19

19

இரத்ததானத்தில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி தேசிய மட்டத்தில் முதலிடம்.

Blood_Donationஇவ் வருடம் பாடசாலைகளில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வுகளில் தேசிய மட்டத்தில் யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி முதன்மை பெற்று சாதனை படைத்துள்ளது. குறித்த கல்லூரியில் இவ்வருடம் இடம்பெற்ற இரத்ததான முகாமில் 230 பேர் இரத்ததானம் செய்துள்ளனர் என யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் 210 பேர் இரத்ததானம் செய்து அக் கல்லூரி தேசியமட்டத்தில் முன்னணியில் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலை மருத்துவர்கள் இரு வருடங்கள் வடக்கு கிழக்கில் பணியாற்ற வேண்டும்

Faculty_of_Medicine_UoJயாழ்ப் பாண பல்கலைக் கழகத்திலிருந்து மருத்துவர்களாக வெளியேறுவோர் இரு வருடங்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் பணியாற்ற வேண்டும் என்கிற நடைமுறை கொண்டு வரப்படவுள்ளது. அவ்வாறு இரு வருடங்கள் வடக்கு கிழக்கு வைத்தியசாலைகளில் பணியாற்றியதன் பின்னரே அவர்கள் வேறு பிரதேசங்களுக்கு இடமாற்றம் பெறமுடியும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுதாகவும், இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டால் இப்பற்றாக்குறையை ஓரளவிற்கு குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறும் வைத்தியர்கள் ஒரு வருடம் மட்டும் தங்கள் பகுதிகளில் சேவையாற்றிவிட்டு தாங்கள் விரும்பிய இடங்களுக்கு மாற்றம் பெற்று செல்லலாம் என்கிற நடைமுறையே இவ்வளவு காலமும் இருந்து வந்தது. ஆனால் எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் இரு வருடங்கள் பணியாற்ற வேண்டும் என்கிற நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். தீவகத்தில் எட்டு வைத்தியசாலைகள் உள்ளன. ஆனால், அவற்றில் ஆறு வைத்தியர்களே தற்போது கடமையாற்றி வருகின்றனர். சில வைத்தியர்களுக்கு இடமாற்றமும் கிடைத்துள்ளது இந்நிலையில் குறித்த பிரதேச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகளை வழங்குவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடாநாட்டில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு.

Muslim_IDPs_Get_Supportயாழ். குடாநாட்டில் மீள்குடியமர்ந்துள்ள முஸ்லிம் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அனுமதி கிடைத்துள்ளதாக யாழ்.அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்.குடாநாட்டில் மீள்குடியமர்ந்துள்ள 622 முஸ்லிம் குடும்பங்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களுக்கான உடனடிக் கொடுப்பனவாக இத்தொகை வழங்கப்படவுள்ளதாகவும். இதற்கான அனுமதி மீள்குடியேற்ற அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுவதற்கு அவர்கள் முன்னர் வசித்து வந்த வெளி மாவட்டங்களிலுள்ள பதிவுகள் நீக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கானை குருக்களும் அவரது மகன்களும் சுடப்பட்டமை தொடர்பாக கைதாகியுள்ள நால்வருக்கும் 14 நாட்கள் விளக்க மறியல் உத்தரவு.

chankanai-kurukkal.jpg
சங்கானையில் குருக்களும் அவரது இரு மகன்மாரும் துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கில் கைதான இரு படையினரையும் இரு தமிழ் இளைஞர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி சங்கானையில் குருக்கள் மீதும் அவர் இரு மகன்கள் மீதும் இரு இளைஞர்கள் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததில் காயமடைந்த 55 வயதான குருக்கள் கடந்த புதன் இரவு உயிரிழந்தார். கொள்ளையடிக்கச் சென்ற வேளையில் இவர்கள் மீது துப்பாக்கியினால் சுடப்பட்டது. இவர்களை துப்பாக்கியால் சுட்ட இரு இளைஞர்களும், அவர்களுக்கு துப்பாக்கியைக் கொடுத்து அதற்கு உடந்தையாக இருந்த இரு படையினரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நால்வரும் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது மல்லாகம் நீதிமன்றம் இவர்களை 14 நாட்கள் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

சங்கானை குருக்களின் கொலைக்கு இந்து மத அமைப்புக்கள் கண்டனம்.
17 12 2010

கடந்த சனிக்கிழமை சங்கானையில் கொள்ளையர்களின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி, கடந்த புதன்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் மரணமான நித்தியானந்த குருக்களின் கொலையைக் கண்டித்து பல இந்து மத அமைப்புக்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

குருக்களது மரணச்சடங்குகள் நேற்று வியாழன் பிற்பகல் அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இதில் சமய, சமூகப் பிரதிநிதிகள்- பொதுமக்கள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர். மானிப்பாய் பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

சங்கானையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த குருக்கள் வைத்தியசாலையில் மரணம். படையினர் இருவர் கைது.
16 12 2010

கடந்த சனிக்கிழமை இரவு சங்கானையில் குருக்கள் ஒருவரும் அவரது மகன்மார் இருவரும் சுடப்பட்டு அவர்களது மோட்டார் சைக்கிளையும் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்ற இருவரும் அவர்களுக்கு துப்பாக்கியை வழங்கிய இரு படைச் சிப்பாய்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பின்னர் படையினரிடம் சரணடடைந்து புனர்வாழ்வு பெற்றவர்கள் என்றும், இவர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கியவர் கஞ்சா போன்ற போதைப் பொருள்களுக்கு அடிமையான இராணுச் சிப்பாய் எனவும் மற்றொரு சிப்பாயும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார் எனவும் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

படையினரின் துப்பாக்கியைக் கொண்டு கொள்ளைச் சம்வத்திலீடுபட்டதுடன், குருக்கள் மீதும் அவரின் மகன்மார் மீதும் துப்பாக்கியால் சுட்டவர்களான புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒருவர் சக்தி என அழைக்கப்படும் காசிநாதன் முகுந்தன், மற்றவர் ரமணன் என்றழைக்கப்படும் பாலசுப்பிரமணியம் சிவரூபன் எனவும், இவர்களுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டுள்ள படையினரில் ஒருவர் இராணுவ கோப்ரல் குணசேன, மற்றவர் சிப்பாயான ரட்ணாயக்க எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கபட்டு விசாணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.

படையினரின் இது போன்ற நடவடிக்கைகள் இடம்பெற அனுமதிக்கப்பட மாட்டாது எனவும், போர் முடிவுற்ற பின்னர் படையினரால் கட்டியெழுப்பப்பட்டு வந்த நல்ல விடயங்கள் சிலரால் நாசமாக்கப்பட்டு வருவதாகவும, இவர்களைப் போன்றவர்களுக்கு இராணுவத்தில் மன்னிப்பு வழங்கப்படமாட்டாது எனவும் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பிரதிப் பொலிஸ் மாஅதிபரிடம் தான் நேரடியாக கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளர். யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற வேறு சில இது போன்ற சம்பவங்களுடன் இவர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை. கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்த சங்கானை இழுப்பைத்தாழ்வு முருகமூர்த்தி ஆலயதத்தின் குருக்களான நித்தியானந்த குருக்கள் (வயது 55) யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிக்கிச்சை பலனளிக்காது நேற்று புதன் கிழமை இரவு மரணமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகன்மாரான சிவானந்த சர்மா, ஜெகானந்த சர்மா இருவரும் தொடர்ந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று மின்சாரம் துண்டிப்பு.

Electricity_Cableயாழ்ப் பாணம் நகர்ப்பகுதி உட்பட சில பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. காலை 8மணி தொடக்கம் மாலை 5மணிவரை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

உயர் மின்அழுத்த மார்க்கங்களில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படுவதால் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக யாழ். மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார். மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததன் காரணமாக இன்று நகரின் வங்கிகள், தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட்ட முக்கிய நிறுவனங்கள் என்பன தனிப்பட்ட மின்பிறப்பாகிகளின் மூலம் மின்சாரத்தைப் பெற்று இயங்கியமை குறிப்பிடத்தக்கது. வழமையாக ஞாயிற்றுக் கிழமையும் திறந்திருக்கும் சில நிறுவனங்கள் இன்று மின்சாரமின்மையால் மூடப்பட்டிருந்தன.