15

15

பல்கலைக்கழகம் முதல் மருத்துவமனை வரை தொடரும் துஸ்பிரயோகங்கள் : மாணவியின் சாட்சியம் : த ஜெயபாலன்

”பெண்கள் மேலதிகாரிகளால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர்” என்றும் ”யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் தற்கொலை, தற்கொலை முயற்சிகள் அதிகரித்து உள்ளது” என்றும் யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அண்மைய நிகழ்வுகளில் சுட்டிக்காட்டி இருந்தார். ஏற்கனவே இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள், மற்றும் தற்போது இடம்பெறுகின்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களின் பின்னணியில், பல்கலைக்கழக விரிவுரையாளர்களே உள்ளதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டி உள்ளார்.

நீண்ட காலம் இலங்கையில் நிலவிய யுத்த சூழலை தங்களது துஸ்பிரயோகங்களுக்கான விளைநிலமாகப் பயன்படுத்திய பாதகர்கள் தற்போது ஏற்பட்டுள்ள யுத்தமற்ற சூழலில் வெளிச்சத்திற்கு வந்துகொண்டுள்ளனர். தேசம்நெற் இல் வெளியான கட்டுரைகளை அடுத்து பாதிக்கப்பட்ட சிலர் வெவ்வேறு வழிகளில் எம்மை மறைமுகமாக அணுகி உள்ளனர். அவர்கள் தங்களை இனம் காட்டமுடியாத நிலையில், அவர்களது வாக்கு மூலத்தை சாட்சியமாக ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இருப்பினும் இவற்றைக் கடந்து உறுதியான சாட்சியங்களுடன் மாணவி ஒருவர் முன்வந்துள்ளார். அதிபர் இமெல்டா சுகுமார் வெளிப்படுத்தியது எமது சமூகத்தில் மறைந்து குவிந்து கிடக்கின்ற சீரழிவின் ஒரு பகுதியே என்பதனை அந்த மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியானது உறுதிப்படுத்துகிறது.

பொது மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் இளம்பெண்களை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து விசேடமாகக் கவனிக்கும் மருத்துவர்கள் – மாணவியின் சாட்சியம்

1984ல் இலங்கையின் மத்திய மலைநாட்டில் கண்டியில் பிறந்த பெண் இவர். இவரின் பெற்றோர் தமிழும் சிங்களமும் என்பதால் சிங்களத்திலும் இவர் தேர்ச்சி பெற்றிருந்தார். மலையகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் உழைப்பிற்காக கொழும்புக்குச் சென்று வாழ்ந்தனர். கபொத சாதாரண தரத்தில் (O/L) படித்துக் கொண்டிருந்த காலம் அது. இளமையில் வறுமை இருந்த போதும் அம்மாணவியின் அழகில் வறுமை இருக்கவில்லை. துரதிஸ்ட வசமாக மிகுந்த நோய்வாய்ப்பட்டார். அடிக்கடி மயக்கம் ஏற்படும். கடுமையான வலி ஏற்படும். அதனால் கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அம்மாணவியைப் பரிசோதித்ததில் அவர் இதயம் தொடர்பான நோயுடையவராகவும் அது சிக்கலானதாகவும் விசேட நிபுணத்துவம் பெற்ற ஒருவரின் கீழ் பார்க்கப்பட வேண்டியதாகவும் இருந்தது. அதனால் இலங்கையில் மிகவும் பிரபல்யமான மருத்துவ நிபுணரின் கீழ் பதிவு செய்யப்பட்டார்.

இவருடைய இதய நோயக்கு சிகிச்சை அளிக்க வந்தவர் இதயமற்ற ஒரு மருத்துவ நிபுணர் என்பதை அம்மாணவி வெகுவிரைவிலேயே அறிந்துகொண்டார். இந்த மருத்துவ நிபுணர் யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபல்யம் வாய்ந்த பத்திரிகை ஆசிரியரினதும் பிரபல்யமான கல்லூரியினது அதிபரினதும் புதல்வர். யாழ் வைத்தியசாலையின் தலைமை வைத்தியராக இருந்தவர். யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் விரிவுரையாளராக இருந்தவர். தற்போது பிரித்தானிய பல்கலைக்கழகம் ஒன்றிற்கு தெற்கு ஆசியாவில் உள்ள குறிப்பான நோய்கள் பற்றி கருத்துப் பரிமாற்றத்திற்கு வருபவர்.

மாணவியைப் பரிசோதித்ததில் அவருக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாணவிக்கு ஏற்பட்ட இதய நோய்க்கான சிகிச்சை என்பது இலங்கையில் சாதாரணமான ஒரு விடயமல்ல. இலங்கை முழுவதிலும் உள்ள இதயநோய் சத்திரசிகிச்சை செய்யப்பட வேண்டிய நோயாளிகள் அனைவருமே கொழும்பு பொது மருத்துவமனைக்கே அனுப்பி வைக்கப்படுவர். பணவசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைக்குச் சென்று அங்கே உடனடியாகச் சிகிச்சையை முடித்துக்கொள்வர். ஆனால் வசதி அற்றவர்கள் பொது மருத்துவமனையில் மாதங்களாக வருடங்களாக காத்திருக்க வேண்டி ஏற்படும்.

காரணம் இவ்வாறான நிபுணர்கள் பெரும்பாலும் தனியார் மருத்துவ மனைகளிலேயே பணி செய்கின்றனர். தனியார் மருத்துவமனையில், பொது மருத்துவமனையில் ஒரு சிகிச்சைக்கு வழங்கப்படும் நிதியைவிடப் பல மடங்கு அதிகம் வழங்கப்படுகிறது. அதனால் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே இவர்கள் பொது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். (இவ்வாறு தனியார் மருத்துவமனையில் பணியாற்றுவது சட்டத்திற்குப் புறம்பானது அல்ல.) இலங்கை முழுவதும் இருந்து இவ்வாறான சிகிச்சைக்கு வரும் பல நூற்றுக் கணக்காண இந்த மாணவியைப் போன்ற ஏழைக் குடும்பப் பின்னணியில் வருவோர் மாதங்களாக வருடங்களாக கொழும்பு மருத்தவமனையில் காத்துக் கிடக்கின்றனர்.

