ஜனநாயகத்திற்கு ஆதரவான பர்மிய தலைவரான ஆங் சாங் சூச்சி வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ரங்கூனில் இருக்கின்ற அவரது இல்லத்தில் இருந்து ஆங் சாங் சூச்சி வெளியே வந்த போது ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் ஆரவாரித்தனர். கடந்த ஏழாண்டு காலமாக இவர் இந்த வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
அவரது இல்லத்தை சுற்றியிருந்த பாதுகாப்பு தடைகளை பாதுகாப்பு அதிகாரிகள் அகற்றினர். ஆதரவாளர் எண்ணிக்கை அதிகமானதை தொடர்ந்து ஏராளமான அதிரடி பொலிஸார் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.
அமைதிக்கான நோபல் பரிசை வென்றவரான 65 வயதான ஆங் சாங் சூச்சி கடந்த 21 ஆண்டு காலத்தில், 15 ஆண்டு கால பகுதி தடுத்தே வைக்கப்பட்டிருந்தார்.
இவர், முன்னரே, அதாவது கடந்த வருடமே விடுவிக்கப்பட வேண்டியவராக இருந்தார். ஆனால் அமெரிக்கர் ஒருவர் வாவியைக் கடந்து நீந்திச் சென்று சூச்சியின் வீட்டுக்குச் சென்ற சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, அவர் சூச்சியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் எனக்கூறி, இறுதியாக மீண்டும் தடுத்துவைக்கப்பட்டார்.
கடந்த ஞாயிறன்று இராணுவ ஆட்சியாளர்களின் ஆதரவுபெற்ற கட்சியே, இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றது. ஆனால் இந்தத் தேர்தல் முறைகேடுகள் மிக்கது என பரவலாக கண்டிக்கப்பட்டது.
சனிக்கிழமை காலை முதலே, சூச்சியின் விடுதலைச் செய்தியைக் கேட்பதற்காக, அவரது வீட்டுக்கருகிலும் இதுவரை தடை செய்யப்பட்ட நிலையிலுள்ள என்.எல்.டீ என்ற ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் தலைமையகத்துக்கு அருகிலும் மக்கள் கூட்டம் உணர்வுபூர்வமாக காத்திருந்தது.
அனேகமானவர்கள் ‘நாம் ஆங்சாங் சூச்சிக்கு தோள்கொடுப்போம்’ என்ற பொருள்படும் டீசர்ட்டுகளுடன் காணப்பட்டனர்.
மாலை நேரமளவில், சூச்சியின் வாவிக் கரையோரத்து வீட்டுக்குச் செல்லும் பாதையை மறித்து போடப்பட்டிருந்த பாதுகாப்புத் தடைக்கு எதிர்ப்புறமாக இருந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கும் ஆயுதந் தரித்திருந்த கலகத்தடுப்புப் பொலிசாருக்கும் இடையில் வாக்குவாதங்களும் தள்ளு முள்ளுகளும் இடம்பெற்றன.
அதனைத்தொடர்ந்து, அந்த மக்கள் கூட்டத்தில் பலர் நடு வீதியிலேயே அமர்ந்துவிட்டனர்.
பின்னர், மாலை ஐந்து மணியளவில் நிலைமை இன்னும் மோசமடைந்த போது பாதுகாப்புப் படையினர் தடைகளை அகற்றத் தொடங்குவதாக செய்திகள் வர ஆரம்பித்தன.
இறுதியாக,அதிகாரிகளின் கார்கள் வீட்டு வளாகத்துக்குள் நுழைவதைக் காணமுடிந்தது.பின்னர், விடுதலை உத்தரவு சூச்சியிடம் வாசிக்கப்பட்டதாக சிவில் உடையில் வந்த அதிகாரிகள் அறிவித்தனர்.
உடனடியாக நூற்றுக்கணக்கணக்கான மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் சூச்சியை வாழ்த்துவதற்காக அவரது வீட்டை நோக்கி ஒடிச்சென்றனர்.
அதனையடுத்து, பாரம்பரிய உடையுடன் ஆங்சாங் சூச்சி, அவரது வீட்டுவளாக வாயிலில் உள்ள பீடத்திலிருந்து மக்கள் முன்னிலையில் தோன்றினார்.மக்கள் கூட்டம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது.தேசிய கீதத்தைப் பாடி மக்கள் கௌரவத்தை செலுத்தினார்கள்.
1947ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட, பர்மாவின் சுதந்திர போராட்ட வீரராக சித்தரிக்கப்படும் ஜெனரல் ஆங் சானின் மகளாக 1945 ஆம் ஆண்டில் பிறந்தார் சூச்சி.
1960களில் பர்மாவிலிருந்து வெளியேறிப்பின் பிரிட்டனில் கல்வி பயின்ற இவர், 1988 ஆம் ஆண்டில் தனது தாயாரின் உடல்நலனைக்கருத்தில் கொண்டு நாடுதிரும்பினார்.
இக்காலத்தில், சர்வாதிகார ஆட்சிநடத்திய ஊன ந வின் இற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டபோதே 89 இல், பர்மிய ஜூன்டா ஆட்சியாளர்களால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இராணுவ சட்டத்துக்குள்ளாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.
1990 ஆம் ஆண்டில் சூச்சியின் ஜனநாயக ஆதரவு முன்னணிக்கட்சி வெற்றிபெற்றபோதும் இராணுவத்தினர் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை.
1991 ஆம் ஆண்டில் நோபல் பரிசை வென்ற ஆங்சாங் சூச்சி, 1995 ஆம் ஆண்டில் வீட்டுக்காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் அவரது நடமாடும் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
2000 ஆம் ஆண்டில் மீண்டும் வீட்டுக் காவலுக்குள்ளானார் சூச்சி.
இறுதியாக இந்த மாதத்தில் நடைபெற்ற தேர்தலை, சூச்சியின் என்.எல்.டி கட்சி நிராகரித்த நிலையில், அந்தக்கட்சி தடைசெய்யப்பட்டது.
தற்போது சூச்சியின் நீண்ட வீட்டுக் காவலும் ஒருவாராக முடிவுக்கு வந்துவிட்டது. பர்மாவின் அடுத்த அரசியல் களம் எவ்வாறு அமையப்போகிறது.
சூச்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை முழு உலகும் மிக உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது.