றும் அவர் தெரிவித்தார்.
ஒக்ரோபர் 12ல் லண்டன் வந்துள்ள தவிகூ இன் தலைவர் வீ ஆனந்தசங்கரியை அரசியல் ஆர்வலர்கள் வி சிவலிங்கம், கவுன்சிலர் போல் சத்தியநேசன், எஸ் அரவிந்தன், எஸ் தயா, த ஜெயபாலன் ஆகியோர் நேற்று – ஒக்ரோபர் 13ல் சந்தித்தனர். தற்போதைய நிலவரங்கள் பற்றிய கலந்துரையாடலில் இலங்கை அரசின் தன்னிச்சையான போக்குகளை வீ ஆனந்தசங்கரி கடுமையாகக் கண்டித்தார்.
இச்சந்திப்பில் பல்வேறு விடயங்களும் உரையாடப்பட்டது. தற்போது யாழ் வந்துள்ள சிங்கள – தமிழ் குடும்பங்கள் பற்றித் தெரிவிக்கையில் அவர்களை திருப்பி அனுப்பும்படி கோருவது நியாயமற்றது எனத் தெரிவித்த வீ ஆனந்தசங்கரி இந்தக் காலகட்டத்தில் அவர்களை யாழ்ப்பாணம் கொண்டு வந்து கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க முற்படும் போக்கு எனக் கண்டித்தார்.
யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவு பற்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்துக் கேட்டதாகவும் அதற்கு பேராசிரியர் ரட்ன ஜீவன் ஃகூல் அவர்களே பொருத்தமானவர் என்ற கருத்தை தான் வெளியிட்டதாகவும் தெரிவித்த வீ ஆனந்தசங்கரி தகுதியும் நேர்மையும் சிறந்த அனுபவமும் கொண்ட பேராசிரியர் ஃகூலே அப்பதவிக்குப் பொருத்தமானவர் எனத் தெரிவித்தார்.
தற்போதைய நாடுகடந்த அரசாங்கத்தின் முதற் பிரதம மந்திரி பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், ‘இதுவொரு விசர்க்கூத்து’ என்று தெரிவித்தார்.
அண்மையில் லண்டனில் இலங்கையில் இருந்து சிலர் வந்து கலந்துகொண்ட கூட்டம் (தமிழர் தகவல் நடுவம் ஏற்பாடு செய்த கூட்டம்) ஒன்று நடந்தமை பற்றியும் விசாரித்துக் கொண்ட வீ ஆனந்தசங்கரி. பெரும்செலவில் நடத்தப்படும் இச்சந்திப்புக்களின் நோக்கம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
இச்சந்திப்பின் போது தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவான தமிழரங்கத்தை மேலும் பலப்படுத்துகின்ற நடவடிக்கைகளில் வீ ஆனந்தசங்கரி முக்கிய பாத்திரத்தை எடுக்க வேண்டுமென அவருக்கு வலியுறுத்தப்பட்டது. எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென அறிவித்த வீ ஆனந்தசங்கரி தமிழ் அரங்கத்தின் தலைமைக்குப் பொருத்தமானவர் என்றும் அவருடைய வயதும் நீண்ட அரசியல் அனுபவமும் தமிழ் அரங்கத்தை மேலும் பலமான அமைப்பாக உருவாக்க உதவவேண்டும் எனவும் வலியுறுத்திச் சொல்லப்பட்டது.
._._._._._.
தவிகூ தலைவர் வி ஆனந்தசங்கரி உடனான நேர்காணல்
தேசம்: மே 18க்கு முன்பிருந்த அரசியல் நிலையும் மே 18க்குப் பின்னான அரசியல் நிலையையும் எவ்வாறு மதிப்பிடுகின்றீர்கள்.
சங்கரி: பாரிய மாற்றம் இடம்பெற்றுள்ளது. அரசு பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகிறது. நான் முன்வைத்த இந்திய முறையிலான தீர்வு பற்றி பேசும் போது ஜனாதிபதி ‘இந்தியமுறை பற்றி எவ்வளவும் பேசுங்கோ ஆனால் சமஸ்டி பற்றி பேச வேண்டாம்’ என்றார். ஆனால் இப்ப அந்தக் கதையே இல்லை. 13 திருத்தம் பற்றிக் கதையே இல்லை. யுத்தம் முடிவடைந்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது குறிப்பிடப்படும் படியாக எதுவும் நடக்கவில்லை. எத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர்? மீள்குடியேற்றம் என்று என்ன செய்கிறார்கள்? வன்னியில் மீட்கப்பட்ட மக்களின் நகைகளுக்கு என்ன நடந்தது?
சிலர் விடுதலைப் புலிகள் பரவாயில்லை என்று சொல்கிற அளவிற்கு நிலைமை உள்ளது. அதனால் விடுதலைப் புலிகள் சரியென்பதல்ல. நிலைமை மோசமாக சென்று கொண்டுள்ளது.
தேசம்: தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாது போனால் தமிழ் மக்களுக்கு மோசமான ஒரு நிலையே ஏற்படும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எப்போதுமே கூறிவந்துள்ளனர். இன்றும் அத்துருப்புச் சீட்டையே அவர்கள் தங்கள் பிரதான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். அவ்வாறான ஒரு உணர்வையே நீங்கள் இப்போது வெளிப்படுத்துகிறீர்கள். அப்படியாயின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உங்கள் அரசியல் தவறானது என உணர்கிறீர்களா?
சங்கரி: அப்படியல்ல. நான் தான் இந்த நிலையேற்படும் என்பதை முன்கூட்டியே சொல்லி நேரத்துடனேயே சில விசயங்களை ஒத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னனான். நான் எப்படிக் குற்றவாளியாக முடியும். நான் சொன்னது தான் இப்ப நடக்கிறது. நான் வே பிரபாகரனுக்கு எழுதிய ஒரு கடிதத்தை படித்து அதன்படி செய்திருந்தாலே இதைத் தவிர்த்திருக்கலாம். ஒரு நாட்டுடன் ஒரு இயக்கம் போராடுகிறது என்றால் அது முழு உலகத்துடனும் தான் போராடுகிறது. அரசாங்கங்களுக்கு இடையே பல வேறுபாடுகள் இருந்தாலும் பயங்கரவாதம் என்றவுடனே எல்லாரும் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கிறார்கள். உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுடனும் பகையை ஏற்படுத்தியவர்கள் விடுதலைப் புலிகள். இப்படிச் செய்ய வேண்டாம் என்று நான் சொல்லி இருக்கிறன். அப்ப ஏன் என்னுடைய சொல்லைக் கேட்கவில்லை.
