02

02

”நானும் தெருவில் நின்று போராடியவன்! இன்று உள்ளே இருக்கின்றேன்.” ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரித்தானிய இலங்கைத் தூதரகத்தில் இடம்பெற்ற சந்திப்பில்

MR_at_UK_Empassy”நான் எதிர்க்கட்சியில் இருந்தபோது நானும் இப்படி தெருத்தெருவாகப் போராட்டியவன். எனது போராட்டத்திற்கு நியாயம் இருந்தது. ஆனால் இங்கு நடைபெறும் போராட்டங்களுக்கு நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை” எனத் தெரிவித்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. இன்று (டிசம்பர் 02) பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவிக்கையில் ”ஜனநாயகத்தின் தாய்நாடாக இருக்கும் பிரித்தானியாவில் கருத்துச் சுதந்திரத்திற்கு முன்னுரிமை அளிக்கின்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் யூனியனில் எனது கருத்தை தெரிவிக்கவிடாமல் தடுத்தது கருத்துச் சுதந்திரத்தை மறுத்ததே” எனத் தெரிவித்தார்.

”ஒன்றரை வருடங்களுக்கு முன் நான் உங்களைச் சந்தித்த போது நான் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று உறுதி அளித்திருந்தேன். அதனைச் செய்து முடித்திருக்கிறேன். இனிமேல் இலங்கையில் அபிவிருத்தி மேற்கொள்ளப்படும். சமாதானம் நிலைநாட்டப்படும். சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அனைவரும் இலங்கையர்களாக வாழ்வார்கள். அடுத்த தடவை மீண்டும் உங்களைச் சந்திக்கும் போது அவற்றைச் செய்து முடித்திருப்பேன்” என்று தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அனைவரும் தனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இன்று இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர்கள் ஜி எல் பீரிஸ் எஸ் பி திஸ்ஸநாயக்கா ஆகியோரும் கலந்து கொண்டனர். அங்கு வந்திருந்த தமிழ் முஸ்லீம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. வழமைக்கு மாறாக இன்றைய நிகழ்வு பெரும்பாலும் சிங்கள மொழியிலேயே இடம்பெற்றது. இச்சந்திப்பில் மூவின சமூகங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்று மொழிகளையும் பேசக்கூடியவராக இருந்த போதும் இலங்கைத் தூதரகம் இக்கூட்டம் பற்றிய ஏற்பாடுகளை சீராக ஒழுங்கமைத்து இருக்கவில்லை.

கூட்ட ஏற்பாடுகள் எவ்வித ஒழுங்கும் இன்றி சீரற்றதாகவே காணப்பட்டது. ஒரு நாட்டின் ஜனாதிபதி உடனான சந்திப்பு என்று எவ்வித ஒழுங்கமைப்பும் இன்றி இச்சந்திப்பு அமைந்தது. அரசியல் உரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கான வாய்ப்பு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கவில்லை.

ஒக்ஸ்போர் யூனியனில் இடம்பெற இருந்த ஜனாதிபதியின் உரை ரத்து செய்யப்பட்டமை இலங்கை அரசுக்கு ஏற்பட்ட வெளிப்படையான அவமானமே. இவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டம் முடுக்கி விடப்படும் என்பதை இலங்கைத் தூதரகம் கணித்து தகுந்த ஆலோசணை வழங்கத் தவறிவிட்டதாக தற்போது இலங்கை இராஜாங்க வட்டாரங்களில் குற்றம்சாட்டப்படுகிறது.

ஜனாதிபதியின் உரை ஒக்ஸ்போர்ட் யூனியனில் ரத்து செய்யப்பட்டமை அரசியல் ரீதியில் பலவீனமாகிக் கொண்டிருந்த பிரிஎப் ரிவைஓ போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு  அமைப்புகளுக்கு அமைப்புகளுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. ஒக்ஸ்போர்ட் நோக்கிய ஆர்ப்பாட்டம் அதன் பின்னர் ஜனாதிபதி தங்கியிருந்த ஹொட்டலை நோக்கியும் பின்னர் இலங்கைத் தூதரகத்தை நோக்கியும் நகர்ந்தது.

இலங்கைத் தூதரகத்தில் இன்று மாலை ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம்பெற்ற வேளை தூதரகம் உள்ள வீதியின் இரு அந்தங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி இருந்தன. பெரும்பாலும் அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி இவ்வார்ப்பாட்டங்கள் இடம்பெற்றது. ஆனால் புலிக்கொடிகளைத் தாங்கிய வண்ணம் இருந்த சிலர் ஜனாதிபதியின் சந்திப்பிற்கு வந்து சென்றவர்களை நோக்கி மோசமான தூசண வார்த்தைகளை தமிழிலும் சிங்களத்திலும் கோசமாக எழுப்பினர்.

இச்சந்திப்பையொட்டி ஏரானமான பொலிசார் அப்பகுதி எங்கும் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆயுதம் ஏந்திய பொலிசார் தூதரகத்திற்கு பாதுகாப்பு வழங்கினர்.

கடும் மழை காரணமாக வன்னியில் கூடாரங்களில் தங்கியுள்ள மக்கள் பாதிப்பு.

தற்போது பெய்து வரும் கடும் மழையினால் கிளிநொச்சி முல்லைத்தீவு பகுதிகளில் கூடாரங்களில் தங்கியுள்ள மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் அமைக்கபட்டுள்ள கூடாரங்களில் தங்கியுள்ள மக்கள் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

கிளிநொச்சி பொன்னகரில் சொந்த காணிகளில் குடியமர்த்தப்படாமலுள்ள மக்கள் அக்காணிகளுக்கு அருகில் கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி தாழ்வான நிலமாவுள்ளதால் கூடாரங்களுக்குள் வெள்ளம் புகுந்தது பாதிப்பிற்குள்ளானது. அம்மக்கள் தங்கள் காணிகளில் அமைந்துள்ள அவர்களது வீடுகளுக்குள் சென்று தங்கியிருக்க முற்பட்டபோது அப்பகுதியிலிருந்த படையினரால் அவர்கள் வெளியேற்றப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கிளிநொச்சி அரசாங்க அதிபர் தெரிவித்தபோது அம்மக்கள் தங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சமைத்த உணவுகள் அவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் தாதிமார் இன்று ஓரு மணி நேரம் பணிப்புறக்கணிப்பு.

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் அரசாங்க தாதிமார் இன்று வியாழக்கிழமை ஒரு மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இன்று முற்பகல் 11.30 மணி தொடக்கம் 12.30மணி வரை அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் தொடக்கம் ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத் தாதியர் சங்கத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இக்கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையில் அதனை நினைவூட்டும் வகையில் இன்று இப்பேராட்டத்தை அவர்கள் நடத்தினர்.

மட்டக்களப்பில் பாம்புகள் வெளிப்பட்டமைக்கும் சுனாமிக்கும் தொடர்பில்லை என வானிலை அவதான நிலையம் தெரிவிப்பு.

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் ஆயிரக்கணக்கான பாம்புகள் ஒரே தடவையில் வெளிப்பட்டதைத் தொடர்ந்து சுனாமி அபாயம் ஏற்படுமோ என மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் அவ்வாறு ஏற்பட சாத்தியம் இல்லை எனவும் பொதுமக்கள் இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி சுனாமி ஏற்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மட்டக்களப்பில் இவ்வாறு ஆற்றில் ஆயிரக்கணக்கான பாம்புகள் தோன்றியதாகவும் தங்போது அதே போல் பாம்புகள் வெளிப்பட்டுள்ளதால் மீண்டுமொரு சுனாமி ஏற்படுமோ என மட்டக்களப்பில் பொதுமக்கள் அச்சம் கொண்டிருந்தனர். ஆனால், இது தொடர்பாக மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

பூநகரி-சங்குப்பிட்டி பாலம் ஜனவரி மாதம் திறக்கப்படும்.

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்தின் திருத்த வேலைகள் முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் இப்பாலம் திறந்து வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பாலம் இம்மாதம் 10ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது பெய்து வரும் மழை காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதமே இப்பாலம் திறந்து வைக்கப்படும் என இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பாலத்தூடான போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் போது, மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்து சுலபமானதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் இராணுவச்சிப்பாய் மேற்கொண்ட கைக்குண்டு தாக்குலில் 14 பொலிஸார் படுகாயம். கைக்குண்டு எறிந்தவர் உயிரிழப்பு. நுவரெலியாவில் சம்பவம்.

முன்னாள் இராணுவச்சிப்பாய் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கைக்குண்டு ஒன்றை வெடிக்கச் செய்ததால் 14 பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர். நுவரெலியாவில் நேற்று புதன்கிழமை மாலை 3.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைக்குண்டை எறிந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற இவர் கஞ்சா கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அழைத்துச் செல்லப்பட்ட போதே அவர் தனது கையிலிருந்த கைக்குண்டை வெடிக்கச் செய்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அதியட்சகருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

சும்பவத்தில் படுகாயமுற்ற 14 பொலிஸாரும் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவரின் மனைவி பொலிஸாரினால் விசாரணைக்குற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துயர்துடைக்க வாரீர் : இணுவையூர் பதஞ்சலி நவேந்திரன்.

Maaveerar_Memorialமற்றையவர்களின் விடிவிற்காக தன்னுயிர் ஈய்ந்த அந்த உத்தமர்களிற்கு,  
எனது ஒருகண மௌன அஞ்சலி
 
போராட்டம் உக்கிரம் அடைந்த உச்சக்கட்டத்தை அடைந்த நேரத்தில் இருந்து எத்தனை தூக்கமற்ற இரவுகள். இத்தனைக்கும் என்னுடன் நெருக்கமாக சம்பந்தப்பட்ட நண்பர்களோ உறவினர்களோ எந்த விதத்திலும் இந்த உச்சக்கட்ட போராட்டத்தில் பாதிக்கப்படவில்லை இருப்பினும் இறுதிநிலைப் போராட்டத்தில் உயிர்நீத்த அத்தனை மக்களை நினைத்தும் மனம் ரணமாக வேதனைப்பட்டிருக்கிறது. அங்கவீனர்களாக உறவுகளை இழந்த ஒன்றுமற்று அனாதைகளாக்கப்பட்ட பொதுமக்கள் போராளிகளை நினைத்த நினைத்து மனம் துவளுகின்றது.

வெளிநாடுகளில் வாழும் பெரும்பாலானவர்கள் இந்தப் போராளிகளுக்கும் போராட்டத்தினால் அகப்பட்டு நலிந்த மக்களுக்கும் மாற்றுக்கருத்தின்றி நிறையவே அடைக்க முடியா கடன்பட்டு இருக்கிறார்கள். போராட்டமின்றி வெளிநாட்டின் சுக போகங்கள் எமக்கும் கிடைத்திருக்க மாட்டாது. திரும்பிப் பாருங்கள் எம்முடன் படித்த சக மாணவ போராளிகளை எம்மைவிட மிகத் திறமைவாய்ந்த நண்பர்கள் போராட்டத்தில் இணைந்து, ஒன்று இறந்து இருக்கிறார்கள் அல்லது எல்லாவற்றையும் இழந்து இன்று ஒன்றுக்கும் இயலாதவர்களாக எல்லோராலும் வெறுக்கப்படும் நிலையிலும் இருப்பது மிகப்பரிதாபமானதும் வேதனையானதும்.

போராட்டத்தில் அவர்கள் இணையாமல் இருந்திருந்தால் இன்று எம்மைவிட மிகச்சிறப்பாகவே இருப்பார்கள். அவர்களின் திறமையால் தாய்நாட்டிலே போராட்டத்தினாலே எல்லோரும் தான் பாதிக்கப்படடார்கள் இருப்பினும் எனது இரக்கம் புலிப்போராளிகள் மீதுதான். காரணம் புலிப் போராளிகள் தவிர்ந்த மற்றயவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட பல வகையான அமைப்புக்கள் முண்டியடிக்கின்றன. இலங்கை அரசு உட்டபட பல அரசாங்கங்களும் இதில் உள்ளடக்கம்.
துரதிஸ்டவசமாக எல்லோராலும் கைவிடப்பட்டவர்கள் இந்த புலிப் போராளிகளே. மற்றைய இயக்கங்கள் இவர்களை எதிரியாக பார்க்கின்றன. அரசாங்கமோ ஒளித்துக்கட்ட வரிந்து கட்டி நிற்கிறது. எல்லாவற்றிக்கும் மேலாக யாருக்காக போராடினார்களோ, அந்த மக்களுக்கும் இவர்களை பிடிக்காமல் போனது மிகமிக துரதிஸ்டவசமானது. இப்போராளிகளை பராமரிக்க வேண்டிய பாரிய பொறுப்பு வெளிநாடுகளில் வாழும் ஒவ்வொருவருக்கும் உண்டு. தயவு செய்து உதவிக்கரம் நீட்டுங்கள்.

மாவீரர் தினம் முடிவடைந்து ஒரு வாரம் ஆகின்றது. விதைக்கப்பட்டவர்களுக்கு உரிய மரியாதை வணக்கம் செலுத்த வேண்டியது எமது எல்லோரினதம் கடமை. மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும் நான் மேலே குறிப்பிட்ட போராட்டத்தில் பாதிக்கப்பட்ட இந்த நலிந்த மெலிந்த மக்களுக்கு, போராளிகள் உட்டபட நாம் என்ன செய்யப்போகிறோம்?

