19

19

முன்னாள் ஜரிவி ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்டார்!

Sundar_Journalistஇவ்வாரம் இலங்கை சென்றிருந்த ஊடகவியலாளர் கார்திகேயன் திருலோகசுந்தர் (சுந்தர்) கொழும்பில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளார். விமான நிலையத்தில் இலங்கைப் புலனாய்ப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர் நேற்று மாலை (நவம்பர் 18 2010) விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

சுந்தர் ஈரிபிசி வானொலியில் பணியாற்றி வந்தவர். அதன்பின் தீபம் தொலைக்காட்சியில் சிறிதுகாலம் பணியாற்றியவர். மார்ச் 19 2008ல் சுந்தரை வேலை நீக்கும் கடிதத்தை தீபம் தொலைக்காட்சி வழங்கியது. இதற்கு முன்னர் தீபம் தொலைக்காட்சிக்கும் சுந்தருக்கும் இடையே குற்றச்சாட்டுகளும் முரண்பாடுகளும் வாக்குவாதமும் ஏற்பட்டு இருந்தமை லண்டன் குரல் இதழ் 23 (மார்ச் – ஏப்ரல் 2008) ல் வெளிவந்திருந்தது.

அதன்பின்னர் சுந்தர் ரிரிஎன் – ஜரிவி தொலைக்காட்சியில் பணியாற்றி இருந்தார். தற்போது ஜிரிவி இன் முக்கிய நிகழச்சித் தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சி வழங்குனராகவும் உள்ள தினேஸ்குமாரும் தீபம் தொலைக்காட்சியில் இருந்தே ரிரிஎன் – ஜிரிவி தொலைக்காட்சிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிரிவி இலும் சுந்தர் நீண்டகாலம் நிலைக்கவில்லை. ஜிரிவி இல் சம்பளம் வழங்கப்படாத காரணத்தினால் சிலர் அத்தொலைக்காட்சியில் இருந்து விலகிய போது சுந்தரும் அதன் காரணமாக வெளியேறினார். அதன் பின்னர் தற்போது வடக்கின் வசந்தத்தில் யாழ்ப்பாணத்தில் ஹொட்டல் கட்டிவருகின்ற ஆணிவேர் படத் தயாரிப்பாளர் திலகராஜாவின் உணவகம் ஒன்றில் முகாமையாளராகக் கடமையாற்றினார்.

இலங்கைக்கு தனது தாயை பார்க்க சென்ற பொழுதே விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். ஜிரிவி இல் பணியாற்றியது தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. இருப்பினும் இவர் நீண்ட காலத்திற்கு முன்னரேயே ஜிரிவி யை விட்டு வெளியேறியதும் மற்றும் அரசுசார்பானவர்கள் மத்தியில் இருந்து வந்த வேண்டுகோள்களை அடுத்தும் இவர் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன லண்டனில் மக்களுடன் சந்திப்பு – பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு

Wikramabahu KNSSP கட்சியின் பொதுச் செயலர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன லண்டனில் பொதுமக்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக, பிரித்தானிய தமிழர் பேரவை அறிவித்துள்ளது.

தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு தொடர்பாக ஆரம்பம் முதல் நீதியான, தெளிவான, ஒரே மாதிரியான கருத்துக்களை வெளியிட்டுவரும் கலாநிதி விக்கிரமபாகு, தமிழ் மக்கள் மீதான படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றார்.

சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவாக இருக்கட்டும், அல்லது முன்னயை அரசுத் தலைவர்களாக இருக்கட்டும் அவர்களுக்கு எதிராக கொழும்பில் இருந்தவாறு துணிந்து குரல் கொடுக்கும் சிங்கள கட்சியின் தலைவராக இவர் இருந்து வருகின்றார்.

ஏனைய அரசியல் தலைவர்களும், கட்சிகளும் மகிந்த அரசுக்கு அடிபணிந்துள்ள போதிலும், கொள்கையில் உறுதியாக இருந்து தமிழ் மக்களிற்காகவும், சிங்கள தொழிலாளர் வர்க்கத்திற்காகவும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துவரும் விக்கிரமபாகுவுடன் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள பிரித்தானிய தமிழர் பேரவை சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றது.

சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் நீதியான கருத்துக்களைக் கொண்டு செல்ல இதனை ஒரு சந்தர்ப்பமாக பிரித்தானியாவாழ் தமிழ் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் கலந்து கொள்ளுமாறு அன்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை நேரஞ்சல் செய்வதற்கும், ஊடகங்கள் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதுடன், அவரது கருத்தைப் பெறும் தளமாக இந்த சந்திப்பை பயன்படுத்துமாறும் பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் 25ஆம் நாள் வியாழக்கிழமை வட மேற்கு லண்டனிலுள்ள சவுத் ஹறோ பகுதியில் மாலை 7:00 மணி தொடக்கம் இரவு 10:00 மணிவரை இந்த சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இடம் – Harrow Borough Football Club Hall, Earlsmead, Carlyon Avenue, South Harrow HA2 8SS

நேரம் – மாலை 7:00 மணி

அருகிலுள்ள நிலக்கீழ் தொடரூந்து நிலையங்கள் – Central Line NORTHOLT , Piccadilly Line SOUTH HARROW

பேரூந்துகள் – சவுத் ஹரோ தொடரூந்து நிலையத்தில் இருந்து, அதே பக்கத்தில் இருந்து (சம்பல் சொப் முன்பாக) 140, 395, 398, 487 போன்ற நோத்ஹோல்ட் செல்லும் பேரூந்துகளில் ஏறி இரண்டாவது தரிப்பிடம்.

நோத்ஹோல்ட் தொடரூந்து நிலையத்தில் இருந்து, அதே பக்கத்தில் இருந்து 282 என்ற மவுன்ட் வேனன் மருத்துவமனைக்குச் செல்லும் பேரூந்தில் ஏறினால் இரண்டாவது தரிப்பிடம்.

மேலதிக விபரங்களுக்கு:
020 8808 0465
079 5850 7009

நேர்டோ நிறுவனத்தினால் நிவாரண கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்குதல்

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த நிவாரண கிராமங்களில் இருந்த மாணவர்கள் கீழ்வரும் அவசர வேண்டுகோளை விடுத்திருந்தனர். தற்போது நலன்புரி முகாம்களில் இருந்து கா.பொ.தா சாதாரண பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களிற்கு அவசரமாக கீழ்வரும் பொருட்கள் தேவைப்படுகிறது.

பாடசாலை சீருடை முதல் கணித பாட உபகரணங்கள் வரையான தேவைகளிற்கு உடன் உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மாணவ மாணவிகளின் விபரங்கள்:

கதிர்காமர் முகாம் : 30 ஆண்கள் 40 பெண்கள் மொத்தம் 70.

ஆனந்தக்குமாரசாமி :38 ஆண்கள் 62 பெண்கள் மொத்தம் 100

இந்த வேண்டுகோளை புலம்பெயர் சொந்தங்களின் உதவியுடன் நேர்டோ உடன் தீர்த்து வைத்தது!

மேற்படி நிகழ்வானது புலம்பெயர்வாழ் தமிழ் மக்களின் அனுசரணையுடன் நேர்டோ நிறுவனத்தினால் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 17.11.2010 அன்று காலை 9.30 தொடக்கம் மாலை 2.00 மணிவரை நிவாரணக் கிராமங்களாகிய அருணாச்சலம், ஆனந்தகுமாரசாமி, கதிர்காமம் போன்ற கிராமங்களை சேர்ந்த க.பொ.த சாதரண பரீட்சையில் தோற்றவுள்ள ஆண், பெண் இருபாலரும் உள்ளடங்களாக 322 மாணவர்களுக்கான சீருடை, பாதணிகள், உபகரணங்கள், என்பன வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் மேலதிக வட மாகண கல்விப் பணிப்பாளர் வ அரியரட்ணம், முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளர் S. கிருஸ்ணகுமார், ஆசிரிய ஆலோசகர் தேவதாஸ் ஆகியோர் மாணவர்களுக்கான பொருட்களை வழங்கி அவர்களின் எதிர்கால கல்வி செயற்பாட்டிற்கு உதவினர் .

