10

10

பிஹார் மாநில வெள்ளப் பெருக்கால் 73 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு !

பிஹார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் 73 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தில் இருந்து வெள்ள நீர் திறந்து விடப்பட்டிருப்பதால் பிஹார் மாநில நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கங்கை, கோஸி, பாக்மதி, கம்லா பாலன், கந்தக் உள்ளிட்ட நதிகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்கிறது. வடக்கு பிஹாரில் சுமார் 16 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

மாநிலம் முழுவதும் 1,420 சமுதாயக் கூடங்கள் மூலம் சுமார் 10 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 23 குழுக்கள் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை 11,700 பேர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

பிஹார் முழுவதும் சுமார் 73 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். தர்பங்கா மாவட்டம் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அந்த மாவட்டத்தில் மட்டும் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஆடு, மாடுகள் என ஏராளமான கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.

தமாய் நதி அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் சாஹபரா மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 28 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அந்த கிராமங்களின் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

சாம்பிரான் மாவட்டத்தில் மட்டும் 100 ஹெக்டேர் பரப்பளவு பயிர்கள் நாசமாகி உள்ளன. இதேபோல பல்வேறு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான ஹெக்டேர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகியுள்ளன. மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் வீடு, உடைமைகளை இழந்துள்ளனர்.

மாநில முதல்வர் நிதிஷ் குமார் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் மூலம் தர்பங்கா, பாகல்பூர், முங்கர், புர்னியா, கோஸி உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

புதிய அரசாங்கம் இன, மத சிறுபான்மையினரை ஒடுக்கும் வகையிலான புதிய கொள்கைகளை அமுல்படுத்தும் – மீனாக்ஷி கங்குலி

இலங்கையில் கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியினைப் பெற்றுக்கொண்டது.  இதனைத் தொடர்ந்து அதன் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றார்.
மேலும், புதிய அமைச்சரவையும் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வெற்றியினைத் தொடர்ந்து குறித்த அமைப்பு இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

அதனடிப்படையில், சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசிய இயக்குநர் மீனாக்ஷி கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“புதிய அரசாங்கம் இன, மத சிறுபான்மையினரை ஒடுக்கும் வகையிலான புதிய கொள்கைகளை அமுல்படுத்துவதுடன் அதற்கான நீதி கோரும் அமைப்புகளின் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிக்கும்.
ஜனாதிபதி கோட்டாபய ரடாஜபக்ஷ 2019ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த 2005 முதல் 2015 வரையான காலப்பகுதியில் பல யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை தனது அமைச்சரவையில் நியமிக்கிறார்.
அவரது, சகோதரர் மஹிந்த ராஜபக்ஷவும் தற்போது பாதுகாப்புச் செயலாளராக உள்ள கமால் குணரத்ன மற்றும் தற்போதைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோரைப் போன்று மோசமான யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்.
நாட்டில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் சிவில் சமூகத்தின் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் 30/1 தீர்மானத்தை ராஜபக்ஷ அரசாங்கம் வெளிப்படையாகவே நிராகரித்துள்ளது.
எவ்வாறாயினும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கையில் ஒருமித்த தீர்வு ஒன்றை எட்டுவதற்கு அரசாங்கம் உடன்பட வேண்டும் என்பதுடன் சர்வதேச தரத்திலான பேச்சுரிமை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை அரசாங்கம் மதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் செயற்பட்டு வருகிறது.
எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடத்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் நிலவிய அடக்குமுறை சூழலை நோக்கி வேகமாக நகர்த்துகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு சமஷ்டி ஆட்சி தேவையில்லை என்பதை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர் – விமல் வீரவங்ச

வடக்கு தமிழ் மக்கள் சமஷ்டியை நிராகரித்து அன்றாட வாழ்வாதார சவால்களை வெற்றிக்கொள்வதற்கான வழியை கோருவதையே வடக்கு தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை குறிப்பிட்டளவு தமிழ் மக்கள் நிராகரித்துள்ளதாக  விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுள்ள மகத்தான வெற்றி தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

எமக்கு சமஷ்டி ஆட்சியொன்று அவசியமில்லை. அன்றாட வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கான சவால்களை வெற்றிக்கொள்வதே தேவையாகவுள்ளது என்பதை  இந்த  தேர்தல் முடிவுகள் மூலம் வடக்கு தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அதனால்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வடக்கில் ஒரு ஆசனத்தை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

சம்பிரதாயப்பூர்வ மக்கள் ஆணைக்கு பதிலாக புதிய மக்கள் ஆணையொன்று இதன்மூலம் உதயமாகும். இந்த புதிய மக்கள் ஆணையையும் அதன் கருப்பொருளையும் அனைவரும் ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த சவாலை நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம். ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளனர். எதிர்காலத்தில் அனைவரும் பொறுப்புடன் இந்த மக்கள் ஆணையின் உண்மையான அர்த்தத்தையும் பெறுமதியையும் புரிந்து பணியாற்ற வேண்டுமென நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.

பிரித்தானியாவில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை – இலங்கை தமிழர் ஒருவர் கைது !

பிரித்தானியாவில் பெண் ஒருவரை மோசமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்த இலங்கை தமிழர் ஒருவருக்கு 8 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் Portslade, Brighton பகுதியில் வசிக்கும் 40 வயதான  ஒருக்கே 8 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உணவகம் ஒன்றின் மேலாளரான பணியாற்றிய இலங்கை தமிழர் தனது பணியிடத்தில் வைத்து இந்த செயலை புரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று விசாரணைக்கு வந்த வழக்கின் போது நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

குறித்த நபர் பணியாற்றும் உணவகத்திற்கு வந்த இளம் பெண்ணை விருந்து ஒன்றிற்கு அவர் அழைத்துள்ளார். எனினும் அங்கு விருந்தில் குறித்த பெண் மாத்திரமே இருந்துள்ளார். இதன் போது பெண்ணிற்கு மதுபானம் வழங்கிய இலங்கையர் இரண்டாவது முறையும் குடிக்குமாறு பலவந்தப்படுத்தியுள்ளார்.

