November

November

யாழ். பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க.

DD_and_SPDissanayakkaயாழ். பல்கலைக்கழகத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சர் நேற்று புதன்கிழமை யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை உலகின் முதற்தரப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உயர்த்தவுள்ளதாக அவர் தெரிவித்தார். மாணவர்களுக்கு இரு விசாலமான விடுதிகள் விரைவில் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் யாழ்.பல்கலைக்கழகத்தின் அழகியல், கலைத்துறையினை தனியொரு பீடமாக்க திட்டமிட்டுள்ளதாகவம், பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் மாணவர்கள சிறந்த அங்கில அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆங்கில மொழிக் கல்வியை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டள்ளது எனவும் அத்துடன் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்தல், பல்தேசிய ஆளுமை மிக்கதான கற்கை நெறிகளை அறிமுகப்படுத்தல் என பல்வேறு திட்டங்கள் குறித்தும் அவர் தெரிவித்தார். பல்கலைக்கழக பரீட்சை முறையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“யாழ்.சிங்களக் குடியேற்றத்தின் பின்னணியில் தென்னிலங்கை அமைப்பொன்று செயற்படுகின்றது” கூட்டமைப்பு எம்.பி அ.விநாயகமூர்த்தி

யாழ்.குடாநாட்டில் சிங்கள மக்கள் குடியேற்றத்தின் பின்னணியில் தென்னிலங்கையிலுள்ள அமைப்பு ஒன்று செயற்படுவதாகவும், தற்போது எற்பட்டுள்ள சுமுகநிலையை குழப்பி இனமோதல்களை தோற்றுவிக்க அந்த அமைப்பு யாழ்.குடாநாட்டில் சிங்களக் குடியேற்றங்களை நெறிப்படுத்தி வருவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான அ.விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது யாழ். வந்து குடியமர்ந்துள்ள சிங்கள மக்களுக்கு யாழ்ப்பாணத்தில் காணிகள் எவையும் இல்லை. இந்நிலையில் அவர்கள் இங்கு குடியேற்றம் செய்யப்படுவது சட்டவிரோதமானது என அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முன்னர் வாழ்ந்த முஸ்லிம்கள் இங்கு வந்து மீள்குடியேறுவது வரவேற்கத்தக்கது. ஏனெனில், அவர்களுக்கு சொந்தமாக காணிகள், வீடுகள் இங்கு உள்ளன. ஆனால், வியாபார நோக்கத்திற்காக முன்னர் இங்கிருந்த சிங்கள மக்களுக்கு காணிகள் வீடுகள் இல்லை. அவர்களை அரசாங்க காணிகளில் குடியேற்றம் செய்வது சட்டவிரோதமானதாகும். தற்போது நிலவுகின்ற சுமுகமான சூழ்நிலையை குழப்புவதற்காகவே இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து உதவியுடன் யாழ். கோட்டை புனரமைப்பு.

Jaffna_Fordநெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நடைபெற்று வரும் யாழ்.கோட்டைப் புனரமைப்பு பணிகளை இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் லியோனி குலென்றே பார்வையிட்டுள்ளார். அதன் புனரமைப்பு வேலைகள் தொடர்பாக அவர் யாழ். அரசஅதிபரிடம் திருப்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.கோட்டையின் புனரமைப்பிற்காக நெதர்லாந்து அரசாங்கம் 62 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது. இதற்கு மேலதிகமாக இலங்கை அரசாங்கமும் 43.4 மில்லியன் ருபாவை ஒதுக்கியுள்ளது.

நேற்று மாலை யாழ்.மாவட்டச்செயலகத்தில் நெதர்லாந்து தாதுவர் அரசாங்க அதிபரைச் சந்தித்து கலந்துரையாடினார். அதன்போது யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் குறித்தும், நெதர்லாந்து அரசாங்கம் அதற்கு வழங்கவுள்ள உதவிகள் குறித்தும் நெதர்லாந்து தூதுவர் அரசஅதிபருக்கு விளக்கினார்.

யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகத்தை இந்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா திறந்து வைப்பார்.

Indian_Flagயாழ்ப் பாணத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி இந்தியத் துணைத்தூதரகம் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இதனைத்திறந்து வைக்கவுள்ளார். அமைச்சர் எஸ்எம்.கிருஸ்ணா எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார் எனவும், அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியத் தூதரகத்தையும் அவர் திறந்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் வருகைதரவுள்ள அவர் வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நூறு உழவு இயந்திரங்களை நேரடியாக கையளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உழவு இயந்திரங்கள் யாழ்ப்பாணத்திற்கு தற்போது கொண்டுவரப் பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வலிகாமம் வடக்கில் 27ஆம் திகதி மீள்குடியேற்றம்.

வலிகாமம் வடக்கில் முன்று கிராமசேவையாளர் பிரிவுகளில் எதிர்வரும் 27ஆம் திகதி மக்கள் மீள்குடியேற்றப் படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள குறித்த மூன்று பிரிவுகளிலும் பொதுமக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதனை ஒரு வைபவரீதியாக மேற்கொள்ளும் விடயத்தில் ஏற்பட்ட இழுபறிகள் காரணமாக அது பிற்போடப்பட்டது.

