22

22

ஜனாதிபதி புதிய அமைச்சர்களுக்கு அறிவுரை – மக்கள் சேவையில் அக்கறை காட்டுங்கள்

new.jpgஇலங் கையின் புதிய அமைச்சரவை இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுள்ளது. இன்று பதவியேற்றுக் கொண்ட அமைச்சரவையில் மொத்தம் 60 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இதில் பிரதமருடன் இணைத்து 10 சிரேஸ்ட அமைச்சர்களும் 50 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுமாக 60 அமைச்சர்களும், 31 பிரதியமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.

அமைச்சுப் பொறுப்புகளை சொந்த நலன்களுக்குப் பயன்படுத்தாமல் மக்களுக்குச் சேவையாற்றுமாறும் புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

பத்துப்பதினைந்து வாகனங்களை வைத்துக்கொண்டு மக்களை விட்டும் தூரமாகிச் செயற்படவேண்டாமெனவும், அமைச்சுப் பொறுப்புகளை சொந்த நலன்களுக்குப் பயன்படுத்தாமல் மக்களுக்குச் சேவையாற்றுமாறும் புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தலை விடுத்தார்.

.திங்கட்கிழமை (22.11.2010) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணத்தையடுத்து அமைச்சர்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கண்ட அறிவுறுத்தல்களை விடுத்தார்.

அமைச்சர்கள் பதவியேற்று முடிந்தவுடன் அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும் விதத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உரையை நிகழ்த்திய உரையில் கூறியதாவது;

இன்றைய அமைச்சரவைக்கு பல புதிய முகங்களை நான் அறிமுகப்படுத்தியிருக்கின்றேன். மூத்தவர்கள் சிலரை சிரேஷ்ட அமைச்சர்களாக நியமித்து கௌரவமளித்துள்ளேன். அவர்களுக்கு மதிப்பளிக்கவேண்டிய கடப்பாடு எம்மிடம் காணப்படுவதாலேயே இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியிருக்கின்றேன்.நாட்டுமக்கள் எம்மீது நம்பிக்கைவைத்து ஒப்படைக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்களை நாம் உரிய முறையில் நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளோம்.

பயங்கரவாதத்தில் சிக்கியிருந்த நாட்டை நீண்டகால போராட்டத்தின் பின்னர் மீட்டெடுத்து பிளவுபட்டிருந்த தேசத்தை ஒரே நாடாக கட்டியெழுப்பியுள்ளோம். இப்போது ஒரேநாடாக ஒன்றுபடுத்தியுள்ளோம். இனிமேல் எம்மீதுள்ள பாரிய பொறுப்பு நாட்டை அபிவிருத்தி செய்து முன்னேற்றத்தின் பக்கம் கொண்டு செல்வதே ஆகும்.

நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்பு எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாட்டை அபிவிருத்தியின் பக்கம் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டத்தை இன்று அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் உங்களிடம் நான் ஒப்படைத்துள்ளேன்.

இந்த அமைச்சுப் பதவிகளை சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்த முனையாதீர்கள். 10,15 வாகனங்களை வைத்துக் கொண்டு அலங்கார ஊர்வலம் செல்ல முற்படாதீர்கள். அப்படிச் செய்ய நீங்கள் முயற்சித்தால் மக்கள் உங்களை நிராகரிக்க தயங்கமாட்டார்கள். மக்களிடமிருந்து தூரமாகும் நிலைக்கு உங்களை ஆக்கிக் கொள்ளாதீர்கள்.

வீண்விரயம், ஊழல்,மோசடிகளுக்கு ஒருபோதும் துணைபோக வேண்டாம். அதன் மூலம் உங்களுக்கும், அரசுக்கும் அபகீர்த்தி ஏற்படவாய்ப்பாகிவிடும். அந்த நெருக்கடிநிலை ஏற்பட இடமளிக்கக்கூடாது. உங்கள் கைகளில் பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தப்பொறுப்பை செவ்வனே நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்.

ஏனைய அமைச்சுக்களினதும், அமைச்சர்கள், அதிகாரிகளதும் குறைகளை கண்டுபிடித்து குறைசொல்லித்திரிய நீங்கள் எவரும் முற்படக்கூடாது. அப்படிச்செய்வதன் மூலம் அரசுக்கும், கட்சிக்குமே அபகீர்த்தி ஏற்படலாம். உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பொறுப்புக்களை நீங்கள் சரிவர நிறைவேற்றினால் எவரிடமும் குறை ஏற்படப்போவதில்லை. நாட்டுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்த இடமளிக்கக்கூடாது. அரசிலுள்ளவர்களைப் பற்றித் தவறாகப் பேசி எதிரணியினருக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுக்காதீர்கள்.

நாமனைவரும் ஒன்றுபட்டு ஊழல் மோசடிகளை ஒழித்துக் கட்டி நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்கொண்டு செல்வோம். அதுதான் எம்முன்னுள்ள பிரதான பணியாகும். நாட்டுமக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்றவேண்டும். அதனையே மக்கள் எம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றனர்.