இவ்வாறு 1999ம் ஆண்டில் கொழும்புப் பொது மருத்துவமனையில் இம்மாணவி அனுமதிக்கப்பட்டார். நோய் சிக்கலானதாக இருந்தமையால் 2001 முதல் குறிப்பிட்ட மருத்துவ நிபுணரின் கீழ் இந்த மாணவி பதிவுசெய்யப்பட்டார். முதற் சந்திப்பில் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவ, மாணவிகளுடன் அந்த மருத்துவ நிபுணர் அந்த மாணவியை முதற் தடவையாகப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்த பார்வையிடல்களின் போது மாணவி மீது தனிப்பட்ட அக்கறை ஆரம்பமானது. நிரையாக அடுக்கப்பட்ட கட்டில்கள் ஒரு திரையினால் மட்டும் மறைக்கப்பட்ட நிலையில் நிபுணர் பிரிசோதணை என்ற பெயரில் தகாத தொடுகைகளில் ஈடுபட்டு உள்ளார். ஒரு வைத்திய நிபுணரின் பரிசோதணையின் எல்லைகளைக் கடந்த இந்தச் செய்கைகளை இளம் மாணவி உணர்ந்து கொள்ள நீண்ட காலம் எடுக்கவில்லை. அந்த மருத்துவ நிபுணர் இந்த மாணவியை தன்னுடைய இச்சைகளுக்கு உட்படுத்த ஆரம்பித்தார்.

இச்சம்பவம் இடம்பெறுவதற்கு பத்து வருடங்களுக்கு முன் இந்த மருத்துவ நிபுணர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அப்போதைய பிரதித் தலைவராக இருந்த மாத்தையாவுக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர். பிரேமதாசா அரசாங்கத்துடனும் நெருக்கமாக இருந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாசா அரசாங்கத்துக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இவர் முக்கிய பங்கெடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இப்பேச்சுவார்தை முறிவடைந்த போது இம்மருத்துவ நிபுணர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனைச் சந்தித்து பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க முற்பட்டு இருந்தார். அப்போது வே பிரபாகரன், ”நீங்கள் வைத்தியத்தைப் பாருங்கள். நான் அரசியலைப் பார்க்கிறேன்’ என்று தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்திருந்தது. மேலும் மாத்தையா தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதுடன் இந்த மருத்துவ நிபுணரும் கொழும்பு வந்துவிட்டார்.

இவ்வாறு அரசியல் செல்வாக்கும் பண பலமும் தொழிற் திறமையும் உடைய ஒருவர் இவ்வாறான குற்றத்தைப் புரிகின்ற போது பாதிக்கப்படுபவர்கள் அதனை எதிர்க்கின்ற தடுக்கின்ற ஆற்றலைக் கொண்டிருப்பதில்லை என்பதை சரியாகக் கணித்தே அந்தக் குற்றத்தை இழைக்கின்றனர். மலையகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி தன்னுடலின் மீது ஒரு மருத்துவரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையை தன் பெற்றோரிடமே எடுத்துச் சொல்ல முடியாத நிலையில் தனக்குள்ளேயே புளுங்கவே முடிந்தது.

நாட்கள் நகர நகர அந்த மாணவியின் உள்ளமும் பாதிப்படைந்தது. 2002ல் அந்த மருத்துவ நிபுணர் மாணவியை மாதத்தில் ஒரு தடவை பார்வையிட நேரம் வழங்கப்பட்டது. மாணவியை பரிசோதணைக்கு முன் குளித்துவிட்டு இருக்குமாறும் அணியும் ஆடைகள் பற்றியும் கட்டளையிட்டுள்ளார் மருத்துவ நிபுணர். மருத்துவ நிபுணரை சந்திக்கும் நாள் நெருங்கும் போதெல்லாம் அந்த மாணவி பயத்தினால் மயங்கி வீழ்ந்தால். தனக்கிருந்த நோயின் வலியிலும் பார்க்க அந்த நோயைக் குணமாக்க வந்த மருத்துவ நிபுணர் அப்பெண்ணின் உடல்மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறை அவருக்கு அதிக வலியையும் உளைச்சலையும் கொடுத்தது.

மாணவியின் பெற்றோரோ மருத்துவ நிபுணர் தங்கள் மகளைத் தனிப்பட்ட முறையில் கவனித்து சிகிச்சை அளிக்கின்றார் என்ற மகிழ்ச்சியில் உள்ளனர். மனித இயல்புகளையும் நடவடிக்கைகளையும் மிகுந்த நிபுணத்துவத்துடன் அறிந்திருந்த அந்த மருத்துவ நிபுணர், பெற்றோருடன் மிக நட்பான உறவை ஏற்படுத்திக் கொண்டார். அந்த மாணவியை அப்பலோ தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கவும் முன்வந்தார். தங்களிடம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வசதியில்லை என்பதனை அவர்கள் தெரிவித்த போது, குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் அங்கு பார்வையிட அழைத்து வருமாறும் அதற்கான செலவை தானே செலுத்தவும் முன்வந்தார். பெற்றோரைப் பொறுத்தவரை அந்த மருத்துவ நிபுணர் கடவுளுக்கே சமமானவர் ஆனார்.

ஆனால் அந்த மாணவியின் வலியோ உச்சத்திற்கு சென்றது. வெறும் திரை மறைவிலேயே தன்னுடல் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட மருத்துவ நிபுணர், தனியார் மருத்துவமனையின் மூடிய அறையில், தன்னை என்ன பாடுபடுத்துவார் என்பதை அம்மாணவி ஊகித்துக் கொள்ள அதிகநேரம் ஆகவில்லை. அம்மாணவியின் பெற்றோர், தங்கள் மகளுக்கு தனிப்பட்ட முறையில் விசேட கவனிப்பை மருத்துவ நிபுணர் வழங்குகிறார் என்று காத்திருக்க, உள்ளே மருத்துவ நிபுணர் முழுஅளவிலான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டார். இவ்வாறு ஒரிரு தடவைகள் அல்ல பலமுறை அம்மாணவி அவஸ்தைக்கு உள்ளானாள். ஒவ்வொரு தடவையுமே பெற்றோர் அவளுக்கு சிகிச்சை இடம்பெறுகிறது என்று எண்ணி மருத்துவ நிபுணருக்கு தங்கள் வேண்டுதலைச் செய்து கொண்டிருந்தனர்.