தனது மனைவி மற்றும் பிள்ளைகள் இருப்பதாக கூறி அந்த பெண்ணை நம்ப வைப்பதற்கு இலங்யைர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்த சீசீடீவி கமராக்களையும் அவர் செயலிக்க செய்து கதவுகளையும் மூடியுள்ளார்.

அத்துடன் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் பெண் சுயநினைவை இழந்த நிலையில் கிழே விழுந்து கிடந்துள்ளார்.

சம்பவத்தின் போது அவ்விடத்திற்கு வந்த பெண்ணின் காதலன் அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பெண்ணிற்கும் இலங்கையருக்கும் மேற்கொண்ட DNA பரிசோதனையில் அவர் மோசமாக நடந்துக் கொண்டமை உறுதியாகியுள்ளது.

அதற்கமைய சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட போது அந்த உணவகத்தில் 3 சட்டவிரோத குடியேறிகள் பணியாற்றுவது தெரியவந்துள்ளதுடன், இந்த இலங்கையரின் குடியுரிமை விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை, கொடூர தாக்குதல் மேற்கொண்ட உட்பட பல்வேறு குற்றசாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய 8 ஆண்டுகள் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவருக்கு பிணை வழங்குவதற்கு முன்னர் அவரது தண்டனையின் மூன்றில் இரண்டு பங்கையாவது அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் அவர் ஆபத்தானவர் என கருதப்படுகின்றமையினால் தண்டனை காலங்களின் பின்னர் நாடு கடத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்தேசிய கூட்டமைப்பினுடைய நடவடிக்கை தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் அதிருப்தி !

தமிழ்தேசிய கூட்டமைப்பினுடைய தேசியப்பட்டியலை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாக பலத்த இழுபறிகளுக்கு மத்தியில் அம்பாறை மாவட்ட கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவருக்கு அந்த ஆசனம் வழங்கப்பட்டது.  இந்நிலையில் இந்த முடிவை எடுக்கும் போது கூட்டமைப்பினுடைய தலைவர் தங்களுடன் கலந்துரையாடவில்லை என நேற்றையதினம்  மன்னாரில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் கருத்தையும் கேட்டு அந்த கருத்தின் பிரகாரம் முடிவுகளை எடுத்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும். தன்னிச்சையாக தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமையை வண்மையாக கண்டிக்கின்றேன்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசிய பட்டியல் ஆசன ஒதுக்கீடானது பங்காளிக் கட்சிகயான புளொட் மற்றும் டெலோ ஆகிய இரு கட்சிகளுடன் எவ்வித ஆலோசனைகளும் நடத்தாமல் தேசியப்பட்டியல் ஆசனத்தை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கி வைத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்திற்கு குறித்த தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமைக்கு டெலோ எவ்வித எதிர்ப்பும் இல்லை. ஏனைய மாவட்டங்களில் பிரதி நிதித்துவம் இருக்கின்றமையினால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஏனையவர்களினால் மிகவும் மோசமான செயற்பாடுகளினால் பாதீக்கப்படுகின்றனர்.

அடக்கு முறைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எமது மக்களுக்கு ஒரு பிரதி நிதித்துவம் தேவை. அந்த பிரதிநிதித்துவத்தை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்குவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

ஆனால் ஜனநாயக ரீதியில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த விடையத்திலாவது கலந்தாலோசிக்க வேண்டிய நிலை உள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் கருத்தையும் கேட்டு அந்த கருத்தின் பிரகாரம் முடிவுகளை எடுத்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்.

சம்பந்தன் தன்னிச்சையாக குறித்த தெரிவை மேற்கொண்டு இருக்கின்றார் என்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. சின்ன விடையத்திலே இவ்வாறு நடந்து கொண்டால் இனி வரும் காலங்களில் சரியான ஒரு முடிவை மேற்கொள்ளுவதற்கான செயற்பாடுகளை செய்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த கருத்துக்களை நாங்கள் முன் வைக்கின்றோம்.

எங்களோடும் கலந்து ஆலோசித்து எடுக்கப்படுகின்ற முடிவுகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற அனைவரும் ஆதரவை வழங்குவோம்.

ஏற்கனவே எமக்கு ஆசனங்கள் குறைவடைந்துள்ளது. எங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை என்கின்ற நிலைப்பாடு உள்ளது. அந்த வகையிலே இவ்வாறான சம்பவங்கள் காலப்போக்கில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும்.

மாவை சேனதிராஜாவிடம் கூட ஆலோசனைகள் செய்தார்களா? என்று தெரியவில்லை. குறித்த தேசிய பட்டியல் ஆசனமானது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். தன்னிச்சையான முடிவை நாங்கள் எதிர்க்கின்றோம். இவ்வாறான தன்னிச்சையான முடிவு இனி எந்த காலத்திலும் மேற்கொள்ளப்படக் கூடாது.

சம்மந்தன் ஒரு வயது முதிர்ந்தவர்.அனுபவம் உள்ளவர். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவராக உள்ளவர். இவ்வாறான சம்பவங்கள் எமது மக்களை சஞ்சலத்திற்கு உள்ளாக்கும்.

எனவே குறித்த தன்னிச்சையான செயற்பாட்டிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என அவர் அங்கு குறிப்பிட்டார்.