நான் இரண்டுபேருக்கு அமைச்சர் பதவி வழங்க அழைத்தபோது அவர்கள் பெருந்தன்மையுடன் என்னிடம் கூறியது அமைச்சுப் பதவி வேண்டாம். பிரதியமைச்சர்களாக எனது அமைச்சுக்களுக்கு நியமிக்குமாறு கோரினர். அவர்கள் அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

இந்த நிமிடம் முதல் தேசத்தை வளமாகக்கட்டியெழுப்பும் உறுதிப்பாட்டுடன் தாய்நாட்டின் மேம்பாட்டுக்காகப் பாடுபடுவோம். உங்களனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
 

சிரேஸ்ட அமைச்சர்கள் விபரங்கள்

டி எம் ஜயரத்ன – பிரதமர், புத்த சாசன மத விவகார அமைச்சர்
ரட்னசிறி விக்கிரமநாயக்க  – நல்லாடசி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்
டியு குணசேகர – மனிதவள சிரேஷ்ட அமைச்சு
அதாவுத செனவிரட்ன –  கிராமிய விவகார சிரேஷ்ட  அமைச்சு
பி.தயாரட்ன, –  உணவு மற்றும் போஷாக்குத்துறை
ஏ எச் எம் பௌஸி  –   நகர செயற்பாடுகள்
எஸ் பி நாவின்ன, –   நுகர்வோர் சேமநலன்
பியசேன கமகே  –  தேசிய வளங்கள் சிரேஷ்ட அமைச்சர்
திஸ்ஸ விதாரண  –   விஞஞான விவகாரம்
சரத் அமுனுகம  –   சர்வதேச நிதி ஒத்துழைப்பு

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 49 போ்

நிமல் சிறிபால டி சில்வா –  நீர்வழங்கல்-வடிகால் முகாமைத்துவம்
மைத்திரிபால சிறிசேன, –  சுகாதார துறை
சுசில் பிரேம்ஜயந்த  –  கனியவளதுறை
ஆறுமுகன் தொண்டமான்  –  கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி
தினேஷ் குணவர்தன  –  நீர்வழங்கல் துறை
டக்ளஸ் தேவானந்தா  –  பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில்
ஏ.எல்.எம்.அத்தாவுல்லா, –  உள்ளுராட்சி – மாகாணசபை
ரிசாத் பதியுதீன், –  கைத்தொழில் மற்றும் வர்த்தகம்
பாடலி சம்பிக ரணவக்க – மின்சக்தி சக்திவலுத்துறை
விமல் வீரசங்ச –  நிர்மாண, பொறியில் சேவை, வீடமைப்பு, பொதுவசதிகள்
ரவூப் ஹக்கீம், –  நீதித்துறை
பசில் ராஜபக்ச –  பொருளாதார அபிவிருத்தி
வாசுதேவ நாணயக்கார –  தேசிய மொழி மற்றும் சமூக ஒருங்கிணைப்பு
எஸ்.பி.திஸாநாயக்க  –  உயர் கல்வி
ஜி எல் பீரிஸ் – வெளிவிவகாரம்
டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன – அரசநிர்வாக – உள்நாட்டலுவல்கள்
சுமேதா ஜி ஜயசேன –  நாடாளுமன்ற விவகாரம்
ஜீவன் குமாரதுங்க –  அஞ்சல்துறை
பவித்ரா வன்னியாராச்சி  –  தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி
அநுர பிரியதர்சன யாப்பா –  சுற்றாடல் துறை
திஸ்ஸ கரலியத்த  –  சிறுவர் அபிவிருத்தி> மகளிர் விவகாரம்
காமினி லொகுகே –  தொழில் மற்றும் தொழிலுறவு
பந்துல குணவர்த்தன – கல்வி
மஹிந்த சமரசிங்க – பெருந்தோட்டத்துறை
ராஜித சேனாரத்ன –  மீன்பிடி, நீர்வள அபிவிருத்தி
ஜனக பண்டார தென்னகோன் –  காணி மற்றும் காணி அபிவிருத்தி
பீலிக்ஸ் பெரேரா – சமூக சேவைகள்
சி.பி.ரட்னாயக்க – தனியார் போக்குவரத்து சேவை
மஹிந்த யாப்பா அபேவர்தன – விவசாயத்துறை
கெஹலிய ரம்புக்வெல்ல – ஊடக மற்றும் செய்தித்துறை
குமார வெல்கம  – போக்குவரத்து
டளஸ் அழகப்பெரும – இளைஞர் விவகார, திறன் மேம்பாட்டு
ஜோன்ஸ்டன் பர்ணான்டோ – கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகம்.
சந்திரசிறி கஜதீர – புனருத்தாபன, சிறைச்சாலை சீரமைப்பு
சாலிந்த திஸாநாயக்க  –  தேசிய வைத்திய துறை
ரெஜினோல்ட் குரே – சிறு ஏற்றுமதி பயிர் அபிவிருத்தி
டிலான் பெரேரா –  வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி மற்றும் நலன்புரி
ஜகத் புஸ்பகுமார –  தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி
ரி.பி.ஏக்கநாயக்க – கலாசார மற்றும் கலைவிவகாரம்
மஹிந்த அமரவீர – அனர்த்த முகாமைத்துவம்
எஸ்.எம்.சந்திரசேன  – விவசாய சேவை மற்றும் வனவிலங்கு
குணரத்ன வீரக்கோன் –  மீள்குடியேற்றதுறை
மேர்வின் சில்வா –  மக்கள் தொடர்பாடல் மற்றும் பொதுமக்கள் விவகாரம்
மஹிந்தானந்த அளுத்கமகே – விளையாட்டுத்துறை
தயாஸ்ரீ த திசேரா – அரச வள மற்றும் தொழில்துறை அபிவிருத்தி
ரஞ்சித் சியம்பலாபிட்டிய – தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழிநுட்பம்
ஜகத் பாலசூரிய –  தேசிய மரபுரிமைகள்
லக்ஷ்மன் செனவிரட்ன –  உற்பத்தி திறன் அபிவிருத்தி
நவின் திசாநாயக்க – அரச முகாமைத்து மீளமைப்பு
பிரியங்கர ஜயரட்ன – சிவில் விமான சேவைகள்

