29

29

மீள் குடியேற்றம் 99 வீதம் பூர்த்தி; 52 குடும்பங்களே மிகுதி

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னும் 52 குடும்பங்களே மீள் குடியேற்றப்பட வுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பளை பிரதேச செயலகப் பரிவில் முகமாலை மற்றும் கிளாலி பகுதிகளில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கை தற்போது இடம் பெற்றுவருவதாகக் குறிப்பிட்ட அவர்; இந்த நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் எஞ்சியுள்ள மேற்படி குடும்பங்களும் மீள் குடியேற்றப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்த வரை 99 வீத மீள் குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு பெற்றுவிட்டன. எஞ்சியுள்ள 59 குடும்பங்களிலும் 25 குடும்பங்கள் காணிகள் இல்லாதவர்கள். ஆகையால், அவர்களுக்கு காணி வழங்குவதற்கான நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொழும்பில் கொரிய மொழி தேர்வு நாளையும் மறுநாளும்

தென் கொரியாவில் வேலை வாய்ப்பினைப் பெறுவதற்கான அடிப்படை தகைமையாகக் கருதப்படும் கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சை நாளை 30ம் திகதியும், மறுநாள் 31ம் திகதியும் கொழும்பில் 13 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்முறை இப்பரீட்சைக்கு 29583 பேர் தோற்ற உள்ளனர். இந்தப் பரீட்சையினை சுயாதீனமான முறையில் நடாத்தும் முகமாக இம்முறை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் இந்தப் பரீட்சை நடாத்தப்பட உள்ளதென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

இதேவேளை பரீட்சைகள் நடத்தப்படும் தினங்களில் 700 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நாட்டின் ஒருசில பிரதேசங்களில் பரீட்சை மோசடியில் ஈடுபட சிலர் முயற்சித்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து அவ்வாறான செயல்களைத் தடுப்பதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பெறப்பட்டுள்ளதெனவும் இவ்வாறான தகவல்கள் பற்றி அறிந்தவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரது 0112422176 அல்லது வேலை வாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைகள் பிரிவின் முகாமையாளர் 0112864118 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் கிங்ஸ்லி ரணவக்க பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார்.

தேசிய பாதுகாப்புத் தினத்தை யாழ். நகரில் நடத்த ஏற்பாடு

சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட டிசம்பர் 26 ஆம் திகதியை நினைவுகூரும் நோக்குடன் எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் திகதி ‘தேசிய பாதுகாப்பு தினம்’ அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ. எச். எம். பெளஸியின் ஆலோசனைக்கமைய தேசிய பாதுகாப்பு தின விசேட நிகழ்வுகளை யாழ். நகரில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அமைச்சரவை இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் இவற்றிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவதுமே இந்த நிகழ்வின் நோக்கமாகும். பெருந்தொகையான மக்களின் பங்களிப்புடனும் தனியார் மற்றும் சிவில் அமைப்புகளின் பங்களிப்புடனும் யாழ். நகரில் இந்த தேசிய நிகழ்வு நடத்தப்படவுள்ளது.

உலகக்கிண்ண ஆக்டோபஸ் மரணம்

octopus.jpgஉலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகளின்போது உலகம் முழுவதும் பெரும் பிரபலமான ஆக்டோபஸ் பால் மரணமடைந்து விட்டது. இதை, ஜேர்மனியில் பால் வைக்கப்பட்டிருந்த அக்குவாரியத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தென் ஆபிரிக்காவில் இந்த ஆண்டு நடந்த உலகக் கிண்ணப் போட்டியின்போது மிகவும் புகழ் பெற்றது ஆக்டோபஸ் பால். காரணம், முக்கிய போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அது சரியாக அடையாளம் காட்டியதால்.ஆக்டோபஸ் பால் மொத்தம் எட்டு போட்டிகளின் வெற்றிகளை அடையாளம் காட்டியது பால். அதில் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வெல்லும் என்பதும் அடங்கும். இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 10 என்ற கோல் கணக்கில் வென்றது. அதேபோல் அரையிறுதிப் போட்டியில் ஜேர்மனி தோற்குமென்றும் அடையாளம் காட்டியது பால். இதைக் கேட்டதும் ஜேர்மனி ரசிகர்கள் கொதிப்படைந்து விட்டனர். பாலை பொரித்து சாப்பிட வேண்டும், கொல்ல வேண்டுமென்று கோபத்துடன் கூறினர். ஆனால் கடைசியில் பால் சொன்னதே நடந்தது.

