31

31

அரசியலில் மட்டுமல்ல விடுதலைப் போராட்டத்திலும் இதெல்லாம் சகஜமப்பா!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி கருணா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட போதும் கிழக்கு புலிகள் சமத்துவமாக நடத்தப்டவில்லை கிழக்கு மாகாணம் சமத்துவமாக நடத்தப்படவில்லை என்பது வரலாற்று ரீதியாக ஆவணப்படுத்தப்பட்ட ஒன்று. இதனை மிகத் தீவிரமாக மறுப்பவர்கள் கிழக்கைச் சார்ந்தவர்கள் அல்ல. யாழ்ப்பாணத்தைச் சார்ந்தவர்களே – ஒடுக்குகின்றவர்களே.

இதே போல் சாதிகள் ஒன்றும் இல்லை என்று முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைப்பவர்களும் ஒடுக்கப்பட்ட சாதியினர் அல்ல. ஒடுக்கும் சாதியினரே. இலங்கை அரசாங்கம் எவ்வாறு இலங்கையில் இனங்களுக்கு இடையே எவ்வித பிரச்சினையும் இல்லை நாம் எல்லோரும் இலங்கையர் என்ற போர்வையில் சிங்கள பேரினவாதத்தை கட்டமைக்கின்றதோ; அதே அரசியல் அடிப்படையிலேயே யாழ் வெள்ளாள ஆண் ஆதிக்க தமிழ் தேசியவாதம்: பிரதேசவாதம் சாதியம் பெண் ஒடுக்குமுறை என்று, ஒன்றில்லை இதெல்லாம் தமிழ் மக்களை பிளவுபடுத்தும் சதி வேலை என்று புலம்புகின்றது. இதனைச் சொல்பவர்கள் மிகமோசமான சாதிமான்களாகவும் ஏனைய பிரதேசத்தவர்களைப் பற்றிய மோசமான எண்ணக்கரு உடையவர்களாகவும் பெண் அடிமைச் சிந்தனையுடையவர்களாகவும் இருக்கின்றனர்.

ஒடுக்குபவர்கள் அல்லது அவர்களுக்கு துணை போவவர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து, முகமூடியோடு ஒடுக்கப்படுபவர்களின் அடையாங்களோடு வந்து, அந்த ஒடுக்கப்படுபவர்களையே அவமானப்படுத்துவது கேவலப்படுத்துவது ஒரு கீழ்த்தரமான வஞ்சகச் சூழ்ச்சி. இதனை ஆளும் வர்க்கங்களும், ஒடுக்கும் வர்க்கங்களும் மிகத்திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளும். இதுவொன்றும் புதிய கண்டுபிடிப்பும் அல்ல. அந்த வகையில் எமது போராட்டத்திலும் இவ்வாறான பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

விடுதலைப் போராட்ட ஆரம்பகாலங்களில் தாங்கள் செய்யும் மோசமான செயற்பாடுகளை மற்றையவர்கள் தலையில் கட்டிவிடும் சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. இதில் தமிழீழ விடுதலைப்புலிகள் மிகக் கைதேர்ந்தவர்கள். ஏனைய இயக்கங்களும் அவ்வாறான கட்டுக் கோப்பான அமைப்பு வடிவம் இல்லாததால் அவர்களால் இதனை பெரிய அளவில் செய்ய முடியவில்லை. ரெலோ அழிக்கப்பட்ட காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் தாங்கள் களவாடிய பொருட்களை எல்லாம் கொண்டுவந்து ரெலோ களவாடியவை என்று மக்களிடம் திருப்பி ஒப்படைத்தனர். இதே திருட்டையே தங்களை புலிகள் என்று சொல்பவர்கள் இன்று கருத்தியல் தளத்தில் செய்ய முற்படுகின்றனர். இவை கேள்விக்கும் விமர்சனத்திற்கும் உட்படுவது தவிர்க்க முடியாதது.

ஆண்கள் முகமூடிக்குள் நின்றுகொண்டு பெண்களின் அடையாளங்களோடு வந்து பெண்களை அவமானப்படுத்துவது, இந்துக்கள் முஸ்லீம்களது பெயர்களில் வந்து எழுதுவது, ஒரு பிரதேசத்து பெயரையே வைத்துக்கொண்டு, அங்கு நடந்த உண்மைச் சம்பவங்களை திரிபுபடுத்துவது. ஒடுக்கும் சாதியினர் தங்களை ஒடுக்கபடுபவர்களாக பாவனை பண்ணி எழுதுவது அல்லது அல்லது ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே அழுத்தங்களைக் கொடுத்து அவர்களை தங்கள் பிரதேசத்தவர்களுக்கு எதிராக எழுத வைப்பது, போன்ற செயற்பாடுகள் மிகச் சர்வசாதாரணமாக எமது போராட்ட வரலாற்றில் இடம்பெற்றது.