பிரதியமைச்சர்கள்

சுசந்த புஞ்சி நிலமே – மீன்பிடி, நீர்வளத்துறை
லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன – பொருளாதார அபிவிருத்தி
ரோஹித்த அபேகுணவர்தன – துறைமுக மற்றும் பெருந்தெருக்கள்
பண்டு பண்டாரநாயக்க –  தேசிய வைத்திய துறை
ஜயரத்ன ஹேரத் – கைத்தொழில், வர்த்தகவிவகாரம்
துமிந்த திஸாநாயக்க –  இளைஞர் விவகார, திறன் அபிவிருத்தி
லசந்த அழகியவண்ண –  நிர்மாண, பொறியில் சேவை, வீடமைப்பு பொதுவசதிகள்
ரோஹண திசாயக்க – போக்குவரத்து
எச்,ஆர்.மித்ரபால – கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி
நிர்மல கொத்தலாவல – துறைமுக மற்றும் பெருந்தெருக்கள்
பிரேமலால் ஜயசேகர – மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை
கீதாஞ்சன குணவர்தன –  நிதி மற்றும் திட்டமிடல்
விநாயகமூர்த்தி முரளிதரன் – மீள்குடியேற்றம்
பைசர் முஸ்தபா –  தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சி
இந்திக பண்டாரநாயக்க – உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள்
முத்துசிவலிங்கம் – பொருளாதார அபிவிருத்தி
சிறிபால கம்லத் – காணி மற்றும் காணி அபிவிருத்தி
டபிள்யூ.பி.ஏக்கநாயக்க – வடிகாலமைப்பு மற்றும் நீர்வள முகாமைத்துவம்
சந்திரசிறி சூரிய ஆராயச்சி – சமூகசேவைகள்
நந்திமித்ர ஏக்கநாயக்க –  உயர்கல்வி
நிரூபமா ராஜபக்ஷ – நீர்வழங்கல் துறை
லலித் திசாநாயக்க – சுகாதாரம்
சரண குணவர்தன – கனியவள தொழில்துறை
காமினி விஜித் விஜயமுனி சொய்சா – கல்வித்துறை
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா – சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரம்
வீரகுமார திசாநாயக்க – பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர்
ஏ.டி.எஸ்.குணவர்தன –    புத்த சாசன மதவிவகார
ஏர்ல் குணசேகர –    பெருந்தோட்டதுறை
பசிர் ஷேகுதாவுத் –    கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகம்.
அப்துல் காதர் –  சுற்றாடல்
டுலிப் விஜேசேகர –   அனர்த்த முகாமைத்துவம்

பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதி செயலாளர்களில் மாற்றமில்லை 
 
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டபாய ராஜபக்ஷ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போன்று ஜனாதிபதியின் செயலாளராக லலித் வீரதுங்க தொடர்ந்து செயற்படுவார். 

”தமிழ் மக்களின் நலன் கருதி ஏனைய தமிழ் கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்த தயார்” தமிழ் தேசியக் கூட்டமைப்பு

TNAதமிழ் கட்சிகளின் அரங்கத்தில் பங்குபற்றும் தமிழ் கட்சிகளோடு ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டமொன்று கொழும்பில் நேற்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற போது இவ்விடயம் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன் போது கடும் விவாதங்களும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்தின் இறுதியில் ஏனைய தமிழ் கட்சிகளோடு கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்துவது தொடர்பாக தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (வரதர் அணி) எஸ்.சிறிதரன், இடம்பெயர்ந்த மக்களின் பனர்வாழ்வுக்கழகத் தலைவரான எஸ்.சந்திரகாசன், தமிழ்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஆகியோரை முதலில் சந்தித்து கலந்துரையாடுவதென்று தற்பொது கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

தமிழ் கட்சிகளின் அரங்கம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளும் பல தடவைகள் தமிழ்தேசியக்கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்து வந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தமிழ் கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து ஒரு தீர்வுத்திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்பதான கருத்தை தெரிவித்திருந்தார்.

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று ஞாயிற்றுக் கிழமை கூடி இது தொடர்பாக தீர்மானம் மேற்கொண்டதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் தமிழ் மக்களின் நலன் கருதி எந்தவொரு கட்சியுடனும் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை.

கடந்த காலங்களில் முல்லைத்தீவு  மாவட்டத்தில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரியுள்ளனர்.

கடந்த யுத்தம் நடைபெற்ற காலங்களில் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவிய போது பல சிக்கல்களுக்கு மத்தியில் 10 ஆண்டுகளாக பணியாற்றிவந்த இந்த தொண்டர்  அசிரியர்கள் வேறு தொழில்களுக்கு தாங்கள் விண்ணப்பிக்க வில்லை எனக்கூறுகின்றனர். ஆசிரியர் நியமனத்திற்கான நேர்முகத் தேர்வுகளிலும் தோற்றியுள்ளதாக தெரிவித்துள்ள இத்தொண்டர் ஆசிரியர்கள்  தங்களுக்கு நிரந்தர ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

முல்லைத்தீவு வீதிகள் புனரமைக்கப்படவுள்ளது.

Douglas Devanandaமுல்லைத்தீவு மாவட்டத்தில் பல வீதிகள் ‘வடக்கின் வசந்தம்’ அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ளன. சீன நிறுவனமொன்றினால் இவை புனரமைக்கப்பட வுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – புளியங்குளம் வீதி, ஒட்டுசுட்டான் – நெடுங்கேணி வீதி, முல்லைத்தீவு – பு ல்மோட்டை வீதி, அகியனவே இவ்வாறு புனரமைக்கப்படவள்ளன. இதற்கான ஆரம்ப நிகழ்வு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நிமல் கொத்தலாவல, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ச, சிறிரங்கா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

காணாமல் போனவர் சடலமாக மீட்பு.

