பிரித்தானியாவில் உள்ள சிலருக்கு இந்த கொரோணா வைரஸ் தொடர்பான ஆய்வை மேற்கொள்வதற்கான கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட உள்ளதாக ஓஎன்எஸ் – ONS Office for National Statistics தெரிவித்துள்ளது. இதுவொரு கருத்துக் கணிப்பு அல்ல. இந்தக் கடிதம் வந்தால் அக்கடிதத்தை உதாசீனம் செய்ய வேண்டாம். முதற்கட்டமாக பிரித்தானியாவில் உள்ள 20,000 பேருக்கு இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. அதன்படி கொரோனா வைரஸ் சுவப் ரெஸ்ற்றும் அன்ரிபொடி ரெஸ்ற்றும் மேற்கொள்ளப்படும். இந்த ரெஸ்ற்றும் அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள பிரதான பணியாளர்களுக்கான ரெஸ்ற்றும் ஒன்றல்ல. இந்த ரெஸ்ற்றும் கேள்விக்கொத்தும் கொரோணா வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எவ்வாறு பரவி இருக்கிறது, நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டிலே இருக்கப் பணித்த கட்டுப்பாடுகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது போன்ற தகவலை அச்சொட்டாக அறிவதற்கு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் ஓஎன்எஸ் இல் இருந்து கடிதம் பெற்றுக்கொண்டவர்கள் சம்மதிக்கும் பட்சத்தில் அவர்களை வாரா வாரமும் மாதத்திற்கு ஒரு தடவையும் அடுத்த வருடம்வரையும் தொடர்ச்சியாக ரெஸ்ற் செய்து கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின் அது மீண்டும் தொற்றுமா, தொற்றுக்குப் பின் ஏற்படும் நோய் எதிர்ப்பு எவ்வளவு காலத்திற்கு வலுவானதாக இருக்கும் என்பனவற்றையும் இந்த ஆய்வு உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கின்றது. அதனால் படிப்படியாக கூடுதலானவர்கள் ரெஸ்ற்றுக்கும் வினாக்கொத்தை நிரப்பவும் மாதம் மாதம் அழைக்கப்படலாம். ஆகவே இக்கடிதங்கள் தொடர்பில் சிரத்தை கொள்ளவும்.