இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவை தமிழ் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் 28ஆம் திகதி சந்திக்கவுள்ளதாக இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தரும் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடுவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும். அதன்படி 28ஆம் திகதி முற்பகல் 11மணிக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் சந்திப்பு இடம்பெறும் எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் அவர்களுக்கான புனர்வாழ்வு, அபிவிருத்திப் பணிகள், வடக்கிலுள்ள உயர்பாதுகாப்பு வலயம் தொடர்பான பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும், காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினை போன்ற விடயங்கள் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட உள்ளதாகவும், அத்துடன் மேற்குறித்த விடயங்கள் குறித்து தமிழ் கட்சிகளின் அரங்கம் விரிவான மனுவொன்றையும் இந்திய அமைச்சரிடம் கையளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.