யாழ். புலோலி தெற்கில் காணாமல் போனதாக கூறப்பட்ட நபர் ஒருவர் சடலமாக மீட்கபட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை புலோலித் தெற்கைச் சேர்ந்த வடிவேல் செல்வரத்தினம் என்பவர் காணாமல் போனதாக கூறப்பட்டது. நேற்று மாலை மந்திகை அம்மன் கோவில் பகுதியிலுள்ளவர்களால் துர்நாற்றம் வீசிய நிலையில் சடலம் ஒன்று காணப்பட்டள்ளது. இச் சடலம் பின்னர் காணாமல் போன் குறித்த நபரின் சடலம் என இனங்காணப்பட்டுள்ளது.

சடலத்தை பொலிஸார் மீpட்டெடுத்த மந்திகை வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர்.

தமிழ்பேசும் மக்கள்: அடையாள இருட்டடிப்பு – இலங்கை முஸ்லீம்கள் சோனகர்.: நிஸ்தார் எஸ் ஆர் எம்

Mohamed S R Nisthar1948ல் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து நீறுபூத்த நெருப்பாய் இருந்து வந்த இன அடக்குமுறையும் அதற்கெதிரான போராட்டமும் 1983இல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இரண்டு தசாப்தங்கள் தாண்டி இன்று இந்த இனப்பிரச்சினைத் தீ அணைந்து போகப் பலரும் பல வழிகளிலும் முன்னின்றுழைப்பது மகிழ்ச்சி தருவதாய் இருந்தாலும் இனப்பிரச்சினையின் உச்சகட்ட காலங்களில் ஆங்காங்கே முளைவிட்ட ஒரு கேள்வி இப்போது மரமாகிக் கிளை பரப்பியுள்ளது. இது பெரு விருட்சமாகி புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்காமல் இருக்க தேவைக்கேற்ப அழகாய், அளவாய் கத்தரித்து பராமரித்து வளர்க்கப்பட வேண்டுமா என்ற கேள்வியும் மிகத் தெளிவான குரலில் ஓங்கி ஒலிக்கின்றது.

பல்லின மக்களைக்கொண்ட இலங்கைத் தீவில் இனப்பிரச்சினையைத் தீர்க்க சிங்கள இனத்தின் சார்பில் இலங்கை அரசும் (ஜனாதிபதி நீங்கலாக) தமிழினத்தின் சார்பில் தமிழீழ விடுதலைப்புலிகளும் (வேறு யாரும் சேர்க்கப்படாமல்) பிரதிநிதிகளாகச் செயற்படுவதால் இலங்கையில் இரண்டு இனங்கள் மட்டும் தான் உள்ளன என்பதோ அல்லது வேறு இனங்களுக்கு அரசியலை அடியொட்டியதான பிரச்சினைகள் இல்லை என்பதோ பொருளல்ல. தவிர, போரிட்ட இரண்டு இனங்களும் ஏதோ வொரு தீர்வை அடைந்தால் அது எல்லா இனங்களையும் திருப்திப்படுத்தும் என்ற உத்தரவாதமுமாகாது. ஏனெனில் இலங்கையின் இன்னுமொரு சிறுபான்மையினம் தொடர்பான அதன் அடையாளப் பிரச்சினையில் சில சிக்கல்கள் இருப்பதால் இனப்பிரச்சினை தொடர்பாக அதன் பங்களிப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

“இலங்கை முஸ்லிம்கள்” என்போரே இந்தப் புதிய பிரச்சினையின் கருப்பொருளாகும். 1990இல் நடந்த இரண்டு முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள் இந்தப் புதிய பிரச்சினைக்கான தீர்வொன்றின் தேவையை உணர்த்தியது. இதில் 1வது, கிழக்கிலங்கையில் தொழுகை நேரத்தின்போது வயதுபேதமின்றி சிறியோர் முதல் தள்ளாடும் வயதினர்வரை நூற்றுக்கு மேற்பட்டோர் மசூதிக்குள் வைத்து புலிகளால் ஒரே நேரத்தில் காரணமின்றிச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம். 2வது அதே ஆண்டில் யாழ், மன்னார், முல்லைத்தீவு ஆகிய தமிழ் – முஸ்லீம் பூர்வீக பகுதிகளிலிருந்து பலாத்காரமாக ஒரு சில மணிநேரத்தில் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டமை.

மேற்படி இரண்டு சம்பவங்களில் இருந்தும் எழும்பிய புதிய கேள்விகள் இக்கட்டுரையின் அடிப்படைப் பிரச்சினையாகிய “சிறுபான்மையினம்” என்ற பதப்பிரயோகத்தின் சரியான விளக்கமொன்றின் தேவையை உணர்த்தி நிற்கின்றது.

இந்த “முஸ்லிம்களை” விடுதலைப்புலிகள் “தமிழ் பேசும் மக்கள்” என்ற பதப்பிரயோகத்தின் கீழ் அடக்கித் தாம் இனப்பிரச்சினை விவகாரத்தில் “தமிழ் பேசுவோரின்” பிரதிநிதிகள் என்றும், தமிழர்களுக்கும் சிங்களவருக்கும் இடையில் ஏற்படும் தீர்வும் உடன்பாடும் “தமிழ் பேசுவோர் எல்லோருக்குமான தீர்வே” என்ற நிலைப்பாட்டையும் கொண்டுள்ளனர். புலிகளின் இந்த நிலைப்பாட்டிற்கு வலிமை சேர்ப்பது போல் இலண்டனில் மையம் கொண்டுள்ள தமிழ் வானொலிகளும் பத்திரிகைகளும் இலங்கை முஸ்லீம்கள் தொடர்பாக எந்தவித விளக்கமுமின்றி “இஸ்லாமியத் தமிழர்” என்றும் “தமிழ் பேசும் முஸ்லீம்கள்” என்றும் இந்த இனத்தை அடையாளப்படுத்துகின்றனர்.