இப்ப சுகமாக வெளிநாட்டில் இருந்து கொண்டு நாடுகடந்த ஈழம் கடல்கடந்த ஈழம் என்று கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 40 000 மக்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். இன்னும் 40 000 மக்களை கொல்வதற்கா. இனி மக்கள் இவர்களை விடுவார்களா?
இந்த சர்வதேச அரசாங்கங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஏதாவது எச்சரிக்கை வழங்குகிறார்களா? இல்லையே.
பிரபாகரனுக்கு விழுந்ததே கடைச்சி சூடு அதற்குப் பிறகு இன்று வரைக்கும் துப்பாக்கிச் சூடு இடம்பெறவில்லை.
புலிகளோடு இருந்தவர்களே இப்போது அரசாங்கத்தோடு சேர்ந்துள்ளார்கள்.
தேசம்: இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் காலம் காலமாக ஆட்சிக்கு வந்த அரசுகள் பற்றி தமிழ் மக்கள் தெளிவாகவே உணர்ந்துள்ளனர். அதனால் தான் அவர்கள் தமிழ் அரசியல் தலைமைமைகளின் பின் நின்றனர். அதனால் இலங்கை அரசு மீது பழிபோட்டுவிட்டு தமிழ் அரசியல் தலைமைகள் தப்பித்துக் கொள்ளமுடியாது. தமிழ் அரசியல் தலைமைகள் தங்கள் அரசியலை வேறு ஏதாவது விதமாக கையாண்டு இருந்தால் இன்று ஏற்பட்டுள்ள நிலைமையில் மாற்றம் எற்பட்டு இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்களா?
சங்கரி: நிச்சயமாக தமிழ் அரசியல் தலைமைகள் தங்கள் அரசியலை வித்தியாசமாகக் கையாண்டு இருக்க முடியும். தமிழ் ஊடகங்கள் தமிழ் அரசியல் தலைமை என்று யாரை ஏற்கிறார்கள். அவர்கள் என்னை தமிழ் அரசியல் தலைவர் என்று ஏற்கிறதில்லை. காலம்காலமாக என்னைப் பற்றி விசமேற்றி உள்ளனர். ஆர் சம்பந்தன் மா வை சேனாதிராஜா சுரேஸ் பிரேமச்சந்திரன் செல்வம் அடைக்கலநாதன் இவர்கள் தான் தமிழ் தலைவர்கள். இதில் என்னைக் குற்றம் சொல்ல முடியாது.
அவர்கள் தேசியம், சுயநிர்ணயம் என்று இரண்டு கோசம் வைத்திருக்கிறார்கள். அதைவிட்டு எல்லோருடனும் பேசி ஒரு தீர்வுக்கு வர எப்போதாவது முன் வந்திரக்கிறார்களா? நான் கடந்த ஏழு வருடங்களாக இந்தியன் முறை என்ற ஒரு தீர்வை முன் வைத்து அதற்காக தனித்துப் போராடி வருகிறேன். இதற்கு மேலான ஒரு தீர்வு இலங்கையில் வர போவதில்லை. நான் ஜனாதிபதி எதிர்க்கட்சி மற்றைய கட்சிகளோடு பேசி வந்துள்ளேன். மே 18க்கு முன்னும் மே 18க்கு பின்னும் நான் இதையே வலியுறுத்தி வருகிறேன்.
ஆகக் கூடிய அளவு இந்தியா அழுத்தம் கொடுக்கக் கூடியது இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு. அதனையே நான் முன்வைத்துள்ளேன். அதற்கு மேல் அதிகாரப் பகிர்வை வழங்க இந்தியாவும் முன்வராது. நாங்கள் உலக நாடுகளுடனும் அயல்நாடான இந்தியாவுடன் அனுசரித்துமே எமது பிரச்சினைக்குத் தீர்வைப் பெறமுடியும். தேசியம் சுயநிர்ணயம் தமிழீழம் எங்களுக்கு சாத்தியப்படாது.
தேசம்: இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எவ்விதமான தீர்வையுமே வழங்கப்போவதில்லை என்பதனாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழக் கோரிகையை முன்வைத்தனர் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தமான வாதம். இலங்கை அரசு இந்தியன் முறை யிலான தீர்வையும் அங்கிகரிக்கப் போவதில்லை என்பதே அவர்களுடைய நிலைப்பாடாக உள்ளது.
சங்கரி: இலங்கை அரசு எதையுமே தராது என்பது புலிகளுடைய வாதம். இலங்கை அரசு எதையுமே தராது என்றவர்கள் தானே இந்த ரிஎன்ஏ. இந்த வருடம் ஜனவரி தினக்குரலில் ஆர் சம்பந்தன் தெரிவித்து இருப்பதைப் பாருங்கள். கல்முனை என்று நினைக்கிறேன், ‘‘இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளது. அப்படியான ஒரு தீர்வை நாங்கள் ஏற்கத் தயாராய் இருக்கிறோம்’’ என்று கூறி இருக்கிறார். ஆனால் இதனையே ஆனந்தசங்கரியும் கூறி வருகிறார் என்றதைச் சொல்ல ஆர் சம்பந்தன் தயாரில்லை. அதற்கு முன்னர் தினக்குரலில் முன்பக்கத் தலைப்பிலும் ரிஎன்ஏ இந்தியா மாநிலங்களுக்கு ஒப்பான தீர்வுக்கு தயாராய் இருப்பதாக வெளிவந்தது. அதில் ஜனாதிபதியும் இதனைத் தெரிவித்து இருந்ததாக ஆர் சம்பந்தன் கூறி இருந்தார்.
ஜனாதிபதி சொல்லி இருந்தார் என்றால் அப்போதே அதனையேன் ஏற்கவில்லை. ஏன் இப்பொது தான் உங்களுக்கு ஞானம் பிறந்ததா? நீங்கள் பெரும்தன்மையாக இருந்திருந்தால் தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையேற்பட வேண்டும் எண்ணி இருந்தால் ஆனந்தசங்கரியும் இதனையே சொல்லி வருகிறார் என்பதை குறிப்பிட்டு இருக்க வேண்டும். ஆனால் அதற்காகவே சங்கரி குரல் எழுப்பி வருவதை ஆர் சம்பந்தன் இருட்டடிப்புச் செய்தார். இதுதான் சம்பந்தர் தமிழ் மக்களுக்குச் செய்யும் அரசியல் சாணக்கியம்.
