11

11

நாவற்குழியிலுள்ள வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் சிங்கள மக்கள் அனுமதியின்றி கொட்டில்களை அமைத்து குடியேறியுள்ளனர்.

தென்பகுதிகளிலிருந்து வந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த சிங்கள மக்கள் நேற்று நாவற்குழியிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் அத்துமீறி குடியேறியுள்ளனர். அக்காணியில் குடில்களை அமைக்கும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தங்களை மீள்குடியேற்றுமாறு கோரி யாழ்ப்பாணத்திற்கு வந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை எனவும், தங்கள் ஊர்களிலிருந்து கொண்டுவந்த மரந்தடிகளைக் கொண்டே தாங்கள் கொட்டில்களை அமைப்பதாகவும், யார் தடுத்தாலும் இங்கேயே தாம் குடியிருக்கப் போவதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களால் நேற்று மாலைக்குள் சுமார் 20 இற்கும் மேற்பட்ட கொட்டில்கள் அமைக்கபட்டு விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நேற்று கருத்துத் தெரிவித்த யாழ்.அரசஅதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் இம்மக்கள் நாவற்குழியிலுள்ள வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் அத்துமீறி குடியமர்ந்துள்ளமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது எனக் குறிப்பட்டார். அது வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணி என்பதால் அவர்கள்தான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் யாழ். மாவட்ட பொது முகாமையாளர் ஜே.நோயல் ஜெயச்சந்திரன் இது குறித்து தெரிவிக்கையில் சிங்கள மக்கள் இவ்வாறு அக்காணியில் குடியேற முயற்சிப்பதை நேற்றுப் பிற்பகல் அங்கு சென்று நேரில் அவதானித்ததாகவும், தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான அக்காணியில் எவ்வித அனுமதியுமின்றி அவர்கள் கொட்டில்களை அமைத்து வருகின்றமை குறித்து வீடமைப்பு அதிகாரசபையின் கொழும்புத் தலைமையகத்திற்கு தான் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமாக 90 எக்கர் காணி உள்ளது. அதில் 30 ஏக்கர் காணி ஏற்கனவே 300 வீட்டுத்திட்டத்திற்கு வழங்கப்பட்டு விட்டது. ஏனைய 60 ஏக்கர் அதிகாரசபையின் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

”கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை அமைக்கப்பட்டு ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.” – இ. அங்கஜன்

Angajan_Ramanathanகிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும், இதில் ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரான இ.அங்கஜன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்காக 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இத்தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்ததாகவும், வடமாகாண அபிவிருத்திப்பணிகளில் இந்த ஆடைத்தொழிற்சாலை முக்கிய இடத்தை வகிக்கும் எனவும் அங்கஜன் தெரிவித்தார். இத்தொழிற்சாலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள புலி உறுப்பினர்களுக்கும் தொழில்வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் அமையவுள்ள இந்த ஆடைத் தொழிற்சாலையை இயக்குவதற்கு ‘றை ஸ்ரார் அப்பறெல்’ நிறுவனத்தின் தலைவர் குமார் தேவபுர முன்வந்துள்ளதாகவும் அங்கஜன் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பம்.

படிப்பினைகள் மற்றும், ஜனாபதிபதியினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளன. ஒவ்வொரு பகுதி மக்களும் இதில் கலந்து கொண்டு தங்கள் சாட்சியங்களை அளிப்பதற்காக பிரிவு பிரிவாக இதன் அமர்வுகள் இடம்பெறுகின்றன.

யாழ்.பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்காக இன்று காலை 9 மணிமுதல் 11 மணிவரை குருநகர் கலாசார மண்டபத்திலும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்காக முற்பகல் 11.30 மணி தொடக்கம் 1 மணிவரை அரியாலை சரஸ்வதி சனசமூகநிலையத்திலும், கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்காக பிற்பகல் 2மணி தொடக்கம் மாலை 5மணிவரை நீர்வேலி திருமுருகன் திருமண மண்டபத்திலும் நல்லிணக்க ஆணைக்கழுவின் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்த அமர்வுகளில் தங்கள் சாட்சியங்களை அளிப்பதற்கு 80 வரையானோர் பதிவு செய்துள்ளதாகவும், இவ்வாறு பதிவு செய்யாதவர்களும் தங்கள் சாட்சியங்களை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் 110 பாடசாலைகள் தரமுயர்த்தப்படவுள்ளன.

இலங்கை முழுவதும் 1000 பாடசாலைகளை தரமுயர்த்துவது தொடர்பான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 110 பாடசாலைகள் தரமுயர்த்தப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூட்டம் நேற்று புதன்கிழமை யாழ்.இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இவ்வேலைத்திட்டம் 2012ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையான காலத்திற்குட்பட்டதாக அமையும் எனவும், ஒவ்வொரு பாடசாலைக்கும் ஆகக் குறைந்த தொகையாக 5 மில்லியன் ரூபா தொடக்கம் 60 மில்லியன் ரூபா வரைக்கும் நிதி ஒதுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன கல்வி முறைகளை சகல மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்தல், கிராமப்புற மாணவர்களுக்கு சமவாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்தல் என்பன இத்திட்டத்தின்’ நோக்கம் என நேற்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்கச் செயலாளர்கள் முதலானோர் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர். மற்றும் இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன். கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னர் வடக்கில் 90 பாடசாலைகளை இத் தரமுயர்த்தலுக்காக தெரிவு செய்வதாக அறிவிக்கபட்டிருந்தமையும் வடமாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய 110 பாடசாலைகளைத் தரமுயர்த்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

விடுவிக்கப்பட்ட முன்னாள் புலிஉறுப்பினர்களின் நலன்களுக்காக குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சமூகத்தோடு இணைந்து இயல்பு வாழ்வு வாழ்வதற்கான வழிவகைகளை மேற்கொள்வதற்கென தேசிய ரீதியிலான தலைமையின் கீழ் குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுக்களில் மாவட்ட அரசாங்க அதிபர்கள், சமூகத் தலைவர்கள், சமயத் தலைவர்கள் உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளான இவர்கள் சமூகத்துடன் இணைந்து இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான சகல உதவிகளையும் இக்குழுக்கள் முன்னெடுக்கம் எனவும். இக்குழுக்களின் செயற்பாடுகளுக்கென பல கோடிரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க நேற்று வியாழக்கிழமை யாழப்பாணத்தில் வைத்து தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த 12 ஆயிரம் முன்னாள் போராளிகளில் 5,221 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 594 பேர் சிறுவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு

parliament001.jpgகொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று புதன்கிழமை மாலை முதல் பெய்த கடும்மழை காரணமாக கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பெரும்பாலான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின. புறக்கோட்டை, ஆமர்வீதி, கொட்டாஞ்சேனை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி,  கறுவாத்தோட்டம்,பொரளை மயானபிரதேசம், பாராளுமன்றம் வீதி உட்பட பல பிரதேசங்களும் வெள்ளத்தால் மூழ்கியிருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது.

கொழும்பு மாநகர எல்லைக்குள் பல பிரதான வீதிகளும் நீரில் மூழ்கியதால் இன்று பிற்பகல் வரை கொழும்பின் பல பகுதிகளிலும் பெரும் வாகன நெரிசல்கள் ஏற்பட்டிருந்தன. எவ்வாறிருப்பினும் இன்று மாலையாகும் போது பல வீதிகளிலும் வெள்ளம் வழிந்தோடியிருந்தது. வளிமண்டலவியல் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் ஜயசேகர இன்று காலை 8.30 மணிவரையான பதிவுகளின் பிரகாரம் கொழும்பில் அதிகபட்சமாக 440.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியிருப்பதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்திற்கு பவள் கவச வாகனங்களில்

parliament002.jpgபாராளு மன்றத்திற்குச் செல்லும் பாதை இன்று பெய்த அடைமழையால் முற்றாக மூழ்கிப் போயுள்ளதன் காரணமாக இன்றைய பாராளுமன்ற அமர்வுகளுக்கு உறுப்பினர்கள் படகில் செல்ல வேண்டிய நிலையேற்பட்டது.  பாராளுமன்றத்திற்குச் செல்லும் பாதையில் மூன்றடிக்கும் உயரமான நீர் நிரம்பி அப்பிரதேசமெங்கும் வெள்ளம் தேங்கி நிற்கும் நிலையில் இன்றைய பாராளுமன்ற அமர்வுகள் கூட தாமதித்தே ஆரம்பமாகியிருந்தன.

பாராளுமன்றத்திற்கு தரை வழியாக செல்ல முடியாத நிலை காணப்பட்டதால் இராணுவமும், கடற்படையும் அவர்களுக்கு உதவ முன்வந்தன. அதன்படி பல பாராளுமன்ற உறுப்பினர்கள் படகு மூலம் பாராளுமன்றத்திற்குச் சென்றனர். இன்னும் சிலர் இராணுவத்தின் உயரமான பவள் கவச வாகனங்களில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.  இவ்வாறாக பல சிரமங்களின் மத்தியில் பாராளுமன்றத்தைச் சென்றடைந்த போது மழை காரணமாக அங்கு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது தெரிய வர பெரும் ஏமாற்றமாக இருந்தது.

வேறு வழியின்றி பாராளுமன்றத்தின் அனைத்துக் கதவுகளையும் திறந்து வைத்துக் கொண்டு வீடியோ கமெராக்களின் ஒளியில் பாராளுமன்ற அமர்வு நடைபெற்றது. எட்டு நிமிடங்களுடன் பாராளுமன்ற அமர்வு முற்றுப் பெற்றது.

parliament000.jpg

”பெண்கள் மேலதிகாரிகளால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர்” யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகமார்

Imelda_Sugumar_GA_Jaffna”பெண்கள் மேலதிகாரிகளால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர்” என யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்து உள்ளார். சிறுவர், முதயோர் தின விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார். இந்நிகழ்வு வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதேசச் செயலாளர் திருமதி தே பாபு தலைமை தாங்கினார்.

Imelda_Sugumar_at_Children_Dayஇதே போன்ற பெண் மாணவிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டு யாழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சிலர் மீதும் சுமத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.  ‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

அரசாங்க அதிபர் ஒரு பெண் என்பதனாலும் தற்போது ஏற்பட்டு வரும் நம்பிக்கை காரணமாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளியே கொண்டு வர முற்பட்டு உள்ளனர். அதனால் எதிர்காலத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் பல அநீதிகள் வெளிவரலாம் என சமூகவியலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் ஒரு பெண் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டு இருப்பது இதுவே முதற் தடவையாகும். இமெல்டா சுகுமார் யாழ்ப்பாணத்தின் 57வது அரசாங்க அதிபர். இவர் உத்தியோகத் தர வரிசையில் இலங்கையில் உள்ள 50 தரமான உத்தியோகஸ்தர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ் மாவட்டத்தில் சிறுவர்களின் நிலை மோசமானதாக இருப்பதாகத் தெரிவித்த அவர் அதனை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

