கருணா அம்மான் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்துத் தொடர்பில், அவரைக் கைது செய்ய வேண்டும் என நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையின்றி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கருணா, ‘ஆனையிறவில் ஓர் இரவில் 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரம் வரையிலான இராணுவச் சிப்பாய்களைக் கொன்றோம்’ என்று ஒரு வாக்குமூலத்தை தன்வாயாலேயே வழங்கியிருந்தார்.
தென்னிலங்கையில் இந்த கருத்து பரபரப்பையும் சிங்கள மக்களிடையே கண்டனத்தையும் ஏற்படுத்தியது.
கருணாவைக் கைது செய்யவேண்டும் என்று எதிர்ப்புக் குரல்கள் வலுத்தன. தேரர்களும் கருணாவின் கருத்துக் கண்டனம் தெரிவித்ததுடன் அவரைக் கைதுசெய்யும் படியாக வலியுறுத்தினர். இந்த நிலையில் கருணா தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்துத் தொடர்பில், அவரைக் கைது செய்ய வேண்டும் என நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் விசாரணைகள் இன்றி மனு இரத்துச் செய்யப்பட்டது.