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்பு வைபவம் இன்று கோலாகலமாக நடைபெறுகின்றது.

MR_Sworn_in_2nd_termஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டாவது பதவிக் காலத்தை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கின்ற நிலையில் கொழும்பில் இந்நிகழ்வையொட்டிய வைபவங்கள் மிகவும் கோலாகலமாக நடைபெறுகின்றன. கொழும்பு காலிமுகத்திடலுக்கு முன்பாகவுள்ள ஜனாதிபதி செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மேடையில் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்பு வைபவம் நடைபெறுகின்றது. இந்நிகழ்வில் சுமார் 150 வெளிநாட்டு பிரதிநிதிகளும் பங்கு கொள்கின்றனர். மாலைதீவு ஜனாதிபதி, பூட்டான் பிரதமர் ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர்

MR_Sworn_in_2nd_termஇன்று காலை 10 மணிக்கு தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்து ஆரம்பிக்கின்றார். இப்பதவியேற்பு வைபவத்தையொட்டி காலிமுகத்திடலில் முப்படையினரின் அணிவகுப்பு மற்றும், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

இந்நிகழ்வுகளுக்காக கொழும்பு வரும் வாகனங்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 6 மணி தொடக்கம் மாலை 3 மணி வரை கொழும்பு கோட்டை, காலிமுகத்திடல் ஆகியவற்றிற்கான பாதைகள் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த இரண்டாவது பதவியேற்பு வைபவம் பெருந்தொகை அரச நிதியை செலவு செய்து நடத்தப்படுவதாக பிரதான எதிர்கட்சியான ஐக்கியதேசியக்கட்சி விமர்சித்துள்ளது.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்தேசியக் கூட்டணியின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி இந்த இரண்டாவது பதவிக்காலத்தில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என வலியுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்தில் அவர் ஆற்றுகின்ற உரை நாளை சனிக்கிழமை காலை 9.15 மணிக்கு யாழ்.குடாநாட்டின் சகல பகுதிகளிலும் ஒலிபரப்பப்படவுள்ளதா அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக 1000 வீடுகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

India_Flagபோரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் முதற்கட்டமாக ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இந்த ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்திய வீடமைப்பு மற்றும், வறுமை ஒழிப்பு அமைச்சின் நிர்வாக்தின் கீழ் இயங்கும் இந்துஸ்தான் பிறீபப் என்ற நிறுவனமும் இலங்கை அரசாங்கமும் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் மரணம்.

Motorbike_Accidentயாழ். உரும்பிராய் சந்தியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார். இவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் மினிபஸ் ஒன்றுடன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டது.

சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் என்ற முகவரியைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன் (வயது 30) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார். இவரோடு மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணித்த எஸ்.கோபு (வயது30) என்ற இளைஞர் படுகாயமுற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 100 பேர் 21ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 100 பேர் எதிர்வரும் 21ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலநறுவையிலுள்ள சேனபுர என்ற தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளனர் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும், புனர்வாழ்வு பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு இவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிபொருட்கள் அகற்றும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் படுகாயம்.

Landmine_Hello_Trust_Employeeயாழ்ப் பாணத்தில் வெடிபொருட்கள் அகற்றும் பணியிலீடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நேற்று தவறுதலாக இடம்பெற்ற வெடிவிபத்தில் படுகாயமடைந்தார். நேற்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. யாழ்.பொன்னாலை பாண்டவெட்டை என்ற இடத்தில் மிதிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இவ்விபத்து ஏற்பட்டது.

கண்ணிவெடியகற்றும் நிறுவனமான ‘ஹலோ ட்றஸட்’ நிறுவனத்தில் பணியாற்றும் குருநகரைச் சேர்ந்த நிசாந்தன் எட்மன் பீரிஸ் என்ற 22 வயது இளைஞரே படுகாயமடைந்தவராவார். இவர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கண்ணிவெடியகற்றும் நிறுவனமான ‘ஹலோ டறஸ்ட்’ இல் போரினாலும் வறுமை நிலையினாலும் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளே அதிகளவில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.