‘தமிழ் மக்களுடைய இன்றைய நிலைக்கு இந்தியாவும் ஒரு காரணம். ஆனால் இந்தியா மட்டும் காரணம் அல்ல’ லண்டன் கூட்டத்தில் இந்திய ராஜதந்திரி கலாநிதி சந்திரசேகரன்

Audience”தமிழ் மக்களுடைய இன்றைய நிலைக்கு இந்தியாவும் ஒரு காரணம். ஆனால் இந்தியா மட்டும் காரணம் அல்ல” என இந்திய ராஜதந்திரி கலாநிதி சந்திரசேகரன் லண்டனில் நேற்று (நவம்பர் 10, 2010) நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ”இலங்கைக்கு இந்திய இராணுவம் அனுப்பப்பட்டது துரதிஸ்டமானது. ஒப்பந்தத்தில் இந்தியா தனது நலன்களை முன்னிலைப்படுத்தியது தவறு. ஒப்பந்தம் இலங்கை அரசுக்கும் தமிழ் தரப்பிற்கும் இடையேயே மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும்” என்று கலாநிதி சந்திரசேகரன் இந்தியா விட்ட தவறுகளைச் சுட்டிக்காட்டினார்.

‘இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையின் பரிமாணம்’ என்ற தலைப்பில் கலாநிதி சந்திரசேகரன் பிரித்தானியாவில் இயங்கும் இலங்கை அமைப்புகளின் பிரதிநிதிகளின் மத்தியில் சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். தேசம்நெற் – ASATiC இணைந்து ஏற்பாடு செய்த இக்கூட்டத்திற்கு ASATiC செயலாளர் ரவி சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார்.

”கடந்த காலங்களில் இந்தியாவில் உள்ள வெவ்வேறு ஏஜென்சிகள் தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதம் வழங்கியது பயிற்சி அளித்தது” எனத் தெரிவித்த கலாநிதி சந்திரசேகரன் ”இந்தியா ஒருபோதும் பிரிவினையை ஏற்றுக்கொள்ளவில்லை” எனவும் தெரிவித்தார். ”புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இன்னமும் பலமாக உள்ளனர். அவர்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டால் மீண்டும் ஒரு போராட்டத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்” என எச்சரித்த கலாநிதி சந்திரசேகரன், இலங்கை அரசு அரசியல் தீர்வை முன்வைப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

Audienceபிரித்தானியாவில் இயங்கும் தமிழ், முஸ்லீம், சிங்கள அமைப்புகளின் பிரதிநிதிகளும் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகப் பிரதிநிதியும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் தயாபரன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். தமிழ் அமைப்புகளில் அரவிந்தன் – தமிழர் விடுதலைக் கூட்டணி, சம்பந்தன் – ரெலோ, தயா – புளொட், கிருஸ்ணன் – ரிஎம்விபி, நேசன் – ஈரோஸ் (ஒரு பிரிவு), கனெக்ஸ் – ஈரோஸ், ஆர் ஜெயதேவன் – ஏபிஆர்எஸ்எல், ராம்ராஜ் – ரிபிசி வானொலி, நஜா மொகமட் – ஸ்ரீலங்கா இஸ்லாமிக் போறம், முன்னாள் ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் ஜனா, ரான்ஸ் குளோபல் நிர்மலன், நேர்டோ வாசு ஆகிய அமைப்பினரும் பன்முகப்பட்ட அரசியல் ஆர்வலர்களும் இக்கலந்துரையாடல்களில் பங்கேற்றுக் கொண்டனர்.

Ravi_Sundaralingam_and_Chandrasekaran_Drஇலங்கையில் உயிர்நீத்த அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்குமான மௌன அஞ்சலியைத் தொடர்ந்து ரவி சுந்தரலிங்கம் தனது தலைமை உரையை வழங்கினார். இலங்கை மீதான இந்தியாவின் ஈடுபாட்டினையும் இந்தியாவின் பொறுப்புணர்வினையும் மேலோட்டமாகச் சுட்டிக்காட்டி கலாநிதி சந்திரசேகரனுடைய சிறப்புரைக்கு ஆரம்பப் புள்ளிகளை இட்டுச் சென்றார் ரவி சுந்தரலிங்கம். அவர் தனது உரையில்,

”தமிழீழ விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்தது. அதில் தமிழ் மக்கள் பாரிய இழப்பைச் சந்தித்தனர். முள்ளிவாய்க்கால் முடிவுக்கு இந்தியாவுக்கும் பொறுப்புள்ளது. அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பங்களாதேஸ் பிரிக்கப்பட்டது போன்று தமிழீழம் பிரித்துக் கொடுக்கப்படும் எனக் கூறிவந்தனர். ஆனால் இந்திய அரசு என்பது ஒரு போதும் அரசுக்கு எதிரான அரசு இல்லை என்பதனை இடதுசாரிக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட நாம் நம்பவில்லை.

இந்தியா ஒரு போதும் பிரிவினைவாதத்தை ஏற்றுக்கொள்ளாது என்பதனை அப்போது இலங்கை விடயத்தில் நெருக்கமாக ஈடுபட்டிருந்த கலாநிதி சந்திரசேகரனும் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டி இருந்தார். அப்படி இருக்க, இந்தியா துரோகம் இழைத்துவிட்டதாக கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இலங்கையின் கட்டமைப்பிற்குள் போராடவும் தீர்வை எட்டவுமே இந்தியா தீர்க்கமாக இருந்தது. ஆனால் தமிழ் தலைமைகள் அதனைத் தவறாகப் புரிந்து, இந்த நிலைக்கு வந்துள்ளோம். நாங்கள் மனிதர்களாக அனைத்து சமூகத்தவர்களும் இணைந்தே செயற்பட வேண்டும். இதனை விளங்கிக் கொள்ளாததனால் தமிழர்கள் மிகப் பெரும் விலையைக் கொடுத்துள்ளனர்.

