2020

Friday, October 22, 2021

2020

“புலிகள் அழிய வேண்டும் என தமிழ்தலைவர்கள் எண்ணினர். அதை காட்டிக்கொள்ளாது, புலிகள் நின்றடிப்பார்கள், விட்டடிப்பார்கள், சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள் என்றெல்லாம் கதை விட்டனர்” – பாராளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா !

“புலிகள் அழிய வேண்டும் என தமிழ்தலைவர்கள் எண்ணினர். அதை காட்டிக்கொள்ளாது, புலிகள் நின்றடிப்பார்கள், விட்டடிப்பார்கள், சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள் என்றெல்லாம் கதை விட்டனர்” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற 2020-2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின் இறுதி நாள் அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரவித்துள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

முன்னைய அரசினை போலன்றி ஜனாதிபதி கோட்டாபாஜராஜபக்ஷவின் அரசு மக்களுடைய பிரச்சினையை தீர்த்து வைப்பதுடன் நாட்டின் பொருளாதாரத்தையும் மீட்டுள்ளது. ஆனால் போலித்தமிழ்தேசியம் பேசுபவர்கள் மக்களுடைய பிரச்சினைகளை வேறுபக்கம் திசை திருப்பிவிடுகின்றனர்.

இந்த போலித்தேசியவாதிகள் மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி வாக்குகளை சேகரித்து விட்டு மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்காது மக்களுடைய பிரச்சினைகளை இன்னும் அதிகரிக்கின்றனர். புரவி புயல் வந்து போய்விட்டது. ஆனால் இந்த போலித்தமிழ்தேசியவாதிகளின் பிறவிக்குணத்தில் எந்த மாற்றமும் இல்லை.

இறுதி யுத்தத்தின் போது அழிவு ஏற்படக்கூடாது என்ற எனது மனிதாபிமான அடிப்படையில், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசுவோம் வருங்கள் என நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஏனைய தமிழ்த் தரப்பை அழைத்த போது, அவர்கள் அதற்கு இணங்கியிருக்கவில்லை

புலிகள் அமைப்பு அழிய வேண்டும் என்ற மனோ நிலையிலேயே இருந்தார்கள். அதை வெளிப்படையாக காட்டிக்கொள்ளாது, புலிகள் நின்றடிப்பார்கள், விட்டடிப்பார்கள் நாற்பதாயிரம் சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள் என்றெல்லாம் கதை விட்டுக்கொண்டு அழிவுக்கு துணை போனார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.“புலிகள் அழிய வேண்டும் என்ற மனோநிலையிலிருந்த தமிழ்தலைவர்கள் அதை காட்டிக்கொள்ளாது, புலிகள் நின்றடிப்பார்கள், விட்டடிப்பார்கள், சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள் என்றெல்லாம் கதை விட்டனர்”

 

“ஒரு சிறுபான்மை இனத்தினது மதம் சார்ந்த நம்பிக்கைகளைத் தடுப்பது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துவதாக அமைந்து விடும்” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“ஒரு சிறுபான்மை இனத்தினது மதம் சார்ந்த நம்பிக்கைகளைத் தடுப்பது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துவதாக அமைந்து விடும்” என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (10.12.2020) உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை எரிப்பது தொடர்பான அரசாங்கத்தின் முடிவு ஒரு இனத்தை பாதிப்பதால் அது நாட்டில் பதட்டமான நிலைமையை ஏற்படுத்தக்கூடும். முஸ்லிம் மக்கள் தங்களது அன்புக்குரியவர்களை தமது இனம் சார்ந்த மத சம்பிரதாயங்களுடன் முறையாக அடக்கம் செய்யப்படுவதையே விரும்புகின்றனர்.

இஸ்லாம் மதத்தில் இறந்தவர்களை எரிப்பது தண்டனையாகக் கருதப்படுகின்றது. எனவே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்காத அரசாங்கத்தின் முடிவை குறித்த துறைசார்ந்த அதிகாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் சடலங்களில் பெரும்பாலானவை முஸ்லிம் இனத்தவர்களுடையவையாகும். குறித்த சடலங்களை அடக்கம் செய்ய அதிகாரிகள் மறுத்து வருவதால் குடும்ப உறுப்பினர்கள் இறந்தவர்களது சடலங்களை ஏற்க மறுக்கும் நிலைமை காணப்படுகின்றது.

உலகளாவிய முஸ்லீம் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்த பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இந்த விஷயத்தில் தலையிட வேண்டும். ஒரு சிறுபான்மை இனத்தினது மதம் சார்ந்த நம்பிக்கைகளைத் தடுப்பது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துவதாக அமைந்து விடும். எனவே ஏன் இறந்தவர்களின் சடலங்களைப் புதைக்கும் விடயம் தொடர்ந்தும் தடுக்கப்படுகின்றது என்பதனை அரசாங்கம் முழுமையாக ஆராயவேண்டுமென நாம் கேட்கின்றோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“பிறந்து 20 நாட்களேயான குழந்தையின் உயிரிழப்பிலிருந்து இலங்கை பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்” – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

“பிறந்து 20 நாட்களேயான குழந்தையின் உயிரிழப்பிலிருந்து நாம் அனைவரும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்” என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பெற்றோர் தொற்றுக்கு உள்ளாகியிருக்காத நிலையில் குழந்தைக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதை கொரோனா மரணங்கள் தொடர்பான மீளாய்வு குழு ஆராய்ந்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என அந்த சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே வலியுறுத்தினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத்  தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

“செவ்வாய்கிழமை உயிரிழந்த குழந்தைக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ள போதிலும் குறித்த குழந்தையின் பெற்றோருக்கு தொற்று ஏற்படவில்லை. அவ்வாறெனில் குழந்தைக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது கண்டறியப்பட வேண்டும்.

தற்போது ஒரு குழந்தை மாத்திரமே உயிரிழந்துள்ள போதிலும் இதிலிருந்து நாம் அனைவரும் பாடமொன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறான காரணிகளை அடிப்படையாகக் கொண்டே துரிதமாக கொரோனா மரணங்கள் குறித்த மீளாய்வு குழுவை நியமிக்குமாறு வலியுறுத்தினோம். குறித்த மரணம் தொடர்பில் மீளாய்வு செய்வது அந்த குழுவின் பொறுப்பாகும்.

குழந்தை மிகவும் தாமதமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையே மரணத்திற்கான காரணம் என்று வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பத்தில் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் முதியவர்களும் கொவிட் தொற்றால் உயிரிழந்தனர். ஆனால் தற்போது இளைஞர்களும் உயிரிழக்கின்றனர். எனவே இலங்கையில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் தடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை சுகாதார அமைச்சு நாட்டுக்கு தெரியப்படுத்தும் என எதிர்பார்க்கின்றோம்” வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

சர்வதேச மனித உரிமைகள் தினம் 2020 – வடக்கில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் !

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கின் பல பகுதிகளிலும் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பங்கெடுத்துள்ளதோடு போராட்டத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் உயர்ஸ்தானிகருக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

IMG 6019

வவுனியாவில் வவுனியா நகரசபைக்கு முன்னால் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் இருந்து காணாமலாக்கப்பட்டோரின்  உறவுகளின் போராட்ட பந்தல்வரை பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

IMG 20201210 WA0028

இதே நேரம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்று காணாமலாக்கப்பட்டோரை மீட்டுத்தர வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதனை ஒழுங்கு செய்திருந்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு “போரில் இறந்தவர்களுக்கு விளக்கேற்றக்கூட அனுமதி இல்லை என்றால் இங்கு எவ்வாறான மனித உரிமை மீறல் நடந்திருக்கும் என்பதை இலகுவாக கண்டறியலாம்” என குறிப்பிட்டுள்ளது.

IMG 20201210 093642

 

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி யாழ். ஐக்கிய நாடுகள் சபை பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

9c8c888f 8ad5 4d2e b358 d25f5a0fc24b

“நாம் ஆட்சியமைத்த ஒவ்வொரு முறையும் மனித உரிமைகளை பாதுகாத்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பலப்படுத்தியுள்ளோம்” – சர்வதேச மனித உரிமைகள் தின அறிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ !

“நாம் ஆட்சியமைத்த ஒவ்வொரு முறையும் மனித உரிமைகளை பாதுகாத்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பலப்படுத்தியுள்ளோம்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

1950 டிசெம்பர் 4 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 317 வது கூட்டத் தொடரில் சர்வதேச மனித உரிமை தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் யோசனை திட்டத்தின் 423 பிரிவுக்கு அமைய ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் டிசெம்பர் 10 ஆம் திகதியை சர்வதேச மனித உரிமைகள் தினமாக ஏற்றுக்கொண்டன.

அனைத்து இனத்தவர்களுக்கும் மனித உரிமைகளை உறுதிசெய்தல், உலகளாவிய ரீதியில் எழும் மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காணல் மற்றும் மனித உரிமைகளை பலப்படுத்தல் ஆகியவை சர்வதேச மனித உரிமை தினத்தின் நோக்கமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடான இலங்கை, மனித உரிமை கொள்கைகளை 1955 ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. நிலைபேறான அபிவிருத்தி கொள்கையில் மனித உரிமை கொள்கை முன்னுரிமையில் உள்ளது. மனித உரிமை கொள்கையில் ஒற்றுமை, சமத்துவம், கௌரவம், பொறுப்பு மற்றும் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்குகின்றன.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியிலும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தவாறு அரசு செயற்பட்டு வருவது அனைவரும் அறிந்த விடயமாகும். அரசு என்ற வகையில் நாட்டு மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது அவசியமாகும். ஆட்சியமைத்த ஒவ்வொரு முறையும் மனித உரிமைகளை பாதுகாத்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பலப்படுத்தியுள்ளோம். கொரோனா வைரஸ் தாக்கத்தால் எவரது அடிப்படை உரிமைகளும் மீறப்படவில்லை. மனித உரிமை, மக்களின் அடிப்படை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் அரசு பொறுப்புடன் செயல்படும்.

சுபீட்சமான எதிர்காலம் என்ற கொள்கையின் கீழ் அனைத்து இன மக்களின் உரிமைகளையும் பாதுகாத்து மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவோம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழர்கள் தோற்கடிக்கப்பட்ட மக்களாகவே இங்கு நடத்தப்படுகிறார்கள். நாங்கள் எவரும் தோற்கடிக்கப்படவில்லை. நாம் சுதந்திரத்துக்கான தீபத்தை ஏந்திக்கொண்டிருக்கிறோம் ” – பாராளுமன்றில் சி.வி.விக்னேஸ்வரன் !

“நீங்கள் தமிழர்களை சக மனிதர்களாக அன்றி தோற்கடிக்கப்பட்ட மக்களாகவே இந்த தீவில் தொடர்ந்து நடத்துகிறீர்கள். நாங்கள் எவரும் தோற்கடிக்கப்படவில்லை. நாம் சுதந்திரத்துக்கான தீபத்தை ஏந்திக்கொண்டிருக்கிறோம் ” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று(09.12.2020)  பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“நீதியே இந்த நாட்டின் எல்லா மக்களினதும் இன்றைய எதிர்பார்ப்பாகும். நீதியானது தவிர்க்கமுடியாத வகையில், தமிழ் மக்களின் நாளாந்த வாழ்வுடனும் எதிர்காலத்துடனும் பிணைந்துள்ளது. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கொடூரமாகவும் இரக்கம் இன்றியும் கொலைசெய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கான நீதியை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களுக்கான நீதியை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக தமக்கான நீதியை எதிர்பார்க்கிறார்கள். தமது சமூகத்தை சார்ந்த ஒருவர் நீதிக்கு அமைச்சராக இருக்கின்ற போதிலும் முஸ்லிம்கள் தமது ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான நீதியை எதிர்பார்க்கிறார்கள். 2010 ஏப்பிரல் 21 ஆம் திகதி குண்டுவெடிப்புக்களில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதியை கத்தோலிக்க மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நீதியும் சமாதானமும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. உடல், உள, புத்தி ரீதியாகவும் தாற்காலிகமாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமாதானத்தை அடைவதற்கான முதல் படி அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொள்வதாகும்.

இன்றைய அரசாங்கம் சமாதானத்தை அடைவதற்கும் அதனால் நீதிக்காக உழைப்பதற்கும் தயாராக இருக்கிறதா?

இலங்கைக்குள் உங்களின் சக பிரஜைகளான சுதேச தமிழ் மக்களின் துன்பங்கள், துயரங்கள், பிரச்சினைகள் பற்றி உங்களுக்கு உண்மையான கரிசனை உணர்வு இருக்குமானால் அவர்களின் நிலங்களை அபகரிக்க மாட்டீர்கள். எமது கலாசார சின்னங்களை அழிக்க மாட்டீர்கள். தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு கிழக்கில் பெரும் எண்ணிக்கையான சிங்கள இராணுவத்தை வைத்திருக்கமாட்டீர்கள். பாதிக்கப்பட்டவர்கள் மீதும் நலிந்தவர்கள் மீதும் உணர்வு இருக்குமானால் அவர்களிடம் இருந்து அபகரிக்கமாட்டீர்கள். மாறாக, அவர்களுக்கு கொடுத்து உதவிசெய்து ஆறுதல் கூறுவீர்கள். ஆனால், நீங்கள் எமது நிலங்கள், எமது பாரம்பரிய வாழ்வு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை இல்லாமல் செய்வதில் அக்கறை கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எம்மை சக மனிதர்களாக அன்றி தோற்கடிக்கப்பட்ட மக்களாகவே இந்த தீவில் எம்மை தொடர்ந்து நடத்துகிறீர்கள். நாங்கள் எவரும் தோற்கடிக்கப்படவில்லை. எமது இதயங்களில் இன்னமும் நாம் சுதந்திரத்துக்கான தீபத்தை ஏந்திக்கொண்டிருக்கிறோம்.

அப்பாவிகள் பக்கமாக அன்றி தவறிழைப்பவர்கள் பக்கமாகவே இந்த நாட்டில் நாம் செயற்படுவதை நீதி தொடர்பாக பேசுகின்றபோது நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 1956, 1958,1961,1977,1981 மற்றும் 1983 ஆண்டு இனக்கலவரங்களின்போது கொலைகள், சித்திரவதைகள், தீவைப்பு மற்றும் பாலியல்வல்லுறவுகளில் ஈடுபட்ட ஒருவரையேனும் நாம் தண்டித்திருக்கிறோமா? 97,000 நூல்களையும் ஓலைச்சுவடிகளையும் கொண்டிருந்த யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமைக்கு ஒருவரையாவது தண்டித்திருக்கிறோமா? அப்போது தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகச்சிறந்த நூலகமாக அது திகழ்ந்தது. அண்மைக்காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்ட எவரையாவது தண்டித்திருக்கிறோமா? ஆகக்குறைந்தது இந்த விடயங்களில் பொறுப்புக்கூறலுக்காவது முயற்சித்திருக்கிறோமா? தொடர்ந்துவந்த அரசாங்கங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை அமுல்படுத்தி இருக்கிறோமா? இவை எல்லாமே வசதியாக தட்டுக்களில் வைக்கப்பட்டுள்ளன.

ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு தமிழர் அமைச்சர்களாக இருக்கின்ற போதிலும் அதிகாரம் பெரும்பான்மை சமூகத்தின் கைகளிலேயே இருக்கிறது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் எமக்கு எது நல்லது என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள். சுதந்திரம் கிடைத்த நாள் முதல் இதுதான் நிலைமை. அனைவருக்குமான நீதி ( inclusive justice ) என்பது இந்த நாட்டில் இல்லை. பக்கச்சார்பான நீதியே ( selective justice) காணப்படுகின்றது. சிங்கள பௌத்த மக்களின் நல்வாழ்வுக்காக ‘நீதி’ தெரிவுசெய்யப்பட்டு வழங்கப்படுகின்றது.

இங்கு ஒரு புதுமையான அரசியல் கலாசாரம் வளர்க்கப்படுகின்றது. எண்ணிக்கை அடிப்படையில் சிறுபான்மை மக்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவர் கூடுதலான குற்றங்களையும் துன்பங்களையும் செய்கிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு அவருக்கு வெகுமதிகளும் பதவி உயர்வுகளும் கொடுக்கப்படுகின்றன. இதன் தாக்கத்தை இந்த சபையிலும் உணர முடிகின்றது. அதனால் தான் படித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் முஸ்லிம் மக்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சமுகம் பற்றியும் அரசாங்கம் பற்றியும் உண்மைகளை பேசும்போது கூச்சல் போட்டு குழப்புகிறார்கள்.

இந்த நாட்டிலே தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் எதிராக காணப்படுவது முழுமையான ஒரு இனவாதமாகும் (Systemic Racism). அரச நிறுவனங்களின் செயற்பாடுகளின் ஊடாக இது முன்னெடுக்கப்படுகின்றது. இந்த இனவாதம் என்பது ஒரு சித்தாந்தம் (Ideology) ஆகியுள்ளது. இந்த சபையில் முறைகேடாக நடக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சித்தாந்தத்தை காவுகிறார்கள். இனவாதத்தை விதைக்கும் கருவிகளாக ஊடகங்களும் மாறிவிட்டன. இந்த இனவாதம் எம்மை எங்கேயும் கொண்டுசெல்லப்போவதில்லை. இது இந்த நாட்டின் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் பெரும் குந்தகத்தையும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பேரழிவையும் ஏற்படுத்தப்போகின்றது.

இன்றைய விவாதம் நீதி அமைச்சு பற்றியது என்பதால், நிதி அமைச்சின் இணையத் தளத்துக்கு சென்று பார்த்தேன். அதில் பூகோள முன்னேற்றங்கள் மற்றும் மக்களின் அபிலாஷைகளுக்கு அமைவாக சமூகங்களின் தேவைககளை பூர்த்திசெய்யும் வகையில் சட்ட மறுசீரமைப்பு செய்தல் இந்த அமைச்சின் நோக்கம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாங்கள் இந்த நோக்கத்தை முன்னெடுக்கிறோமா ? இந்த நாட்டில் நீதியுடன் சம்பந்தமான எல்லா விடயங்களுமே உலக நடப்புக்கள், உலக நியதிகள், ஒழுக்க எதிர்பார்ப்புக்கள் ஆகியவற்றில் இருந்து முரண்பட்டு செல்வதே யதார்த்தமாக இருக்கிறது. தனி மனித உரிமைகள், சமூகங்களின் கூட்டு உரிமைகள், நல்லிணக்கம் , சமாதானம், சகவாழ்வு போன்ற பண்புகளை முன்னிலைப்படுத்தி நாகரிகத்தின் வளர்ச்சிப்பாதையில் எவ்வாறு முன்னேறிச்செல்லலாம் என்று சிந்தித்து அவற்றுக்கு ஏற்ப தமது நாடாளுமன்றங்களில் சட்டங்களை இயற்றி உலக நாடுகள் பயணம் செய்கையில் இந்த பண்புகளுக்கு முரணாக அல்லவா இந்த நாடு பயணம் செய்கின்றது? குறிப்பிட்ட ஒரு சமுகத்தை சார்ந்த மக்களின் நிலங்களை பறிப்பதுடன் அவர்களின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் வாழ்க்கை முறைகளை இல்லாமல் செய்வதற்கு முயலுகின்றது.

சிங்கள பௌத்த தொல்பொருள் எச்சங்களை பாதுகாப்பது என்ற போர்வையில் எமது சமூகத்தின் நிலங்களை அபகரிக்கும் நோக்குடன் அவசர அவசரமாக விசேட ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. பௌத்த எச்சங்கள் இருக்கின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அந்த புராதன எச்சங்கள் தமிழ் பௌத்த காலத்தில் இருந்தனவை. சிங்கள மொழி பிறப்பதற்கு முன்னரேயே தமிழ் மக்கள் பௌத்தத்தை தழுவியிருந்தனர்.

தமிழ் பௌத்தர்கள் காலத்தில் இருந்த எச்சங்களை நீங்கள் பேணி பாதுகாக்க விரும்பினால் இந்த ஆணைக்குழுக்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ் ஆணையாளர்களாகவே இருக்க வேண்டும். தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்து சிங்கள மக்களுக்கு கொடுக்கவா முயலுகிறீர்கள்? இதுவா இந்த ஆணைக்குழுக்களின் நோக்கம் ? 3000 ஆண்டுகளாக தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் இணக்கம் மற்றும் இசைவு இன்றி எந்த ஒரு செயற்பாடும் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படக்கூடாது.

சிங்கள மக்களுக்கு எதிராகவோ அல்லது அவர்களின் இறைமைக்கு எதிராகவோ எமது இளையோர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. அதேநாட்டில் தமது பகுதிகளின் இறைமைக்கு ஆபத்து ஏற்பட்டதாலேயே அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். அவர்கள் தமது அடையாளத்தை பாதுகாக்க வேண்டியிருந்தது. ஆனால், அவர்கள் பயங்கரவாதிகளாக அழைக்கப்பட்டு 20 க்கும் அதிகமான நாடுகளின் உதவியுடன் கொடூரமாக அழிக்கப்பட்டார்கள்.

ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். நாட்டின் இறைமையை விட மக்களின் இறைமையே மேலானது. இன்றைய சர்வதேச உறவில் அப்படித்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் தான் சர்வதேச சட்டங்களும் கோட்பாடுகளும் உருவாக்கப்பட்டுவருகின்றன. நாட்டின் இறைமையின் பின்னால் ஒளிந்துநின்றுகொண்டு எமது மக்களின் இறைமையை இல்லாமல் செய்யலாம் என்று கனவு காணாதீர்கள். 18 ஆம் நூற்றாண்டு காலத்துக்குரிய நாட்டின் இறைமையை பாதுகாக்கும் கோட்பாடு இன்று பொருத்தம் அற்றதாகி வலுவிழந்துவிட்டது. ஒரு நாட்டின் மனித உரிமைகள் மோசமாக மீறப்படும்போது மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக அந்த நாட்டின் இறைமையை உதாசீனம் செய்யலாம் என்பதே இன்றைய உலக நடப்பு என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

இறுதிப் போரில் மனிதக் கேடயங்களாக அப்பாவி மக்களை விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாகவும், அந்த மக்களை நீங்கள் மீட்டதாகவும், எந்த ஒரு போர்க்குற்றத்தையும் படையினர் செய்யவில்லை என்றும் கூறுகிறீர்கள். இது உண்மையானால், இதை நீங்கள் கூறவேண்டியதில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தான் கூறவேண்டும். ஆனால், இறுதி யுத்தத்தில் நீங்கள் காப்பாற்றியதாக கூறும் மக்கள் நீங்கள் தமது உறவுகளை கொலை செய்ததாக அல்லவா கூறுகிறார்கள். நீங்கள் அந்த மக்களை உண்மையாக மீட்டு அவர்களுக்கு வாழ்வு அளித்திருந்தால், 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பின் வந்த சகல தேர்தல்களிலும் உங்களையல்லவா அவர்கள் ஆதரித்திருந்திருப்பார்கள்? ஆனால், தங்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதாக நீங்கள் கூறும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என்று நீங்கள் இன்றும் கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பை அல்லவா மக்கள் தேர்தல்களில் பல தடவைகள் வெல்ல வைத்துள்ளார்கள் ? எவ்வாறு 2013 ஆம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்ற வட மாகாண சபை தேர்தலில் வட மாகாணத்தின் ஆகக்கூடுதல் சாதனை வாக்குகளாக 133,000 வாக்குகளை மக்கள் எனக்கு அளித்தனர்?

விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கள் என்றும் படையினர் மக்களை பாதுகாத்தார்கள் என்றும் நீங்கள் சொல்வது உண்மையானால் ஏன் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு தயங்குகிறீர்கள்? நீங்கள் சொல்வது உண்மையானால் சர்வதேச விசாரணை மூலம் அது நிரூபிக்கப்பட்டு உங்கள் மீதான விமர்சனங்கள் களையப்படவேண்டும். நீங்கள் அப்போது உங்கள் சர்வதேச அரங்கில் உங்கள் தலையை நிமிர்த்திக்கொண்டு வலம்வரமுடியும்.

ஆனால் உண்மை மாறாக இருக்கிறது. அதனால் தான் சர்வதேச விசாரணையை முகம்கொடுக்க நீங்கள் அஞ்சுகிறீர்கள். நீங்கள் சர்வதேச விசாரணைக்கு அஞ்சுவதும் சீனாவின் பின்னால் ஓடுவதும் உங்கள் படையினர் போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையை இழைத்திருக்கிறார்கள் என்பதையே காட்டுகின்றது.

அடுத்தவருடம் மார்ச் மாதம் நாம் ஐ. நா மனித உரிமைகள் சபையை எதிர்கொள்கின்றோம். சர்வதேச சமுகத்தின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. மார்ச் மாத நடுப்பகுதி தொலைவில் இல்லை என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். தப்புவதற்கு சிறிய சந்தர்ப்பமே உள்ளது. ஆனால் ஒரு வழி உண்டு. அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருகின்றது. இந்த நாட்டின் எல்லா சமூகங்களும் சமத்துவம், ஒற்றுமை, சுதந்திரம், ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் வாழும் வகையில் ஒரு சமஷ்டி அல்லது அரை சமஷ்டி அல்லது கூட்டு சமஷ்டி அரசியல் அமைப்பை தயாரித்து நிறைவேற்றுங்கள். உங்கள் அரசாங்கம் மட்டுமே இதை செய்ய முடியும். பெரும்பான்மை சமூகத்துடன் சமத்துவம் மற்றும் சக வாழ்வுடன் வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றும் மலையக மக்களும் கூட வாழும்வகையில் உண்மையான அதிகார பகிர்வை ராஜபக்ஸ குடும்பம் உறுதிசெய்யட்டும்.

நீங்கள் தவறினால், யுத்தம் நடைபெற்றபோது பேச்சுவார்தைகளுக்காக நாடுகளின் தலை நகரங்களுக்கு ஏறி இறங்கியதுபோல மீண்டும் ஏறி இறங்குவீர்கள். இந்த நாட்டில் இன முரண்பாடுகளை மேலும் கூர்மையாக்கி சர்வதேச வல்லரசுகள் காலூன்றுவதற்கு (இதுவரை அப்படி செய்திருக்கவில்லை என்றால்) இடமளிக்காதீர்கள் என்று இந்த அரசாங்கத்திடம் வேண்டிக்கொள்கின்றேன்.

லங்கன் பிரீமியர் லீக் – 2020 – ஜஃப்னா ஸ்டாலியன்ஸை வீழ்த்தியது கண்டி !

லங்கன் பிரீமியர் லீக் – 2020 போட்டிகள்  விறுவிறுப்பாக நடைபெற்று வருவதுடன் போட்டிகள் நிறைவுக்கட்டத்தை நெருங்கி வருகின்றன.

இந்நிலையில் லங்கன் பிரீமியர் லீக் இன் 16ஆவது ஆட்டத்தில் இன்று மாலை ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் அணியும் கண்டி டஸ்கர்ஸ் அணியும் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து களமிறங்கியது.

ஆரம்பம் முதலே தொய்வான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி 20 பந்துப்பரிமாற்றங்களின் நிறைவில் தன்னுடைய சகல விக்கெட்டுக்களையும் இழந்து 150 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி சார்பில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சொஹைப்மலிக் 44 பந்துகளில் 59 ஓட்டங்களை பெற்றமையே அணிக்கான அதிகபட்சமான ஓட்டமாக காணப்பட்டது.

Image may contain: 1 person, playing a sport and baseball, text that says "@My11CIRCLE LPL SHOAIB MALIK 52 (38) 一 Cricket TEIG ROUP f FACEBOOK.COM/LPLT20 JAFFNA STALLIONS VS KANDY TUSKERS DECEMBER 9T 2020 In INSTAGRAM.COM/LPLT20 TWITTER.COM/LPLT20"

151 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய கண்டி அணி ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணி சார்பாக தலைவர் குசல்பெரரா 42 ஓட்டங்களை பெற்றார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய குணரட்ணே – இர்பான்பதான் ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. குணரட்ணே 52 ஓட்டங்களையும் இர்பான்பதான் 25 ஓட்டங்களையும் பெற 19 ஆவது பந்துப்பரிமாற்றத்தின் முதல் பந்திலேயே கண்டி வெற்றியை உறுதிப்படுத்தியது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குணரட்ணே போட்டியின் ஆட்டநாயகான தெரிவானார்.

Image may contain: one or more people, text that says "OMY11CIRCLE LPL T2O Hats AINTS ra THEIPG GROUP MAN OF THE MATCH ASELA GUNARATNE JAFFNA STALLIONS VS KANDY TUSKERS DECEMBER 9TH 2020 FACEBOOK.COM/LPLT20 TWITTER.COM/LPLT20 INSTAGRAM.COM/LPLT20"

“வேற்றுகிரக வாசிகள் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் தொடர்பில் உள்ளனர். ட்ரம்ப்க்கும் இது தெரியும்“ – இஸ்ரேல் விண்வெளி ஆராய்ச்சி நிலைய முன்னாள் தலைவர் பகீர் !

வேற்றுகிரக வாசிகள் இருப்பது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்குத் தெரியும் என்று இஸ்ரேல் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் ஹைம் இஷத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹைம் இஷத் கூறும்போது, “வேற்றுகிரக வாசிகள் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் தொடர்பில் உள்ளனர். இருப்பினும் வேற்றுகிரக வாசிகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல் உள்ளனர். ஏனென்றால் மனிதர்கள் தங்களுக்கு இணையாக விண்வெளியை அறிவதற்கு இன்னும் தயாராக இல்லை என்று அவர்கள் கருதுகிறார்கள். வேற்றுகிரக வாசிகள் இருப்பது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு நன்கு தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.

ஹைம் இஷத் இத்தகவலை இஸ்ரேலின் முக்கியமான நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால், இக்கருத்து குறித்து  அமெரிக்க தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

“கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றங்களுக்காக ரணில் விக்ரமசிங்கவையே சிறைக்கு அனுப்ப வேண்டும்” – மஹிந்தானந்த அளுத்கமகே

“கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றங்களுக்காக ரணில் விக்ரமசிங்கவையே சிறைக்கு அனுப்ப வேண்டும்” என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று(09.12.2020)  2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் நீதி, தொழில் அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகள் மீதான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

மேலும் அவர் பாராளுமன்றில் கூறுகையில்,

நல்லாட்சியில் இடம்பெற்ற குற்றங்களுக்கு ரணில் – மைத்திரி மீது மாத்திரம் குற்றம் சுமத்தாது எதிர்க்கட்சியில் இன்று அமர்ந்துள்ள அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். நல்லாட்சியில் நீதமன்ற சுயாதீனம் முழுமையாக நாசமாக்கப்பட்டது, ஆனால் எமது அரசாங்கம் நீதிமன்ற சுயாதீனத்தை அழித்துள்ளதாக கருத்தொன்றை உருவாக்க நினைக்கின்றனர்.

எமது ஆட்சியில் நீதிமன்ற சுயாதீன பலவீனம் குறித்து பேசிக்கொண்டு நல்லாட்சியில் ராஜபக்ஷவினரை சிறையில் அடைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டது நியாயமானதா? நீதிபதிகளை அலரிமாளிகைக்கு வரவழைத்து தீர்ப்புகளை தீர்மானிக்கும் நிலைமை காணப்பட்டது, எமக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டது,

ஆனால் நாம் ஒருபோதும் அரசியல் பழிவாங்கலை மேற்கொள்ள மாட்டோம். பொய் குற்றங்களை சாட்டி எவரையும் சிறையில் அடைக்க மாட்டோம். ஆனால் கடந்த காலத்தில் நடந்த குற்றங்களுக்காக வழக்கு தொடுக்க வேண்டிய நபர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்போம், ரஞ்சன் ராமநாயகவிற்கு எதிராக இரண்டு வழக்குகளை தொடுப்பேன், அதில் நிச்சயமாக ரஞ்சன் ராமநாயக குற்ற்வாளியாவர்.

ஆனால் இறுதி நேரத்தில் வழக்கை வாபஸ் பெறுவேன். ஏனெறால் உண்மையில் சிறைக்கு அனுப்ப வேண்டியது ரஞ்சனையோ வேறு எவரையுமோ அல்ல, ரணில் விக்ரமசிங்கவையே சிறைக்கு அனுப்ப வேண்டும். அன்றே எனக்கு நித்திரை வரும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற நோக்கம் அரசுக்கு இல்லை” – அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில திட்டவட்டம் !

“அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்பதால் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற நோக்கமும் அரசுக்கு இல்லை”  என அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (08.12.2020) அரச தகவல் திணைக்களத்தினால் இணையவழியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

நாட்டின் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை. ஆகவே அரசியல் கைதிகள் என்ற அடிப்படையில் சிறைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை பூச்சியமாகவுள்ளது. தமது தனிப்பட்ட அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளவர்களே அரசியல் கைதிகள் எனப்படுவர்.

ஆனால் நாட்டின் அரசமைப்பின் அடிப்படையில் பார்க்கும்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே நாட்டின் சிறைகளில் உள்ளனர். அவர்கள் விடுவிக்கப்படவேண்டியது அவசியமானதாகும். அத்துடன், அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்பதால் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற நோக்கமும் அரசுக்கு இல்லை.

எந்தக் கைதிகளும் சிங்கள, தமிழ் கைதிகள் என வேறுபடுத்தப்படுவதில்லை. மாறாக அவர்களது குற்றச்செயல்களின் அடிப்படையிலேயே சிறை வைக்கப்படுள்ளனர். அந்த வகையில் நான்கு வருடத்திற்கு ஒரு முறை கைதிகளின் நடத்தை தொடர்பான அறிக்கையின்படி அவர்களின் தண்டனைக் காலத்தை குறைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

ஆனால் கடந்த காலத்திலிருந்து அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை. ஆகவே தான் சிறைச்சாலைகள் அமைச்சர் இந்த நடவடிக்கையை மீண்டும் ஆரம்பித்துள்ளார். அதற்கமைய மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு அவர்களது நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலம் குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாகவும், பின்னர் ஆயுள் தண்டனை வருட அடிப்படையில் 20 வருட தண்டனையாகவும் குறைக்கப்படும் .

இந்தச் செயற்பாடுகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பொருந்தாது. ஆனால் போதைப்பொருள் பாவனையாளர்கள் இதனுள் உள்ளடக்கப்படுவர். அவர்களுக்கு புனர்வாழ்வழிக்கும் நடவடிக்கை இடம்பெறும்” என்றார்.

அதே நேரம் தமிழ் அரசியல்கைதிகளை விடுவிக்குமாறு கோரி இன்றையதினம் (09.12.2020) தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்து சந்திப்பை நடத்தியிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.