விடுதலைப் புலிகளில் இருந்து பிரிவதற்கான தத்துவார்த்த கருத்தியலை கருணாவிற்கு வழங்கியவர் இன்று மிகச்சிறந்த ஊடகவியலாளராகக் அறியப்படும் தராக்கி சிவராம். கருணா விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்ததும் திட்டமிட்டபடி கருணாவிற்கு சாதகமாக அமையவில்லை. அதனால் தராக்கி சிவராம் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்படும் நிலை உருவானது. இதனை கச்சிதமாக பயன்படுத்திய புலிகள் தராக்கி சிவராமை வன்னிக்கு அழைத்து கருணாவிற்கு எதிராக தராக்கி சிவராமை எழுத வைத்தனர். விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்படிருக்க வேண்டியவருக்கே பின்னாளில் விடுதலைப் புலிகள் மாமனிதர் பட்டம் கொடுத்து கௌரவித்தனர், தனது சொந்த பிரதேசத்து மக்களைக் காட்டிக்கொடுத்ததற்காக. அரசியலில் மட்டுமல்ல விடுதலைப் போராட்டத்திலும் இதெல்லாம் சகஜமப்பா!

2004இல் விடுதலைப் புலிகள் சந்திரிகா அரசுக்கு அழுத்தம் கொடுத்து இலங்கை கடற்படையின் அணுசரணையோடு கடல் வழியாக மட்டக்களப்பில் தரையிறங்கினர். மட்டக்களப்புப் போராளிகளையே அங்கு தரையிறக்கி அங்கிருந்த போராளிகளை சரணடையும்படி கேட்க, தங்கள் ஊரவர்கள் தானே என்ற நம்பிக்கையில் அவர்கள் சரணடைந்தனர். சரணடைந்த கருணா அணியின் மட்டக்களப்புப் போராளிகளை விடுதலைப்புலிகளின் யாழ் அணியோடு வந்த கிழக்குப்புலிகள் நூற்றுக்கணக்கில் கொன்று குவித்தனர். படுவான்கரையிலும் கருணா தன்னால் முடியாது என வீட்டுக்கு அனுப்பி வைத்த போராளிகளை, இந்த யாழ் விடுதலைப் புலிகளின் தலைமையின் கீழிருந்த மட்டக்களப்பு போராளிகளிடம் பெற்றோரே கொண்டுவந்து ஒப்படைத்தும் இருந்தனர். இவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இவ்வாறான மோசமான பிரதேசவாதப் படுகொலைகளை வேறெந்ம விடுதலை போராட்ட அமைப்பும் இலங்கையில் மேற்கொண்டிருக்கவில்லை. மட்டக்களப்பு போராளிகளை வைத்தே மட்டக்களப்புப் போராளிகளைப் படுகொலை செய்த மிலேச்சதனத்திற்கு அந்த ஊர்களின் முகமூடிக்குள் நுழைந்துகொண்டு வரலாற்றைத் திரிபுபடுத்தும் வகையில் இந்தக்கொலைகளை நியாயப்படுத்த முயற்சிப்பது மிக மோசடான அயோக்கியத்தனம்.

1986இல் ரொலோ மீது புலிகள் படுகொலைத் தாக்குதலை மேற்கொண்ட போதும் பெரும்பாலும் படுகொலை செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தவர்கள் அல்ல. கிழக்கைச் சேர்ந்தவர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் பல வகையிலும் ஏனைய பிரதேசங்களை வஞ்சித்தே போராட்டத்தை வளர்த்தது. இந்தப் போராட்டங்களின் காரணமாக வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் மிகப்பெருபாலானோர் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே. தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தினதும் தமிழ் கட்சிகள் அனைத்தினதும் தலைமை யாழ்ப்பாணத்தை மையப்படுத்தியே அன்றும் இருந்தது. இன்றும் இருக்கின்றது. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் ரிஎம்விபி மட்டும் தற்போது விதிவிலக்கு.