ஜனாதிபதித் தேர்தலில் இந்திய மாநிலமுறையை ஆதரித்த நீங்கள், பாராளுமன்றத் தேர்தலில் அதைப்பற்றிக் கதைகவே இல்லை. பாராளுமன்ற தேர்தல் காலத்தில் சம்பந்தர் எப்படி பிரச்சாரம் செய்கிறார். ‘ஆனந்தசங்கரியும் உதயசூரியனும் அரசாங்கத்தின் ஏவல் பேய்கள்’ என்கிறார். சங்கரி கேட்கின்ற இந்திய முறையைத் தான் நீங்களும் மீண்டும் தேர்தல் முடிந்த பின் கேட்கிறீர்கள். ஆனால் ‘சங்கரி அரசாங்கத்தின் ஆள்’ என்று பிரச்சாரம். இது சம்பந்தரின் சாணக்கியமா? அல்லது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற துரோகமா?
பாராளுமன்றத் தேர்தலுக்கு நான் இந்தியன் முறை என்பதை வைத்து போட்டியிடுகிறேன். ஆனால் சம்பந்தர் தேசியம், சுயநிர்ணயம் என்ற அடிப்படையில் போட்டியிடுகின்றார். ஆனால் தேர்தல் முடிந்ததும் இந்திய மாநில முறைக்கு ஆதரவாக பேசுகிறார்.
தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைக்கு ஏனைய கட்சிகளுடன் ஒன்றுபட்டு தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு தயாரில்லை.
தேசம்: நீங்கள் எவ்வாறான ஒரு குற்றச்சாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது வைத்திருந்த போதும் தமிழ் மக்களின் அரசியல் அங்கீகாரத்தைப் பெற்ற கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பே உள்ளனர். அதிகப்படியான ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட ஒரே தமிழ்க் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பே.
சங்கரி: தமிழ் மக்கள் விடுகின்ற பிழை என்னவென்றால் நீங்கள் சொன்ன கூற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அது உண்மையில்லை. ஜனாதிபதித் தேர்தலில் சரத்பொன்சேகாவை ஆதரிக்கும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரச்சாரம் செய்தது. இந்தியாவுக்கு டெல்லிக்குச் சென்றுவிட்டு வந்து தங்களுக்கு ஏதோ சமிஞ்சை கிடைத்துள்ளது. நீங்கள் பொன்சேகாவுக்கு வோட் போடுங்கள் என்று பிரச்சாரம் செய்தனர். சரத் பொன்சேகாவுக்கு யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் வாக்குகள் கிடைத்தது. தாங்கள் சொல்லித்தான் அந்த வோட் விழுந்ததாகவும் கூறினார்கள். அப்படி என்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி ஒரு லட்சத்து 13 ஆயிரம் வாக்குகளுடன் ஆரம்பித்தது. பாராளுமன்றத் தேர்தலில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தேசியத்தை ஆதரிக்கும் ஊடகங்கள் டிபிஎஸ் ஜெயராஜ் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கும்படி தெரிவித்தனர். ஆனால் என்ன நடந்தது. தமிழரசுக் கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) யாழ்ப்பாணத்தில் 65 ஆயிரம் வாக்குகளையே பெற்றனர். எனக்கு மட்டும் தான் விழவில்லை. பலரும் எனக்கு எதிராக மேற்கொண்ட சதிப் பிரச்சாரம் தான். டக்ளஸ் தேவானந்தாவின் கட்சிக்கு 45 ஆயிரம் வாக்குகள் விழுந்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியில் கேட்ட பெண் மணிக்கும் வாக்குகள் வீழ்ந்துள்ளது. ஆகவே 22 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இத்தேர்தல் பெரும் தோலிவியே.
தேசம்: நீங்கள் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக குரல்கொடுத்து வருகின்றீர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிராகவும் தற்போது அரசாங்கத்தினுடைய ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிராகவும் குரல்கொடுக்கின்றீர்கள். எவ்வாறானாலும் நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்ட நீங்கள் கடந்த தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு உள்ளீர்கள். உங்கள் உள்ளுணர்வு என்ன சொல்கின்றது.
சங்கரி: என்னுடைய உள்ளுணர்வு நான் ஏமாந்த மக்களால் நிராகரிக்கப்பட்டு உள்ளேன் என்கிறது. மக்கள் என்னை நிராகரிக்கவில்லை. ஏமாந்த மக்கள் என்னை நிராகரித்துள்ளனர்.
‘ஆனந்தசங்கரி அரசாங்கத்தின் ஆள்’ என்று பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனந்தசங்கரி என்ன மந்திரிப்பதவி எடுத்தேனா? மந்திரிப் பதவி எடுக்கின்ற தகுதி எனக்கில்லையா? ஜனாதிபதி ‘அடுத்த கவனர் பகுதி உங்களுக்குத் தான்’ என்று சொன்ன போது அது தமிழ் மக்களுக்கு எப்படி உதவும் என்று தான் நான் கேட்டனான். நான் எந்த நன்மையையும் அரசாங்கத்திடம் இருந்து பெறவில்லை. எனக்கு கிடைத்த பரிசுப் பணத்தை என்ன செய்தேன் என்று கேட்கிறார்கள். அதனை வைத்துத் தான் நான் கட்சி நடத்தினேன்.
நான் புலிகளுடைய போக்குக்கு எதிரானவன். நான் புலிகளை ஆரம்பத்தில் விமர்சிக்கவில்லை. யுத்த நிறுத்தம் கையெழுத்திட்ட பின் பிரபாகரனை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. வெண்ணை ‘திரண்டு வரும்போது தாளியை உடைக்க வேண்டாம்’ என்று நான் அதனைக் கண்டித்தனான். நான் பிரபாகரனுக்கு எழுதியது ‘இதை இதைச் செய்ய வேண்டாம் இதை இதைச் செய்யுங்கோ என்று.’ என்ன நடந்தது?
இந்த ரிஎன்ஏ க்கு கிடைத்த 22 ஆசனங்களும் பிரபாகரன் போட்ட பிச்சை. ‘அந்தத் தலைவர் நல்லாக இருந்தவர். எங்களுக்கு பாராளுமன்ற ஆசனம் பெற்றுத் தந்தவர்’ என்று ஒருநாள் அந்தாளுக்கு அஞ்சலி செலுத்தினார்களா? இல்லை. அடுத்த நாளே தாங்கள் சமஸ்டிக்கு ரெடி என்றார்கள். இதனை சுடரொளியில் வித்தியாதரன் சுட்டிக்காட்டி இருந்தார். ‘ஆனந்தசங்கரி பிரபாகரன் இருக்கும் போதும் சரி இல்லையென்று ஆனபோதும் சரி தனது இந்தியன் முறையில் உறுதியாக உள்ளார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரபாகரன் இல்லையென்று ஆனபோது தங்கள் நிலைப்பாட்டை மாற்றி விட்டது’ என்று அவர் தனது ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்.
தேசம்: மந்திரி பதவி கவனர் பதவி என்பவற்றை நீங்கள் எடுக்கவில்லை என்று கூறி இருந்தீர்கள். இப்போது அவ்வாறான ஒரு பதவியை நீங்கள் பெற்றிருந்தால் தமிழ் மக்களுக்கு பயனுள்ள வகையில் ஏதாவது செய்திருக்கலாம் என நினைக்கிறீர்களா?
சங்கரி: நான் அப்பதவிகைள் எடுக்காமைக்காக சந்தோசப்படுகிறேன். பதவி எடுத்திருந்தால் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு நானும் பொறுப்பாகி இருப்பேன்.
தேசம்: நீங்கள் பதவியை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் வன்னி மக்களின் அபிவிருத்திக்கான பொறுப்பை உங்களிடம் தர வேண்டும் என்ற கோரிக்கையை நீங்கள் அரசாங்கத்திடம் வைத்திருந்தீர்கள் அல்லவா?
சங்கரி: அது வேறு. இது வேறு. வன்னி மக்களின் அபிவிருத்தியில் தெற்கில் இருந்து முடிவு எடுப்பவர்களுக்கு அப்பகுதியின் சூழல் தெரியாது. ஜனாதிபதி ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச சில விடயங்களை முன்னெடுக்கிறார். ஆனால் அவருக்கு அந்தப் பிரதேசத்துடன் எவ்வித அனுபவமும் இல்லை. அதனால் அப்பிரதேசத்தில் 1959ல் இருந்து வாழ்ந்தவன் நான். அப்பகுதி பற்றி நன்கு அறிந்தவன்.
தேசம்: நீங்கள் சொல்வது சரி. அதனைச் செய்வதற்கு அப்பொறுப்பு அப்பதவி உங்களுக்கு அவசியமல்லவா?
சங்கரி: பொறுப்போ பதவியோ வேண்டாம். சம்பளமும் வேண்டாம். அப்பகுதி பற்றிய அறிவும் அனுபவமுடைய என்னை ஆலோசகராக நியமிக்கவே கேட்டேன். வடபகுதி அபிவிருத்திக்கென 19 பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறார்கள். அதில் ஒரு முஸலீம் 18 சிங்களவர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் எத்தனை பேருக்கு கிளிநொச்சி தெரியும். அதனால் அபிவிருத்தித் திட்டங்களும் அதில் பயன்படுத்தப்படும் நிதியும் மக்களுக்கு முழுமையான பயனைத் தரவில்லை.
உதாரணமாக இரணைமடு குளம் 25 000 – 30 000 ஏக்கருக்கு தண்ணீர் கொடுக்கிறது. யாழ்பாணத்தில் தண்ணீர் இல்லாத இடம்என்று எங்காவது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? ஓரிரு கிராமங்கள் இருந்தால் தண்ணீர் பவுசரில் கொண்டு செல்லலாம். 60 கோடி செலவில் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் குடி தண்ணீர் கொண்டு வரப் போகின்றார்களாம். யாருடைய ஆலோசனை?
டிஎல்ஓ மென்டிஸ் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் இருந்தவர். அவர் முன்னர் கூறி இருந்தார் ‘யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஆறு உருவாக்க வேண்டும் என்று பொறியியலாளர் ஆறுமுகம் விரும்பி இருந்தார்’ என்று. அவருடைய திட்டம் தொண்டைமான் ஆற்றைப் மறித்து, மழைத் தண்ணீர் எல்லாம் தொண்டைமான் ஆற்றூடாகவே கடலைச் சென்றடைகிறது. மற்றறையது நாவற்குழியால் கடலைச் சென்றடைகிறது. இன்னொன்று சுண்டுக்குளத்தால் கடலைச் சென்றடைகிறது. வேறு வழியில் தண்ணீர் சென்றடைவதற்கு இடமில்லை. அப்ப இரணைமடுக் குளம் நிறைந்தால் அதன் தண்ணீரை ஆணையிறவு ஊடாக அனுப்பினால் அதனைத் தொண்டைமான் அறுவரை அனுப்பலாம். யாழ்;ப்பாணத் தீபகற்பத்தில் உள்ள உப்புத் தறையின் உவர்த் தன்மை படிப்படியாக குறையும். ஐந்தாறு வருடங்களில் அப்பகுதிகளில் உள்ள உவர்த்தன்மை படிப்படியாக இல்லாமல் போகும். அப்பகுதிக் கிணறுகளில் நன்னீர் கிடைக்கும் அப்பகுதிகளில் விவசாயம் செழிக்கும்.
அப்படி இருக்கையில் 60 கோடியில் பைப் தண்ணி எதற்கு. என்னுடைய குற்றச்சாட்டு என்னவென்றால் அப்பிரதேச மக்களுடைய அறிவை அரசாங்கம் பயன்படுத்தவில்லை. அரசாங்கம் எல்லாவற்றையும் வியாபார நோக்கில் பார்க்கக் கூடாது.
தேசம்: இன்றுள்ள இந்த நெருக்கடியான சூழலை தமிழ் அரசியல் தலைமைகள் எவ்வாறு கையாள முடியும் என நினைக்கிறீர்கள்?
சங்கரி: இந்த அரசினுடைய போக்கு மிகப் பிழையென எல்லோருக்கும் தெரிகிறது. அரசாங்கம் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கின்றது. அதனால் நாங்கள் குழம்பவில்லை என்று நாங்கள் காட்ட வேண்டும். நான் மந்திரியில்லை. நான் கவனர் இல்லை. நாங்கள் எல்லோரும் சமன் என்று உணர வேண்டும். எங்களுக்கு முக்கியமான பிரச்சினை ஒன்று இருக்கிறது. அதனைத் தீர்த்து வைக்க வேண்டும். இப்போது குடியேற்றம் செய்யப்படாது. அதனைச் செய்ய வேண்டிய காலத்தில் பார்க்கலாம். தங்கட காணி பூமியை விட்டுவிட்டு போனவர்கள் திரும்பி வரவேண்டும். அந்தக் காணிகளில் இப்ப கை வைக்கக்கூடாது. இப்ப காணி இல்லாதவர்களுக்கு எப்படி உறுதிகொடுக்க முடியும்?
தேசம்: தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் காணி அற்ற பலருக்கும் காணிகளைப் பிரித்து வழங்கி இருந்தார்கள். அந்நிலத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்த அந்த மக்களிடம் தங்கள் நிலத்திற்கான சட்டப்படியான உரிமம் இல்லை. அவ்வாறானவர்களுக்கு உறுதி வழங்குவதில் என்ன தவறு?
