2020

2020

தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல் !

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 80 இற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தமிழ் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து சிறையில் இருக்கும் 80 இற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன், வினோநோகராதலிங்கம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பிரதமரை இன்று சந்தித்திருந்தனர்.

இதன்போது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி இரா.சம்பந்தன், ம.ஆ. சுமந்திரன், க.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மனோ கணேசன், சிவஞானம் சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வினோநோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன், வே.இராதாகிருஷ்ணன், இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் மற்றும் தவராசா கலையரசன் உள்ளிட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதமும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

charles 2

“நாட்டில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. எமது மக்களின் பிரச்சினைகள் வேறு ஒரு கோணத்தில் இருந்தே பார்க்கப்படுகின்றது” – எம்.ஏ.சுமந்திரன்

“நாட்டில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. எமது மக்களின் பிரச்சினைகள் வேறு ஒரு கோணத்தில் இருந்தே பார்க்கப்படுகின்றது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் இன்று(09.12.2020) உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இன்று பாராளுமன்றில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் நீண்டகால இழுத்தடிப்புகள் காணப்படுகின்றன. இதனாலேயே மோசமான குற்றங்களுக்கு நீதியைப் பெற்றுக்கொள்ள சர்வதேச நீதிமன்ற தலையீட்டைக் கொண்ட விசாரணைகளைக் கேட்கின்றோம்.

இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாக இல்லை என்பதை ஆட்சி செய்தவர்களும், ஆட்சி செய்கின்றவர்களும் முன்வைக்கும் விமர்சனங்களில் இருந்தே வெளியாகி விட்டன.நாட்டில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. எமது மக்களின் பிரச்சினைகள் வேறு ஒரு கோணத்தில் இருந்தே பார்க்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் மேலெழுகின்ற போது, நீதி அமைச்சர் ருவிட்டர் மூலமாக கருத்துக்களைக் கூறுவதை மட்டுமே செய்து வருகின்றார். அதனை மாத்திரமே அவரால் செய்ய முடியும்.

சிறைச்சாலைகளில் 1983, 2000 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில், அரச பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்த விசாரணைகள் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை. இந்தநிலையில், தற்போது மஹர சிறைச்சாலையிலும் படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.

திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை, கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், சிவநேசன், ரவிராஜ் மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க போன்றோரின் படுகொலைகள், ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுக் காணமால் ஆக்கப்பட்ட சம்பவம், 34 தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகியவற்றுக்கு இன்னமும் நீதி நிலைநாட்டப்படாதது ஏன்?

நாட்டில் மோசமான, சர்வதேச குற்றங்கள் பல இடம்பெற்றுள்ள காரணத்தாலேயே சர்வதேச விசாரணைகளைக் கேட்கின்றோம். அதனை ‘வேண்டாம்’ எனக் கூற முடியாது” எனவும் அவர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்

“ஜனநாயக நாட்டில் நினைத்த படியெல்லாம் கட்சிகளை தடை செய்ய முடியாது” – சீ.வீ.கே.சிவஞானம்

“ஜனநாயக நாட்டில் நினைத்த படியெல்லாம் கட்சிகளை தடை செய்ய முடியாது” என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று(09.12.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சீ.வீ.கே.சிவாஜானம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முதல் இரு கூட்டங்களில் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் வரவில்லை. அவர்கள் புறக்கணிக்கிறார்களா? அல்லது வரவில்லையா? என்பதை அவர்களிடம் தான் கேட்க முடியும். அவர்களுக்குரிய அறிவித்தல் முறையாகவே கிடைக்கின்றது. பாராளுமன்றில் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்திசைவாகவே செயற்படுகின்றனர். சாணக்கியன், விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் போன்றவர்கள் கூட பொது இலக்கில் செயற்படுகின்றனர்.

கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், சுமந்திரன், சிறிதரன், சாணக்கியன் போன்றோர் சபைகளில் ஆவேசமாக பேசுகின்றனர். முன்னர் அடக்கிவாசித்தார்கள். நாட்டில் அடக்குமுறை அதிகரித்ததால் அவர்களும் ஆவேசமடைந்துள்ளனர். கஜேந்திரகுமார், சாணக்கியன் போன்றோர் சரத் வீரசேகரவிற்கு எதிராக நாடாளுமன்றில் பதிலளிக்கும் போதே கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும், புணர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டது. இதற்கு பொன்சேகாவும் தனது கடும் எதிர்பை வெளியிட்டிருந்தார்.