பெண்ணுடைய சம்மதம் இன்றி பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை செலுத்துவது மட்டும் தான் பாலியல் பலாத்காரம் என்ற முன்னைய வரையறைகள் அடிப்படையில் அந்த மருத்துவ நிபுணர் செய்தது பாலியல் பலாத்காரம் அல்ல. ஆனால் பெண்ணுடைய சம்மதம் இன்றி அவளுடலை ஆக்கிரமிப்பதும் அவளுடலை வன்முறை செய்வதும் பாலியல் பலாத்காரம் என்ற தற்போதைய வரையறைகளை இந்த மருத்துவ நிபுணர் மிகமோசமாக மீறியுள்ளார். அதிலும் ஒரு மருத்துவராக தொழில் நேர்மையுடன் தொழிலுணர்வுடன் செயற்பட வேண்டிய ஒருவர், அம்மாணவியின் கையறுநிலை, ஏழ்மை இவற்றைப் பயன்படுத்தி மிகத் திட்டமிட்டு தன்னுடையை இச்சைக்கான இரையைத் தேர்வுசெய்துள்ளார்.

அந்த மாணவியை தன்னுடைய பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திய அந்த மருத்துவ நிபுணர், அவருடைய மருத்துவ கண்காணிப்பில் இருந்த நான்கு ஆண்டுகளில், அம்மாணவியினுடைய நோய்க்கு குறைந்தபட்ச சிகிச்சையைக் கூட அளிக்கவில்லை. ஒவ்வொரு தடவையும் அந்த மாணவியைப் பார்வையிட வரும்போதும் தனது காமத்தைத் தீர்த்துக் கொண்டதற்கு அப்பால் அம்மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. தன்மீதான வன்முறையை நிறுத்தும்படி அம்மாணவி பலதடவை மன்றாடிய போதும், மருத்துவ நிபுணர் தன் வன்முறையை நிறுத்திக் கொள்ளவில்லை. இந்த நிபுணர், அந்த மாணவியை தனது இச்சைக்கு பயன்படுத்துகிறார் என்று அறிந்து கொண்ட அம்மாணவியைப் பார்வையிடும் சிங்கள மருத்துவரும், அம்மாணவி மீது தனது பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அந்த மாணவி அதற்கு சம்மதிக்காதபோது அவர் தனது இச்சையை நிறுத்திக் கொண்டார்.

பெற்றோர் அந்த மருத்துவ நிபுணரை கடவுளுக்கு அடுத்த ஸ்தானத்தில் வைத்துள்ளனர். அந்த மாணவி உண்மையைக் கூறினாலும் அதனை ஏற்றுக்கொள்ள சமூகக் கட்டமைப்பும் சமூகச் சூழலும் இடம்கொடுக்காது. இந்த வன்முறையில் இருந்து தன்னுடலைக் காப்பாற்ற அதனை அழிப்பதே ஒரேவழியென்ற முடிவுக்கு அந்த மாணவி வருகின்றாள். மாதங்களாக, வருடங்களாக தன்னுடல் மீது மேற்கொள்ளப்பட்ட அத்துமீறலை தாங்க முடியாத அந்த மாணவி ஒரிரு தடவை தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார். மரணம் சாத்தியப்படவில்லை.

தன்னைக் காப்பாற்ற இலங்கையை விட்டு வெளியேறுவதே அவருக்கு அடுத்த உபாயமாக இருந்தது. தங்களுக்கு இருந்த சொத்துக்களை விற்று ஒருவகையில் படிப்பதற்கு என்ற போர்வையில் லண்டன் வந்து சேர்ந்தார், அந்த மாணவி. 2001ல் ஆரம்பித்தது 2005ல் லண்டன் வந்ததுடன் அதற்கு முற்றுப்புள்ளி என்றே நினைத்திருந்தார். ஆனால் மருத்துவ நிபுணர் விடவில்லை. பெற்றோரிடம் அந்த மாணவியின் தொலைபேசியைப் பெற்றுக்கொண்ட அந்த மருத்துவர் கற்கைகளுக்காக பிரித்தானியா வரும் ஒவ்வொரு தடவையும் இந்த மாணவியை முயற்சித்துள்ளார். ஆனால் மீண்டும் தன்னுடல் மீது இந்த மருத்துவ நிபுணர் வன்முறையில் ஈடுபடாதவாறு அவரை அந்த மாணவி தவிர்த்துள்ளார்.

இலங்கையில் இருந்த போது அந்த மாணவியின் உடல்மீது மேற்கொண்ட பாலியல் வன்முறையை இப்போது வார்த்தைகளில் தவளவிட்டார், அந்த மருத்துவ நிபுணர். அந்த மாணவி தொலைபேசியைத் துண்டிக்கும் பட்சத்தில் அவரின் பெற்றோரிடம் முறையிட்டு மீண்டும் இணைப்பை ஏற்படுத்திக் கொள்வார். தொலைபேசியில் மாணவியுடன் கதைத்தபடி சிற்றின்பத்தில் திளைத்தார்.

இந்த மாணவி மருத்துவ நிபுணரைத் துண்டிக்க முயலும் ஒவ்வொரு தடவையும் அவரின் தாயார் அவரை நன்றி மறந்து செயற்படுவதாகவும், எதிர்காலத்தில் அப்படிச் செய்தால், தான் தற்கொலை செய்வேன் என்றும் தனது மகளை மிரட்டியுள்ளார். மிகவும் பலவீனமான உளவியல் தன்மையுடைய இப்பெண் யாரையும் எளிதில் நம்பக் கூடியவர். அவருடைய உளவியலையும் குடும்பத்தின் நிலையையும் ஏழ்மையையும் மிக அவதானமாகக் கைக்கொண்டு தன்இச்சையை அம்மருத்துவ நிபுணர் தொடர்கின்றார்.