சங்கரி: விடுதலைப் புலிகள் காணி இல்லாதவர்களுக்கு காணி கொடுத்தது ஒரு பக்கம். காணி நிலத்துடன் இருந்தவர்களை அவற்றைப் பறித்துக் கொண்டு விரட்டியும் உள்ளனர். அந்தக் காணிகளுக்கான உறுதியை இன்னொருவருக்கு வழங்கினால் பிரச்சினை மேலும் மோசமாகும் எல்லா.
நான் உறுதி கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. இப்ப அதற்கு அவசரம் இல்லை என்றுதான் சொல்கிறேன்.
தேசம்: இந்த உறுதிகள் தமிழர்களுக்கு வழங்கப்படுகிறதா? அல்லது தமிழர்கள் அல்லாதவர்களுக்கு வழங்கப்படுகிறதா?
சங்கரி: வேறு யாருக்காவது கொடுக்கிறது என்றால் இன்னம் மோசம் எல்லோ. எங்கள் காணி நிலம் பறிபோவது போல் எல்லோ.
முதலில் ஒரு குறிப்பிட்ட திகதிக்கு முன் எல்லோரையும் தங்கள் தங்கள் காணிகளில் இருக்கச் சொல்ல வேண்டும். அதன் பிறகு உறவுகள் சொந்தங்களின் காணிகள் இருந்தால் அதனையும் கிராமசேவகர் அரசாங்க அதிபர் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். காணிகளின் சொந்தக்காரர்களை உறுதிப்படுத்திய பின்னுள்ள அரச காணிகளை காணி அற்றவர்களை அழைத்து அவற்றை பகிர்ந்து உறுதி கொடுக்க முடியும். அதற்கு எவ்வளவு காலம் இருக்கு. சனங்கள் இன்னும் தங்கள் இடங்களுக்குப் போய் குடியிருக்கவே இல்லையே.
தேசம்: மே 18 2009ற்குப் பின் வடபகுதியில் எங்காவது குடியேற்றம் நடந்துள்ளதா?
சங்கரி: நான் அறிய இல்லை. ஆனால் இராணுவத்திற்காக மிக வேகமாக வீடுகள் கட்டப்படுகின்றது. அது குடியேற்றமாக அமையும் என்றே நம்புகிறேன். 15 000 வீடுகள் அமைக்கும் திட்டம் இருக்கிறது. இலங்கையின் தென்பகுதிகளுக்கும் நான் பயணம் செய்திருக்கிறேன். அங்கெல்லாம் நிறையக் காணிகள் உள்ளது. இப்ப எதற்காக வடக்கு கிழக்கில் குடியேற்ற அவசரப்பட வேண்டும்.
தேசம்: இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் தமிழ் மக்கள் இலங்கை அரசுடன் சாத்வீகமான முறையில் போராட்டங்களை நடாத்தி தாங்கள் இழந்த உரிமைகளைப் பெற முற்பட்டனர். பின்னர் ஆயுத வன்முறையிலும் இறங்கினர். ஆனால் இரண்டுமே தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது. இனிமேல் தமிழ் மக்கள் தமிழ் தலைமைகள் என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?
சங்கரி: தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றாக நின்று செயற்பட வேண்டும். அதற்கு சில விட்டுக்கொடுப்புகள் செய்யப்பட்டே ஆக வேண்டும். நாட்டைப் பிரிக்கச் சொல்லி கேட்கமாட்டம். ஆனால் குடியேற்றத்தை நிறுத்தச் சொல்லலாம். எனக்கு சிங்களவர்களும் முஸ்லிம்களும் பக்கத்தில் இருப்பது விருப்பம். ஆனால் அதனை அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திச் செய்யக் கூடாது. நாங்கள் துவசம் பேசவில்லை.
தேசம்: தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றாக வரவேண்டும் என்று சொல்கிறீர்கள். நீங்கள் தமிழ் அரங்கத்தில் உங்களை இணைத்துக் கொண்டதன் மூலம் அந்த ஒற்றுமையை நோக்கி ஒருபடி முன் நகர்ந்து இருக்கிறீர்கள். இந்த தமிழ் அரங்கத்தின் எதிர்காலம் எப்படி அமையும் என நினைக்கிறீர்கள்?
சங்கரி: தமிழ் அரங்கத்தை நான் துவங்கியிருப்பன் ஆனால் தேர்தலுக்காக என்றெல்லாம் சொல்வார்கள் என்பதால் நான் துவங்கவில்லை. ஆனால் இனி எனக்கு தேர்தலில் நிற்கும் எண்ணம் இல்லை. ஒரு தரும் துவங்கவில்லை. டக்ளஸ் துவங்கினார். டக்ளஸ் துவங்கினார் என்பதற்காக நான் விட்டுவிட்டு ஓட இயலாது. டக்ளஸ் ஒரு நல்ல வேலையைச் செய்யும் போது நான் சென்றேன். ரெலிபோனில் அழைத்து அண்ணை வாங்கோ என்றார் நான் போனேன். ஒன்பது கட்சிகளைச் சேர்ந்த 15 பேர் இருந்தார்கள்.
முதல் நாளே நான் சொன்னான் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்றால் ஒரு சமயம் நீங்கள் எல்லோரும் சம்மதிப்பியல். ஆனால் பிரச்சினை எனக்கும் டக்ளஸ்க்கும் ஆகத்தான் இருக்கும். அவரும் ஒரு நிலைப்பாட்டை வைத்திருக்கிறார். நான் ஒரு நிலைப்பாட்டை வைத்திருக்கிறேன். நாங்களும் கூட விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். அப்பதான் நாங்கள் எல்லோரும் சேர்ந்து இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியும். அதற்கு எத்தனையோ தடைகளை டக்ளஸ் பாய வேண்டி இருக்கும். அப்ப டக்ளஸ் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனான். ‘அப்படி ஒருநிலை வந்தால் தான் உங்களுடன் நிற்பேன்’ என்றார். அந்த உத்தரவாதத்தோடு நான் இருக்கிறேன்.
சம்பந்தர் தேர்தலுக்குப் பிறகு சொல்லி இருக்கிறார் ‘எல்லோரும் வாருங்கள்! நடந்ததை மறப்பம்!’ என்று. பிறகு அழைப்பு வரவில்லை அப்படியெல்லாம் சொன்னார்கள். ரிஎன்ஏ சரவணபவன் தாங்கள் தேசியத்துக்கா நிற்கிறம் என்றெல்லாம் சொன்னார். அதுக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றெல்லாம் பார்த்துவிட்டுத்தான் நாங்கள் வருவம் என்றார்.
தேசம்: தமிழ் அரங்கம் உங்களுக்கு எவ்வளவு நம்பிக்கையானதாக உள்ளது.