இந்தியா தமிழர்களுக்கு சாதகமாகச் செயற்பட வேண்டும் என்று கோருவதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. தமிழர்களானால் என்ன, சிங்களவர்களானால் என்ன இரு சமூகங்களுமே இந்தியாவில் இருந்தே வந்தனர். இரு சமூகங்களுக்கும் இந்திய வரலாற்றுத் தொடர்பு உள்ளது. தமிழ்நாட்டிலும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதனால் மட்டும் இந்தியா தமிழர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. சிங்களவர்களும் இந்தியாவுக்கு நெருக்கமாக இருக்க முடியும்.

இன்று சிங்கள அரசாங்கம் தமிழ் மக்களை வெற்றிகொண்டுள்ளனர் என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்கள் இலங்கை அரசுக்கு ஏதிராக 30 ஆண்டுகள் போரிட்டு உள்ளனர். இன்று அவர்கள் தோற்கடிக்கப்பட்டு உள்ளனர் என்பதே உண்மை. ஆனால் வெற்றி பெற்ற சிங்கள அரசு எவ்வளவு தூரம் நியாயமானதாகவும் பெருந்தன்மையாகவும் உள்ளது என்பதைப் பொறுத்தே இலங்கையின் எதிர்காலம் தங்கி உள்ளது” என ரவி சுந்தரலிங்கம் தன் தலைமை உரையை முடித்துக் கொண்டார்.

Chandraseharan_Drஅதனைத் தொடர்ந்து நிகழ்வின் பிரதம பேச்சாளர் கலாநிதி சந்திரசேகரன், ‘இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையின் பரிமாணம்’ என்ற தலைப்பில் உரையாற்றியார். அதனைத் தொடர்ந்து இரு மணிநேரத்திற்கும் மேலாக இடம்பெற்ற கேள்வி நேரத்தில் பங்கெடுத்துக் கொண்டு இலங்கை – இந்திய உறவு, இந்திய – சீன உறவு, இந்திய – சர்வதேச உறவு, இலங்கை – சீன உறவு, இலங்கை – சர்வதேச உறவு எனச் சிக்கலான அரசியல் சூழல் பற்றி முன்வைக்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். 1980 முதல் 1991 வரை இந்திய அரச கட்டமைப்பில் அங்கம் வகித்த கலாநிதி சந்திரசேகரன் தமிழீழ விடுதலைப் போராட்டத் தலைவர்கள் அனைவரையும் தான் சந்தித்ததாகத் தெரிவித்தார். இச்சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் விடுதலை இயக்கங்களைச் சேர்ந்த பலர் கலாநிதி சந்திரசேகரனை அப்போது தாங்கள் சந்தித்துக் கொண்டதை குறிப்பிட்டுக் காட்டினர்.

கலாநிதி சந்திரசேகரனின் உரையிலும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கேள்வி நேரத்திலும் அவர் குறிப்பிட்ட விடயங்களின் சாரம்சம்:

”தமிழர்களுடைய பிரச்சினைக்கு இலங்கையின் ஒற்றையாட்சிக்கு உள்ளேயே தீர்வு என்பதை இந்தியா எப்போதும் தெளிவாகவே கூறி வந்தது. இதனை தமிழ் தலைவர்களிடமும் இந்தியா தெரிவித்து இருந்தது. இங்கு என்னைத் தெரிந்தவர்கள் இருக்கிறீர்கள், எப்போதாவது நான் இதற்கு மாறாகக் கூறி இருந்தால் நீங்கள் என்னைக் கேளுங்கள்.

1982ல் பாண்டி பஜாரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சுட்டு சம்பவம். முதல் இலங்கை தொடர்பான இந்திய வெளிவிவகாரக் கொள்கை பல்வேறு பிரிமாணங்களைக் கொண்டு உள்ளது. ஆரம்பத்தில் இந்தியா கூடுதலாகத் தலையிடவில்லை. உள்நாட்டு விடயமாகவே கருதியது.   

1981ல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டமை. 1982ல் இடம்பெற்ற சிறு சிறு கலவரங்கள். ஆனால் 1983ல் இடம்பெற்ற கலவரத்தை அந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை. 1983 கலவரம் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தமிழர்களையும் பாதித்தது.

அதனைத் தொடர்ந்து 1983 யூலைக்குப் பின் இலங்கை இதனை வெளியே கொண்டு சென்றது. திருகோணமலைத் துறைமுகம், வொய்ஸ் ஒப் அமெரிக்கா, இஸரேல் என இலங்கையில் வெளித்தலையீடுகள் தலை காட்டியது. அதனால் இந்தியா இலங்கை விடயத்தில் சற்று கடும்போக்கைக் கடைப்பிடித்தது. அதுவரை தமிழ் நாட்டில் கூட இலங்கை அரசுக்கு சார்பான நிலையே இருந்தது. இந்தியாவில் கைது செய்யப்பட்ட குட்டிமணி இலங்கையிடம் கையளிக்கப்பட்டார். இலங்கை மீதான இந்தியாவின் கடும் போக்கு அது இலங்கை மீது ஆளுமை செலுத்த வேண்டும் என்ற நோக்கிலோ அல்லது இலங்கையை இந்தியாவின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கிலோ செய்யப்படவில்லை.

1983 யூலைக் கலவரம் தமிழர்களுடைய பிரச்சினையை இலங்கை அரசு இராணுவ ரீதியாக தீர்க்க முற்பட்டதற்கான ஆரம்பமாகவே இந்தியா பார்த்தது. அதனால் தமிழர் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு அல்ல அரசியல் தீர்வு என்பதை வலியுறுத்துவதே இந்தியாவின் நோக்கமாக இருந்தது.

ஆனால் இந்திய அமைதிகாக்கும் படையின் தலையீடு துரதிஸ்டமானது. முழுமையுமே தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்டது. இந்தியா இராணுவ ரீதியில் தலையிட்டு இருக்கக் கூடாது. மோசமான நிகழ்வுகள் நடைபெற்று விட்டது.

மத்தியஸ்தம் வகிக்க வந்த இந்தியா தனது நலன்களை முன்னிலைப்படுத்தியது தவறு. ஒப்பந்தம் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இலங்கை அரசுக்கும் தமிழ் தரப்பினர்க்கும் இடையில் இடம்பெற்று இருக்க வேண்டுமேயொழிய, இலங்கை அரசுக்கும் – இந்திய அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கக் கூடாது.

இந்த ஒப்பந்தம் பற்றி அப்போது என்னுடன் ஆலோசிக்கப்படவில்லை. இந்த ஒப்பந்தம் பற்றி நான் அறிந்திருக்கவும் இல்லை. இதில் எல்ரிரிஈ யை மட்டும் முன்னிலைப்படுத்தியதும் தவறு. அவர்கள் மட்டும் தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லை.

ஆனால் இவ்வளவு நிகழ்வுகளுக்குபி பின் அண்மையில் சுரேஸ் பிரேமச்சந்திரன் ரிஎன்ஏ தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் எனத் தெரிவித்து இருந்தார். அதனை யாரும் மறுக்கக் கூட இல்லை. (ரவி சுந்தரலிங்கம் குறுக்கிட்டு அதனைக் கண்டித்து எழுதியதைச் சுட்டிக்காட்டினார்.) இவ்வாறான சிந்தனை மாற வேண்டும்.

இந்தியா இலங்கையை விட்டு வெளியேறும் போது எல்ரிரிஈ யை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தது. தவறுகள் எல்லாத் தரப்பிலும் உள்ளது. இந்தியாவை மட்டும் குறைகூற முடியாது. தமிழ் தலைவர்களுக்கும் பொறுப்பு உண்டு.

ஆனால் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின் பென்டூலம் மற்றப் பக்கத்திற்கு ஆடத் தொடங்கி விட்டது.

சீனா பெரு வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. சீனா அளவிற்கு இல்லாவிட்டாலும் இந்தியாவின் பொருளாதாரமும் 8 வீதம் முதல் 9 வீதம் வளர்ச்சி அடைகிறது. இந்தியா விரிவடைகின்றது. ஏனைய நாடுகளுக்கும் இந்தியா வாயில்களைத் திறந்து விடுகின்றது. இந்தியாவின் வளர்ச்சி அதன் அயல் நாடுகளுக்கும் சாதகமானதாகவே அமையும். ஏனெனில் இந்தியாவின் பாதுகாப்பு அதன் அயல்நாடுகளிலும் தங்கி உள்ளது. அதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் பயனை அயல்நாடுகளும் அனுபவிக்க வேணடும். அயல்நாடுகள் சுயாதீனமாகவே இயங்கும். அயல்நாடுகளில் வெளியார் வந்து பொருளாதார மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அதே சமயம் இதற்கு சில எல்லைகளும் உண்டு. இந்தியாவின் அயல்நாட்டில் வெளியார் ஒரு இராணுவத்தளம் அமைப்பதை இந்தியா அனுமதிக்காது. ஆகவே அயல்நாடுகளின் சுயாதீனத்தில் ஒரு சமநிலை பேணப்படும். 

இதற்கு நேபாள் சிறந்த உதாரணம். ஒரு நிலைக்கு மேல் இந்தியாவை மீறிச் செல்ல முடியவில்லை.

இலங்கையை எடுத்துக் கொண்டால் இந்தியாவின் உதவி வடக்கு – கிழக்குக்கு மட்டும் தான் இருக்க வேண்டியதில்லை. இலங்கை முழுவதற்குமே உதவியைப் பகிரவே விரும்புகிறது. வடக்கு – கிழக்கு இப்போது மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால் தற்போது வடக்கு – கிழக்கிற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது. தெற்கிலும் கூட மிகவும் கஸ்டமான நிலையில் வாழும் சிங்கள மக்கள் உள்ளனர்.

மீள் உறவு, மீள் கட்டுமானம், மக்களைப் பலப்படுத்தல், அரசியல் தீர்வு என்று நான்கு விடயங்கள் முக்கியமானதாக உள்ளது. இதில் அரசாங்கம் மீள் கட்டுமானத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்றது. நீங்கள் அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள். இதில் எதற்கு முன்னுரிமை என்பதில் மாறுபட்ட அபிப்பிராயங்கள் உள்ளது. அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஹில்லரி கிளிங்டன் மீள்கட்டுமானமும் அரசியல் தீர்வும் சமாந்தரமாகச் செல்ல வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். இது விடயத்தில் இலங்கை அரசு அரசியல் தீர்வைக் கைவிட முடியாது. அதற்கு சிறிது காலம் எடுக்கலாம். அதனால் தமிழர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும்.

இலங்கை விவகாரத்தை தமிழ்நாடு அரசே தீர்மானிப்பதாகக் கருதப்படுகிறது. அது அப்படியல்ல. அதற்காக தமிழ்நாட்டு அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று நான் சொல்லவில்லை. இந்தியாவில் உள்ளது ஒரு கூட்டரசாங்கம். அதில் மாநிலக் கட்சிகளும் பங்கேற்றுள்ளன. ஆனால் அவர்களுடைய மத்திய அரசின் முடிவுகளில் மாநில அரசுக்கு மட்டுப்படுத்தப்பட்ட குரலே உள்ளது. அது மட்டுமல்ல தமிழ்நாடு இந்தியாவிலேயே நான்காவது பெரிய வளர்ச்சியடைந்துவரும் மாநிலம். அதன் முக்கிய கவனம் தகவற் தொழில்நுட்பத்திலும் தொழில் உருவாக்கத்திலேமே அதிகம் உள்ளது. இலங்கை விவகாரம் தமிழ்நாட்டுக்கு முக்கியமான ஒரு விடயமல்ல” என கலாநிதி சந்திரசேகரன் தனது உரையில் குறிப்பிட்டார்.

Audienceஅதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நீண்ட கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் குறிப்பிட்ட விடயங்கள்,

”தற்போது இந்தியாவில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி ஓபாமாவோ, சீனாவில் உள்ள டேவிட் கமரூனோ இலங்கை விவகாரம் பற்றிப் பேசினால் நல்லது. ஆனால் அவர்கள் அது பற்றி பேசுவார்கள் என நான் நினைக்கவில்லை.

இந்தியா தொடர்ந்தும் இலங்கை அரசை அரசியல் தீர்வுக்கு, அதிகாரப் பரவலாக்கத்திற்கு வற்புறுத்தி வருகின்றது. அது 13 திருத்தச் சட்டம்+ + + என்பதாகவே உள்ளது. வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது தமிழ் மக்களிடையேயே பெருமளவில் பேசப்படவில்லை. இப்போதுள்ள நிலையில் அது சாத்தியமானதாக இல்லை.

இந்தியா மீண்டும் தமிழ் தேசியத்தை ஆயுதம் ஏந்த வைக்கும் நிலை இப்போது இல்லை. தொழில்நுட்பம், விஞ்ஞானம் மிகவும் மாற்றமடைந்துவிட்டது. அன்று இருந்த உலகம் இன்று இல்லை. இந்தியா ஒரு போதும் தமிழ் இயக்கங்களுக்கு அரசியல் விரிவுரை எடுக்கவில்லை. இந்தியா தமிழீழம் பெற்றுத் தரும் எனவும் கூறவில்லை. இந்த இயக்கங்களின் கைகளில் இருந்த ஆயுதங்கள் ஆபத்தானதாகிப் போன போது, இந்தியா இலங்கை இராணுவத்திற்கு உதவி செய்தது.

நடந்த தவறுகளுக்கு எல்லோருக்கும் பொறுப்பு இருக்கின்றது. உங்களுக்கும் பொறுப்பு இருக்கின்றது. மாத்தையாவுக்கு இந்திய புலனாய்வுத்துறையுடன் தொடர்பு இருப்பதாகக் கூறிக் கொலை செய்தீர்கள். மாத்தையாவுக்கும் இந்திய உளவுத்துறைக்கும் எவ்வித தொடர்பும் இருக்கவில்லை. அதற்கு ஆதாரம் இருந்தால் அதனை நான் பார்க்க விரும்புகிறேன். இப்படிப் பல சம்பவங்கள் நடந்துள்ளது. பலரை இந்திய முகவர் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அவர்களுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பே இருந்திருக்காது.

தமிழ் இயக்கங்களுக்குள் நாங்கள் ஈரோஸ் உடன் நெருக்கமாக இருந்தோம். புலிகளுக்கு மாற்றாக வருவார்கள் என்று கருதினோம். ஈரோஸில் கண்னியமான பலர் இருந்தனர். ஆனால் அது மட்டும் போதாது. அவர்களிடம் இராணுவ பலம், கட்டுப்பாடு  இருக்கவில்லை. அவர்களும் புலிகளிடம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டி வந்தது.

எல்ரிரிஈ முற்றாக முறியடிக்கப்பட்ட நிலையிலும் இலங்கையின் வடக்கு கிழக்கில் மூன்று பெரும் இராணுவப் படைப்பிரிவுகள் நிலை கொண்டுள்ளது. இது மிகவும் அதிகமானதே. ஆனால் இவ்விடயத்தில் இந்தியா எதுவும் கூற முடியாது. இது இலங்கையின் பாதுகாப்புத் தொடர்பானது. இதே நிலைமை இந்தியாவின் காஸ்மீரில் உள்ளது. ஆனால் இன்னமும் அங்கு ஆயுத வன்முறை இடம்பெற்றுக்கொண்டு உள்ளது. ஆனால் எந்த நாடு ஆனாலும் அதன் இராணுவம் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக அரசாங்கம் செயற்பட முடியாது.

எல்ரிரிஈ முற்றாக முறியடிக்கப்பட்டாலும் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள் மோசமான நிலையிலேயே சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். இதனை அரசின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும்.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்தியாவையும் சீனாவையும் பயன்படுத்துவது இந்தியாவுக்கும் தெரியும். எல்லாவற்றுக்கும் ஒரு சிவப்புக் கோடு உள்ளது. அதனைத் தாண்ட முடியாது. அது ராஜபக்சவுக்கும் தெரியும். அது மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்பு ஈழத்தை அனுமதிக்காது என்பதும் ராஜபக்சவுக்குத் தெரியும். நீங்கள் இந்தியாவின் உதவி இல்லாமல் ஈழத்தை அமைக்க வழிதேடிப் பாருங்கள்.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தற்போதுள்ள முரண்பாடு ஒரு பெரும் பிரச்சினையாக இன்று இல்லை. இரு நாடுகளுமே இதனை சுமுகமாகவே அணுகுகின்றன. இந்த முரண்பாட்டை அயல்நாடுகள் பயன்படுத்த முற்படுவதால் சீன – இந்திய உறவு மோசமான நிலைக்குச் செல்லலாம். ஆனால் வளர்ச்சி அடையும் இந்திய பொருளாதாரம் எல்லைகளைக் கடக்கின்றது. அது சீனாவுக்கும் செல்கின்றது. அதனால் இந்த உறவுகள் பாதிப்படைவது அந்தப் பிராந்தியத்தின் பொருளாதார விருத்திக்கு உகந்தது அல்ல என்பது உணரப்பட்டு உள்ளது. ஆகவே எதிர்காலத்தில் முதலீட்டைப் பாதுகாப்பதும் லாபத்தைப் பெருக்குவதுமே எதிர்கால உறவுகளைத் தீர்மானிப்பதில் முக்கிய அம்சமாக இருக்கும்.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த சர்வதேச நாடுகள் தலையிடுவதையோ ஐநா தலையிடுவதையோ இந்தியா தடுக்க முடியாது. இந்தியா ஐநா சாசனத்தில் கையெழுத்திட்ட ஒரு நாடு. ஐநா அமைதிகாக்கும் படைக்கு இந்தியா தனது இராணுவத்தை வழங்கி வருகிறது. இலங்கையில் நோர்வே மத்தியஸ்தம் செய்தது. நேபாள் வந்த ஐநா இந்திய விடயங்களில் தலையீடு செய்தது. ஐநா பல விடயங்களிலும் தேவையற்று மூக்கை நுழைக்கிறது. அதனை இந்தியா அனுமதிக்காது. இலங்கையில் ஐநா தலையீட்டை இந்தியா விரும்பாது.

மனித உரிமைகளைப் பயன்படுத்தி நாடுகளை மேலான்மை செய்வதையும் இந்தியா அனுமதிக்கப் போவதில்லை. மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக போர்க் குற்றங்களைக் கொண்டு வருவது எல்லாம் நடக்கப் போவதில்லை. அவ்வாறான விடயங்களை இந்தியா எதிர்க்கும். இந்தியாவுக்கும் இதே பிரச்சினைகள் போர்க் குற்றச்சாட்டுகள் காஸ்மீரில் உண்டு. இந்தியா எப்படி இதனை ஆதரிக்கும்? இதனையே தான அமெரிக்கா குவாண்டனமோ பேயில், ஈராக்கில் செய்கின்றது.

இலங்கையின் குடிப்பரம்பல் என்பது உறுதியானதாக இல்லை. வடக்கு – கிழக்கில் இருந்து மக்கள் வெளியேறுகின்றனர். நீங்கள் இங்கு வாழ்கிறீர்கள். எப்படி குடிப்பரம்பலை ஒரே நிலையில் பேண முடியும். வரதராஜப் பெருமாள் அண்மையில் குறிப்பிட்டார் ‘கடைசி யாழ்ப்பாணத் தமிழன் இலங்கையை விட்டு வெளியேறும் போது தமிழர் பிரச்சினை தீர்ந்துவிடும்’ என்று.

நீங்கள் மீண்டும் உங்கள் நாட்டிற்கே செல்ல வேண்டும். ஆனால் இலங்கையில் இன்னமும் அந்நிலை தோன்றவில்லை. சிங்கள மக்களும் வெளிநாடு செல்லவே விரும்புகின்றனர். ஆனால் இந்தியாவில் இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர். இலங்கையில் அவ்வாறான நிலை ஏற்பட பொருளாதாரம் முன்னேற வேண்டும். அபிவிருத்தி முன்னெடுக்கப்பட வேண்டும்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் நடந்து முடிந்த போரினால் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை. வெளிநாட்டு கட்டமைப்புகள் அவ்வாறே உள்ளன. ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்த ‘அடிடா’ அரசியலை விடவேண்டும். முரண்பாட்டு அரசியலை இனித் தொடர முடியாது. இவர்கள் இரு தரப்பு எல்ரிரிஈ யையும் கைவிட வேண்டும். புதிய சிந்தனையுடன் செயற்பட வேண்டும். இலங்கைக்குச் சென்று நிலைமைகளைப் பார்த்துவர வேண்டும். வடக்கு – கிழக்கு மற்றும் வறுமையில் வாடும் தென்பகுதி மக்களுக்கும் உதவ வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இன்னமும் பலமாக உள்ளனர். அவர்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டால் மீண்டும் ஒரு போராட்டத்தை ஏற்படுத்தக் கூடிய வல்லமை உடையவர்கள். அந்நிலை ஏற்படாமல் இலங்கை அரசு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும். அதனையே இந்தியா வலியுறுத்துகிறது’ என கலாநிதி சந்திரசேகரன் சபையில் இருந்துவந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கையில் சமூகங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கான அறிக்கை ஆவணி 02 குறைந்தபட்ச புரிந்துணர்வுக் குழுவின் உறுப்பினர் நிஸ்தார் மொகமட்டினால் கலாநிதி சந்திரசேகரனிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இதன் போது கருத்து வெளியிட்ட நிஸ்தார் மொகமட், ”இலங்கையின் பல்லின சமூகம் என்பதனை வெறுமனே மொழிவாரியான தமிழ் – சிங்கள சமூகங்கள் என்று பார்க்கும் நிலை முடிவுக்கு வரவேண்டும்” என வலியுறுத்தினார். ”முஸ்லீம்கள் முற்றாக தனித்துவமான ஒரு தேசிய இனம்” என்பதனை அவர் வலியுறுத்திக் கொண்டார்.