இப்படிச் சரியான கணிப்புகளை கூறிய பால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.ஜேர்மனியின் ஓபர்ஹாசன் சீ லைப் சென்டரில்தான் பால் வைக்கப்பட்டிருந்தது.பாலின் மரணம் குறித்து அந்த அக்குவாரியத்தின் அறிக்கை கூறுகையில்நாங்கள் அனைவரும் ஆக்டோபஸ் பாலின் மரணத்தைக் கண்டு சிதறுண்டு போயுள்ளோம். பாலின் மரணத்தை உலகுக்கு துக்கத்துடன் அறிவிக்கிறோம்.உலகம் முழுவதும் குறுகிய காலத்தில் புகழ் பெற்ற பால், குறிப்பாக ஜேர்மனி ஆடிய அனைத்துப் போட்டிகளின் முடிவுகளையும், இறுதிப் போட்டி முடிவையும் முன்கூட்டியே சரியாக அடையாளம் காட்டியது பால். உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியைவிட பால் கூறிய கணிப்புகள் பெரும் வெற்றியைப் பெற்றன. நாங்கள் அனைவரும் பால் மீது மிகுந்த பிரியத்துடனும்,பாசத்துடனும் இருந்தோம். பாலின் மறைவு எங்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய பாலின் உடலை குளிர்சாதனப் பெட்டிக்குள் அக்குவாரிய நிர்வாகிகள் வைத்துள்ளனர். அதை விரைவில் அக்குவாரிய வளாகத்திற்குள்ளேயே அடக்கம் செய்யவுள்ளனராம்.அந்த இடத்தில் சிறிய நினைவிடத்தையும் அமைக்கப் போகிறார்களாம்.பால் மறைந்தாலும் அதற்கு ஒரு சிஷ்யரையும் ஏற்கனவே தேடிப்பிடித்து விட்டனர் அக்குவாரிய நிர்வாகிகள்.அதற்கு பால் ஜூனியர் என பெயர் சூட்டப்போகிறார்களாம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையை அமுலாக்க ஆலோசனைக்குழு

நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரி யர் ஜீ.எல். பீரிஸ் முன்வைத்த ஆலோசனைப்படி இந்த ஆலோசனைக் குழுவுக்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியதாக அமைச் சரவையின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு அதன் இடைக்கால அறிக்கையை 2010.09.13 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளித்தது. 2010 ஓகஸ்ட் 11 ஆம் திகதி முதல் மேற்படி ஆணைக்குழு பொதுமக்களிடமிருந்து சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இந்த இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில சிபாரிசுகளை அரசு ஏற்கனவே படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.

அதிஉயர் பாதுகாப்பு வலயம் மற்றும் அதன் பரப்பளவை படிப்படியாக அரசு குறைத்துக் கொண்டு வருகிறது. இப்பகுதியிலுள்ள காணிகள் அந்தந்த உரிமையாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டும் வருகின்றன. உரிமையாளர்கள் இல்லாத காணிகள் சமூக அபிவிருத்தி பணிகளுக்காக பயன்படுத்தப்படும்.

2009 மே மாதமளவில் புலிகளுடன் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது 11,696 புலிகள் படையினரிடம் சரணடைந்தனர். இவர்களில் 5120 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட சிபார்சுகளில் ஏற்கனவே நடைமுறைப் படுத்தப்பட்டு வருவனவற்றையும் மக்களின் மொழி உரிமையை உறுதிப் படுத்துதல் உட்பட மற்றைய சிபார்சுகளையும் தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துகின்றது. இதற்கு ஏதுவாகவே இவ்வாலோசனைக் குழுவை நியமிப்பதென அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கிளி மத்திய கல்லூரி முகாமிலுள்ளவர்கள் விரைவில் மீள்குடியேற்றப்படுவர் பிரதி அமைச்சர் முரளிதரன்

Muralitharan_Vஇடைத்தங்கள் முகாமாக இயங்கும் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தங்கியுள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த விரைவில் நடவடிக்கை எடுப்பதாக மீள்குடியேற்ற பிரிதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார், நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சிக்கு வருகை தந்த அமைச்சர் முரளிதரன் கிளிநொச்சி மத்திய கல்லூரி இடைத்தங்கள் முகாமில் தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்த போது அவர்களிடம் இந்த உறுதிமொழியை அவர் வழங்கினார்.

அகதி முகாம்களில் தங்கியிருக்கும் கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றத்திற்காக அழைத்துவரப்பட்டு கிளிநொச்சி இடைத்தங்கள் முகாமில் பதிவுகளை மேற்கொண்ட பின்னர் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டு வருகின்றார்கள். ஆனால். சில குடும்பங்கள் தொடர்ந்தும் இடைத்தங்கள் முகாமிலேயே தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இம்மக்கள் நேற்று அமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரனிடம் தாங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

கிளிநொச்சி மத்திய கல்லூரியின் அதிபர், ஆசிரியர்களுடனும் அமைச்சர் கலந்துரையாடியதுடன் பாடசாலையின் புனரமைப்பிற்குத் தேவையான உதவிகளை கல்வி அமைச்சுடன் தொடர்பு கொண்டு எற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் தொடர்ந்து பணியில் நீடிப்பார்.

chandresiri.jpgகிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளர் திரு. குருகுலராஜா தொடர்ந்தும் கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளராக பணியில் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை வவுனியாவில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறிக்கும் திரு. குருகுலராஜாவிற்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இம்முடிவு எட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி வலய கல்விப்பணிப்பாளர் குருகுலராஜா திடீரென அவரது பணியிலிருந்து மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிளிநொச்சி கல்வித் திணைக்கள ஊழியர்கள், பாடசாலை அதிபர்கள் முதலானோர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று வவுனியாவில் வடமாகாண ஆளுநருடன் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.

கிளிநொச்சி தருமபுரம் இலக்கம் ஒன்று பாடசாலை கட்ட அமைப்பிற்காக வடமாகாண ஆளுநர் அடிக்கல் நாட்டி வைத்த நிகழ்வு அண்மையில இடம்பெற்றது. ஆனால், அதன் கட்டப் பணிகள் தொடர காலதாமதம் ஏற்பட்டது. இதனால், ஆளுநரால் வலயக்கல்விப் பணிப்பாளர் இடமாற்றம் செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.