November

Sunday, September 19, 2021

November

தமிழீழ மக்கள் விடுதலை கழகம் – கடந்து வந்த தடங்கள் – பகுதி (1)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – PLOTE தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புகளில் முக்கியமானது. எண்பதுக்களில் மிகப் பெருந்தொகை உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக ஆரம்ப காலங்களில் விளங்கியது. ஆனால் இந்த அமைப்பினுள் ஏற்பட்ட உட்பூசல்கள் மற்றும் காரணங்களால் மிகப்பெரும் தொகையானவர்களைக் கொண்டிருந்த இவ்வமைப்பு மிக விரைவிலேயே அதன் கட்டமைப்புகள் குலைந்து பலவீனமான நிலைக்குச் சென்றது.

தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்புகளில் போராட்டத்திலும் பார்க்க உட்படுகொலைகளில் தங்கள் கூடுதல் உறுப்பினர்களை இழந்த அமைப்பும் புளொட் அமைப்பே. அதன் தலைவரும் உட்படுகொலையிலேயே உயிரிழக்க வேண்டி இருந்தது.

தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் பெரும்தொகையான தமிழீழ மக்கள் விடுதலைக் கழக உறுப்பினர்கள் தாங்கள் அங்கம் வகித்த அமைப்பின் வரலாற்றை பதிவுசெய்ய முற்படுகின்றனர். ஏனைய விடுதலை இயக்கங்களிலும் பார்க்க தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அரசியல் விவாதத் தளங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுவதால் தேசம்நெற் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கடந்த கால செயற்பாடுகள் பற்றிய பதிவுக்கும் மீளாய்வுக்குமான தளமாக ஆகி உள்ளது.

இது விமர்சனத்திற்கான களம் என்பதிலும் பார்க்க உண்மையை அறிவதற்கான தகவல் பரிமாற்றத்திற்கான களமாக ஆகி உள்ளது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஜேர்மனியில் இடம்பெற்ற மாநாட்டின் ஊடக அறிக்கையைத் தொடர்ந்து வந்த இந்தப் பதிவுகளை தற்போது தனிப்பதிவாக்கி உள்ளோம்.

தமிழீழ மக்கள் விடுதலை கழகம் – கடந்து வந்த தடங்கள் – பகுதி (2)
http://thesamnet.co.uk/?p=23385

தமிழீழ மக்கள் விடுதலை கழகம் : ஊடக அறிக்கை

PLOTE_Bannerதமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சர்வதேச கிளைகளின் மகாநாடு ஜப்பசி மாதம் 30ம் 31ம் திகதிகளில் ஜேர்மன் ஸ்ருட்காட் நகரில் இடம்பெற்றது. இந்த மகாநாட்டில் சுவிஸ், ஜேர்மன், இங்கிலாந்து, பிரான்ஸ்,நோர்வே, கனடா நாடுகளின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கடந்தகால, நிகழ்கால, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன் கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்திருந்த தலைவர் சித்தார்த்தன் அவர்கள் குறிப்பிட்ட விடயங்களின் அடிப்படையில், நீண்டகால இனப்பிரச்சினைக்கு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13வது திருத்த சட்டத்தின் முழு அதிகாரத்தையும் அமுல்படுத்துவதன் மூலம் ஒர் ஆரம்ப நடவடிக்கையாக கொள்வதுடன், இலங்கை தீவில் சிங்கள மக்கள் அனுபவிக்கும் சகல ஜனநாயக உரிமைகளையும் இலங்கை தமிழ் பேசும் மக்கள் தாமும் அனுபவிக்கின்றோம் என்று திருப்திபடும் வகையில் முழுமையான அரசியல் தீர்வை இலங்கை அரசு முன் வைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

PLOTE_Conference_31Oct10இந்த இனப்பிரச்சினை தீர்வில் (இலங்கை – இந்தியா ஒப்பந்தம்) 1987ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அதிகாரப் பரவலாக்கலை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா தனது பங்களிப்பை செலுத்த வேண்டும் என்று தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சர்வதேச கிளைகளின் மகாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த கால இந்த ஆயதபோராட்டத்தினை ஆரம்பித்து வைத்தவர்களில் நாமும் ஒருவர் என்ற ரீதியில் ஏற்பட்ட மக்கள் அழிவுகளுக்கு நாம் மிகுந்த வேதனைப்படுவதுடன், பாதிக்கப்பட்ட மக்களிற்கு எம்மால் ஆன உதவிகளை செய்யவதற்குரிய வேலை திட்டங்களை முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இன்நிலையில் பலவீனமாகவுள்ள தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் குறித்து ஒரு தீர்க்கமான அரசியல் தீர்வுக்கு அரசு முன்வரவேண்டும் என்பதில் பாரியளவு பங்களிப்பை புலம்பெயர் தமிழ் சமூகம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகின்றோம்.