சங்கரி: இக்கட்டான ஒரு பிரச்சினை வருகின்ற போது அரசாங்கத்துடன் நிற்கும் கட்சிகளுக்கு சற்று கடினமாக இருக்கும். அதையும் மீறி துணிந்து ஒரு நிலைப்பாட்டை எடுக்கக் கூடியவகையில் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு 5000 பேரை வடக்கில் குடியேற் முடிவெடுத்தால் தமிழ் அரங்கம் அதற்கு எதிராக இயங்க வேண்டி இருக்கும். அப்போது டக்ளஸ், பிள்ளையான் போன்றவர்கள் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன்.
தேசம்: இதுவரை தமிழ் அரங்கத்தில் உறுதியான முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கிறதா?
சங்கரி: இதுவரை நான்கு கூட்டங்கள் நடந்தும் உறுதியான முடிவுகள் பற்றி பேசாததற்குக் காரணம் ரிஎன்ஏ வந்த சேராதது. இனி அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டி வந்தாலும் வரலாம்.
தேசம்: தமிழ் அரங்கம் என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பு இல்லாத ஒரு அரங்கமாகத் தான் இருக்கப் போகின்றது?
சங்கரி: அது அவர்களுக்கு அரசாங்கத்துடன் நிற்பவர்கள் என்று எங்களைப் பற்றி பொய் பிரச்சாரங்கள் செய்வதற்கு வசதியாக அமைந்துள்ளது.
தேசம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் அரங்கத்தில் இணைவதற்கான வாய்ப்பு….
சங்கரி: இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். அவர்கள் வர வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்குக் கஸ்டம். மக்களை கனகாலத்திற்கு ஏமாற்ற முடியாது.
தேசம்: தமிழ் அரங்கத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் இருப்பதால் தான் அவர்களுடன் தங்களை அடையாளப்படுத்த முடியவில்லை என ததேகூ இன் யாழ் எம்பி சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறி இருக்கிறார்?
சங்கரி: அப்ப யாரை அடையாளப்படுத்தி எல்லோரும் வாருங்கள் ஒன்றுசேருவோம் என்று சம்பந்தர் கேட்டவர்.
தேசம்: வடமாகாண சபைக்கான தேர்தல் ஒன்று வந்தால் தமிழ் அரங்கத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
சங்கரி: இப்ப இந்த தேர்தலுக்காகத்தான் இவர்கள் கூட்டுச் சேர்ந்தார்கள் என்ற கதையள் மறைமுகமாக வந்து இருக்கிறது. இதைப் பற்றி இன்னமும் இதுவரை பேசப்படவில்லை. நிச்சயமாக நான் கேட்கமாட்டேன்.
தேசம்: தமிழ் அரங்கத்தில் உள்ள எல்லோரும் இணைந்து ஒரே வேட்பாளர் பட்டியலை வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளதா?
சங்கரி: ஒரே குழுவாகத்தான் கேட்க வேண்டும். அப்படி இல்லை என்று யாராவது தனித்து வெளியே சென்று கேட்க முற்பட்டால் அவர்கள் பாடம் படிப்பார்கள். இந்த தமிழ் அரங்கத்தின் உருவாக்கத்திற்குப் பிறகு நான் எனக்கு மாறானவர்களையும் சந்தித்து இருக்கிறன். அவர்கள் இதை நல்ல முடிவு என்று தான் வரவேற்கிறார்கள். டக்ளஸ் க்கும் 3 ஆசனங்கள் கிடைத்திருக்கே. இப்ப யாரும் கள்ள வோட் என்று குற்றம்சாட்ட முடியாதே.
தேசம்: நீங்கள் ஒரு மூத்த அரசியல்வாதி, நீண்ட கால அரசியல் வரலாறு உண்டு என்று தமிழ் அரங்கம் முதலமைச்சருக்கான வேட்பாளராக உங்களை நியமிக்க முன்வந்தால் நீங்கள் அதனை ஏற்பீர்களா?
சங்கரி: அதைப்பற்றி இப்ப நான் ஒன்றும் சொல்ல முடியாது. இப்ப என்னுடைய நிலைப்பாடு இவற்றில் தலையிடுவதில்லை என்பதே.
தேசம்: அப்படியானால் நீங்கள் தமிழ் அரங்கத்தின் முடிவோடு தான் செயற்படுவீர்களா?
சங்கரி: தமிழ் அரங்கத்தில் பிளவுகள் வராதவரை நான் தமிழ் அரங்கத்தின் முடிவுடனேயே செயற்படுவேன். பிளவை ஏற்படுத்துவதற்கு நான் காரணமாக மாட்டேன்.
தேசம்: இதனை தமிழ் அரங்கம் பற்றி நம்பிக்கை உருவாகி உள்ளது என்று எடுக்கலாமா?
சங்கரி: ஓம்.
தேசம்: 1981 முதல் வட மாகாணத்தில் சனத்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. தற்போது வடமாகாணத்தில் முன்னைய மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்கினரே வாழ்கின்றனர். 2011ல் வடமாகாணத்தின் சனத்தொகையும் கணக்கிடப்பட உள்ளது. இது வடமாகாண தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் அல்லவா?
சங்கரி: நிச்சயமாகப் பாதிக்கும். ஆறு மாதங்களுக்கு மேலாக நீங்கள் குறிப்பிட்ட தொகுதியில் இல்லாவிட்டால் உங்களுக்கு அங்கு வாக்களிக்கும் உரிமை இருக்காது. இதனை அன்றே உணர்ந்து தான் நான் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கத்துக்கு இதனைச் சுட்டிக்காட்டி 1983 வாக்காளர் பதிவைப் பயன்படுத்தும்படி அன்றைய ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனாவிடம் கேட்டு அதனையே பயன்படுத்தச் செய்தோம்.
இன்றுவரை அந்த வாக்காளர் பதிவை வைத்து புதிய வாக்காளர்களையும் சேர்த்துக் கொண்டு வருகிறார்கள். மரணித்தவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் யாருடைய பதிவும் நீக்கப்படவில்லை. எனது அண்ணரின் பதிவு கிளிநொச்சியில் இருந்தது. அவர் இறந்து 10 வருடங்கள் ஆகியும் அப்பதிவு இன்னமும் நீக்கப்படவில்லை. 700 000 வாக்காளர் இருக்கின்றார்கள் என்பது இந்த அடிப்படையிலேயே.
தேசம்: சனத்தொகைக் கணக்கெடுப்பின் பின் என்ன நடக்கும்?
சங்கரி: அதில் ஒரு பெரும் ஆபத்து உள்ளது. நாங்கள் உறவோடு இருந்திருந்தால் அப்போது கேட்டது போன்று செய்திருக்கலாம். அப்போது அந்த உறவு இருந்தது. இப்போது கடினம். ஆனால் மக்கள் தொகைக்கு ஏற்ப ஆசனங்களைக் குறைக்க வேண்டாம் என்று கேட்கப் போகின்றோம்.
தேசம்: அப்படியானால் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை தொடர்ந்தும் இதே எண்ணிக்கையில் பேணுவதற்கான சட்டப் பாதுகாப்பு இல்லை.
சங்கரி: சட்டப் பாதுகாப்பில்லை. சட்டப்படி பார்த்தால் பிரதிநிதித்துவம் குறைய வேண்டும். அதனால் தான் நான் தொகுதிகளை மாற்ற வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன்.
தேசம்: இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு இருந்தது. நீங்களும் இந்திய முறையிலான தீர்வையே முன்வைத்தம் இருக்கிறீர்கள். மேலும் இந்தியா 1987ல் இலங்கையுடன் ஒரு ஒப்பந்தத்தையும் செய்துகொண்டது. இன்று இந்தியாவின் நிலைப்பாடு எப்படி உள்ளது?
சங்கரி: இந்தியா நேரடியாக எதிலும் தலையிடாது. நாங்கள் தான் முடிவுக்கு வரவேண்டும். என்னுடைய இந்திய முறையிலான தீர்வை ஏற்றுக்கொண்டால், தமிழநாடு மூலமாக அவர்கள் இதனைக் கையாள்வார்கள். மற்றும்படி நேரடியாக அவர்கள் தலையிட மாட்டார்கள்.
தேசம்: தமிழ் அரங்கம் உங்கள் இந்திய முறையிலான தீர்வுடன் முரண்பட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
சங்கரி: முரண்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. நான் மற்றையவர்களிலும் பார்க்க கூடுதலாகவே கேட்கிறேன்.
தேசம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முரண்பட முடியாது?
சங்கரி: இனி முரண்பட முடியாது. ஏன் என்றால் ஏற்கனவே இந்திய முறையிலான தீர்வை ஏற்கத் தயார் என்று கூறிவிட்டார்கள்.
தேசம்: அப்படி என்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகள் எல்லாம் ஒன்றாக இக்கோரிக்கையை வைப்பதில் என்ன தடை உள்ளது.
சங்கரி: இதில் என்ன தடை என்றால் சிலருக்குள்ள தலைமை ஆசை. சம்பந்தர் கிழவனாகி விட்டார். நான் தான் அடுத்த தலைவர் என்று சுரேஸ் பிரேமச்சந்திரனின் எதிர்பார்ப்பு. நான் தானே கட்சியைத் துவங்கினனான் என்று மாவையின் எதிர்பார்ப்பு. சம்பந்தர் எதற்காக என்னை விட்டுச் சென்றவர். சம்பந்தன் சொன்னவர், ‘நானும் உன்னைப் போலத்தான் ஏகபிரதிநிதித்துவத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. நீ அதனை வெளிப்படையாயச் சொல்கிறாய். நான் அப்படிச் சொல்லேல்லை’ என்று. இப்ப இதைக் கதைப்பது சரியல்ல.
தேசம்: 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம் முதல் இன்று வரையான அரசியல் போக்கு மிகப்பெரும் அழிவை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. வட்டுக்கொட்டைத் தீர்மானம் – தமிழீழக் கோரிக்கை மிகத் தவறான முடிவு என்பதை நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன் தேசம் சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்து இருந்தீர்கள்.
சங்கரி: தமிழீழக் கோரிக்கை என்றது மிகத்தவறான ஒரு அரசியல் முடிவு. ஜி ஜி பொன்னம்பலம் என்னுடைய அப்பாவின் நெருங்கிய நண்பர். என்னுடன் வாடா போடா என்று தான் கதைப்பார். எனக்கும் அவருக்கும் மிக நெருக்கம். வட்டுக்கோட்டைத் தீர்மானம் எடுத்தவுடன் மாநாடு முடிந்ததும் ஜி ஜி பொன்னம்பலத்திற்கு போய்ச் சொல்ல ‘என்னடா செய்து போட்டு வாறியல். இரத்த ஆறு ஓடப்போகுதடா’ என்றார். ஜீ ஜீ அவர்கள் 1976ம் ஆண்டு கூட்டத்திற்கு வரவில்லை. அவர் கருணாநிதியின் வழக்கை முடித்துக்கொண்டு மலேசியா சென்றிருந்தார். அவரையே கூட்டணியின் தலைவராகப் போட்டோம். அவர் வரும் போது பெரு வரவேற்பு அளிப்பதாகவே இருந்தது. ஆனால் அவர் உயிரற்ற உடலாகவே நாடுக்குத் திரும்பினார்.
தேசம்: உங்கள் அரசியல் வாழ்வின் ஆரம்பம் பற்றி சிலவற்றை பகிர்ந்துகொள்ளுங்கள்…..
சங்கரி: நான் பிறந்தது பருத்தித்துறை. வளர்ந்தது அச்சுவேலி. சமசமாஜக் கட்சியுடன் கொழும்புக்கு வந்துவிட்டேன். 1959 முனிசிபல் கவுன்சில் எலெக்சனில் என்னையும் நொமிநேற் பண்ணினார்கள். பிறகு சமசமாஜக் கட்சியின் யாழ்ப்பாணக் கிளை என்னை கிளிநொச்சித் தொகுதி வேட்பாளராகப் போடும்படி கேட்டது. அப்ப கட்சி என்னை கிளிநொச்சியில் நிறுத்த முடிவெடுத்தது. வேட்புமனுவை இறுதி நேரத்தில் தாக்கல் செய்தேன். அப்ப எனக்கு 24 வயது. அதற்குப் பிறகு வீட்டுக்குச் சென்றால் அம்மாவிடம் பேச்சு. தேர்தலில் நிற்க ஆசை என்றால் பருத்தித்துறையில் கோப்பாயில் நின்றிருக்கலாம் என்று அம்மா அடிக்காத குறை. பருத்தித்துறை என்றால் சின்ன இடம். பலரையும் தெரியும். வீரசிங்கம் என்ற அப்பாவி பெயருக்கே வோட்டு வந்திருக்கும். அப்ப கோப்பாயில் அப்பா கிங் மேக்கர். என்னுடைய மாமா பாலசிங்கம் தமிழரசுக் கட்சியில் நன்றார்.