இளவாலை வடமேற்கு, இளவாலை வடக்கு, வித்தகபுரம், ஆகிய பகுதிகளிலேயே மக்கள் மீள்குடியமர்த்தப் படவுள்ளனர். இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன் அன்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணாவும் அதில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் மக்களிடம் பணம் பறிக்க முற்பட்ட மோசடிக் கும்பலில் பிடிபட்ட நால்வருக்கு விளக்கமறியல்.

காணாமல் போனதாகக் கருதப்படும் புலிச்சந்தேக நபர்களை விடுவிப்பதாகக்கூறி கிளிநொச்சியில் பொதுமக்களிடம் பணம் பறிக்க முயன்ற நால்வர் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு அவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்களில் மூவர் கனகபுரம் பாடசாலையில் வைத்து மக்களிடம் பணம் பெறவந்த போது பாடசாலை அதிபரின் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அறிவித்ததையடுத்து பிடிபட்டமை தெரிந்ததே. மேஜர் சீலன் என்பவருடன் அவரது முகவர்களாக செயற்பட்ட நால்வர் நேற்று புதன்கிழமை பொலிஸாரினால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதவானால் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

நீதிமன்றில் பொலிஸார் சமாப்பித்த அறிக்கையில் மேஜர் சீலன் எனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டவருக்கும் இராணுவத்தினருக்குமிடையில் சம்மந்தம் எதுவுமில்லை எனவும், பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காக தன்னை அவர் அவ்வாறு அறிமுகம் செய்துகொண்டார் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

மாகம்புர சர்வதேச துறைமுகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது

jetliner.jpgமுதலாவது கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவு பெற்று முதலாவது கப்பல் துறைமுகத்தை வந்ததையடுத்து இன்று அம்பாந்தோட்டை, மாகம்புர சர்வதேச துறைமுகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இத்துறைமுகம் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் 390 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இதில் மூன்று கப்பல்களை நங்கூரமிடக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்சேகாவுக்கு சுகவீனம் சிறைச்சாலை மருத்துவமனையில்

sarath-in-court.jpgமுன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார். பொன்சேகா சுகவீனமடைந்திருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியிருப்பதாக வி.ஆர்.டி.சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றத்தில் இடம்பெற்ற வெள்ளைக்கொடி வழக்கு விசாரணைக்கு சமுகமளித்திருந்த பின்னர் சிறைச்சாலைக்குத் திரும்பிச் சென்ற பொன்சேகா பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடு

ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவம் நடைபெறுவதை முன்னிட்டு நாளை 19ஆம் திகதி காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை கொழும்பு கோட்டை, முதல் கொள்ளுப்பிட்டி சந்திவரை வீதிகள் மூடப்படவுள்ளன. காலி வீதியூடாக கொழும்பு நோக்கி வரும் கனரக வாகனங்கள் டிக்மன் வீதியூடாக சென்று ஹெவ்லோக் வீதி வழியாக கொழும்பு நகரை அடைய முடியும். இலகு ரக வாகனங்கள் கொள்ளுபிட்டி சந்தி வரை வந்து தர்மபால வீதி வழியாக கொழும்பு நகரை அடையமுடியும். மாற்று வழிகளை சாரதிகளுக்கு சுட்டிக்காண்பிப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள் கடமையிலீடு படுத்தப்பட்டுள்ளனர்.

மூடப்படவுள்ள வீதிகள் வருமாறு,

காலி வீதியில் கொள்ளுப்பிட்டி சந்தி முதல் ஜனாதிபதி செயலகம் வரையிலான வீதி, கோட்டை ரயில் நிலையம் முதல் லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதியும், ஜனாதிபதி செயலகம் வரையிலான வீதியும்,

புறக்கோட்டை விமலதர்ம பிரதர்ஸ் முன்பாகவுள்ள மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டம் முதல் பெஸ்டியன் வீதி, சதாம் வீதி, லோட்டஸ் வீதி, பிரிஸ்டல் வீதி, யோர்க் வீதி, லோட்டஸ் வீதியுடன் வங்கி வீதி, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையம் முதல் லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதி,

கொம்பனித்தெரு முதல் ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை, மாக்கான் மாக்கார் வீதி வழியாக காலிமுகத்திடல் நோக்கிச் செல்லும் வீதி,

சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை நவம் மாவத்தை வீதி,

ஹோர்டன் சுற்றுவட்டம் முதல் பொதுநூலக சுற்றுவட்டம் வரையிலான வீதி,

எப்.ஆர். சேனாநாயக்க மாவத்தை வீதி தர்மபால மாவத்தை சந்தியிலிருந்து சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா மாவத்தை முதல் கொழும்பு மாநகர சபை வரையிலான வீதிகள் என்பன நாளை காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மூடப்பட்டிருக்கும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

மாகம்புர துறைமுகத்தில் முதலாவது கப்பல் இன்று நங்கூரமிடும்

அம்பாந்தோட்டை, மாகம்புர சர்வதேச துறைமுகத்தின் முதலாவது கட்ட நிர்மாணப் பணிகளின் நிறைவும் முதலாவது கப்பல் துறைமுகத்தை வந்தடையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வும் இன்று நடைபெறுகிறது.

இன்று காலை 10 மணிக்கு மாகம்புர துறைமுக வளாகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிதியாகக் கலந்துகொள்வார்.

இத்துறைமுகம் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் 390 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இதில் மூன்று கப்பல்களை நங்கூரமிடக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.