தனது இரு குழந்தைகளை படுகொலை செய்து தன்னையும் படுகொலை செய்ய முற்பட்ட நீதி குமார் (40) அருகில் உள்ள தமிழ் கடையில் பணியாற்றி வந்துள்ளார். நீதி அன்பான தந்தை என அவரை அறிந்த அவர் பணியாற்றிய கடையின் முதலாளி தெரிவித்து இருந்தார்.கணவரின் செயலைக் கண்டு தெருவுக்கு வந்து கதறி அழுதுள்ளார் மனைவி நீஸா. என்ன காரணத்தால் இக்கொடூரம் நிகழ்ந்தது என்பது இதுவரை தெரியவரவில்லை.
கிழக்கு லண்டன் பகுதியில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் மாலை 5:40 மணியளவில் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். ஒரு வயதுடைய பெண் குழந்தையும் மூன்று வயதுடைய ஆண்குழந்தையும் படுகொலை செய்யப்பட்டு உள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்து உள்ளனர். காயமடைந்த நிலையில் 40 வயதான ஆண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெண் குழந்தை ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாகவும் ஆண் குழந்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரின் பிள்ளைகளே படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. பொலிஸார் இப்படுகொலை தொடர்பாக வேறுயாரையும் தேடவில்லை என அறிவித்துள்ளனர். இதன்படி குடும்பத்தகராறு காரணமாவே இப்படுகொலைகள் இடம்பெற்றதாக அஞ்சப்படுகிறது. இக்குடும்பத்தினர் இல்போர்ட் அலட்ப்றோ றோட் நோத்தில் உள்ள விநாயகன் ஸ்ரோரிற்கு மேல் வசித்து வந்துள்ளனர்.
இது தொடர்பாக இக்குடும்பத்தினரை அறிந்த ஒருவர் தேசம் நெற் க்கு தெரிவிக்கையில் கணவன் மனைவிக்கு இடையே இடம்பெற்ற தகராற்றில் தந்தை பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்வதற்கு தன்னைத்தானே குத்தியதாகத் தெரிவித்தார்.
கொரோனா லொக்டவுன் இக்கு பின்பாக குடும்ப வன்முறைகள் வீடுகளில் அதிகரித்து வருவதை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தி வருகின்றமை தெரிந்ததே.