கிளிநொச்சிக்கு சென்றால் யாரும் கிட்ட வருகிறார்கள் இல்லை. இருந்தாலும் சிறிது நாட்களுக்கு உள்ளாகவே ஓரளவு ஆதரவைத் திரட்டினோம். 1960 மார்ச் தேர்தலில் 2500 வாக்குகள் பெற்றேன். ஆயிரம் வாக்குகளால் தோல்வி அடைய வேண்டி வந்தது. ஒரு வாக்கால் கட்டுப்பணத்தையும் இழந்தேன். எட்டுப்பேர் கேட்டத்தில் வாக்குகள் பிளவுண்டது. பிறகு 1964ல் விலேஜ் கவுன்சிலில் செயர்மனாக வந்தன். 1960ற்கு பிறகு கிளிநொச்சியும் கொழும்பும் தான் யாழ்ப்பாணம் விட்டாச்சுது. தமிழரசுக் கட்சியின் கோட்டையான கிளிநொச்சித் தொகுதியில் 1970ல் தமிழ் காங்கிரஸில் நின்று வெற்றி பெற்றேன்.
தேசம்: உங்களுடைய அரசியல் அனுபவம்:
சங்கரி: என்னுடைய அரசியல் வாழ்க்கை இடதுசாரிக் கட்சியில் தான் துவங்கியது. நாங்கள் பெரியதொரு பிழைவிட்ட நாங்கள். அதே பிழையை இப்போதும் விடுறம். எங்களுடைய முதலாவது பிரதம மந்திரியாக வந்திருக்க வேண்டியவரே இடதுசாரியாகிய என் எம் பெரேரா தான். யுஎன்பி டி எஸ் செனநாயக்காவுக்கு பெரும்பான்மை இல்லை. அனைத்து தமிழ் கட்சிகளும் இடதுசாரிகளும் இணைந்திருந்தால் இடதுசாரி ஆட்சி அமைந்திருக்கும். அது கை கூடவில்லை. பிரஜாவுரிமைச்சட்டம் வரும்போது அதற்கு எதிராக வாக்களித்து சமசமாஜக்கட்சி தனது விசுவாசத்தை வெளிப்படுத்தி இருந்தது. அப்போது என்றாலும் இந்த தமிழ் சாதிக்கு அறிவு வந்திருக்க வேணும்.
1956ல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது அதனை எதிர்த்து தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்து கோரியவர் என் எம் பெரேரா. முதல் முதல் ஆயுத வன்முறை பயன்படுத்தப்பட்டது என் எம் பெரேராவிற்கு எதிராகவே. கொழும்பு நகரசபை மண்டபத்தில் அவருக்கு கைக்குண்டு வீசப்பட்டது. ஆனால் இடதுசாரிகள் இணைந்து நின்றும் தமிழ் கட்சிகள் அவற்றுக்கு ஆதரவளிக்கவில்லை. ஆட்சிக்கு வந்த எஸ் டபிள்யு ஆர் டி பண்டாரநாயக்கா தனிச்சிங்களச் சட்டத்தை அமுல்படுத்தினார். தமிழரசுக்கட்சி காலிமுகத்திடலில் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போதும் என்எம் பெரேராவுக்கு எதிராக பெரும் கோசங்கள் வைக்கப்பட்டது. அப்படி இருந்தும் என் எம் பெரேரா அங்கு வந்து உரையாற்றினார்.
அதற்குப் பின் 1960 அம் ஆண்டுத் தேர்தல். அதில் நானும் சமசமாஜக் கட்சியில் தேர்தலில் நின்றனான். அப்ப அ அமிர்தலிங்கம் வந்து என்ன பேசினவர். ‘அவனும் சிங்களவன். இவனும் சிங்களவன்;.’ இந்த வாய்க்கொழுப்பு தான் எங்கள் இனத்தின் கேடு. அப்போதாவது இடதுசாரிக்கு கட்சிகளுடன் தோழமை கொள்ளவில்லை. ஒரு ஆசனம் கூட வெல்லப்படவில்லை. தமிழர்களுக்கு குரல்கொடுத்ததாலேயே அழிந்த கட்சி அது. 1960இல் இலங்கையில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஆட்களைப் போட்டனர். ஒரு சீற்றும் வெல்லவில்லை. அப்படி இருந்தும் சம அந்தஸ்து கொள்கையை அவர்கள் விடவில்லை.
1965இலும் அவர்கள் தோல்வியையே தழுவினர். அப்போது தான் நானும் சமசமாஜக் கட்சியில் இருந்த நான் வெளியேறினேன். நான் பின்னர் மன்னிப்புக் கேட்டனான். உங்களுக்கு தந்த இன்ரவியூவிலும் அந்தத் தவறை ஏற்றுக்கொண்டனான். அந்த நேரம் இடதுசாரிக் கட்சிகள் எவ்வளவோ தியாகத்தைச் செய்தும் நாங்கள் அதற்கு மதிப்புக் கொடுக்கவில்லை. ‘நாங்கள் தமிழர்களுக்காகக் கதைத்து தோற்றுப்போகிறோம். தமிழர்கள் வெற்றி பெற்று யுஎன்பி உடன் போகிறார்கள்’ என்ற எண்ணம் சிங்கள இடதுசாரிகள் மத்தியில் எழுந்தது. இடதுசாரிகளில் சிலரையாவது நாங்கள் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பி இருந்தால் இவ்வளவு மோசமானநிலை வந்திருக்காது.
அப்போது நடந்த மே தின ஊர்வலத்தில் ‘அப்பிட்ட எப்பா மசாலாவடே. அப்பிட எப்பா கடல வடே’ என்று சில பேர் கோசம் போட்டுக் கொண்டு போனதைத் தொடர்ந்து நாங்கள் சிலபேர் கட்சியில் இருந்து விலகிவிட்டோம். அதை நாங்கள் ஒரு பெரிய குற்றமாக எடுத்திருக்கக் கூடாது. அதனை என் எம் பெரேரா சொல்லவில்லை. அங்கிருந்த யாரோ ஒரு சிலர் கோசம் போட்டதே. அது நான் விட்ட பெரிய தவறு. 1970க்களில் சமசமாஜக் கட்சிக்கு 18 சீட்டுக்கள் இருந்தது. கொம்யூனிஸ்ற் கட்சியையும் சேர்த்தால் 22 – 23 சீட் இருந்தது. இப்ப சமசமாஜக் கட்சி ஒன்று, கொம்யூனிஸ்ற் கட்சி ஒன்று. இது தான் நாங்கள் விட்ட பிழை. எங்களுக்காகக் குரல் கொடுத்து வந்தவர்களுக்கு ஆதரவளிக்கவில்லை. இப்ப எங்களுக்கு குரல்கொடுக்க யாரும் இல்லை.
(செப்ரம்பர் மாதம் லண்டன் வந்திருந்த போது வீ அனந்தசங்கரி தேசம்நெற் க்கு இந்நேர்காணலை வழங்கி இருந்தார். இந்நேர்காணல் செப்ரம்பர் 5ல் பதிவு செய்யப்பட்டது.)