28

28

யாழ்.வடமராட்சியில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் மாயம்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு- கட்டைக்காடு கடற்பகுதியில்  மீன்பிடிப்படகு ஒன்று கவிழ்ந்ததில் தொழிலுக்குச் சென்ற இரண்டு மீனவர்களில் ஒருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றையவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் காணாமல் போனவரை ஏனைய மீனவர்களின் உதவியுடன் தேடும் பணியில் கடற்படையினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வடராட்சி கிழக்கு, கட்டைக்காடு கடற்பரப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை படகு ஒன்றில் இரண்டு மீனவர்கள் தொழிலுக்குச் சென்றனர்.

இதன்போது கடலில் ஏற்பட்ட பலத்த காற்றினால், படகு கவிழ்ந்து கடலில் தந்தளித்த அவர்களை மீட்க மீனவர்கள் நடவடிக்கை எடுத்தனர். எனினும் ஒருவர் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன் காணாமல்போன மற்றைய மீனவரை தேடும் பணிகள்  தொடர்ந்தும் கடற்படையினரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் வீதி விபத்து உயிரிழப்புக்கள் :- வவுனியாவில் ஒருவர் பலி.

வவுனியா – பறண்நட்டகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து இன்று ஓமந்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற டிப்பர் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், நோயாளர்காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் குடைசாய்ந்துள்ளதுடன்,  அதன் சாரதி சிறுகாயங்களிற்கு உள்ளாகியுள்ளார்.

நேற்றைய தினம் பேராதெனிய – கம்பளை பிரதான வீதியின் கெலிஓய, கரமட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் சுமார் ஆறு இலட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியது கொரனா உயிரிழப்பு.

கொவிட் -19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார்  6 இலட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது . உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஐரோப்பிய நாடுகளில் உயிரிழந்துள்ளனர்.

 கடந்த ஆண்டின் பிற்பகுதியில் சீனாவின் வுகானில் இந்த வைரஸ்  தோன்றியதில் இருந்து , இந்த வைரஸ் தொற்றினால் மொத்தம் 650,011 பேர் உயிரிழந்துள்ளதோடு , 16,323,558 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் . அதில் 9,190,345 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர் .
ஜூலை 9 முதல் தற்போது வரைக்கும் 100,000 க்கும் மேற்பட்ட புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் உலகளாவிய எண்ணிக்கை இரண்டு மாதங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளது . எ.எப்.பி புள்ளிவிபரங்களின் படி , ஜூலை 9 ஆம் திகதி முதல் 100,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன . மேலும் உலகளாவிய ரீதியில் உயிரிழப்பு எண்ணிக்கை இரண்டு மாதங்களில் இரட்டிப்பாகியுள்ளது .

உலக அளவில் சுமார் 70 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு – ஐக்கியநாடுகள் சபை அனுமானம்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் உணவு விநியோகத்தை பாதிப்பதன் விளைவாக கிட்டத்தட்ட 70 லட்சம்  குழந்தைகள் தங்களது வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் பாதிக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
118 ஏழை மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் கொரோனா ஏற்படுத்தும் தாக்கத்தை நிபுணர்களின் குழு விவரித்துள்ளது. அந்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே மிதமாக அல்லது கடுமையாக உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் பாதிக்கப்படுவது 14.3 சதவிகிதம் அதிகரிக்கும் என்று அவர்கள் கண்டறிந்தனர், இதன் விளைவாக கூடுதலாக 67 பாதிப்புகள் அதிகரிக்க வழிவகுக்கும் என கூறப்படுகிறது.
ஆரம்பகால வாழ்க்கையில் ஊட்டச்சத்தின் மீது கொரோனா தொற்றுநோயின் ஆழமான தாக்கம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஒன்றிணைந்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், மேலும் கல்வியில் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் பாதிப்புகள், நாட்பட்ட நோய் அபாயங்ளை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உடல் மிகவும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள போது தசைகள் மற்றும் கொழுப்பு மறைந்து போகும் போது தங்களது உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாத பாதிப்பு ஏற்படும் என கூறியுள்ளனர்.

இலங்கையின் மழையுடனான வானிலை தொடர்ந்தும் அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இன்றைய தினம் மாலையிலிருந்து அடுத்த சில தினங்களுக்கு நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை தொடர்ந்து  அதிகரித்து காணப்படும்  என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இவற்றோடு சேர்த்து  மேலும் சில  இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் இப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையும் கவனத்தில்கொள்ளத்தக்கது.

ஜோர்தானில் இலங்கையர்கள் மீது கண்ணீர்ப்புகைத்தாக்குதல்.

உலக அளவில் அதிகரித்து வரக்கூடிய கொரோனா பரவல் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் வேலைக்காக சென்றிருந்த இலட்சக்கணக்கானோர் தங்களுடைய வேலை வாய்ப்புகளை இழந்து தங்களுடைய சொந்த நாடுகளுக்கு திரும்பி ய வண்ணம் உள்ளனர். மேலும் வேலைவாய்ப்பினை இழந்துகொண்டோர் தாங்கள் பணியாற்றும் நாடுகளில் வேலை வாய்ப்பினை பெற போராட்டங்களிலும் ஈடுபட்டு வருவதனை அவதானிக்ககூடியதாகவுள்ளது. இதனுடைய ஒரு பிரதிபலிப்பாக ஜோர்தானில் வேலை வாய்ப்பை இழந்த இலங்கையர் குழுவினரால் ஏற்பட்டுக் கொண்ட பதட்டமான நிலையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அந்நாட்டு பொலிஸாரினால் இலங்கையர் மீது கண்ணீர்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக  ஜோர்தான் நாட்டினுடைய அல்காரா பகுதியில் உள்ள கைத்தொழில்பேட்டை ஒன்றில் பணியாற்றிய இலங்கையர்களினாலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இவ்வாறாக முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அப்பகுதி பொலிசாரினால் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜோர்தான் நாட்டினுடைய அல்காரா அப்பகுதியில் பணியாற்றி இருந்த இந்ததொழிலாளர்கள் கடந்த பல மாதங்களாக தங்களுடைய வேலைவாய்ப்பினை இழந்திருந்த நிலையில் அவர்களினால் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிய வந்ததை அடுத்து ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் நேற்றைய தினம் அதாவது [27 ஆம் திகதி ] தொழில்பேட்டை அமைந்துள்ள பகுதிக்கு விசாரணை செய்வதற்காக விஜயம் செய்துள்ளனர். இதன்போது போராட்டக்காரர்கள் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியற்ற  முறையில் நடந்து கொண்டனர். இதனையடுத்து அவர்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுபோன்றதான தொழில் வாய்ப்புக்களை இழந்தவர்களினுடைய போராட்டங்கள் அண்மைய காலங்களில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.