ஓரு இனம் தொடர்பான மேற்படி அனைத்து பதப்பிரயோகங்களும் அரசியல்ரீதியில் தெளிவை ஏற்படுத்தாதது மாத்திரமின்றி பிற்காலத்தில் புதிய பல பிரச்சினைகளையும் தோற்றுவிக்கக் கூடியதாகவே உள்ளன.

விடுதலைப்புலிகளின் “தமிழ் பேசும் மக்கள்” என்ற பதம் இனபேதமின்றி தமிழ் பேசும் மக்கள் எல்லோரினதும் நலன்களையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதாக அமைந்திருக்க வேண்டும். அப்படியானால் 1990இல் நடந்த துயரச் சம்பவங்களும் இதுபோன்ற சிறிய அளவிலான குரங்கு பாஞ்சான், ஏறாவூர், மூதூர் போன்ற இடங்களில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும், இனித் தொடரப் போகும் சம்பவங்களுக்கும் விடுதலைப்புலிகளின் சார்பில் சராசரி மனிதர்தானும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கங்கள், நியாயங்கள், உத்தரவாதங்கள் எதுவுமே இல்லை.

எனவே “தமிழ்பேசுவோர்” என்ற சொற்பிரயோகம் நடைமுறையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பது மிகத்தெளிவு. மேலும் “தமிழ் பேசுவோரின்” பிரதிநிதிகள் தான் புலிகள் என்றால் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் (SLMC) உடனான ஒப்பந்தம் ஏன் செய்யப்பட்டது? அது எதுகுறித்துச் செய்யப்பட்டது என்ற கேள்விகளுக்கப்பால் அப்படியொரு உடன்படிக்கை தேவையும் இல்லாதது. (ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் தெளிவாகப் பகிரங்கப் படுத்தப்படவில்லை). ஆகவே தமிழரும் முஸ்லீம்களும் அரசியல்ரீதியிலும் வேறுபட்டவர்கள் என்பது மிகத்தெளிவு.

மறுபுறத்தில் பொதுசனத் தொடர்பு சாதனங்கள் கூறும் “இஸ்லாமியத் தமிழர்”, தமிழ் பேசும் முஸ்லீம்கள், என்ற பதப் பிரயோகங்களும், மயக்கம்தரும் பண்புகளையே கொண்டுள்ளன. ஏனெனில் தமிழ் இனத்தில் உள்ளவர்கள் “சைவத் தமிழர்” என்றோ, “கிறிஸ்தவத் தமிழர்” என்றோ மதரீதியில் அடையாளம் காணப்படுவது இல்லை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சைவர்களும் கிறீஸ்தவர்களும் (அதன் உட்பிரிவினரும்) இனரீதியில் தமிழரென்றே கொள்ளப்படுகின்றனர். தமிழ் பேசும் சைவர், தமிழ் பேசும் கிறிஸ்தவர் என்று யாரும் அழைக்கப்படாத நேரத்தில் தமிழ் பேசும் முஸ்லீம்கள் என்று மாத்திரம் வரையறைக்குட்படுத்தப்பட்டு உள்ளதைக் காணலாம். இதிலிருந்து தமிழ்பேசும் முஸ்லீம்கள் என்போர் இனத்தால் தமிழர் அல்லர் என்பதோடு மாத்திரம் அல்லாமல் சிங்களம் பேசும் முஸ்லீம்கள் என்போரின் இருப்பையும் உறுதி செய்கின்றது. இது ஒருவகையில் சிங்களம் பேசும் கிறிஸ்தவரின் நிலைபோன்றது.

சிங்களம் பேசும் கிறிஸ்தவரை தமிழ் இனம் உள்வாங்க முடியாது. காரணம் அவர்கள் இனத்தால் சிங்களவர். அதேபோல் தமிழ்க் கிறிஸ்தவர் மதத்தால் சிங்களவர் போன்று கிறிஸ்தவராயினும் இனத்தால் தமிழராகவே இருக்கின்றனர். (இது பேசும் மொழியை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது போல் காணப்பட்டாலும் இது முழுக்க முழுக்க சாரும் இனத்தை அடிப்படையாகக் கொண்டது.) எனவே இங்கு சிங்களம் பேசும் முஸ்லீமை எவ்வாறு சிங்களவர் எனக் கருதக் கூடாதோ, கருத முடியாதோ, அதேபோல் தமிழைப் பேசுவதால் மட்டும் தமிழ் பேசும் முஸ்லீம்களை தமிழர் என்று வரையறுத்துவிட முடியாது.

இந்த இடத்தில் கவனிக்கப்படவேண்டிய இன்னுமொரு விடயம், புதிதாகச் சமயம் மாறுவோர், சமயம் மாறி முஸ்லிமாகவரும் தமிழரும், சிங்களவரும் சமயத்தால் முஸ்லீம் என்பவரே தவிர அவர் இனத்தால் இன்னும் தமிழரும் சிங்களவருமே.