இறுதியாக தேசம்நெற் ஆசிரியர் ரி சோதிலிங்கம் நன்றியுரை வழங்க நிகழ்வு முடிவுற்றது. இந்நிகழ்வில் பன்முகப்பட்ட அரசியலாளர்களும் ஒரே அரங்கில் கூடி ஒன்றுக்கு ஒன்று முற்றிலும் எதிரான உரையாடலை கண்ணியமான முறையில் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பிரிதிநிதி முன்னிலையில் இலங்கை அரசு தொடர்பான காட்டமான கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள தீபாவளி நிகழ்வில் கலந்துகொள்வதற்கான அழைப்பை உயர்ஸ்தானிகர் அலுவலகப் பிரதிநிதி விடுத்த போது தன்னை இலங்கையராக கருதும் நிலையை இலங்கை அரசு இன்னமும் ஏற்படுத்தவில்லை என ராஜன் என்பவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான பல்வேறு கருத்துப் பரிமாற்றத்துடன் நிகழ்வு முடிவுக்கு வந்தது.

._._._._._.

தெற்காசிய ஆய்வுக் குழுவின் இயக்குநர் கலாநிதி சந்திரசேகரனுடனான சந்திப்பு

Chandrasekaran_Drதெற்காசிய ஆய்வுக் குழு –  South Asia Analytical Group – SAAG இன் இயக்குநரான கலாநிதி சந்திரசேகரன் உடனான கலந்துரையாடல் ஒன்று நவம்பர் 10 மாலை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ‘இலங்கை தொடர்பான இந்திய வெளிநாட்டுக் கொள்கைகளின் பரிமாணம்’ என்ற தலைப்பில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேசம்நெற் இணையமும் Accademy of Science and Arts for Tamils in Ceylon – ASATiC உம் இணைந்து இச்சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது.

கலாநிதி சந்திரசேகரன் தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு மிக நெருக்கமானவர். தற்போதும் அவரை இயக்குநராகக் கொண்டுள்ள தெற்காசிய ஆய்வுக் குழு இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் ஆளுமையுடைய வெளிநாட்டுக் கொள்கையைப் பிரதிபலிக்கின்ற ஒரு ஆய்வு நிறுவனமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை இனப்பிரச்சினை அதன் பின்னணி பற்றி மிக ஆழமான அனுபவத்தைக் கொண்டவர் கலாநிதி சந்திரசேகரன். அதேசமயம் இந்திய வெளிநாட்டுக் கொள்கை வகுப்பாளர்களுக்கும் நெருக்கமானவர். இந்த வகையில் அவருடனான இச்சந்திப்பு இலங்கை தொடர்பான இந்திய வெளிநாட்டுக் கொள்கையை விளங்கிக் கொள்ளவும் இலங்கை – இந்திய உறவைப் விளங்கிக் கொள்ளவும் உதவும்.

கலாநிதி சந்திரசேகரன் 2007ல் ஈரோஸ் அமைப்பின் நிறுவனர் ரட்னசபாபதியின் லண்டனில் நடைபெற்ற நினைவு மாநாட்டில் கலந்துகொண்டவர். அத்துடன் வன்னி யுத்தம் வேகமடைந்து கொண்டிருந்த காலப்பகுதியில் சர்வதேச மாநாடு ஒன்றுக்காக செல்கையில் லண்டன் வந்து சில சந்திப்புக்களையும் மேற்கொண்டிருந்தார்.

அப்போது தமிழீழ விடுதலைப் புலிகளது பலவீனம் அரசியல் தீர்வு 13வது திருத்தச் சட்டத்தை ஒட்டியது வடக்கு கிழக்கு அண்மைய எதிர்காலத்தில் இணைக்கப்படமாட்டாது போன்ற எதிர்வுகூறலை வெளியிட்டும் இருந்தார். இவை தேசம்நெற் இல் பிரசுரிக்கப்பட்டும் இருந்தது.

இச்சந்திப்பு சிறிய உரையைத் தொடர்ந்து ஒரு கேள்வி நேரமாகவே ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தேசம்நெற் உடன் தொடர்பு கொள்ளவும்.

கலாநிதி சந்திரசேகரனிடம் கேள்விகள் உள்ளவர்கள் அவற்றைப் இங்கு பதிவிடும்பட்சத்தில் அதற்கான அவரின் பதில்களைப் பெற முயற்சிக்கப்படும்.

தொண்டு நிறுவனங்கள் – உடனடியாகப் பதியுமாறு உத்தரவு

இலங்கையில் பணியாற்றும் அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் தொடர்பான 1980 ஆம் ஆண்டின் சட்டத்தில் அரசு திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.

 இதன்படி இதுவரை அரசிடம் பதிவு செய்து கொள்ளாத நிறுவனங்கள் உடனடியாக பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இப்படி பதிவு செய்து கொள்ளும் நிறுவனங்கள் அரசால் எழுத்துபூர்வமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.இந்த உத்தரவு அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது அரசு கொண்டுள்ள சந்தேகத்தை வெளிப்படுத்துவதாகவே கருத வேண்டியுள்ளது என்று தன்னார்வ தொண்டு அமைப்புகள் கருத்து வெளியிட்டுள்ளன.