11

11

கொரோனாவுக்கு எதிரான முதலாவது மருந்தை பதிவு செய்தது ரஷ்யா !

கொரோனாவுக்கு எதிரான ‘முதல்’ வாக்சினை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாகவும் தன் மகளுக்கு முதலில் செலுத்தியதாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாகவும், அனைத்துக்கட்ட சோதனைகளும் வெற்றி அடைந்ததாகவும் ரஷ்யா தெரிவித்திருந்தது. மேலும், விரைவில் மருந்தை பதிவு செய்யவுள்ளதாகவும் கூறியிருந்தது. இந்நிலையில், தடுப்பு மருந்து குறித்து ஜனாதிபதி விளாடிமிர்புடின்  ரஷ்ய அமைச்சர்கள் மத்தியில் வீடியோ அழைப்பு மூலம்  பேசியுள்ளதை அடுத்து தகவல் காட்டுத்தீ போல பரவ ஆரம்பித்துள்ளது.

“இன்று காலை உலகில் முதல் முறையாக  கொரோனா வைரஸுக்கு எதிரான வாக்சின் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னுடைய மகள்களில் ஒருவருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது அவரும் இந்தச் சோதனையில் பங்கேற்றுள்ளார்.  என ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா ஏற்கெனவே கொரோனா தடுப்பு மருந்துக்காக பெரிய அளவில் முயற்சிகளை மேற்கொண்டது. பெரிய அளவில் சில வாரங்களில் உற்பத்தி தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டுவாக்கில் பல லட்சம் டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ரஷ்யா கூறியிருந்தது.

பாதுகாப்பான வாக்சினுக்கான அனைத்து சோதனைக் கட்டங்களையும் நிறுவப்பட்ட வழிமுறைகளில் மேற்கொள்ளுமாறு உலகச் சுகாதார அமைப்பு கடந்த வாரம் ரஷ்யாவுக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்த வாக்சினைத் தயாரித்தது மாஸ்கோவில் உள்ள கேமலேயா இன்ஸ்டிட்யூட் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் வாழ்வதற்கு எவ்வளவு அபாயகரமான பகுதியாக உள்ளது ! – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பகுதி அருகே ஆயுதங்களுடன் மர்ம நபர் ஒருவர் நடமாடியுள்ளார். எனினும் பாதுகாப்பு படையினர் அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர். காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.வெள்ளை மாளிகை அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதால்  வெள்ளை மாளிகையில் கொரோனா வைரஸ் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பாதுகாப்பாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

நிலமை சீரானதும் மீண்டும் வந்த  ட்ரம்ப் துப்பாக்கிச்சூடு தொடர்பாகக் கூறியதாவது:

துரதிர்ஷ்டவசமாக இதுதான் உலகமாக இருக்கிறது, ஆனால் உலகம் எப்போதும் ஆபத்தான ஓர் இடமாகவே உள்ளது. உலகம் ஏதோ தனிச்சிறப்பான இடமாக இல்லை.

நூற்றாண்டுகளைத் திரும்பிப் பார்த்தோமானால் உலகம் வாழ்வதற்கு எவ்வளவு அபாயகரமான பகுதியாக உள்ளது, மிகவும் ஆபத்தான ஒன்றாக உலகம் உள்ளது, தொடர்ந்து ஒரு காலக்கட்டம் வரை இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது.

என் பாதுகாவலர்கள் மிகச்சிறப்பானவர்கள். இவர்களுக்கு உயர்மட்ட பயிற்சி உள்ளது. இவர்கள் என்னைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

மீண்டும் செய்தியாளர்களைச் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர், ஒரேயொரு நபர்தான் ஆயுதத்துடன் வந்தார்.

இவ்வாறு கூறினார் ட்ரம்ப்.

கடமைகளை ஆரம்பித்தார் இவங்கையின் புதிய பிரதமர் !

நிறைவடைந்த பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, 5 இலட்சத்து 27 ஆயிரத்து 364 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார்.அந்த வகையில், இலங்கை வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிக விருப்பு வாக்குகளாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் நாட்டின் 14ஆவது பிரதமராக இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை களனி ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை அலரிமாளிகையில் இன்று ஆரம்பித்துள்ளார்.

நுவரெலியா பம்பரக்கலை மத்திய பிரிவில் தீ விபத்து!

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரக்கலை மத்திய பிரிவில் நேற்றிரவு (10.08.2020)) 10 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தினால், 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன்,  இந்த வீடுகளில் குடியிருந்த 24 குடும்பங்களை சேர்ந்த 70 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்டபோதும்,  தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியவில்லை. அதனையடுத்து லிந்துலை பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 03 மணித்தியாலயத்தின் பிறகு தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், அக்கரப்பத்தனை பிரதேச சபை ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இத்தீ விபத்து மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிப்பதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் சேத விபரங்கள் தொடர்பாகவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கும் லிந்துலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சராகிறார் முன்னாள் ஜனாதிபதி !