ஒரு காலத்தில் யாழ்ப்பாணப் பகுதியில் பௌத்தம் செழிப்புற்றிருந்ததை வரலாறு கூறுகின்றது. அப்போது பௌத்தத்தைப் பின்பற்றிய தமிழர் சமயத்தால் பௌத்தர் என்று இனங் காணப்பட்டதால், அவர்களின் இனம் சிங்களம் என்றாகி விடவில்லை. அவர் அன்றும் இன்றும் என்றும் தமிழரே. அதேபோல் சமயத்தால் முஸ்லிமாக இருக்குமொருவர் சைவராகவோ கிறிஸ்தவராகவோ பௌத்தராகவோ சமயத்தை மாற்றிக்கொண்டாரென்றால் அவர் சைவர், கிறிஸ்தவர் அல்லது பௌத்தரே தவிர அவரின் இனஅடையாளம் தமிழர் என்றோ அல்லது சிங்களவரென்றோ மாறிவிடப் போவதில்லை. அப்படியானால் இங்கு எழும் நியாயமான கேள்வி இந்த இலங்கை முஸ்லீம் என்போர் இனரீதியில் யார் என்பதே.

இதற்கான பதில்

இனப்பிரச்சினைக்கான தீர்வுநோக்கி முன்னேறும் இந்த முக்கியமான வரலாற்றுக் கட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய நியாயமானதும் அரசியல் ரீதியில் மிக முக்கியமானதுமான (Politically crucial) விடயம் முஸ்லீம்கள் பற்றிய நிலைப்பாடு ஆகும்.

இக்கட்டத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்யப்படும் தவறுகளும் செய்யத் தவறும் விடயங்களும் நாளைய அமைதியான ஒன்றுபட்ட இலங்கையில் அல்லது சிங்களவர் தமிழர் சுயாட்சிப் பிரதேசங்கள் என்ற அமைப்புக்குள் அல்லது ஸ்ரீலங்கா, தமிழீழம் என்ற இரண்டு இறைமையுள்ள நாடுகளில் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்தை தோற்றுவிக்கும்.

இன்று சிங்கள பேரினவாதம் (மறைமுக) தமிழ்ப் பேரினவாதம் என்பவை மாத்திரமல்ல வளர்ந்து வரும் தனி பௌத்த மதவாதமும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. உலகின் முதல் பிக்குகளாட்சி (Theocracy) ஆட்சிக்கான நாடிப்பிடிப்புகளையும் இந்த இடத்தில் மறுப்பதற்கில்லை. (ஆனால் தமிழரிடையே மதவாதம் வெளிப்படுவதற்கான அறிகுறி அரிதிலும் அரிதாகவே காணப்படுகின்றது).

இலங்கை முஸ்லீம்கள் இன அடையாளம் இல்லாமல் மத அடையாளத்திலேயே தமது அரசியலை நடத்த விரும்பினால் பல இனங்கள் வாழும் நாட்டில் மாறுபட்ட சூழலிலுள்ள ஒரு நாட்டில் அதிலும் நாம் சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாய் வாழும் நாட்டில் சர்வதேசங்களின் கவனம் அதிகரித்து வரும் ஒரு நாட்டில் அது நமது இருப்பையே கேள்விக்குறியாக்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

உதாரணமாக விடுதலைப் புலிகளின் முஸ்லீம்கள் தொடர்பான நிலைப்பாட்டை நோக்கும் போது அதில் சந்தர்ப்பவாதம் இழையோடுவதை இலகுவாகக் காணலாம். அவர்களில் தமிழ் பேசும் மக்கள் என்ற நிலையை விடுத்து இப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் முஸ்லீம்களை ஒரு கலாச்சாரக் குழுவாக ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

இந்தக் கலாச்சாரக் குழு என்ற சொற் பிரயோகம், தமிழ் பேசும் மக்கள் என்பதை விடவும் குறைவான நிலை. ஒரு மக்கள் கூட்டத்தில் பல வகையான கலாச்சாரங்கள் பின்பற்றப்படலாம். ஒருவன் உணவு உண்ணும் முறையிலிருந்து நாட்டை நிர்வகிக்கும் விடயங்கள் வரை பலவிதமான கலாச்சாரப் போக்குகளை கடைப்பிடிக்கலாம். இனம் என்ற பரந்த பரப்புக்குள் கலாச்சாரம் என்பது ஒரு சிறு பகுதியே. சரி ஒரு பேச்சுக்காக கலாச்சாரக் குழு என்பதை ஏற்றுக் கொண்டாலும் அக் குழுவின் நிலை என்ன, உரிமைகள் என்ன என்பதற்கு இன்னும் விடை கொடுக்கப்படவில்லை.

இதைவிடவும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இலங்கை முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஒரு தலைமையின் கீழ் வரவேண்டும் அதன் பிறகு அவர்கள் தனியான குழுவாக (Entity) பேச்சு வார்த்தை மேசைக்கு வரலாமா என்பது பற்றித் தீர்மானிக்கலாம் என்று கூறியது மிகவும் அவதானத்துக்குரியது.

ஆலோசகர் பாலசிங்கத்தின் அரசியல், கூட்டல் கழித்தல் படி ‘இலங்கை முஸ்லீம்கள் பரம்பரை பரம்பரையாக ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்ந்த அரசியல் நடத்தியவர்கள். 1990களில் துடிப்போடு முன்னேறிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) அதன் ஸ்தாபக தலைவர் மறைந்த அஷ்ரஃப்பின் திட்டமிட்ட கொலையின்பின் துண்டு துண்டாகி முஸ்லிம்களின் அரசியல் குரல் அஸ்தமிக்க ஆரம்பித்து விட்டது’ என்பதாகும்.

