04

04

இதுவரையில் 2524 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் – இலங்கை காதார அமைச்சு

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2524 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2828 ஆக அதிகரித்துள்ள நிலையில் 293 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் தற்போது வரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முடிவடைந்துள்ள  ஏழு மாத காலத்தில் சுமார்  23,000க்கும்  அதிகமானோர் டெங்கு நோயாளர்கள்!

இந்த வருடம் தொடங்கி முடிவடைந்துள்ள  ஏழு மாத காலத்தில் சுமார்  20,000க்கும்  அதிகமானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வருடத்தின்  கடந்த ஏழு மாதங்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.இம் மாவட்டத்தில் இது வரையில் 3,380 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கொழும்புக்கு  அடுத்ததாக மட்டக்களப்பில் 2,262 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் 2, 260 பேரும்  கண்டியில் 2181 பேரும் ,கம்பஹாவில் 2, 029 பேரும் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை   யாழில் 1,959 பேரும்   இரத்தினபுரியில் 1,456 பேரும்   களுத்துறையில் 1, 430 பேரும்   காலியில் 1,111 பேரும் டெங்கு நோய்க்குள்ளாகியுள்ளனர். இவற்றை தவிர ஏனைய மாவட்டங்களில் 1000க்கும் குறைவான நோயாளர்களே இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கமைய கல்முனையில் 861 , குருணாகலில் 772 , கேகாலை 600, மாத்தளை  499, பதுளை 419, புத்தளம் 411பேர்  என்ற அடிப்படையில் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

400க்கும் குறைவான நோயாளர்கள் மேலும் சில மாவட்டங்களில் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கமைய அநுராதபுரத்தில் 365 நோயாளர்களும் மாத்தறையில் 352 நோயாளர்களும் ஹம்பாந்தோட்டையில் 308 நோயாளர்களும்  அம்பாறையில் 303 நோயாளர்களும்  வவுனியாவில் 241 நோயாளர்களும்  பொலன்னறுவையில் 217 நோயாளர்களும்  பதிவாகியுள்ளனர்.

இதுவரையில் ஒன்பது மாகாணங்களிலும் 23,885 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை சுமார் 10 ஆயிரத்தால் குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் எட்டாவது பாராளுமன்றத்தின் இறுதி அரசியலமைப்பு பேரவை கூட்டம்!

எட்டாவது பாராளுமன்றத்தின் இறுதி அரசியலமைப்பு பேரவை 82வது கூட்டம் நேற்று மாலை அதன் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க, பிமல் ரத்னாயக்க  ஆகியோரும் சிவில் சமூக உறுப்பினர்களான பேராசிரியர் நாகநாதன் செல்வகுமார்,யாவிட் யூசுப் அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான தம்மிக்க தஸநாயக்க ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆரம்பத்தில் அரசியலமைப்பின் உறுப்பினர்களை வரவேற்ற அரசியலமைப்புப் பேரவையின் தலைவரான முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய, மிகவும் வேலைப்பழு நிறைந்த சூழ்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் தனது நன்றிகளைத் தெரிவித்தார். இதன் பின்னர் பொதுச்சேவைகள் ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு மற்றும் இழப்பீடு தொடர்பான அலுவலகம் ஆகியவற்றில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது குறித்து அரசியலமைப்பு பேரவை கவனம் செலுத்தியிருந்ததுடன் இவற்றை நிரப்புவது குறித்த இறுதித் தீர்மானத்தை அடுத்த கூட்டத்தில் எடுப்பதற்கும் முடிவு செய்யப்பட்டது.

அத்துடன் நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்வனவு ஆணைக்குழு ஆகியவற்றிடமிருந்து கிடைக்கப்பெற்ற காலாண்டு அறிக்கைகள் பற்றியும் அரசியலமைப்புப் பேரவை கவனம் செலுத்தியது.  மேலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கலாநிதி தீபிகா உடுகம வழங்கியுள்ள இராஜினாமாக் கடிதம் குறித்து அவதானம் செலுத்தியிருந்த அரசியலமைப்புப் பேரவை, மனித உரிமைகள் ஆணைக்குழுவை உயர்ந்த இடத்துக்குக் கொண்டுசெல்ல அவர் வழங்கிய தலைமைத்துவத்தையும் பாராட்டியிருந்தது. மனித உரிமை ஆணைக்குழு உலகில் மிகவும் சிறந்த ஆணைக்குழுக்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவுக்குப் பாராட்டுக்களைத் தெரிவிப்பதாகவும் தீபிகா உடுகம அரசியலமைப்புப் பேரவைக்குச் சுட்டிக்காட்டியிருந்தார்.

வாக்காளர் அட்டைகளை இதுவரை பெறாதோருக்கான அறிவித்தல்!

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெறாத வாக்காளர்கள் இன்றும்(4.08.2020) நாளையும் (5.08.2020)தபால் அலுவலங்களில் அவற்றை பெற்றுக் கொள்ள முடியும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தங்களுடைய பிரதேச தபால் அலுவலகத்திற்கு சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் என பிரதி தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் வாக்காளர் அட்டை இல்லாவிடினும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தங்களது அடையாளத்தை உறுதி செய்ததன் பின்னர் வாக்களிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் நடமாடும் சேவை ஆரம்பம்!

தேர்தல் கடமைகளுக்காக 69,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் நடமாடும் சேவை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

3,069 பொலிஸ் நடமாடும் சேவைகளை நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில்  பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் 10,500 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

புதிய நாடாளுமன்றம் கூடும் திகதி அறிவிக்கப்பட்டது.!

இலங்கையினுடைய  9 ஆவது பாராளுமன்ற பொதுத்தேர்தல்  நாளைய தினம் நடைபெற உள்ளது.  தேர்தல் வாக்குச்சாவடிகளில் கிருமி நீக்கம் செய்தல் , வாக்குப்பெட்டிகளை தேர்தல் மையங்களுக்கு கொண்டு செல்லல் என அனைத்துப் பணிகளும் மும்முரமாக நடைபெற்றுக்கோண்டிருக்கின்ற நிலையில் புதிய அறிவித்தல் ஒன்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.

புதிதாக தெரிவு செய்யப்படவுள்ள  ஒன்பதாவதுவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நடைபெறும் என குறி்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிறப்பு வர்த்தமாணி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – தேர்தல்கள் ஆணைக்குழு

நாளைய தினம் (05.08.2020) நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலக பொறுப்பில் உள்ள வாக்கு பெட்டிகளை இன்று (4.05.2020) காலை 8.00 மணிக்கு வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு எடுத்துச்செல்கின்ற பணி ஆரம்பமானது. 12,985 வாக்களிப்பு நிலையங்களுக்காக 71 மத்திய நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. மத்திய நிலையங்களுக்கு வாக்கும் பெட்டிகளை அனுப்பும் பணி இன்று மாலைக்குள் பூர்த்தி அடையவுள்ளது.

நாளை நடைபெறவுள்ள வாக்களிப்பு தொடர்பான ஒத்திகை இன்று தேர்தல் மத்திய நிலையங்களில் இடம்பெறுவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வாக்குப் பெட்டிகளுக்களுக்கான பாதுகாப்பில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்களிப்பு நிலையங்களில் கிருமி நீக்க பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிப்பதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.

இம்முறை பொது தேர்தலில் 25 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களை பிரதிநித்துவப்படுத்தி 7,456 பேர் போட்டியிடுகின்றனர். இதேவேளை பொது தேர்தலில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்த 10,500 பேர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாருக்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு படையினரும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவிததார்.