சர்வதேச செயற்பாட்டு குழு சார்பில்
செ.ஜெகநாதன்
தமிழீழ மக்கள் விடுதலை கழகம்

ஜப்பசி 31 2010

இலங்கையின் அபிவிருத்திக்கு மேலும் சீன உதவி – ஜனாதிபதி மஹிந்தவிடம் சீனப் பிரதமர் உறுதி

china.jpgஇலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்கை வெற்றிகெள்ள சீனா சகல வித ஒத்துழைப்பினையும் வழங்குமென சீனப் பிரதமர் வென்ஜியாபாவோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார். இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையிலான முக்கிய பேச்சுவார்த்தையொன்று சீனாவின் சங்காய் நகரில் நடைபெற்றுள்ளது. இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, வீதிபுனரமைப்பு உள்ளிட்ட எதிர்காலத்திட்டங் களுக்கு சீனா பூரண ஒத்துழைப்பினை வழங்குமென இதன்போது அந்நாட்டுத் தலைவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் துறைமுகம், விமான நிலையம் மற்றும் மின்சாரத்துறை செயற் திட்டங்களுக்கு சீனா உதவிகளை வழங்கி வருகிறது. அதேபோன்று எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்கும் பூரண ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. சீனாவிற்கான மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சீனப் பிரதமர் வென்ஜியாபாவோவிற்கும் மிடையிலான பேச்சுவார்த்தையொன்று நேற்று முன்தினம் சங்காயில் நடை பெற்றுள்ளது.

இதன் போது இருநாடுகளுக்குமிடையிலான நல்லுறவு, சீன நிதியுதவி மூலம் இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத் தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இலங்கையில் தற்போது நிலவும் சமாதான சூழ்நிலையானது அபிவிருத்தி இலக்கு நோக்கிய பயணத்திற்குப் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளமை தொடர்பிலும் இப்பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தையின் போது இலங்கையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தமது பூரண ஆதரவை வழங்குவதாக சீனப் பிரதமர் உறுதியளித்துள் ளார்.

சுமுகமாக இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையின் போது இலங்கைக்கும் சீனாவிற்குமிடையிலான நீண்டகால நட்புறவு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் அதனை மென்மேலும் வலுப்படுத்துவது சம்பந்தமாகவும் இருநாட்டுத் தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அதேவேளை, சீன நிதியுதவியுடன் அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தித் திட்டமான துறைமுக நடவடிக்கைகள் குறித்தும் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.

சீனாவில் நடைபெறும் எக்ஸ்போ- 2010வர்த்தகக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக இருநாள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் இரவு சிறப்பதிதியாகக் அந் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

மீளக்குடியமர்த்தப்பட்ட 200 குடும்பங்களுக்கு புத்தம் புது சைக்கிள்கள்

பளை பிரதேசத்தில் புதிதாக மீளக் குடியமர்த்தப்பட்டவர்களில் தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு புத்தம் புது சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. வட மாகாண சபை இதற்கென 25 இலட்சம் ரூபா நிதியை செலவு செய்துள் ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வின் போது சிறுகைத்தொழில், பாரம்பரி கைத்தொழில், ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஆகியோர் சைக்கிள்களை விநியோகிக்கவுள்ளனர். பளையில் அண்மையில் மீளக்குடிய மர்த்தப்பட்ட 7 கிராம சேவகர் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களைச் சேர்ந்த மக்களின் போக்குவரத்து கல்வி நடவடிக்கைகளை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

நேபாள ஜனாதிபதி யாதவ்வுடன் ஜனாதிபதி மஹிந்த சந்தித்து பேச்சு

yaadev.jpgஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் (30) நேபாள ஜனாதிபதி ராம் பரன் யாதவை சீனாவின் சங்ஹாய் நகரில் சந்தித்து பேசினார்.

நேபாளத்தில் தற்போது இடம்பெற்று வரும் அரசியல் நெருக்கடி தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் நீண்ட நேரம் பேச்சு நடத்தினர்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல சமயங்களில் நேபாளத்துக்கு சென்று அந்த நாட்டின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண உதவியதாகவும், நேபாளத்தின் அரசியல் நெருக்கடி தொடர்பாக ஜனாதிபதிக்கு நன்கு தெரிந்திருப்பதாகவும் கூறிய நேபாள ஜனாதிபதி, அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண்பதற்கு இலங்கை ஜனாதிபதியின் ஆதரவினை எதிர்பார்ப்பதாகவும் நேபாள ஜனாதிபதி குறிப்பிட்டார். அத்துடன், லும்பினியை அபிவிருத்தி செய்வது தொடர்பாக இலங்கை வழங்கும் ஒத்துழைப்புக்கு நேபாள ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.