‘இலங்கை முஸ்லிம்கள் தனியான பிரிவினர் எனவே நாட்டின் இனப்பிரச்சினை தொடர்பான சமாதான முன்னெடுப்புகளில் அவர்கள் பங்குகொள்ள வேண்டியது அவசியம். அதை விடுதலைப் புலிகளாகிய நாங்கள் உத்தரவாதப்படுத்துகிறோம். ஆகவே முஸ்லிம்கள் அதற்கான அதிகாரத்தை அவர்கள் விரும்பும் தலைமைக்கு அல்லது கட்சிக்குக் கொடுக்கலாம்’ என்று பாலசிங்கம் கூறி இருந்தால் அதில் சந்தேகிக்க எந்த விடயமும் இல்லை. இதைவிடுத்து முஸ்லிம்கள் முதலில் ஒன்றுபடுங்கள் (ஒன்றுபடமாட்டார்கள் என்பது அவரது எதிர்பார்ப்பு) அப்புறம் மிகுதியைப் பார்க்கலாம் என்பது இனப்பிரச்சினையின் சமாதானத் தீர்வு பேச்சுவார்த்தைகளில் முஸ்லீம்களுக்குத் தனியிடம் இல்லை என்பதற்கான முன் அறிவிப்பாகும்.

இந்த இடத்தில் கலாநிதி சித்தீக்கின் கூற்றொன்றும் சாலப்பொருந்தும். அதாவது முஸ்லிம்களை விட மிக அதிகமாக தமிழர்களே இன்று பிரிந்து காணப்படுகின்றனர். அவர்களின் பிரிவை பத்துக்கும் மேற்பட்டதாக அடையாளங் காணலாம் என்பதாகும். ஆக, இங்கு எத்தனையாக யார் பிரிந்துள்ளனர் என்பது பிரச்சினையல்ல. பேச்சுவார்த்தைக்கு யார் தகுதியான பிரிவினர் என்பதே முக்கியம். அரசதரப்பு, தமிழர்களே முதலில் ஒன்றுபடுங்கள். அப்புறம் மீதியைப் பார்க்கலாம் என்றால், போர் தொடருமே தவிர அருமையான இந்தச் சமாதான ஒப்பந்த சூழல் இன்று இருந்திருக்காது. என்றும் இருக்காது. ஏனெனில், ஜனநாயக ரீதியில் விடுதலைப் புலிகளின் தலைமையின்கீழ், தமிழர் எல்லோரும் ஒன்றுபடுவதென்பது நடக்க முடியாத விடயம்.

இலங்கையில் முஸ்லிம் என்ற சமயவழிப் பதப்பிரயோகம் இலங்கையின் எதிர்கால அரசியலில் அவர்களை ஒரு தேசிய இனத்தின் அந்தஸ்திலிருந்து கீழிறக்கிவிடும். ஆகவே அவர்கள் தமது இனத்தின் பெயரை தூசுதட்ட வேண்டும்.

இலங்கை முஸ்லீம்கள் சமய அடையாளத்தினூடே அரசியலில் செயற்பட விரும்பினால் நாளை சிங்கள இனத்தின் கிறிஸ்தவர்களும் தமிழினத்தின் கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவர்களின் சிறுசிறு சமயப் பிரிவினரும் (Cult), ஏன் முஸ்லீம்களின் உட்பிரிவினரும் கூட தங்கள் இருப்புக்கான சட்ட அங்கீகாரம் கோரலாம். இலங்கையின் இன்றைய கிறிஸ்தவர், சிங்கள பௌத்தர்களின் உன்னிப்பான அவதானிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். சமயரீதியான நெருக்குவாரங்கள் கிறிஸ்தவர்களுக்கு அதிகரிக்கும்போது அதற்கான நிவாரணமாக முஸ்லீம்களுக்கான பிரத்தியேக ஏற்பாட்டை கிறிஸ்தவர்களும் கோரலாம்.

விடுதலைப் புலிகளும் கூட முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகளைத் தட்டிக் கழிக்க தமிழ் கிறிஸ்தவர்களைக் காரணம் காட்டி தமதாட்சியில் ஒரு சமயப் பிரிவினருக்கு மாத்திரம் பிரத்தியேக சலுகை தரஇயலாது எனலாம். நிலைமையை தங்களது அடக்குமுறைக்குச் சாதகமாகவும் பயன்படுத்தலாம்.

இதையெல்லாம் விட மிகப் பயங்கரமான விடயம், விடுதலை புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் சேரலாம். அதிலும் விஷேடமாக அமெரிக்காவுடனோ அல்லது இஸ்ரேலுடனோ அல்லது இரண்டு நாடுகளோடும் சேர்ந்து இலங்கை முஸ்லீம்களை இஸ்லாமியப் பயங்கரவாதிகள் என்று பெயரிட்டு மிக இலகுவாக ஓரங்கட்டி விடலாம். இது அதீத கற்பனை அல்ல. ஏகாதிபத்தியவாதிகளினதும் பேரினவாதிகளினதும் கைவந்த கலை. விடுதலைப் போராட்டம், பயங்கரவாதம், நாட்டு நிர்மாணம், உலக ஒழுங்கு, நாகரீக உலகு என்ற பதப்பிரயோகங்கள் அவரவர்களின் நலன் கருதியே பொருள் வழங்கப்படும்.

ஆகவே நாம் நமது இனப்பெயரில் அரசியல் நடத்துவதே அரசியல் சாணக்கியமாகும் (Political manoeuvring). நமது இனத்தின் பெயர் நமது பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் மிகத்தெளிவாகத் தெரியப்படுத்தப்பட்டு உள்ளது. சிங்களத்தில் “யோனக்க” என்றும், தமிழில் “சோனகர்” என்றும் ஆங்கிலத்தில் “மூர் (MOOR)” என்றும் எழுதப்பட்டு உள்ளது. இது எமக்கு இழுக்கல்ல. இது ஒரு காரணப் பெயர். எந்த இனமும் தூய்மையான இனமல்ல. அதனால் மாசுபட்டவர் என்ற பொருளல்ல.