தலைமைகள் அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்ட நிலையில் எம்மை வழிநடத்த ஒருத்தரும் இல்லையா? என மனம் விம்மி வெடிக்கிறது. செய்வதற்கு நிறைய இருந்தும் இதைசெய் இப்படிச்சொல் என்று சொல்வதற்க்கு தகமையான தலைவர்களோ அமைப்புகளோ இல்லாமல் மனம் அல்லல்படுகின்றது.

நம்பி நடந்த பலர் ஏமாற்றிவிட்டார்கள். எனவே யாரையும் நம்ப மனம் மறுக்கிறது. இருப்பினும் உதவிசெய்ய மனம் உன்னுகிறது. வழிதான் தெரியவில்லை. இருப்பினும் பிறை ஒளியாய் சில கருத்துக்கள் பாதிக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு நாம் செய்யும் உதவி பாரிய நடவடிக்கைகளாக இருக்க வேண்டும் என்பதில்லை. சிறுதுளி பெரு வெள்ளம் என்பார்கள். எம்மால் முடிந்த சிறுசிறு உதவிகள் ஒவ்வொருவரும் செய்தால் அதுவே சிற்றருவியாகி ஆறாகி கடலாகி சமுத்திர வடிவமாகும்.

நாளை என்று ஒத்திப்போடாமல் இன்றே இக்கணமே செயல்வடிவம் எடுப்போம்.

1. எமக்கு தெரிந்த நண்பர்கள் உறவினர்களுக்கு எம்மால் முடிந்த சிறு உதவிகள்.

2. அடுத்த கட்டமாக நாம் பிறந்த ஊர் கிராமம் அல்லது பட்டினம் வெளிநாடுகளில் இந்த கிராமங்களை அடிப்படையாக வைத்து அமைப்புக்களை உருவாக்குங்கள். அவற்றில் இணைந்து சில உருப்படியான காரியங்களை உங்கள் கிராமங்களுக்கு செய்யுங்கள்.

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயரும்.
 
3. தமிழர்களின் அடையாளங்களில் ஒன்று கல்விக்கு முதன்மை அளித்தல். இக்கல்விக்கு தாய் நாட்டிலுள்ள பாடசாலைகள் உறுதுணையாக நின்றன. நிற்கின்றன. இப்பாடசாலைகளின் பழைய மாணவர் அமைப்புகள் வெளிநாடுகளில் இயங்குகின்றன. நாட்டுக்கு நாடு இவை இருக்கின்றன. நானா? நீயா? என போட்டி போட்டு ஒரே தேவைக்கு பல நாட்டிலுள்ள இச்சங்கங்கள் தமக்குள் பேசாமல் அதிபர் கேட்டுவிடடார் என்பதற்காக பணத்தை வாரி இறைக்கின்றன. படித்த நன்றிக்கடனை செலுத்த வேண்டும் என்ற கடமை உணர்வு அளவிற்கு அதிகமாகவே, தேவைக்கு மிதமிஞசியே செய்ய வைக்கிறது. 40 சீட்பஸ் அதற்கு நிரந்தர ஓட்டுனர். அதனைப் பராமரிப்பதற்கு அதைப் பாதுகாக்க கொட்டகை இப்படியே பட்டியல் நீள்கின்றது.
 
இந்த வெளிநாட்டில் இயங்கும் பழைய மாணவர் சங்கங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் ஒருவருடத்திற்கு உங்கள் உதவிக் கரங்களை இந்தப் பாதிக்ப்பட்ட இடங்களில் உள்ள பாடசாலைக்கு நீட்டுங்கள். ஒரு பாடசாலையை தத்து எடுங்கள். ஒரு வருடத்திற்கு நீங்கள் படித்த பாடசாலைக்கு உதவி செய்யாமல் விட்டால் அப்பாடசாலை ஒன்றும் தராதரத்தில் குறைந்துவிடாது.

முற்றாக ஒன்றுமே இல்லாமல் பிரிந்த கூரையும் ஆசிரியர்கள் இல்லாத பாடசாலைக்கு நீங்கள் உதவ முடியமானால் அவர்கள் அதனால் அடையும் பலன் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்ற கருத்தை ஆதரிக்க மாகவி பாரதியாரை உதவிக்கு அழைக்கின்றேன்.
 
இன்னறுங் கனிச்சோலைகள் செய்தல்
இனிய நீர்க்கண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னர் உள்ள தர்மங்கள் யாவும்
பெயர்விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்து அறிவித்தல்
வீணாண வெட்டிப்பேச்சை கைவிட்டு வாரீர் துயர் துடைக்க

இணுவையூர் பதஞ்சலி நவேந்திரன்.