24

24

தேசம்நெற் இன் நல்லதொரு நண்பன் தமிழ் சமூகத்தை நேசித்த நல்லதொரு மனிதன் பேரின்பநாதன் காலமானார்!

Perinpanathan_EROSஈரோஸ் அமைப்பின் செயற்பாட்டாளரும் அரசியல் ஆர்வலருமான பேரி என அறியப்பட்ட பேரின்பநாதன் இன்று அதிகாலை காலமானார். தேசம்நெற் ஏற்பாடு செய்த பல சந்திப்புக்களுக்கு தலைமை தாங்கிய பேரின்பநாதன் முரண்பட்ட கருத்துக்களை உடையவர்களுடனும் நட்புடன் தனது கருத்துக்களை பரிமாறும் தன்மையால் அனைவராலும் நேசிக்கப்பட்டவர்.

இவருடைய மைத்துனர் பிரிஎப் இன் தலைவராக இருந்த சுரேன் சுரேந்திரன். அதுமட்டுமல்ல மற்றைய உறவுகளும் அவ்வாறான கருத்தையே கொண்டிருந்தனர். ஆனால் பேரின்பநாதன் மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்தவர். எப்போதும் தனது கருத்துக்களுக்காக உறுதியுடன் இறுதிவரை நின்றவர்.

யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான பேரின்பநாதன் லண்டனில் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிளவுபட்ட போது அவற்றை மீண்டும் இணைப்பதற்கு கடும் முயற்சி எடுத்தவர். ஆயினும் அவை இணைந்து கொள்ளவில்லையானாலும் முரண்பாடுகளைத் தணிப்பதில் அவரது முயற்சி உதவியது.

இன்று அதிகாலை பேரின்பநாதனின் மறைவு அவரை அறிந்தவர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

பேரின்பநாதன் பிரித்தானியாவில் உருவான ஈரோஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர். கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக லண்டனில் வாழ்ந்த இவர் தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்த போதும் அம்மக்களின் அரசியலுடன் தன்னை தொடர்ந்தும் ஒன்றிணைத்தவர். லண்டனில் உருவாக்கப்பட்ட ‘ஆவணி 02 புரிந்துணர்வுக் குழு’ வில் முன்நின்று அக்கூட்டங்களுக்கு தலைமை தாங்கியவர் பேரின்பநாதன்.

தேசம்நெற் நல்லதொரு நண்பனை தமிழ் சமூகத்தை நேசித்த நல்லதொரு மனிதனை இழந்துள்ளது. தேசம்நெற் நிர்வாகமும் ஆசிரியர் குழுவும் பேரின்பநாதனின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் கட்சிகளின் அரங்கமும், கூட்டமைப்பும் இணந்து அமைத்துள்ள குழு மார்ச் மாதம் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்காக தமிழ் கட்சிகளின் அரங்கமும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இணைந்து நியமித்த அறுவர் கொண்ட குழு எதிர்வரும் மார்ச் மாதம் தீர்வு யோசனை ஒன்றை முன்வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பிலுமிருந்து நியமிக்கப்பட்ட இக்குழுவினர் தீர்வுத்திட்டம் ஒன்றை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் மற்றும், மலையக கட்சிகளை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இணைத்துக் கொள்வது குறித்து ஆராயவேண்டியுள்ளதாலும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் தற்போது சுகவீனமுற்றிருப்பதாலும் எதிர்வரும் மார்ச் மாதத்திலேயே தீர்வுத்திட்டம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என தமிழ் கட்சிகளின் அரங்கப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை காண்பதற்காக கடந்த 12ஆம் திகதி தமிழ் கட்சிகளின் அரங்கமும், தமிழ்தேசியக் கூட்டமைப்பும் இணைந்து இரு தரப்பிலுமாக ஆறு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதை விடவும் குற்றங்களுக்கான காரணிகள் களையப்பட வேண்டும் என யாழ்.அரச அதிபர் தெரிவிப்பு.

“தற்போது யாழ்.குடாநாட்டில் பல குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன. இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்படுவதை விடவும் அவர்கள் ஏன் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என ஆராய வேண்டும். இதற்கான காரணிகள் களையப்பட வேண்டும்” இவ்வாறு யாழ்.அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை யாழ்.திருமறைக் கலாமன்றத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ்.அலுவலகம் நடத்திய விருது வழங்கும் வைபவத்தில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னர் ஆயுதப் போராட்டத்திற்குள் வாழ்ந்தவர்கள் இப்போது ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து கொள்ள முடியாமலுள்ளனர். ஒவ்வொரு இளைஞனுக்கும் பொறுப்புகள் அதிகமுள்ளன. அவர்கள் தொழிலில்லாமல் இருக்கின்றனர். அவர்களின் வறுமை நீக்கப்பட வேண்டும். தற்போது யாழ்ப்பாணத்தில் 60 அரசசார்பற்ற நிறுவனங்கள் இயங்குகின்றன. வருடமொன்றிற்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் 100 இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்க முன்வரவேண்டும். பட்டதாரிகளாக பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறும் இளைஞர்கள் பலர் மாவட்டச் செயலகத்தில் சிற்றூழியர் நியமனமாவது கிடைக்க வேண்டும் எனக்கோரி கடிதங்களை அனுப்புகின்றனர். யாழ்.குடாநாட்டின் இளைஞர்களின் தொழில்வாய்ப்பின்மை இவ்வாறு தான் உள்ளது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

க.பொ.த பரீட்சையில் தோற்றியுள்ள 175 முன்னாள் புலி உறுப்பினர்கள் ஜனவரியில் விடுவிக்கப்படவுள்ளனர்.

தடுப்பு முகாம்களிலிருந்து தற்போது க.பொ.த.சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றியுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 175 பேர் எதிர்வரும் ஜனவரி மாதம் விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி ஆரம்பமான க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள 175 முன்னாள் புலி உறுப்பினர்கள் தோற்றியுள்ளனர். இவர்களில் 45பேர் பெண்களாவர். இவர்களை எதிர்வரும் ஜனவரி மாதம் முற்பகுதியில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ட்டு வருவதாக பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக நூலகத்திற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் நூல்கள் கையளிப்பு.

மீள்குடியேற்ற அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலைக்கழக நூலகத்திற்கு 12 இலட்ச ரூபா பெறுமதியான நூல்கள் வழங்கப்பட்டுள்ளன. நேற்று வியாழக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் நேரடியாக இந்த நூல்கள் கையளித்தனர்.

யாழ்.பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன், பல்கலைக்கழக நூலகர் ஆகியோரிடம் இந்த நூல்கள் கைளிக்கப்பட்டன.

ஐக்கிய நாடுகளின் ஆலோசனைக் குழுவில் தமக்கு நம்பிக்கை இல்லை என விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் சபையின் ஆலோசனைக்குழுவின் நடவடிக்கைகளில் தாம் நம்பிக்கை கொள்ளவில்லை என என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். இக்குழு உலகின் முக்கியமான நாடுகளின் முகவராகவே செய்படுவதாகவும் அவர் கூறினார். தற்போது மகிந்த ராஜபக்சவை பாதுகாக்கும் நோக்கிலேயே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விடயங்கள் குறித்து தெரியாமல் விமல் வீரவன்ச போன்றவர்கள் இதற்கு எதிராக குரலெழுப்பி வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஐ.நா.செயலர் பான் கீ மூனுடன் இணைந்து இலங்கையில் இடம்பெற்ற போருக்கு ஆயுதங்களையும், நிதியுதிவிகளையும் வழங்கின எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்.வைத்தியசாலைக்கு சீன அரசின் நிதியுதவியில் ஐந்து மாடிக் கட்டடம்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சீனாவின் நிதியுதிவியுடன் ஐந்து மாடிக்கட்டடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. அவசர சிகிச்சை, விபத்துச்சிகிச்சை ஆகிய பிரிவுகளுக்கு சீன அரசின் 775 மில்லியன் ரூபா செலவில் இக்கட்டடம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதமளவில் இக்கட்டடம் அமைக்கும் பணிகள் ஆரம்ப்பிக்கப்பட உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் எஸ்.சிறிபவானந்தரஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.வைத்தியசாலையில் நவீன வசதிகளுடனான கட்டடம் ஒன்று அவசர சிக்கசசைப் பிரிவு விபத்துப் பிரிவுகளுக்கு இல்லாத நிலையால் நோயாளிகள் பல சிரமங்களை எதிர் நோக்கி வருவதாகவும், இது குறித்து சீன அரசாங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து இச்சிகிச்சைப் பிரிவுகளுக்கு நவீன கட்டம் அமைப்பதற்கு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.