தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகளும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் நேற்று சனிக்கிழமை நடத்திய சந்திப்பில் இனப்பிரச்சனைக்கு தகுந்த தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்கும் விடயத்தில் இணைந்து செயற்பட இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.
இதன்போது பொதுத்தீர்வுத்திட்டம் ஒன்றைக் காணும் வகையில் ஆறு பேர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் கூட்டமைப்பின் சார்பில் மூவரும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் சார்பில் மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சனைக்கான தீர்வு காணும் வகையில் அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதெனவும் நேற்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கொழும்பு அலுவலகத்தில் நேற்றுப் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமான இச்சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குழு தனது சிபார்சுகளை இரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் பேச்சாளரும் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம்,கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை. இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள்குடியமர்வு, தமிழ் பிரதேசங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றமை, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் போன்ற விடயங்களில் தமிழ் கட்சிகள் இணைந்து செயற்படுவது முக்கியமானது எனவம், தமிழ் கட்சிகள் யாவும் ஓரணியில் நின்று சமர்ப்பிக்கும் யோசனைகளை அரசாங்கம் நிராகரிக்க முடியாது எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.