நேற்று முன் தினம் இடம்பெற்ற குழந்தைகளின் படுகொலையும் தந்தையின் தற்கொலை முயற்சியும் எமது சமூகம் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சினைகளின் கொடுரமான வெளிப்பாடு.
– என் அன்புச் சினேகிதி ஒருத்திக்கு எழுதிய மடலில் இருந்து. –
கனடாவில் சில ஆண்டுகளுக்கு முன் கணவனை இழந்த மூன்று குழந்தைகளின் தாய் – இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் தனது பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த போது காப்பாற்றப்பட்டார். லூசியம் பகுதியில் ஒரு இளம் தாய் தனது மூன்று பிள்ளைகளை கத்தியால் குத்திய பின் தற்கொலை செய்ய முயற்சித்த போது தாயும் ஒரு பிள்ளையும் மட்டும் காப்பாற்றப்பட்டனர். இவ்வாறான ஒரு சம்பவம் ஹரோவிலும் இடம்பெற்றது. இதே போல் அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழரை மணம் முடித்த வியட்நாம் பெண்ணும் பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்ட போது காப்பாற்றப்பட்டார்.
இச்சம்பவங்கள் எல்லாம் கடந்த 10 ஆண்டுகளுக்குள் இடம்பெற்ற நிகழ்வுகள். இவற்றை செய்திகளாக பத்திரிகைகளில் அவர்களின் படங்களோடு பதிவு செய்திருக்கிறேன். லூசியத்தில் நடந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட குழந்தைகளின் இறுதி நிகழ்விலும் கலந்துகொண்டேன்.
நான் இதை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்குக் காரணம் இந்த மனம் தகவல்களைக் கையாள்கின்ற முறை, சிந்தனை, எண்ணங்கள்; அன்பும் அரவணைப்பும் கொண்ட இளம் தாய்மாரை எவ்வளவு மோசமான கொடுமையை, தங்கள் கருவில் உருவான பத்துமாதம் சுமந்த குழந்தைகளுக்கு செய்ய வைத்திருக்கின்றது பார்த்தீர்களா?
இந்தக் கொலைகளைச் செய்த தாய்மாருடைய மனநிலை அவர்கள் தங்கள் குழந்தைக்கு கொடுமை செய்வதாக எண்ணவில்லை. அக்குழந்தைகள் தாங்கள் இல்லாமல் கஸ்டப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே கொலை செய்யப்பட்டனர். இன்றைக்கும் இத்தாய்மார் உயிரோடு சிறையிலும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் உள்ளனர்.
இந்தத் தாய்மாருக்கு எற்பட்டது போஸ்ட் நட்டல் அல்லது போஸ்ட் ரோமற்றிக் டிஸ் ஓடர் – Postnatal Depression / Post Traumatic Depression – என்ற மனநிலை பாதிப்பு. அதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டுகொண்டிருந்தால் இவர்களை மிக இலகுவாக இயல்பு வாழ்க்கைக்கு திருப்பி இருக்க முடியும். அந்த குழந்தைகளும் உயிரிழக்க வேண்டி வந்திராது. தாய்மாருடைய எதிர்காலமும் இவ்வாறு சீரழந்திருக்க மாட்டாது.
எமக்கு துன்பம் அல்லது கஸ்டம் வருகின்ற போது எங்களுடைய மனம் எமக்கு ஏற்பட்ட துன்பமான சம்பவங்கள் அல்லது கஸ்டமான விடயங்களை எல்லாம் ஞாபகத்துக்கு கொண்டு வந்துவிடுகின்றது. அது எங்களை மேலும் மேலும் வேதனைக்கு உட்படுத்தி எங்களை பலவீனப்படுத்திவிடும். இதனை நீங்கள் புரிந்து கொண்டு துன்பங்களையும் கஸ்டங்களையும் மீள மீள அசை போடாமல் கவனத்தை திசை திருப்ப வேண்டும்.
எமது மூளையில் தகவல்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டே சேமிக்கப்படுகிறது. துன்பங்களை கஸ்டங்ளை அசை போட்டால் அது தொடர்பான சம்பவங்கள் ஞாபகத்துக்கு வரும்.. மாறாக மகிழ்ச்சியான பொழுதுகளை நினைவுபடத்தினால் நீங்கள் அனுபவித்த மகிழ்ச்சியான காலங்கள் தொடர்ந்து வரும். இது கிட்டத்தட்ட google search பண்ணுவது போல். நீங்கள் தேடும் சொல்லோடு தொடர்புபட்ட எல்ல விடயங்களையும் தேடிக்கொண்டு வந்து கொட்டுகிறதல்லவா அப்படித்தான் எமது மனமும். அதனால் ‘எனக்குத் தான் எல்லா கஸ்டமும் வருகிறது’ என்று எண்ணி உங்களைப் பலவீனப்படுத்தி விட வேண்டாம்.
எங்கள் உடலில் இதயம் நுரையீரல் குடல் மூளை கை கால் என்றெல்லாம் அங்கங்கள் உறுப்புகள் இருக்கின்றது. ஆனால் எங்கள் உடலில் ‘மனம்’ என்றொரு அங்கம் உறுப்பு இல்லை. மூளையின் நினைவுப் (conscious mind) பகுதியிலும் நினைவுக்கு அப்பாற்பட்ட (unconscious mind) பகுதியிலும் பதிவில் உள்ள தகவல்களைக் கையாள்வதையே நாங்கள் ‘மனம்’ என்கிறோம்.
அன்பு, பாசம், காதல், மகிழ்ச்சி, துயரம், வேதனை, கோபம், விரக்தி எல்லாமே இந்த தகவ்களைக் கையாள்வதாலும் எமது உடலில் உள்ள ஹோர்மோன்களினாலுமே ஏற்படுகின்றது.
மனம் இந்தத் தகவல்களைக் கையாளும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த மனிதர்களால் முடியும். ஆனால் துரதிஸ்டவசமாக பலரும் அதனை முயற்சிப்பதில்லை. நாங்கள் சிந்திக்கின்ற முறையில் அல்லது நாங்கள் புரிந்துகொள்கின்ற முறையில் சிறிய மாற்றங்களை செய்வோமானால் பலரும் தங்கள் துன்பியல் வட்டத்துக்கு வெளியே வந்துவிடலாம். அப்படி வரத்தவறினால் இன்னும் இன்னும் துன்பியலை நோக்கியே அவர்கள் இழுக்கப்படுவார்கள்.
தமிழ் சமூகம் மனநிலை பாதிப்பு என்பதை ‘பைத்தியம்’ ‘சைக்கோ’ என்று மட்டுமே அறிந்து வைத்துள்ளது. சமூகத்தில் இது பற்றிய விழிப்புணர்வு இன்றும் இல்லை என்றே சொல்லலாம். இந்நிலை மாற வேண்டும்.
புத்தர் ஞானம் பெற்றதே இழப்பு தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்த போதே. உறவும் பிரிவும் வாழ்வின் யதார்த்தம். அதனையும் கடந்து – மறந்து அல்ல – வாழ்வு நகர வேண்டும். எம்மீது அன்பும் பாசமும் காதலும் கொண்டவர்கள் பிரிகின்ற போது அவர்கள் நினைவுகளைச் சுமந்து – சோகத்தை அல்ல – மகிழ்ச்சியோடு முன்னேற வேண்டும். அதே போன்றே கொபத்தையும் வஞ்சத்தையும் கடந்து செல்ல வேண்டும்.
ஒருவருடைய பிரச்சினையை இன்னொருவரால் தீர்த்து வைப்பது என்பது மிகக் கடினமானது. அதுவும் குறிப்பாக மனம் சார்ந்த பிரச்சினைகளை இன்னொருவரால் தீர்த்து வைக்க முடியாது. இந்த ஆற்றுப்படுத்துபவர்கள் – counsellors – உங்கள் கவலைகளைக் கேட்டு தெரிந்துகொண்டு; உங்களை நீங்களே புரிந்துகொள்ள வைப்பதன் மூலம்; நீங்களாகவே இந்தத் துன்பியல் சுழற்சியில் இருந்து வெளியே வருவதற்கு உதவுவார்கள். இது ஓரிரு சந்திப்புகளிலும் நடக்கலாம் அல்லது வருடங்களும் ஆகலாம். அது பாதிக்கப்பட்டவருடைய மனநிலை அவர் எவ்வளவுதூரம் ஒத்துழைப்பார் என்பதில் தங்கி உள்ளது. பாதிக்கப்பட்டவர் முன்வருகின்ற போதே பாதித் துன்பியலுக்கு முடிவு வந்துவிடும் மிகுதி விரைவிலேயே காணாமல் போய்விடும்.
ஆனால் துன்பியலுக்குள்ளேயே வாழப் பழகிக் கொண்டால் அதற்குள்ளிருந்து வெளிவருவது மிகக்கடினமானதாகிவிடும்.