பொரு ளாதார அபிவிருத்திக்கான இலக்கை வெற்றிகொள்வதற்கு மக்களின் சேவகர்களாக அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் மாறுவதுடன் அதற்கான சிந்தனை மாற்றம் அவர்களிடம் பிறக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சமூக ரீதியான மாற்றமொன்றிற்காக சகல தரப்பினரதும் அர்ப்பணிப்பு அவசிய மெனத் தெரிவித்த ஜனாதிபதி; ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அது உறுதுணையாகும் எனவும் குறிப்பிட்டார்.
பொருளாதார அபிவிருத்தியுடன் உயர் பண்புள்ள சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு மக்களிடையே சிறந்த மனப்பான்மையை விருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் புதிய வேலைத் திட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தியுடன் சமூக அபிவிருத்தியையும் கட்டியெழுப்புவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :- பிரதமர் டி. எம். ஜயரட்ன பிரதமர் செயலகத்தினூடாக ஆரம்பித்துள்ள சிந்தனை மாற்றத்திற்கான இவ்வேலைத் திட்டத்தை பாராட்டுவதுடன் நாடளாவிய ரீதியில் இதனை முன்னெடுத்துச் செல்வதற்கான தலைமைத்துவத்தையும் அவரே வழங்குவதும் சிறப்பம்சமாகும்.
கொழும்பு நகரில் குப்பை கூளங்களை அழிக்க முடியுமா என்ற பிரச்சினைக்கு தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் நாம் கொண்டு சென்ற சிந்தனை மாற்றத்தின் காரணமாக மக்கள் தற்போது வீதிகளில் குப்பை கூளங்களை போடுவதில்லை. அவர்கள் தற்போது பழக்கப்பட்டு விட்டனர். நாட்டில் ஒழுக்கம் மற்றும் சட்டங்களை மதிக்காது செயற்பட இடமளிக்க முடியாது. சட்டம் சகலருக்கும் சமமானது. அதற்கான மதிப்பினை சகலரும் வழங்க வேண்டும்.
சமூக சிந்தனை மாற்றமொன்றை எம்மால் மேற்கொள்ள முடியும். முன்னர் அரச அதிகாரிகள் மக்களுக்கு அனுப்பும் கடிதத்தில் தம்மை மக்கள் சேவகராகவே இனங்காட்டி வந்தனர். இன்று அமைச்சர்களிடையோ அதிகாரிகளிடையோ அப்பழக்கம் இல்லாது அருகிவிட்டது. 12 இலட்சம் அரச ஊழியர்கள் மத்தியில் சிந்தனை மாற்றம் ஏற்பட்டால் நாடு முன்னேறும். தற்போது முழு நாட்டிலும் அபிவிருத்திச் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த நாம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தனிநபர் வருமானத்தை இரண்டு மடங்காக்க எம்மால் முடிந்துள்ளது.
அதனை மேலும் இரண்டு மடங்குகளாக் குவதே எமது இலக்கு. சமூக ரீதியான மாற்றம் தேவை. அதற்கு சகலரதும் அர்ப்பணிப்பு மிகவும் அவசியம். குடும்பம், பாடசாலை மட்டத்திலிருந்து இது ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றார்.