நாளைய தினம் கண்டியில் இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ள நிலையில் புதிய அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளோர் யார் ? என்ற ஆவல் இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மூன்று அமைச்சு பொறுப்புக்களை வழங்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை வழங்குவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

மக்கள் நலனுக்காக தற்போதைய சூழ்நிலையில் ஒற்றுமையாக செயற்பட முன்வாருங்கள்! – சித்தார்த்தன்.

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத்தேர்தல் முடிவுகளினுடைய அடிப்படையில் பாராளுமன்றில் தமிழர்தாயகம் என்ற கொள்கையோடு பயணிக்ககூடிய தமிழ்தலைமைகளுடைய எண்ணிக்கை பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையானது  தமிழ் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்கவேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் கஜேந்திரகுமார் அணியும் விக்னேஸ்வரன் அணியும் எம்முடன் ஒன்றாக இணையாது விட்டாலும் பரவாயில்லை தமிழ் மக்கள் நலன் சார்ந்து செயற்பட நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என கஜேந்திரகுமார் ,  விக்னேஸ்வரன் ஆகியோருக்கு  அழைப்பு விடுத்துள்ளார் புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்.

யாழ்ப்பாணம் கந்தரோடையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று  மாலை இடம்பெற்ற ஊடகவியலளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் ஒன்றிணையாது விட்டாலும் பரவாயில்லை ஒற்றுமையாக மனப்பூர்வமாக செயற்பட வேண்டும்.வார்த்தைகளால் மட்டும் அல்லாது மனபூர்வமாக ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

நான் எமது கட்சியுடன் இணையுங்கள் என்று கூறவில்லை.மாறாக மக்கள் நலனுக்காக தற்போதைய சூழ்நிலையில் ஒற்றுமையாக செயற்பட முன்வாருங்கள் என்றே அழைப்பு விடுக்கின்றேன்.

இது நடைபெற வேண்டும். வெறுமனே மக்களுக்கு நான் ஒற்றுமையாக செயற்பட தயாராக இருக்கின்றேன் என ஒருவருக்கு ஒருவர் காட்டிக்கொள்ளாமல் உண்மையிலேயே ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்றார்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பில் பங்கேற்குமாறு சிறையிலுள்ள பிள்ளையானுக்கு அழைப்பு !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளபிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் நடைபெற்று முடிந்த  நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பில் போட்டியிட்டு அத் தேர்தல் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார்.

இந்நிலையில் கண்டியில் நாளை நடைபெறும் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பில் பங்கேற்குமாறும் அமைச்சுப்பதவியை பொறுப்பேற்குமாறும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் போராளியுமான பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் பிள்ளையானுக்கு எந்த அமைச்சுப்பொறுப்பு வழங்கப்படும் என்றோ அமைச்சரவை அந்தஸ்து அல்லது அந்தஸ்தற்ற அமைச்சு வழங்கப்படுமா? என்பது குறித்து எதுவும் தெரியாது என்று பிள்ளையானுக்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

தேர்தலுக்கு முன்னர் தமது கட்சிக்கு அமைச்சு பதவி வழங்கப்படும் என்று பொதுஜன பெரமுனவினால் உறுதியளிக்கப்பட்டிருந்ததாக பிள்ளையானின் தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை பிள்ளையானுக்கு சட்டரீதியாக அனுமதி வழங்கி அவரை கண்டியில் நடைபெறும் அமைச்சரவை பதவியேற்பில் பங்கேற்க செய்வது தொடர்பில் நேற்று கொழும்பில கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஏற்கனவே பிள்ளையானுக்கு எதிராக சட்டமா அதிபர் மட்டக்களப்பு மேல்நீதிமன்றில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தலைமை யார்?

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலினுடைய முடிவுகளின் படி ஐக்கிய தேசிய கட்சி இதுவரையிலும் கண்டிராத வரலாற்றுத்தோல்வியை சந்தித்திருந்தது.  இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியினுள்ளே பல்வேறுபட்ட உட்குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில்    25 வருடங்களுக்கு பின்னர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங் கஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் நேற்று  இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

புதிய தலைமைத்துவத்திற்காக நான்கு பேர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் புதன்கிழமை அது தொடர்பில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் கட்சியின் அதிகாரிகள் குழு நேற்று முற்பகல் சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது.

இதன் போது, தான் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.

எதிர்வரும் புதன்கிழமை புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தலைமைப்பதவியை பொறுப் பேற்க தயாராக உள்ளவர்கள் இருந்தால் பெயர்களை அறிவிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க இன்றைய கலந்துரையாடலில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதன்போது கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், உப தலைவர் ரவி கருணாநாயக்க, வஜிர அபேவர்தன மற்றும் தயா கமகே ஆகியவர்கள் தலைவர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் எதிர்வரும் புதன்கிழமை கட்சியின் தலைவராக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் சீனா – ஆப்பிள் டெய்லி உரிமையாளர் கைது !