இதற்கு முன் தான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது லும்பினியின் அபிவிருத்திக்கு இலங்கை பங்களிக்க வேண்டுமென பாராளுமன்றத்தில் கூறி வந்த போதிலும் நான் ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னரே அதனை நிறைவேற்ற முடிந்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நினைவூட்டினார்.

இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையில் கல்வி பரிமாற்ற திட்டங்கள் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் விரிவாக ஆராய்ந்தனர். நேபாள மாணவர்களுக்கு இலங்கையில் கல்வி வாய்ப்புகளை வழங்க முடியுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். அதற்கேற்ப எதிர்காலத்தில் நேபாளத்துக்கும் இலங்கைக்கும் இடையே தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பாக கல்வி பரிமாற்ற திட்டங்கள் இடம்பெறும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையில் சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் பேச்சு நடத்தினர். அன்றைய தினம் மாலை ரிகீஜிலி 2010 சர்வதேச கண்காட்சியின் இறுதி நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட அதிதியாக கலந்துகொண்டதுடன் சீன பிரதமரையும் சந்தித்து பேசினார்.

6 -1/2 கோடி ரூபாயில் 52 உழவு இயந்திரங்கள் – வடபகுதி மக்களுக்கு வழங்கவென இன்று இந்தியாவினால் இலங்கைக்கு அன்பளிப்பு

வட மாகாண விவசாய நடவடிக்கைகளுக்கென சுமார் ஆறரை கோடி ரூபா பெறுமதியான 52 உழவு இயந்திரங்களை இந்திய அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்குகின்றன. வட மாகாணத்துக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷவிடம் 52 உழவு இயந்திரங்களையும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்த் உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளார்.

கொழும்பு காலி முகத்திடலில் இன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இந்த உழவு இயந்திரங்களை இலங்கை அரசின் சார்பில் பொறுப்பேற்கும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வடமாகாண ஆளுநரிடம் கையளிக்கவுள்ளார்.

றிசானாவுக்கு விடுதலை வேண்டி மூதூரில் கண்ணீர் மல்க பிரார்த்தனை

muthur.jpgசவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் றிசானா நபீக்கிற்கு விடுதலை வேண்டி மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (31) மாபெரும் பிரார்த்தனை, ஸலாதுல் ஹாஜா தொழுகை, பிரசார நிகழ்வும் காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

மூதூர் பிரதேசத்தில் வாழும் மக்கள் றிசானா நபீக்கின் விடுதலைக்காக ஒன்று கூடிய மைதானத்தில் பாடசாலை மாணவர்கள், மத்ரஸா மாணவர்கள், சமய, சமூக தலைவர்கள், பொது மக்கள் என எல்லோரும் மைதானத்தினுள் அமர்ந்திருந்தனர். ஆரம்பமாக அஷ்ஷேஹ் எம்.எம். முனாஸ் (ரஸாதி)யினால் சொற்பொழிவு நிகழ்த்தப் பட்டது. இதனை அடுத்து தனித்தனியாக ஸலாதுல் ஹாஜா தொழுகையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு தொழுதனர். இதேவேளை, எழுதப் பட்டிருந்த சுலோ கங்களில் இரு புனித தலங்களின் பணி யாளரே எங்கள் ஏழைச் சகோதரி றிசானா நபீக்கை உங்கள் பெரும் தன்மையினால் மன்னியுங்கள்.

“அன்புத் தாயே எங்களது சகோதரியை மன்னியுங்கள் அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் அருள் புரியட்டும்” என்றும் எழுதப்பட்டிருந்தன. அல்லாஹ்விடமே இந்த நிலையை வேண்டுகின்றோம். மன்னிக்கும் பனப்பான்மை கொண்ட மனங்களே மன்னித்து விடுங்கள்; விடுதலை செய்யுங்கள் எனவும் சிறுவர்கள் முதல் கூடிய மக்கள் இறைவனிடம் அழுது பிரார்த்தனை செய்தனர். மக்கள் ஒன்றுகூடி றிசானா நபீக்கின் விடுதலைக்காக கண்ணீர் மல்கி அழுது புலம்பிய காட்சி மக்கள் எல்லோரையும் மனம் உருகச் செய்தது.

இதேவேளை, சவூதி தூதரகம், சவூதி மன்னர் மற்றும் பணிப்பெண்ணாக பணிபுரிந்த குடும்பத்தார்கள் உள்ளிட்ட வர்களுக்கான கையெழுத்து விடுதலைக்கான மகஜர்களையும் அனுப்புவதற்கான நடவடிக்கை இடம்பெற்றன.

நிர்வாக சேவை நேர்முகப் பரீட்சைக்கு சிங்களமொழி மூலம் 257 பேர் தெரிவு-தமிழ்மொழி மூலம் எவரும் தெரிவாகவில்லை

இலங்கை நிர்வாக சேவை 2009 ஆம் ஆண்டுக்குரிய திறந்த போட்டிப் பரீட்சைக்குரிய பெறுபேறுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில் நேர்முகப்பரீட்சைக்கு சிங்கள மொழிமூலம் 257 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ள அதேநேரம் தமிழ் மொழிமூலம் எவருமே தெரிவு செய்யப்படவில்லை.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நுழைவாயில் அறிவித்தல் பலகையில் எழுத்துப் பரீட்சைக்கான முடிவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இலங்கை நிர்வாக சேவை 2009 ஆம் ஆண்டுக்குரிய திறந்த போட்டிப்பரீட்சையின் எழுத்துப்பரீட்சையில் பெறப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்க தகுதியுடையோரென 257 பேரது பெயர், விபரம், சுட்டிலக்கம், பரீட்சைக்கு தோற்றிய மொழி போன்ற விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 257 பேரில் தமிழ் மொழிமூலம் தோற்றிய ஒருவரேனும் இல்லையெனத் தெரிவிக்கப்படுவதுடன் இது குறித்து தமிழ் மொழி மூலம்பரீட்சைக்கு தோற்றிய பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். கடந்த வருடமும் இலங்கை நிர்வாக சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு தெரிவான 32 பேரும் தற்போது உள்ளகப் பயிற்சியை பெற்று வருகின்றனர்.இதில் கூட 32 பேரும் சிங்கள மொழி மூலம் தெரிவானவர்களேயாவர்.தமிழ் மொழிமூலம் பரீட்சைக்கு தோற்றிய எவருமே தெரிவாகவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

70 கைபேசிகளை உடலில் ஒட்டிவந்த இலங்கைப் பெண் சென்னையில் கைது

கொழும்பில் இருந்து சென்னைக்கு உடலில் கையடக்கத் தொலைபேசிகளை மறைத்து கடத்தி வந்த இலங்கை பெண்ணை இந்திய சுங்க பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொழும்பில் இருந்து சென்ற விமானப் பயணிகளை இந்திய சுங்க பிரிவு அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது இலங்கையை சேர்ந்த ரீஸ்வியா (வயது 20) என்ற பெண்ணின் உடைகள் சந்தேகப்படும்படியாக இருந்ததால் அவரை இந்திய சுங்க பிரிவு பெண் அதிகாரிகள் தனியறைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது உடல் முழுவதும் கையடக்க தொலைபேசிகளை வைத்து செலோ டேப் மூலம் ஒட்டி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரது உடலில் இருந்து 70 கையடக்கத் தொலைபேசிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் அவருடைய பொதியில் இருந்து உயர்ரக 3 செய்மதி கையடக்க தொலைபேசிகளையும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பில் இந்திய விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரி பெரியசாமி கூறியதாவது;

இலங்கை பெண் 3 செய்மதி கையடக்க தொலைபேசிகளை கடத்தி வந்து உள்ளார். இது தீவிரவாதிகள் பயன்படுத்துவதாகும். இந்த கையடக்க தொலைபேசிகளை யாருக்காக கடத்தி வரப்பட்டது.

இதன் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி விசாரணை நடத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த 27ஆம் திகதி புறநகர் பொலிஸார் ரூபாய் 2 கோடி இந்திய மதிப்புள்ள நவரத்தின கற்களை பிடித்தாக கூறி எங்களிடம் ஒப்படைத்தனர். இந்த கற்களின் மதிப்பு ரூபாய் 49 இலட்சம் இந்திய மதிப்பு தான் என்பது தெரிய வந்துள்ளது

உல்லாசப் பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான நாடு இலங்கை

lanka.jpgஉல்லாசப் பயணிகள் செல்வதற்கு மிகவும் பாதுகாப்பான நாடாக இலங்கை மாறியுள்ளதென ஐரோப்பிய ஒன்றியம், பெல்ஜியம் மற்றும் லக்ஸம்பேர்க்குக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். பெல்ஜியத்திலிருந்து இலங்கைக்குச் செல்லும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை இந்த வருடம் செப்டம்பரில் 82.8 வீதம் அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகலிருந்து செல்லும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 50 வீதத்தாலும், ஏனைய உலக நாடுகளிலிருந்து இலங்கை சென்ற உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 44 வீதத்தாலும் அதிகரித்துள்ளது என பெல்ஜியத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஆரியசிங்க தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், உல்லாசப் பயணத்றையை மேலும் அபிவிருத்தி செய்ய பெல்ஜியத்திலிருந்து இலங்கைக்கு நேரடியான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனக் கூறினார்.