இந்த நிலையில் அந்த மாணவிக்கு இருந்த சிறு வேலையும் இல்லாது போக வீட்டு வாடகை செலுத்த முடியாத நிலையில் வீட்டில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார். அப்போது தங்கியிருந்த வீட்டுக்கு வாடகை செலுத்த முடியாத நிலையில் தேசம்நெற் ஆசிரியர் என்றும் அறியாத நிலையிலேயே எமது உதவியை நாடினார். அதிலிருந்தே அந்த மாணவியினுடைய கடந்த காலம் பற்றியதும் தொடர்வதுமான கசப்பான சம்பவம் எமக்குத் தெரியவந்தது.

இச்சம்பவம் தெரிய வந்ததும் ஆதாரத்தைப் பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டோம். இந்தப் பின்னணியை அறியாத அந்த மருத்துவர் அன்றும் ஒருநாள் தொடர்புகொண்டார். அவர் தனது வார்த்தைகளால் பாலியல்வல்லுறவு கொண்டு சிற்றின்பத்தில் திளைத்தது முழுமையாகப் பதிவு செய்யப்பட்டது. இந்தப்பதிவில் அவர் பல வருடங்களாக அந்த மாணவியை தன்னுடைய பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்திக் கொண்டது பற்றிய குறிப்புகளும் பதிவாகியது. இதே போன்று மற்றுமொருநாளும் இவருடைய இந்த காமுகத்தனம் பதிவாக்கப்பட்டு அவர் கடந்த மாதம் (ஒக்ரோபர்) இறுதிப்பகுதியில் எச்சரிக்கப்பட்டார்.

பதிவு செய்யப்பட்ட உரையாடல் முற்றுமுழுதான பாலியல் பிரயோகங்களைக் கொண்டிருப்பதால் அதன் ஒலியையோ எழுத்துருவையோ இங்கு பதிவு செய்வதை தவிர்க்கிறேன்.

இன்றுள்ள சமூகக் கட்டமைப்பில் தனக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமையை தன் அடையாளத்துடன் அப்பெண் வெளியே கொண்டுவர அஞ்சுகின்றார். அரசியல் செல்வாக்கும், செல்வச் செழிப்பும், தொழிற்திறமையும் கொண்ட ஒரு சமூகப் பிரபல்யம் பெற்ற மருத்துவ நிபுணரை கூலி வேலை செய்கின்ற குடும்பத்தில் இருந்து வந்த ஒரு இளம்பெண் சட்டப்படியும் சமூகக் கட்டமைப்பிலும் எதிர்கொள்வது என்பது சாத்தியமானதாக இல்லை. அதனால் அந்த மாணவியின் மட்டுமல்ல பல நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்ட மாணவிகளின், பெண்களின் நிலை இவ்வாறு தான் உள்ளது. அதனால் யாழ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களும் இவ்வாறான மருத்துவர்களும் தொடர்ந்தும் தங்கள் வன்முறைகளை பெண்கள் மீது கட்டவிழ்த்து விடுகின்றனர். முத்தையா யோகேஸ்வரி என்ற 13 வயதே நிரம்பிய வேலைக்கு அமர்த்தப்பட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய விரிவுரையாளர் தங்கராசா கணேசலிங்கம் தற்போதும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ளார். ஆனால் இதனை வெளிக்கொண்டுவந்த இளம் பெண் முத்தையா யோகேஸ்வரி தற்போது உயிருடன் இல்லை என்றே தெரியவருகின்றது.

யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியையே இடமாற்றுகின்ற அரசியல் பலம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு இருந்தது. ஆனால் முத்தையா யோகேஸ்வரியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய தங்கராசா கணேசலிங்கம் இன்னமும் யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர். தங்கராசா கணேசலிங்கம் தவறு செய்திருக்கலாம் அல்லது நிரபராதியாக இருக்கலாம். ஆனால் ஒரு பாரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவர் பல்கலைக் கவுன்சிலின் எந்தவொரு விசாரணையும் இன்றி எப்படி மீண்டும் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டார்? சிவச்சந்திரன் போன்ற பெண்ணிலை வாதியைக் கொண்டுள்ள பல்கலைக்கழகக் கவுன்சில் எப்படி பெண்கள் மீதான இந்த பாலியல் துஸ்பிரயோகங்களை தொடர்ந்தும் அனுமதிக்கிறது?

பல்கலைக்கழகமும் தமிழ் அரசியல் தலைமைகளும் தவறான முன்னுதாரணங்களை அமைப்பதை முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும். தவறான நபர்களை பொறுப்பான பதவிகளில் நியமிப்பவர்களும் அந்தத் தவறுகளுக்கு பொறுப்பாகின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் சில தேசம்நெற்க்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில சாட்சியங்களை தேசம்நெற் இல் எதிர்பார்க்கலாம்.

(குறிப்பு: தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிக்கொண்டுவர விரும்புபவர்கள் தேசம்நெற் உடன் அனாமதேயமாகவும் தொடர்பு கொள்ளலாம்.)

அண்மையில் யாழ் பல்கலைக்கழகம் பற்றி அங்கு பட்டப்படிப்பை முடித்த மாணவனுடன் உரையாடிய போது, சில பெண்கள் விரிவுரையாளர்களிடம் தங்களை இழந்து திறமைச் சித்திபெறத் தயாராக இருப்பதாகவும் அதனால் விரிவுரையாளர்களை பேராசிரியர்களைத் தவறு சொல்வதில் அர்த்தமில்லை என்றார். ஒரு விரிவுரையாளருடைய ஒரு பேராசிரியருடைய கடமை தொழில் பொறுப்பு என்பனவற்றை கவனத்திற்கொள்ளாமல் பாதிக்கப்படுகின்ற மாணவிகள் மீதே குற்றம் சுமத்துகின்ற ஒரு போக்கே உள்ளது. இது ஆணாதிக்க சமூக்க கட்டமைப்பின் ஒரு பிரதிபலிப்பே. பட்டப்படிப்பிற்கு செல்கின்ற மாணவிகளுடைய நிலை இப்படி இருக்கும் போது கண்டியில் கூலித் தொழிலாளிகளின் குடும்பத்தில் இருந்து கொழும்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்ற 14 வயதான இளம்பெண், அரசியல் செல்வாக்கும், செல்வச் செழிப்பும், தொழிற்திறமையும் கூடிய ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்டால் பெற்றோரிடமே சென்று முறையிட்டால் நம்ப மாட்டார்கள் என்ற நிலையில் எங்கு சென்று முறையிட முடியும்?