சீன கொம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக எழுதியதாகவும், வெளிநாட்டினருடன் சேர்ந்து சதிச்செயலில் செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டி, ஹாங்காங் ஆப்பிள் டெய்லி நாளேட்டின் உரிமையாளர்  ஜிம்மி லாய் உள்பட 7 பேரை போலீஸார் நேற்று  தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சீன அரசு கொண்டு வந்துள்ள கொடூரமான தேசிய பாதுகாப்புச்சட்டம் கடந்த ஜூன் 30-ம் தேதி முதல் ஹாங்காங்கில் நடைமுறைக்கு வந்துள்ளது. சீனா கொண்டுவந்துள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்ய வாரண்ட் தேவையில்லை இந்த சட்டப் பிரிவின்படி, ஹாங்காங் போலீசாருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பிடியாணை  இல்லாமல் ஒருவரின் வீட்டில் ஆதாரங்களை சேகரிப்பதற்காக போலீசார் சோதனையிட முடியும். இந்த சட்டத்தில் ஒருவர் கைதானால் அவர் தன் கடவுச்சீட்டு உள்ளிட்டவற்றை ஒப்படைக்க வேண்டும். நாட்டை விட்டு வெளியேற முடியாது. ஒரு குறிப்பிட்ட கட்டடம், தேசிய பாதுகாப்புக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் இருந்தால், அதை முடக்க, கையகப்படுத்த, போலீசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு எதிரான செய்திகளை நீக்கும்படி, இணைய தளங்கள், இணைய சேவை வழங்குவோருக்கு உத்தரவிட முடியும். அதை மீறினால், அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும்., ஆட்சேபகரமான பதிவுகளை வெளியிடும் தனிநபருக்கும் இந்த தண்டனை பொருந்தும்.

ஒருவருடைய தொலைபேசி , தொலைபேசி தகவல்கள் உட்பட அனைத்து தகவல்களை இடைமறிக்கவும், கண்காணிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இ்ந்த கொடூரமான சட்டத்தின் கீழ்தான் தற்போது ஆப்பிள் டெய்லி நாளேட்டின் தலைவர் ஜிம்மி லாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாங்காங்கைச் சேர்ந்த ஜிம்மி லாய் நடத்திவரும் நெக்ஸ்ட் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் ஆப்பிள் டெய்லி நாளேடு பிரசுரமாகி வருகிறது. இந்த நாளேட்டில் சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும், அதன் தலைவர்களின் சர்வாதிகாரப் போக்கை விமர்சித்தும், ஹாங்காங்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் எந்தவிதமான முன்னறிவிப்பும், விளக்கமும் கேட்காமல் ஆப்பிள் டெய்லி நாளேட்டின் நிறுவனர் 72 வயதான ஜிம்மி லாயை ஹாங்காங் போலீஸார் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இன்று கைது செய்தனர். வெளிநாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து பல்வேறு சதிகளில் ஜிம்மி லாய் ஈடுபடுவதாக சந்தேகப்படுவதையடுத்து அவரைக் கைது செய்துள்ளதாக ஹாங்காங் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், ஜிம்மி லாய் மகன்கள், மற்றும் நாளேட்டின் முக்கிய நிர்வாகிகள் என மொத்தம் 7 பேரை ஹாங்காங் போலீஸார் கைது செய்துள்ளனர். ஆப்பிள் டெய்லி நாளேட்டின் உரிமையாளர் ஜிம்மி லாய்பெயரை மட்டுமே தெரிவித்துள்ள ஹாங்காங் போலீஸார் மற்ற 6 பேரின் பெயரைக் குறிப்பிட மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து ஹாங்காங் போலீஸார் பதிவிட்ட ட்விட்டர் பதிவில் “ தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதால்,  39 வயது முதல் 72 வயதுக்குட்பட்டவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வெளிநாட்டுடன் சேர்ந்து சதிவேலையில் ஈடுபட்டு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தனர்” எனத் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனிடம் இருந்து ஹாங்காங் பிரிவதற்கு முன் கடந்த 1995-ம் ஆண்டு ஜிம்மி லாய், ஆப்பிள் டெய்லி நாளேட்டைத் தொடங்கினார். ஜனநாயகத்துக்கு ஆதரவாகவும், சீனாவின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்தும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளை எதிர்த்தும் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகிறது.

ஹாங்கிங்கின் ஜனநாயகத்தை முடக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் சீனா கொண்டு வந்த தேசியப் பாதுகாப்புச் சட்டம் எனும் அஸ்திரம் முதன்முதலாக ஊடகத்தின் மீது செலுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.