இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டியில், அவுஸ்ரேலியா அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
சிட்னி மைதானத்தில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றங்களில் நிறைவில் 5 இலக்குகள் இழப்புக்கு 186 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மத்தியு வேட் 80 ஓட்டங்களையும் க்ளென் மேக்ஸ்வெல் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், வொஷிங்டன் சுந்தர் 2 இலக்குகளையும் நடராஜன் மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் தலா 1 இலக்கினையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 187 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியா அணியால், 20 பந்துப்பரிமாற்றங்களில் நிறைவில் 7 இலக்குகள் இழப்புக்கு 174 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் அவுஸ்ரேலியா அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியா அணி தோல்வியை தழுவியிருந்தாலும், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை இந்தியா அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இதன்போது இந்திய அணி சார்பில், அதிகப்பட்ச ஓட்டங்களாக அணித்தலைவர் விராட் கோஹ்லி 85 ஓட்டங்களையும் ஷிகர் தவான் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மிட்செல் ஸ்வெப்சன் 3 இலக்குகளையும் மேக்ஸ்வெல், ஆடம்செம்பா, சீன் அபோட் மற்றும் ஹென்ரிவ் டை ஆகியோர் தலா 1 இலக்குகளையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்ரேலிய அணியின் மிட்செல் ஸ்வெப்சன் தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் நாயகனாக ஹர்திக் பாண்ட்யா தெரிவுசெய்யப்பட்டார்.