ஜே.வி.பி உறுப்பினர்கள் மீது யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாதவர்கள் தாக்குதல்.

JVP Bannerயாழ்ப் பாணத்தில் ஜே.வி.பி உறுப்பினர்கள் மீது நேற்று ஞாயிற்றுக் கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு யாழ்.கந்தர்மடத்தில் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனின் இல்லத்தில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும், ஜே.வி.பியின் உறுப்பினர்கள் மூவர் உரையாடிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள்களில் சென்ற இனந்தெரியாத நபர்கள் வீட்டிற்குள் புகுந்து ஜே.வி.பி உறுப்பினர்கள் மீது தாக்குதல்களை நடத்தினர். அத்துடன் ஜே.வி.பியினர் சென்ற வாகனமும் தாக்குதலுக்குள்ளானது.

இத்தாக்குதலில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுனில் ஹெந்துநெத்தி, அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர் எம்.மோகன். கட்சியின் யாழ்.குழுத்தலைவர் லலித்குமார், ஜே.வி.பியின் பத்திரிகையான ‘லங்கா’வின் ஊடகவியலாளர் பிரியந்த ஆகியோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அங்கு வந்த பொலிஸாரினால் இவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர்.

தடுத்து வைக்கப்பட்டோர் மற்றும், காணாமல் போனோரின் விபரங்களை வெளியிட வேண்டும் எனக்கோரி யாழப்பாணத்தில் இன்று திங்கள் கிழமை ‘நாம் இலங்கையர்’ என்ற அமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருந்தது. இதற்காகவே ஜே.வி.பியினர் யாழ்ப்பாணம் சென்று பல்வேறு தரப்பினரைச் சந்தித்து உரையாடினர். இதனடிப்படையில் நேற்று மாலை 6.30 மணியளவில் யாழ்.கந்தர்மடத்திலுள்ள பத்மினி சிதம்பரநாதனின் இல்லத்திற்குச் சென்று அவருடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கையில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

”நாவற்குழியில் காணிகளின் உறுதிப்பத்திரங்கள் இருந்தால் உடனடியாக குடியேற்றப்படுவர்” மீள்குடியேற்ற அமைச்சர்

milroy_fernando.bmpயாழ். நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் காணியில் குடியேறியுள்ள சிங்கள மக்களிடம் அக்காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் இருக்குமானால் 24 மணிநேரத்திற்குள் அவர்கள் அக்காணிகளில் குடியேற்றப்படுவர் என மீள்குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தற்போது அங்கு குடியேறியுள்ளவர்களை வெளியேற்றுவது குறித்து வீடமைப்பு அதிகார சபையினர் தான் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வினையொட்டி ஆயிரம் மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மானிப்பாய் இந்துக்கல்லூரியில் நடைபெற்ற போது அமைச்சர் அதில் கலந்து கொண்டு திரும்புகையில் ஊடகங்கள் நாவற்குழி குடியேற்றம் குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, நாவற்குழியிலுள்ள வீடமைப்பு அதிகாரசபையின் காணியில் சிங்கள மக்கள் அத்துமீறி குடியேறியுள்ளமை குறித்து வீடமைப்பு அதிகார சபையினர்தான் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசாங்க அதிபர் என்ற முறையில் தான் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது எனவும் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தருவதாகக் கூறி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கிளிநொச்சியில் கைது!

Police_Logo

இறுதி யுத்தத்தில் காணாமல் போனோரைக் கண்டுபிடித்துத் தருவதாகக் கூறி காணாமல் போனவர்களிடம் பணம் பெற முற்பட்டவர்கள் நேற்று ஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சியில் வைத்து பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.

காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தருவதாகக் கூறும் தொலைபேசி அழைப்புகள் கடந்த ஒரு வாரமாக வன்னியிலுள்ள மக்கள் பலருக்குச் சென்றுள்ளது. காணாமல் போனவர்களின் உறவினர்கள் இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பேசினால் காணாமல் போனவர்களை கண்டபிடித்துத் தர முடியும் எனவும், இவ்விடயம் தொடர்பாக வேறு எவருக்கும் தெரியக்கூடாது எனவும் அத்தொலைபேசி இலக்கத்திலிருந்து பேசியவர்கள் கூறியிருக்கின்றனர்.

மேஜர் சீலன், மேஜர் மதியழகன் அகியோர் என தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். காணாமல் போன போராளிகள், பொதுமக்கள் என ஐயாயிரம் பேர்வரை தங்களிடமிருப்பதாகவும், மக்கள் தங்களிடம் விபரங்களைக் கூறினால் அவர்கள் உள்ளனரா இல்லையா எனபதைக் கூறமுடியும் எனவும், உயிருடன் உள்ளவர்களை ஒப்படைக்க குறிப்பட்ட தொகைப் பணம் தரவேண்டும் எனவும் பொதுமக்களிடம் இவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள் தாம் ஒப்புக்கொள்வதாகக் கூறியுள்ளனர்.

நேற்றுக் காலை கிளிநொச்சியிலுள்ள கனகபுரம் மகாவித்தியாலயத்திற்கு காணாமல் போனவர்கள் சிலரின் உறவினர்களை பணத்துடன் வருமாறு அறிவித்ததுடன், குறித்த பாடசாலை அதிபரிடம் அதற்க அனுமதியினையும் கேட்டுள்ளனர். அதற்கு ஒப்புக்கொண்ட பாடசாலை அதிபர் உடனடியாக பொலிஸாருக்கு இவ்விடயம் குறித்து அறிவித்திருக்கின்றார். பின்னர் இது குறித்து இரணுவத்தினருக்கும் அறிவிக்கப்பட்டு, சிவில் உடையில் பாடசாலைப் பகுதியில் காத்திருந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் குறித்த மோசடி நபர்கள் பாடசாலைக்கு வந்த போது சுற்றிவளைத்துப் பிடித்திருக்கின்றார்கள்.

