03

03

3000க்கு மேற்பட்ட தேர்தல் முறைப்பாடுகள் பதிவு – வடக்கிற்கு முதலிடம்!

இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது அதிகளவான தேர்தல் சட்டமீறல் சம்பவங்கள் வட மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சியின் ஒன்றிணைந்த செயற்குழு உறுப்பினர் அதில் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு  கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அதில் மேலும் குறிப்பிடும்போது அவர்,

நாடளாவிய ரீதியில் 3000இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. அவற்றில் அரைவாசிக்கு அதிகமானவை வட மாகாணத்தில் பதிவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். சுமார் 1800 முறைகேடுகள் வடமாகாணத்தில் மட்டும் பதிவாகியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட விரோத பரப்புரை நடவடிக்கைகள், வாக்காளர்களுக்கு பணம் வழங்குதல், வாக்காளர்களை மத ரீதியான சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்லல், கட்சியின் பெயர் இலக்கம் பொறிக்கப்பட்ட பத்திரங்களை விநியோகித்தல், தனிமைப்படுத்தல் சட்ட ஒழுங்குகளை மீறல், சட்ட விரோத வாகன பேரணிகள் போன்ற தேர்தல் சட்ட மீறல்கள் சம்பவங்களே வட மாகாணத்தில் அதிகளவாகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை அமைதிக் காலம் மற்றும் தேர்தல் தினத்திலும் பரப்புரை நடவடிக்கைகளை மேற்கொள்ள சில கட்சிகளும் வேட்பாளர்களும் திட்டமிட்டுள்ளமை குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை கட்டுப்படுத்த பொலிஸார் பக்கச்சார்பின்றி செயற்பட வேண்டுமென மேலும் அவர் இதன்போது  தெரிவித்துள்ளார்.

சுகாதாரமான தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கான பணிகள் முன்னெடுப்பு.

நாளை மறுதினம் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு  கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி இலங்கையின் சகலபகுதிகளிலும் சுகாதாரமான தேர்தல் ஒன்றை நடாத்த தேர்தல் திணைக்களமானது முடியுமானவரை இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில்  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு இரசாயண திரவம் தெளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் மட்டக்களப்பின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் 6 வாக்களிப்பு நிலையங்களும், ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் 7 வாக்களிப்பு நிலையங்களும், வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவில் 16 வாக்களிப்பு நிலையங்களுக்கும் இரசாயண திரவம் தெளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றது.

இதன்போது கோறளைப்பற்று மத்தி, ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் வாக்களிப்பு நிலையங்களுக்கு மக்களின் பாதுகாப்பு கருதி இரசாயண திரவம் தெளிக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் நோய் காரணமாக வாக்காளர்களின் நன்மை கருதி சுகாதார விதிமுறைகளைப் பேணி இத்தேர்தல் நடாத்த சகல ஏற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நான் துரோகி எனில் எனக்கு வாக்களிக்க வேண்டாம் – யாழில் சிறீதரன்

இரணைமடு குடிநீர்தான் பிரச்சனை என்றால் என்னை நிராகரியுங்கள் தோல்வியை எதிர்கொள்ள நான் தயாரென  தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரான சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (02.08.2020) யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரணைமடு குளத்தின் தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு வழங்க முடியாதென நான் கூறியதாக ஊடங்களில் வெளிவந்துள்ள செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.   இரணைமடு தொடர்பில் இப்போது யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டியங்கும் தொலைக்காட்சி என் பெயரைக் குறிப்பிடாமல் எனக்கு எதிராக இரணைமடு நீரை தர மறுத்தவர் யார்? மறக்க மாட்டார்கள் யாழ்ப்பாண மக்கள் என்று கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் ஒன்றை பிரசுரித்து வருகிறார்கள். இதன் விளக்கம் இல்லாமல் குறுகிய வட்டத்துக்குள் அவர்கள் நிற்கிறார்கள்.

கிளிநொச்சியில் தண்ணீர் இல்லை குடிக்க, விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாத நிலையில் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் இங்கே ஒரு விரோதத்தை கட்டி வளர்க்கலாம் இதனை அரசாங்கம் திட்டமிட்டு செய்தது .இதனையே சிலர்  அரசியலாக காவிச் செல்கின்றார்கள்.நான் யாருக்கும் தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லவில்லை. நியாயத்தை சொன்னேன்.

குடிநீர் பிரச்சனையை தீர்க்க நாங்கள் முக்கியமான முயற்சிகளை செய்தோம். பாலியாறு எப்போதும் கடலுக்கு தண்ணீர் போகின்ற ஆறு, மண்டைக்கல்லாறு,குடமுறுட்டி போன்ற ஆறுகளாலும் கடலுக்கு தண்ணீர் போகிறது எத்தனையோ வளங்கள் உள்ளது.

நிலத்தடி நீரையும் நன்னீராக்கி 24 மணிநேரமும் குடிதண்ணீர் வழங்கக் கூடிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. எனினும் இவை குண்டுவெடிப்பு, ஜனாதிபதி தேர்தல், கொரோனா போன்றவற்றால் இத்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது தான் இதன் உண்மை.

இதன் பிறகும் இரணைமடு தண்ணீரை தரவில்லை என்று நீங்கள் எண்ணினால் நான் துரோகி என நினைத்தால், என் மீது நம்பிக்கை இல்லை என்றால் தயவு செய்து எனக்கு வாக்களிக்க வேண்டாம். தோல்வியை நான் ஏற்கத்தயாராக உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.