நாம் ஒரு கலப்பினம். ஓன்றில் தமிழ்நாட்டில் காயல்பட்டினம், கீழ்க்கரையில் இருந்து வந்த அரபுக் கலப்புடைய தந்தையருக்கும் இலங்கையின் பெரும்பாலும் தமிழ்த் தாய்மாருக்கும் அல்லது நேரடி அரபுத் தந்தையர்களுக்கும் உள்ளுர் தமிழ், சிங்களத் தாய்மார்களுக்கும் அல்லது அரபு கிழக்கு ஐரோப்பியக் கலப்பில் வந்த தந்தை வழியினருக்கும் உள்ளுர் சிங்களத் தமிழ்த் தாய்மாருக்கும் அல்லது மேற்சொன்ன தந்தைவழி வட ஆபிரிக்கக் கலப்பில் தந்தை வழியினருக்கும் உள்ளுர் தமிழ் சிங்களத் தாய்மார்களுக்கும் இடையே ஏற்பட்ட உறவில் அல்லது திருமணப் பந்தத்தின் வழிவந்தவர்கள் இலங்கைச் சோனகர்கள்.

இந்தச் சோனகர் என்போர் இலங்கையில் மாத்திரம் அல்ல, மொரோக்கோ, தமிழ்நாட்டின் சில பகுதிகள் பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்களிலும் வாழ்வதால் இலங்கையில் உள்ளோர் இலங்கைச் சோனகர் (Ceylon Moor) என அழைக்கப்படுக்கின்றனர்.

இலங்கைச் சோனகர்களின் இருப்பு, இஸ்லாம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் முன்பு அல்லது அதன் சமகாலத்தில் ஏற்பட்டது என்பது வரலாறு. ஆக, சோனகர் என்பதை இஸ்லாத்துடன் முழுக்க முழுக்கத் தொடர்புபடுத்தி தமிழரில் இருந்தும் சிங்களவரில் இருந்தும் மதமாற்றம் பெற்றோர் எனச் சில இலண்டன் வானொலிகளும் தமிழ்ப் புத்திஜீவிகளும் கூறிவருவது நிரூபிக்கப்பட முடியாத வரலாற்றுப் பிழை. இலங்கைச் சோனகரின் தோற்றமும் வாழ்வும், அதன் மொழி, கலாச்சாரத் தாக்கங்கள், ஐரோப்பியப் படையெடுப்புக் காலங்களில் அந்த இனம் நாட்டுக்கு ஆற்றிய சேவை என்பன எல்லாம் நீண்ட வரலாறு ஆகும்.

ஆக, இலங்கைச் சோனகர் என்போர் தனித்தவொரு இனம். அவர்கள் ஒரு தேசியம் (Nation). அந்தத் தேசியம் தனது விவகாரங்களைத் தானே கவனிக்கும் சுயநிர்ணய உரிமை (Right to Self Determination) அதற்குண்டு. தேவைப்படின், நிபந்தனைகளுடன் கூட்டுச் சேரவும் (இதுதான் விடுதலைபுலிகள் – முஸ்லிம் காங்கிரஸ் வன்னிச் சந்திப்பும் ஒப்பந்தமும் என்றால் பாராட்டப்பட வேண்டியதே) தனியே பிரிந்து செல்லவும் அதற்கு உரிமையுண்டு.

இந்த உரிமையைத்தான் இதுவரை காலமும் இலங்கையின் பேரினவாத அரசுகள் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இலங்கைத் தமிழருக்கு கொடுக்க மறுத்து வந்தனர். இப்போதும் மறுக்க முயல்கின்றனர். சுயநிர்ணய உரிமையை தமிழர் தரப்பு சோனகர்களுக்குத் தரமறுத்தால் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை நியாயமற்றதாகிவிடும். அது அவர்களுடைய போராட்டத்தினை போலியாக்கிவிடும்.

மேலும் ஏதாவது ஒரு இடத்தில் இனசுத்திகரிப்பு (Ethnic Cleancing) என்றால் சற்று நின்று உலக நாடுகள் அப்படியா என்று கேட்கின்றன. அதற்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டுமென முன்வருகின்றன. புயல் என்றால் வள்ளம் என்றால் பூகம்பம் என்றால் நோய் என்றால் உதவ முன்வரும் நாடுகள் கூட ஒரு சமயத்தவருக்கு பிரச்சினை என்றால் அடிப்படைவாதிகளாக இருக்க வேண்டும் அல்லது பயங்கரவாதிகளாக இருக்க வேண்டும் என்ற ரீதியில் உதவ முன்வருவதில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மதத்தவருக்கு எதிரானவருக்கு கை கொடுத்து உதவுகின்றன. இதில் உள்நாடு வெளிநாடு என்ற பேதமெல்லாம் கிடையாது.

இவை அனைத்தையும் நாம் கவனத்தில் கொண்டால், உலகின் சமகாலப் போக்குக்கேற்பவே எமது உரிமைகளைப் பெறவும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யவும் முடியும். சமயம் என்ற போர்வைக்குள் எமது அரசியலுக்கு பலம் சேர்க்க முயலலாம். ஆனால் இனம் என்ற வலுவான அடித்தளத்தில் இருந்து நமது கோரிக்கைகள் பிறக்க வேண்டும் என்பது எனது வாதம்.

(தேசம் இதழ் 17 – 2004) & (தேசம் இதழ் 18- 2004 )