பிடிபட்டவர்கள் இம்மோசடிக்கு காரணமானவரின் முகவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரதான நபர் பிடிபடவில்லை. இம்மோசடி சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

லண்டனில் ரெலோ கட்சியின் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நேற்று நவம்பர் 14ம் திகதி ரெலோ உறுப்பினர்கள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகாரலிங்கம் தலைமையில் ஒன்றுகூடி தமது இயக்கத்தின் உத்தியோகபூர்வ அலுவலகத்தையம் செயற்பாட்டுக் குழுவையும் லண்டனில் ஆரம்பித்துக் கொண்டனர்.

லண்டன் கரோவில் உள்ள லேபர் கட்சியின் அலுவலகத்தில் மெளன அஞ்சலியுடன் ஒன்று கூடிய ரெலோ உறுப்பினர்கள், கடந்த காலங்களில் ரெலோவின் நிலைப்பாடுகள், சிறிரெலோவின் நிலைப்பாடுகள், சிறிகாந்தா, ஜிவாஜிலிங்கம் போன்றோரது நிலைப்பாடுகள் பற்றியும், இவர்களிடையே ஒற்றுமைபாடுகளை உருவாக்குவது பற்றியும் நீண்ட நேரம் கலந்துரையாடிய பின்னர், இந்த விடயங்கள் பற்றி சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் நேரடியாக பேச்சுவார்த்தைகளை தொடர்வது என்று முடிவானது.

லண்டனிலும் மற்றைய ஜரோப்பிய நாடுகளிலும் இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்திற்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பது என்றும் இதர அமைப்புகளுடன் ஒன்றிணைந்த அரசியல் உரிமைகளுக்காக சாத்வீக வழியில் போராடுவது என்றும் உடன்பட்டனர். தமது இயக்கத்தின் செயற்பாடுகளை ஜரோப்பிய நாடுகளில் விஸ்தரிப்பது பற்றியும் ஆராய்ந்தனர். புலிகளாலும், இராணுவத்தினராலும், ரெலோவினாலும் பாதிக்கப்பட்ட ரெலோ உறுப்பினர்கள் பற்றியும் இவர்களுக்கான உதவிகள் செயல்வடிவங்கள் பற்றியும் ஆராய்ந்து, இவைபற்றி மேலும் அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவுகள் எடுப்பது என்றும் முடிவானது.

ரெலோவின் ஆரம்பகால உறுப்பினரான திரு சுதன், ”ரெலோ என்ற அடையாளத்தைவிட தமிழ் மக்களின் இன்றைய தேவைகள், அம்மக்களின் இலட்சியம், நல்வாழ்வு  இவையே உயர்த்தப்பட வேண்டுமே தவிர, ரெலோவின் குறுகிய அரசியல் செயற்பாடுகளை அல்ல” என்றார். ”ரெலோவிற்காக அல்ல மக்களுக்காக செயற்படல் வேண்டும்” என்றும் சுதன் சுட்டிக்காட்டினார். திரு சுதன் அவர்கள் ரெலோ அமைப்பு ஈஎன்எல்எப் உருவாக்கத்திற்காக முன்னின்று உழைத்ததை குறிப்பிட்டு, ”இவ்வாறான கூட்டிணைவுச் செயற்பாட்டுக்கு ரெலோ என்றும் உறுதுணையாக இருக்கவேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து இயங்க ரெலோ தயாராக இருப்பதையும், இதற்கான பல தொடர்புகள் உருவாகியிருப்பது பற்றியும் கூட்டத்தில் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

கூட்ட முடிவில் முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜனா தலைமையில் ஏழு பேர் கொண்ட செயற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது. விரைவில் ரெலொவின் முழுமையான தொடர்பு விபரங்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

”நூலகத்தில் முறைகேடாக நடந்தவர்கள் மீது ஏன் சட்டநடவடிக்கை எடுக்கவில்லை?” பொலிஸ் அதிகாரியிடம் நல்லிணக்க ஆணைக்குழு கேள்வி.

Jaffna_Libraryசில வாரங்களுக்கு முன்னர் யாழ்.பொதுநூலகத்திற்குள் முறைகேடாக நடந்து கொண்டவர்களுக்கெதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி.சில்வா பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமர்வுகளை நடத்தி வரும் நல்லிணக்க ஆணக்குழுவினர் நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை 9மணியளவில் யாழ்.பொது நூலகத்திற்குச் விஜயம் செய்தனர். அப்போது பொதுநூலக நூலகரிடம் அண்மையில் தென்னிலங்கையிலிருந்து சென்ற சுற்றுலாப்பயணிகள் யாழ்.நூலகத்தில் நடந்துகொண்ட முறை குறித்து ஆணைக்குழுவின் தலைவர் கேட்டறிந்துள்ளார். நடந்த விடயங்களையும் நூலக ஒழங்கு விதிகள் குறித்தும் நூலகர் விளக்கியுள்ளார். இது குறித்து சட்ட நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து ஆணைக்குழுவின் தலைவர் பொலிஸ் அதிகாரியை அழைத்து இந்த அசம்பாவித சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக ஏன் சட்டநடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு பொலிஸ் அதிகாரி மௌனம் சாதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நெல்லியடியில் சைக்கிள் திருட்டுக்கள் அதிகரிப்பு. 15 சைக்கிள்கள் பொலிஸாரினால் மீட்பு!