கூட்டமைப்பை தடை செய்வதென்பது மேலோட்டமான பேச்சே. ஜனநாயக நாட்டில் நினைத்தபாட்டில் ஒரு கட்சியை தடைசெய்ய முடியாது. தடை செய்தாலும் நாம் எமது கொள்கைகளை முன்னிறுத்தி வேறு கட்சியில் போட்டியிடுவோம்” என தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் முஸ்லீம்களின் உடல்கள் தகனம் செய்யப்படும் விடயத்தில் பிரிட்டன் தலையிடவேண்டும்” – பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் !

இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தகனம் செய்யப்படும் விடயத்தில் பிரிட்டன் தலையிடவேண்டும் என பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினர் அவ்சல்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.பிரிட்டனில் உள்ள இலங்கை முஸ்லீம் அமைப்புகளின் பேரவைக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் துணை தலைவர் என்ற அடிப்படையில் தான் இந்தகடிதத்தை எழுதுவதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களை கட்டாயமாக தகனம் செய்யவேண்டும் என இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இது இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மை மதத்தினரின் மதசுதந்திரத்தை மறுக்கின்றது.இந்த சிறுபான்மை மதத்தினரிற்கு உடல்களை தகனம் செய்வது தடை செய்யப்பட்ட விடயம் என அவ்சல்கான் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அவ்சல்கான் ,

உலகசுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்கள் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் தகனம் செய்யலாம் என தெரிவித்துள்ள போதிலும்,மனித உரிமை அமைப்புகளின் மன்றாட்டமாக வேண்டுகோள்கள் வெளியாகியுள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவில்லை. இறுதிநிகழ்வுகள்,குறிப்பாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது சுதந்திரத்தின் ஒரு பகுதி முஸ்லீம்களிற்கு உடல்கள் அடக்கம் செய்யப்படுவது கட்டாயமானது என தெரிவித்துள்ளார்.

உடல்களை தகனம் செய்வது முஸ்லீம்களை பொறுத்தவரை தடை செய்யப்பட்டுள்ளதுடன் உடல்களை அவமதிப்பதாகும். கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை சுதந்திரத்தினை பாதுகாப்பதற்காக மேலும் உடல்கள் கட்டாயமாக தகனம் செய்யப்படுவதை தடுப்பதற்காக அவசர இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் இது குறித்து பேச்சுவார்த்தையை மேற்கொள்ளுமாறு பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கான கடிதத்தில் பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் அவ்சல்கான் வேண்டுகோள் விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

“தாய்வானுக்கான ஆயுத விற்பனையை நிறுத்தாவிட்டால் அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி வழங்கப்படும்” – சீனா எச்சரிக்கை !

தீவு நாடான தாய்வானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா நீண்ட காலமாக கூறி வருகிறது. இதனால் தாய்வானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வதை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால் சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா தாவானுக்கு தொடர்ந்து ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது.

அந்த வகையில் 280 மில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுதங்களை தைவானுக்கு விற்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “தாய்வானுக்கு நவீன ராணுவ தகவல் தொடர்பு சாதனங்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தைவானின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் அரசியல் ஸ்திரத்தன்மை ராணுவ சமநிலையை உறுதி செய்வதற்கும் பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் முன்னேற்றத்தை பராமரிப்பதற்கும் உதவும். தைவானின் ராணுவ தகவல் தொடர்பு திறனை நவீனமயமாக்குவதிலும், அவர்களின் குறிக்கோளை அடைவதற்கான முயற்சியிலும் இந்த விற்பனை முக்கிய பங்கு வகிக்கும்” என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே தைவானுக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்காவின் இந்த முடிவுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த ஆயுத விற்பனையை ரத்து செய்யாவிட்டால் அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் சீனா எச்சரித்துள்ளது.

நடராஜனை கொண்டாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் !

அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரில் இந்தியஅணியில் களமிறங்கியிருந்த தமிழகவீரர் நடராஜன் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார். மிக பின்தங்கிய குடும்பத்தில் இருந்து இவ்வளவு தூரத்துக்கு முன்னேறியுள்ள நடராஜன் நடைபெற்று முடிந்த தொடரில் மொத்தமாக 06 இலக்குகளை வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கு எங்களுக்கு கிடைத்த சொத்து நடராஜன் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.
இதுதொடர்பாக கேப்டன் விராட் கோலி கூறுகையில், “பும்ரா மற்றும் சமி இல்லாத சூழலில் சிறந்த முறையில் நடராஜன் விளையாடினார். நெருக்கடியான நிலையில் உண்மையில் நின்று விளையாடினார். சர்வதேச அளவில், நடைபெற்ற போட்டியில் சிறந்த ஆட்டத்தினை அவர் வெளிப்படுத்தி உள்ளார். அவர் மிக தேர்ந்தவராக, கடின உழைப்பு மற்றும் பணிவு கொண்டவராகவும் இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இடதுகை பந்து வீச்சாளர் என்பவர் எப்பொழுதும் அணிக்கு கிடைக்க கூடிய ஒரு சொத்து. இதேபோன்று களத்தில் அவரது ஆட்டம் தொடர்ந்து வெளிப்பட்டால், அடுத்த ஆண்டு நடைபெறும் சர்வதேச டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு சிறந்த ஒன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

அதே நேரம் நேற்றைய போட்டி முடிவில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால், அதை பெற்றுக் கொண்ட ஹர்திக், அந்த விருதுக்கு தகுதியானவர் தமிழக வீரர் நடராஜன் என்று கூறி கோப்பையை அவரிடம் வழங்கினார். இதேபோல, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலியும், 20 ஓவர்  தொடருக்கான கோப்பையை நடராஜனிடம் வழங்கி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

தொடர் நாயகன் விருது கோப்பையை நடராஜன் கையில் வழங்கி அழகு பார்த்த ஹர்திக் பாண்ட்யா

“தென்பகுதியில் கொல்லப்பட்ட சிங்களவர்களும் சரி வடக்கில் கொல்லப்பட்ட தமிழர்களும் சரி எல்லோரும் நம்நாட்டின் பிள்ளைகளே” – மங்களசமரவீர !

“தென்பகுதியில் கொல்லப்பட்ட சிங்களவர்களும் சரி வடக்கில் கொல்லப்பட்ட தமிழர்களும் சரி எல்லோரும் நம்நாட்டின் பிள்ளைகளே”  என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகத்தில் மங்களசமரவீர வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே  அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர்  அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஒரு நாடு ஒருசட்டம் என்பதை வெறும் வார்த்தைகளுக்கு அப்பால் சென்று உண்மையில் நடைமுறைப்படுத்துவது எப்படி என நாட்டை நேசிப்பவர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. மஹர சிறைச்சாலை கலவரத்தின் பின்னர் சிறைச்சாலை வாசலில் தாய்மார்கள் கண்ணீர்விட்டு அழுதது தென்பகுதியில் கண்ணீர்விட்ட தாய்மார்களை நினைவுபடுத்தியது.

அதேவேளை, வடக்கின் தாய்மார்களின் கண்ணீரை மாத்திரமில்லை அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் கண்ணீரையும் நாங்கள் பார்த்துள்ளோம். தென்பகுதியில் கொல்லப்பட்ட சிங்களவர்கள், வடபகுதியில் கொல்லப்பட்ட தமிழர்கள், மஹர சிறைச்சாலையில் கொல்லப்பட்ட கைதிகள், 2012இல் வெலிக்கடையில் கொல்லப்பட்ட கைதிகள் எங்களின் உறவுகள், எங்கள் நாட்டின் பிள்ளைகள் என்பதை நாங்கள் மறக்க முடியாது.

தொடர்ச்சியாக இடம்பெறும் விடயங்களைப் பார்க்கும்போது சுதந்திரத்துக்குப் பின்னர் தாய்மார்களின் கண்ணீரைத் தவிர மக்களுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை என்ற கருத்தை நிராகரிக்க முடியாதது போல் தோன்றுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா சுதேச மருந்தை பெற குவிந்த மக்கள் கூட்டம் – மருந்து விநியோகத்துக்கு தடை !

கேகாலையில் வைத்தியர் ஒருவர் கொரோனாவை கட்டுப்படுத்தும் என தெரிவித்து விற்பனை செய்த மருந்தினை விநியோகிப்பதற்கு பிரதேச செயலாளர் தடை விதித்துள்ளார்.

குறிப்பிட்ட மருந்தினை பெறுவதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் சமூகவிலகல் விதிமுறைகளை மீறி கேகாலையின் ஹெட்டிமுல்ல பகுதியில் காணப்பட்டதால் கொரோனா பரவல் ஆபத்து குறித்து சுட்டிக்காட்டப்பட்ட நிலையிலேயே பிரதேச செயலாளர் மருந்தினை விநியோகிப்பதற்கு தடை விதித்துள்ளார்.

தம்மிக பண்டார என்பவர் கொரோனாவை குணப்படுத்தும் மருந்து தன்னிடமுள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து அதனை பெறுவதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் ஹெட்டி முல்ல பகுதிக்கு நேற்று சென்றனர்.

பெருமளவு மக்கள் அப்பகுதிக்கு செல்லத்தொடங்கியதால் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் அங்கு அனுப்பப்பட்டனர்.

“புலிகள் அமைப்பை மீண்டும் தலை தூக்க இடமளிக்கமாட்டோம்.மூன்று வேளையும் நன்றாகச் சாப்பிட்டு சுதந்திரமாக இருப்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு” – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

“தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் தலை தூக்க இடமளிக்கமாட்டோம்.மூன்று வேளையும் நன்றாகச் சாப்பிட்டு சுதந்திரமாக இருப்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு” என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து பேசிய அவர்,

வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் ஆகிய திட்டங்களின் ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைக் கட்டியெழுப்புவதற்கு மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.தமிழீழ விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்ட ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்டன. வடக்கு மக்களின் உற்பத்திகளை வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லக்கூடிய சூழ்நிலை உருவானது.

போருக்குப் பின்னர் வடக்கின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்கு மேல் மாகாணத்தில் இருந்த தமிழ் ஆசிரியர்களை அங்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு என்ன நடந்தது? எல்லாம் நிறுத்தப்பட்டன.நல்லாட்சிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு  வழங்கியது. பாராளுமன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்பட்டனர். ஆனால், வடக்கு மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் உரையாற்றுவதைச் செவிமடுக்கும் போது வேதனையளிக்கின்றது. இனவாதத்தைத் தூண்டுகின்றனர். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன்.தெற்கு மக்கள் தொடர்பில் வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் அங்கு குரோதமனப்பான்மையை உருவாக்கியிருந்தனர். அங்குள்ள மக்களிடம் நாம் உரையாடினோம்.

மூன்று வேளையும் நன்றாகச் சாப்பிட்டு சுதந்திரமாக வாழும் சூழ்நிலை உருவாகுவதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், புலம்பெயர் அமைப்புகளுக்கும் சோரம் போயுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் தான் வடக்கு மக்களைக் குழப்பியுள்ளனர். எனவே,இனவாதத்தைத் தூண்ட வேண்டாம் எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் பிரபாகரனின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு இந்த நாட்டு மக்கள் ஒரு போதும் இடமளிக்கமாட்டார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் தலை தூக்கவும் இடமளிக்கமாட்டோம்.ஆகவே, எம்முடன் கரம் கோர்த்துச் செயற்படுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கின்றோம்” என்றார்.

“மன்னாரில் உருவாக்கப்பட்டுள்ள காற்றாலைகள் அப்பகுதிக்கு அபிவிருத்தியையும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களையும் வழங்கும்” – அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா

“மன்னாரில் உருவாக்கப்பட்டுள்ள காற்றாலைகள் மூலம் அப்பகுதி அபிவிருத்தி அடையவுள்ளதுடன் அப்பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப்படவுள்ளன” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று (08.12.2020) இடம்பெற்ற காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலங்களில் நீர் மற்றும் எரிபொருள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டுவந்த நிலையில், தற்போது சுற்றாடல் பாதிப்புக்கள் அற்ற குறைந்த செலவிலான காற்றாலை மின் உற்பத்தியில் அரசாங்கம் ஆர்வம் செலத்தி வருகின்றது. இதன்படியே மன்னாரில் குறித்த காற்றாலை உருவாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுவதன் ஊடாக பிரதேச அபிவிருத்தி விரைவுபடுத்தப்படுவதுடன் உட்கட்டமைப்பு வசதிகளும் விருத்தி செய்வதற்கான சூழுல் ஏற்படுகின்றது.

இதேபோன்று, மன்னார் மாவட்ட மக்கள் எதிர்கொள்கின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வு காணப்படும். அரசாங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான் மற்றும் கு.திலீபன் ஆகியோரின் ஊடாக குறித்த வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

மன்னாரில் உருவாக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வீதிகள் புனரமைப்பு மற்றும் குழாய் கிணறுகளை அமைத்துக் கொள்ளுதல் போன்ற வாய்ப்புகளும் மன்னார் மக்களுக்கு கிடைத்திருக்கின்றது.

தற்போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக வருடாந்தம் சுமார் 400 மில்லியன் மின் அலகுகளை உற்பத்தி செய்ய முடியும். குறித்த உற்பத்தியின் மூலம் சுமார் 10 நாட்களுக்கு தங்குதடையின்றி நாடு முழுதும் மின்சாரம் வழங்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.