யாழ்.வடமராட்சி நெல்லியடிப் பகுதிகளில் சைக்கிள் திருட்டுக்கள் அதிகரித்து வருவதாக பொலிஸில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனைத் தடுப்பதற்கு பொலிஸார் தற்போது துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி நெல்லியடி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளில் களவு போன 15 சைக்கிள்கள் மேற்படி பொலிஸ் குழுவினரால் மீடக்கப்பட்டுள்ளன. மீட்க்கப்பட்ட இந்த சைக்கிள்களை அதன் உரிமையாளர்கள் அடையாளம் காட்டிப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சைக்கிள் திருட்டுக்கள் தொடர்பாக அதிகளவிலான முறைப்பாடுகள் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்தமையை அடுத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் அமைக்கப்பட்ட பொலிஸ் குழுவினரே நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

யுத்த சூனிய வலயமாக வன்னியில் எந்தவொரு இடமும் இருந்ததில்லை – தயா மாஸ்டர் சாட்சியம்

thayamaster.jpgவன்னி யில் யுத்த சூனிய வலயம் என்று எந்தவொரு இடமும் இருந்திருக்கவில்லையென நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டிய தயா மாஸ்டர், மோதல் வன்னியில் உக்கிரமடைந்திருந்தபோது இராணுவத்திடம் சரணடைந்த பொதுமக்களை இராணுவத்தினர் எவ்வாறு நடத்தினர் என்பது குறித்துக் கருத்துக் கூற முடியாதெனவும் தெரிவித்தார். ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கற்றுக்கொண்ட பாடங்களும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் நடைபெற்றபோது சாட்சியமளிக்கையிலேயே முன்னாள் விடுதலைப்புலிகளின் ஊடகத்துறை பேச்சாளரான தயா மாஸ்டர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆணைக்குழு முன் தயாமாஸ்டர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை ஊடகப்பிரிவிற்குப் பொறுப்பாளராக நான் கடமையாற்றியுள்ளேன். விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்குமிடையிலான யுத்த நிறுத்த உடன்படிக்கை முறிவடைந்த நிலையில், நான் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற முயற்சித்துள்ளேன். சமாதான உடன்படிக்கையின் முறிவும் புறக்கணிப்பும் துன்பப்படும் மக்களின் பிரச்சினைகள் மேலும் அதிகரித்தமை போன்றவற்றாலேயே நான் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகத் தீர்மானித்தேன். போர் மிகவும் உக்கிரமடைந்திருந்த நிலையில் பல பொதுமக்கள் கொல்லப் பட்டிருந்தனர். இருதரப்புக்கும் இடையில் மக்கள் சிக்கியிருந்தனர். இவ்வாறிருந்த மக்களைப் போலவே நானும் எனது குடும்பமும் மரணத்தின் விளிம்புவரை சென்றிருந்தோம்.குறித்த சில பகுதிகளில் தான் போர் நடைபெற்றன. வரையறுத்துக் கூற முடியாது. போரின் பரிமாணங்கள் பரந்தவையாக இருந்தன.என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் திணறிக் கொண்டிருந்தனர்.நாளுக்கு நாள் மரணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்நிலையில், பொருத்தமான முறையில் தம்மை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறையையே ஒவ்வொருவரும் தேடிச் சென்றனர் என்பதுதான் உண்மை.

அன்றைய காலகட்டத்தை என்னால் மறக்க முடியாது. யுத்தத்தால் கொல்லப்பட்ட பல ஆயிரக்கணக்கான உயிர்களுக்காக நானும் வருந்துகின்றேன். இந்த உயிரிழப்புகள் தேவையற்றவை. யுத்தம் தீவிரமடைந்தபோது சமாதானத்தை விரும்பிய விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்கள் சிலரும் புலமையாளர்கள் சிலரும் சமாதானத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தி விடுதலைப்புலிகளின் ஆலோசகர் பாலகுமாரன் ஊடாக தலைவர் வே.பிரபாகரனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினோம். ஆனால், அதற்கு ஏமாற்றமே கிடைத்த நிலையில் போர் மிகவும் உச்ச நிலைக்கு அடைந்துவிட்டது. இவ்வாறான நிலையில், உயிரிழப்புகளும் கட்டுமான சேதங்களும் அதிகரித்த நிலையில் அரசுடன் இணைவதால் சமாதானமாக வாழலாம் என எண்ணிய பலரில் நானும் ஒருவன்.

 இந்நிலையில்தான் 2009 ஏப்ரல் 28 ஆம் திகதி நானும் ஜோர்ஜ் மாஸ்டரும் சரணடைந்தோம். மக்களுடன் மக்களாக நாமும் இராணுவத்திடம் சரணடையும்போது எம்மை மக்களிடமிருந்து வேறாக்கிய இராணுவத்தினர் எம்மை நன்றாகவே நடத்தினர். ஆனால், சரணடைந்த மக்களை இராணுவத்தினர் எவ்வாறு நடத்தினர் என்று கருத்துக்கூற முடியாது. தற்போது நான் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளேன். மோதலின் போது அதிக இரத்தம் உயிர் சொத்துக்கள் இழக்கப்பட்டுள்ளன. பல ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் கணவன்மாரின் உறவினர்களின் தகவல் அறியாமல் உள்ளனர். அங்கலாய்ப்பும் போரின் வடுக்களும்தான் இன்று மிச்சமாய் இருக்கின்றன. பரஸ்பரம், நம்பிக்கை இன்மையும் மற்றவர்களை அவர்களின் நிலையிலிருந்து புரிந்து கொள்ளாமையுமே இவ்வளவு அழிவுக்கும் காரணமாகும்.

இந்த சமாதானச்சூழல் சாத்தியமற்றுப்போனது. நீண்டதும் அதிக இழப்புமிக்கதுமான போர் முடிவுக்கு வந்துள்ளது. இன்று பல முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைந்துள்ளனர். எஞ்சியவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என நான் நம்புகின்றேன்.முன்னாள் போராளிகள் தொடர்பாக சமூகத்தில் ஒரு தவறான கண்ணோட்டம் இருந்து வருகின்றது. வேலைவாய்ப்பு வழங்குவதில் கூட பாரபட்சம் காட்டப்படுகின்றது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தெரிந்தோ,தெரியாமலோ புலிகள் இயக்கத்தில் இணைந்தும் ஆதரவு வழங்கியும் நீண்டகாலமாகத் தடுப்புக்காவலில் உள்ளவர்களின் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு விரைவில் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். மேலும், யுத்த காலத்திலும் யுத்தத்தின் முன்னரும் காணாமல் போனவர்கள் தொடர்பில் இந்த ஆணைக்குழு அதிக அக்கறை காட்ட வேண்டும்.இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்து வரும் வன்னி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நடவடிக்கையெடுக்க வேண்டும். மீள்கட்டுமானங்களை இழந்தவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான உதவிகளை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும்.

போர் நடைபெற்ற பிரதேசங்களில் இயல்பு நிலையை மீட்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எனது பாராட்டுக்கள். இவற்றின் அடிப்படையில் நீண்டகால நிலையான சமாதானத்துக்கான பரிந்துரையை ஆணைக்குழு இறுதி அறிக்கையில் வலியுறுத்த வேண்டும். 1987,1990,1995,2000 ஆகிய ஆண்டுகளில் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் கிடைத்த சந்தர்ப்பங்களை புலிகள் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் இவ்வாறான அனர்த்தங்களை தவிர்த்திருக்கலாம். முன்னர் நடைபெற்ற ஆணைக்குழுக்கள் தொடர்பாக மக்களிடம் தவறான அபிப்பிராயம் இருந்து வருகின்றது. அது மீண்டும் தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். இந்நிலையில், ஆணைக்குழு உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த தயாமாஸ்டர்;

1972 தொடக்கம் இறுதிக்கட்டப் போர் (2009 மே) வரை 30 ஆயிரத்திற்கும் அதிகமான விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக பதிவு உண்டு. புதுமாத்தளன், பொக்கணை ஆகிய இரு சிறு இடங்களுக்குள் பெருமளவான மக்கள் அடங்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் புலிகளும் அங்கிருந்து தாக்குதல் மேற்கொண்டனர். இராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. ஆனால், புலிகள் மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் செல்ல அனுமதித்திருந்தால் உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம். அத்துடன், மோதல் தவிர்ப்பு பகுதி என்று எந்தவொரு இடமும் வன்னியில் அமுலில் இருக்கவில்லை. அத்துடன், இராணுவத்தினால் அறிவிக்கப்பட்ட மோதல் தவிர்ப்பு வலயத்தினை யுத்தத்தில் ஈடுபட்ட விடுதலைப்புலிகளும் இராணுவத்தினரும் மதிக்கவில்லை.

போர் நிறைவடைந்து முன்னாள் புலிகள்,ஆதரவு வழங்கியோர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும். போராட்டம் உருவாவதற்கு அரசியல் பிரச்சினையே காரணமாக இருந்தது. அத்துடன், வட்டுக்கோட்டை தீர்மானத்தின்படி தனிநாட்டுக் கோரிக்கையை தந்தை செல்வா தரப்பினர் தொடராத நிலையிலேயே ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக வே.பிரபாகரன் என்னிடம் பல தடவை கூறினார். அத்துடன், அடிப்படைப் பிரச்சினைகளுக்கு சமாதான முறையில் உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தினக்குரல் 15.11.2010

11 இலட்சம் மரக்கன்றுகள் 11 நிமிடங்களில் இன்று நடுகை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினம் மற்றும் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு ‘தேசத்துக்கு நிழல்’ எனும் தேசிய மரம் நடுகைத் திட்டம் இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள அரசாங்கத் திணைக்களங்கள், பாடசாலைகள், உள்ளூராட்சி சபைகள் உட்பட அனைத்து இடங்களிலும் 11 நிமிடங்களில் 11 இலட்சம் மரங்கள் நடப்படவுள்ளன. இன்று முற்பகல் 10.07 மணியிலிருந்து 10.18 மணி வரையிலான 11 நிமிடங்களிலேயே 11 இலட்சம் மரங்களும் நடப்படவுள்ளன.

எனினும், இத் தேசிய திட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் பெரும் ஆதரவு கிடைத்திருப்பதால் இன்று 20 இலட்சம் மரக் கன்றுகளை நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. வழமையான மரம் நடுகைத் திட்டங்களைப் போலல்லாது ‘தேசத்துக்கு நிழல்’ எனும் இந்தத் தேசிய மரம் நடுகைத் திட்டத்தைக் கின்னஸ் சாதனையாகப் பதிவு செய்வதற்கும் சுற்றாடல் வளத்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

அலுவலகங்களில் மாத்திரமன்றி வீடுகளிலும் குறைந்தது ஒரு மரத்தையாவது நடுவதற்கு முன்வர வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ரூ. 50 கோடியில் அபிவிருத்தி

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐம்பது கோடி ரூபா செலவில் உள்ளூராட்சி மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான பல்வேறு பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக் கப்பட்டு வருவதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

யுத்தத்தின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் வெகு விரைவில் முழுமையான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் பொருட்டும், மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் பெற்றுக் கொடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 115 உள்ளூர் வீதிகளை புனரமைக்கும் திட்டத் திற்கு 393 மில்லியன் ரூபாவும், பிரதேச சபைகளை நிர்மாணிப்பதற்கான ஒன்பது கட்டுமான பணிகளுக்கு 71 மில்லியன் ரூபாவும், ஏனைய நிர்மாண பணிகளுக்கு 36 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்துள் ளதாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.உதயராஜா தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம், வட மாகாணத்துக்கான அவசர புனரமைப்பு திட்டம் ஆகியவற்றின் ஊடாக வட மாகாண சபை இந்த அபிவிருத்தித் திட்டங்களை முன் னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 115 உள்ளூர் வீதிகள் முழுமையாக புனரமைக்கப்படவுள்ளதுடன் புதுக்குடியிருப்பு, துணுக்காய், கரைத்துறைப்பற்றும் மற்றும் பாண்டியன் குளம் ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான அலுவலகங்களும், செம்மாலை கொக்கிளாய் பிரதேசத்திற்கான உப பிரதேச சபை அலுவலகங்களும் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன.