28

28

நூல் அறிமுகம்: குமிழி – புளொட் க்குள் நடந்த அராஜகங்களை வெளிக்கொணரும் இன்னொரு படைப்பு – ஆர் புதியவன்

அட்டைப்படம் போலவே எல்லாமே தெளிவற்றுப்போய், நாவலில் சொல்லப்படுவது போல சுனாமி போல் கொன்றொழித்து பாலைவனமாக போன ஒரு தேசத்தின் கதை.

இது புளட் அமைப்புக்குள் நடந்த அராஜகங்களை வெளிக்கொணரும் இன்னொரு படைப்பு. இங்கே புளட் என்ற இயக்கப்பேரை நீக்கி விட்டு வேறு எந்த இயக்கத்தின் பெயரைப் போட்டாலும் அச்சரம் பிசகாமல் பொருந்தும்.

மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டபோதெல்லாம் வரும் அச்சத்தை சொல்கிற இடத்தில் உயிர் உறைந்து போகும் ஒரு வித வலி.

கோவிந்தனின் புதியதோர் உலகம் முதல் முதல் புளட்டின் வெளித்தோற்றத்தை கிழித்துத் தொங்கப்போட்டது. (அதே கோவிந்தனை பின் புலிகள் சிதைத்துப் போட்டதையும் அறிந்தவர்களுக்கு தெரியும்) இப்போ குமிழி….

” புலியின் உளவாளி என்ற உரப்பலில் தோழர்கள் உண்மையறியாது குழம்பி நின்றார்கள். மீட்பர்கள் அடித்தார்கள்.குதறினார்கள். சுந்தரம் படைப்பிரிவு என்று பெயர் சூடிக்கொண்ட அவர்கள் சுமார் ஆறு ஏழு பேரும் ஒரு பந்தைப் போல மதனை உருட்டி எடுத்துக்கொண்டிருந்தார்கள்……

மனதைத் திடப்படுத்திக்கெண்டு வாசிக்கத் தொடங்குங்கள். அருமையான படைப்பு. தோழர் ரவி நல்ல எழுத்தாற்றல் மிக்கவர் என்பது தெரியும். ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போல் மிகுதியை பின்னர் வாசிக்கலாம் என புத்தகத்தை வைத்துவிட முடியாத படி ஒவ்வரு வரியும் உள்ளீர்க்கும் .
நாவலை வாங்க விரும்பினால் Ravindran Pa தொடர்பு கொள்ளுங்கள்.

யாழ்ப்பாணத்தில் உயர்குலத்தினர் தாழ் குலத்தினருக்கு இரத்ததானம்கூட செய்யமாட்டார்கள். – நாடாளுமன்றில் அட்மிரல் சரத் வீரசேகர

நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு முன்பாக சென்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா படையினர் இனப்படுகொலை செய்ததாக தமிழ்ப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்து கருத்து வெளியிட்ட அட்மிரல் சரத் வீரசேகர, தமிழ் மக்கள் குறித்து கருத்துகூற தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு உரிமை கிடையாது என்றும் கட்டமாக தெரிவித்தார்.

பிரதமரும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ச அடுத்த நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கையை நாடாளுமன்றில் நேற்றைய தினம் சமர்பித்துள்ளார். இந்த கணக்கு அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அட்மிரல் சரத் வீரசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

குறிப்பாக கடந்த வாரம் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு முன்பாக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அங்கு உத்தியோகபூர்வமற்ற பதவிப்பிரமாணத்தை செய்துகொண்டதாகவும், அதுகுறித்து அவர்களிடம் விசாரணை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

மீண்டும் இந்த நாட்டில் சமாதானத்தை சீர்குலைக்கும் வகையில் நாடாளுமன்றில் கருத்துக்கள் வெளியிட்டால் அல்லது தமிழ் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தும் வகையில் பேசினால் சுயநிர்ணயத்திற்காக தமிழ் இளைஞர்களை மீண்டும் தூண்டும் வகையில் பேசினால் உண்மையிலேயே அதனை நிராகரிக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் முதல் அமர்விலேயே தமிழ்ப் பிரதிநிதி ஒருவர், தமிழ் மொழிதான் சுதேசவாசிகளின் மொழி என்று கூறியிருந்தார்.

அதனை நிர்ணயிப்பது இதுபோன்ற சபையல்ல. எனினும் எமது நாட்டைப் பற்றிய 2500 ஆண்டுகள் ஆவண வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், இங்குள்ள அனைத்து சம்பிரதாயங்களையும் சிங்களவர்களே இயற்றிவைத்தார்கள். இது நாடு முழுவதிலும் உள்ள தொல்பொருள் அடையாளங்களினால் உறுதிபடுகிறது. இந்த வரலாற்றை தெரிந்துகொண்டே வல்லிபுரம் சிதைவுகளைத் தெரிந்துகொண்டே பிழையானவற்றைக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

சுயநிர்ணயத்தைக் கோரி அவர் கருத்து முன்வைத்திருப்பதானது தாயுடன் சிறிய குழந்தை சந்தைக்குச் சென்று இனிப்பைக் கோருவதற்கு சமமாகும். 50 சதவீதத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் தென்னிலங்கையில் ஏனைய இனத்தவர்களுடன் வாழ்கின்றனர். ஆனால் மிகவும் பொறுப்புவாய்ந்த மதிப்பிற்குரிய அந்த உறுப்பினர், சிங்களவர்கள் வடக்கில் வாழமுடியாது என்று கூறியிருக்கின்றார்.

அவர் ரோயல் கல்லூரியில் பயின்றவர். சிங்களவர்களுடன் சட்டக்கல்லூரியில் பயின்றவர். 65 வருடகாலமாக சிங்கள சமூகத்துடன் வாழ்ந்தவர். இவர் தொடர்ச்சியாக சிங்கள மொழி, சிங்கள மக்கள் மீது அவதூறு செய்து வருகின்றார். பௌத்த மதத்திற்கு எதிராகவும், வடக்கில் புத்தர் சிலைகளை அகற்றும்படியும் கிளிநொச்சியில் போராட்டம் நடத்தியுள்ளார்.

அவர் வேறுயாருமல்ல, விக்னேஸ்வரன் தான். அவர் முள்ளிவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்கின்றார். முள்ளிவாய்க்கால் என்பது ஈழத்திற்கான போர் நிறைவுற்ற இடம். அங்கு பல ஆயுதமேந்தியவர்கள் கொல்லப்பட்டனர். அங்கு சென்று உத்தியோகபூர்வமற்ற பதவிப்பிரமாணம் செய்பவராயின் பிரிவினைவாத சக்திகளின் தூண்டுதல்கள் ஏற்பட்டுள்ளன.

ஆகவே இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்ய வேண்டும். அவர் பேசிய கருத்துக்களும் ஹான்சாட்டிலிருந்து நீக்கப்படல் வேண்டும் எனவும் தெரிவித்தார். இதேவேளை, நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அட்மிரல் சரத் வீரசேகர ஸ்ரீலங்கா படையினர் இனப்படுகொலை செய்தார்கள் என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

அத்துடன் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திலுள்ள உறுப்பினர்கள் குறித்தும் தனது கடும் எதிர்ப்பினை வெளியிட்டார். ஸ்ரீலங்கா படையினர் இனப்படுகொலை செய்தார்கள் என்றும், போர்குற்றம் செய்தார்கள் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார். கோட்டாபய ராஜபக்சவுக்கு யாழ்ப்பாணத்தில் வாக்குகள் கிடைக்காமைக்கான காரணமும் இனப்படுகொலை செய்தமையே என்றும் கூறியுள்ளார்.

கடந்த கால ஜனாதிபதி தேர்தலில், இனப்படுகொலை செய்தார்கள் எனக்கூறும் படைக்குத் தலைமைதாங்கிய பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு அதிக மக்கள் வடக்கில் வாக்களித்தார்கள். ஆகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தர்க்கத்தை நிராகரிக்கிறோம். போர்க்குற்றம் பற்றிய விசேட நிபுணர்களாகிய சேர்.டெஸ்மன்டி சில்வா, ஜெப்ரி நைஸ், பேராசிரியர் மைக்கல் கிரேன், பேராசிரியர் மைக்கல் நியூட்டன், ரொட்னி டிக்ஸன், கியூஸி, மேஜர் ஜெனரல்.ஜோன் ஹோம்ஸ் உள்ளிட்டவர்களும் ஸ்ரீலங்காவில் போர்க்குற்றம் இடம்பெறவில்லை என்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உயர்குலத்தினர் தாழ் குலத்தினருக்கு இரத்ததானம்கூட செய்யமாட்டார்கள். இப்படியிருக்க, சிங்களப் படையினர் அங்கு பலருக்கும் இரத்ததானம் செய்திருக்கின்றனர். ஆகவே இவர்களுக்கு தமிழ் மக்கள் பற்றி கருத்து கூற உரிமை கிடையாது. சிங்களப் படையினருக்கும் எமக்குமே அதற்கான உரிமை இருக்கிறது. காணாமல்போனோர் அலுவலகத்திற்கும் இம்முறை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜெயரால் பெர்ணான்டோ புள்ளேயை தற்கொலைதாரி ஒருவரே கொலைசெய்தார். அவரது ஆள் அடையாளம் இதுவரை உறுதியாகவில்லை. இந்நிலையில் அவருக்கான நட்டஈட்டைக் கோரினால் எப்படி வழங்குவது? சாலிய பீரிஸ் என்பவர் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர போர்க் குற்றம் பற்றி கூறிய போது அதனை வரவேற்றவர்.

இந்த அரசு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த நாட்டுக்கு ஒரு நிரந்தரமான தீர்வைத் தரவேண்டும்” – பாராளுமன்றில் சாணக்கியன்.

ஒரே நாடு ஒரே சட்டம்’ என்றால் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சபையில் வலியுறுத்தியுள்ளார். இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தின் போது நேற்று (27.08.2020) நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“நான் நாடாளுமன்றத்தில் சிங்களத்தில் உரையாற்றுகின்றேன் என்பதற்காக என்னை விமர்சிக்கலாம். ஆனால் விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். விமர்சனங்களாலேயே நான் வளர்ச்சியடைகின்றேன். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கொள்கைப் பிரகடன உரையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற விடயத்தினைக் குறிப்பிட்டிருந்தார். எனவே, இந்த இடத்தில் ஒரு விடயத்தினைக் குறிப்பிட விரும்புகின்றேன்.

யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தார். அதேபோன்று றோயல்பார்க் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய கொலைக் குற்றவாளியும் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தார். அப்படியாயின், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கொள்கையின் கீழ் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும்.

சிலர் எவ்வித குற்றச்சாட்டுக்களோ அல்லது விசாரணைகளோ இன்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இப்படியெல்லாம், தமிழ் மக்களுக்காக நான் பேசுகின்றேன் என்பதற்காக என்னை இனவாதி என எண்ணிவிட வேண்டாம். நான் ஒன்றும் இனவாதியில்லை. நான் கண்டியிலேயே கல்வி கற்றேன். எனக்கும் அதிகளவான சிங்கள நண்பர்கள் இருக்கின்றார்கள். இதேவேளை, இந்த நாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு வீழ்ச்சி என்று சொல்லப்படுகின்றது.

ஆனால், எங்களுக்கு 10 ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. உண்மையில் இந்த நாடாளுமன்றத்துக்கு நாம் வருவதற்கான நோக்கமே தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வை அடையவேண்டும் என்பதற்காகவே. எனவே, 10 உறுப்பினர்களாகவோ ஐந்து உறுப்பினர்களாகவோ இருந்தாலும் சரி எமக்கு அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவேண்டும்.

அந்தவகையில், சிலநேரம் இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் நாம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவேண்டிய அவசியமே இருக்காது. மாகாணசபையின் ஊடாக எங்களது வேலைத் திட்டங்களை செய்யக்கூடியதாக இருக்கும்.

அந்தவகையில் அரசாங்கத்துக்கு ஆணித்தரமாக ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த நாட்டுக்கு ஒரு நிரந்தரமான தீர்வைத் தரவேண்டும்” எனத் தெரிவித்தார்

தன்னுடைய உடல்நிலை சீராகவில்லாமையால் பதவி விலகவுள்ள ஜப்பானிய பிரதமர்!

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தனது உடல்நிலையை கருத்திற் கொண்டு தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.

ஒரு வார இடைவெளியில் இரண்டு முறை மருத்துவமனைக்கு சென்றதற்கு பின்னர், அவரது உடல்நலம் குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன.

65 வயதான ஷின்சோ அபே, இன்னும் ஒரு வருடம் பதவியில் இருந்திருக்கலாம். பிரதான ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவராக இருந்த அவரது பதவிக்காலம், அடுத்த ஆண்டு செப்டம்பரில் முடிவடையவுள்ளது.

நிதி அமைச்சர் டாரோ அசோ, செயல் பிரதமராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அபேவின் இராஜினாமா ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியில்; ஒரு தலைமைப் போட்டியைத் தூண்டிவிடும் என்பது உறுதி.

அபேயின் மருத்துவமனை வருகைகளில் ஒன்று கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் நீடித்தது. மேலும் அவர் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சியால் அவதிப்படுவதாக அறியப்படுகிறது. இது 2007ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த ஒரு வருடத்திற்குப் பிறகு அவரை பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கு ஓரளவு காரணமாக இருந்தது.

அபே ஒரு மருத்துவ பிரச்சினை தொடர்பாக இந்த பதவியை விட்டு விலகுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக ஒரு வருடம் மட்டுமே பதவியில் இருந்தபின் 2007ஆம் ஆண்டு அவர் பதவி விலகியிருந்தார்.

கீழ் சபையில் ஒரு மகத்தான தேர்தல் வெற்றியின் பின்னர் அவர் 2012ஆம் ஆண்டு மீண்டும் பிரதமாக பதவியேற்றார். ஏழு ஆண்டு பதவிக்காலம் அவரை ஜப்பானின் மிக நீண்ட காலம் தலைவராக முன்னிறுத்தியுள்ளது.

“திறமையற்றவர்களிடையே திறமையானவர்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக, திறமையானவர்களிடையே திறமையானவர்களை உருவாக்குவிக்க வேண்டும்” :- விளாயாட்டுத்துறை அமைச்சர் நாமல்.

சர்வதேச அளவில் வெற்றிபெறும் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கு பாடசாலை விளையாட்டுக்களை மேம்படுத்த வேண்டுமென அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய முறையில் விளையாட்டுப் பாடசாலைகளை எவ்வாறு உருவாக்குவது மற்றும் பாடசாலையில் விளையாட்டுகளை மேம்படுத்துவதற்கு எவ்வாறான செயற்றிட்டங்களை முன்னெடுப்பது என்பது தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) கல்வியமைச்சில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில், கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சிலர் பங்கேற்றிருந்தனர். இதன்போது, கருத்து தெரிவிக்கும்போதே நாமல் ராஜபக்ஷ, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “திறமையற்றவர்களிடையே திறமையானவர்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக, திறமையானவர்களிடையே திறமையானவர்களை உருவாக்குவதற்கும், தேசிய மட்டத்தை மீறி சர்வதேச அளவில் வெற்றிபெறும் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கும் பாடசாலை விளையாட்டினை மேம்படுத்த வேண்டும்.

குறித்த இலக்கினை அடைவதற்காக தற்போதுள்ள விளையாட்டுப் பாடசாலைகளின் வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்கும், ஒவ்வொரு விளையாட்டுப் பாடசாலையின் முதன்மைத் தேவைகளைக் கண்டறிவதன் ஊடாக அவற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை நடைமுறையிலுள்ள விளையாட்டுச் சட்டத்தை மாற்றுவதற்கு ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

குறிக்கோள்கள் மற்றும் செயற்பாடுகளின் அடிப்படையில் மேம்பாட்டுத் திட்டத்தின்படி விளையாட்டுப்  பாடசாலைகள்  ஊடாக நாட்டிலுள்ள பாடசாலை விளையாட்டுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டு பயிற்றுநர்களைப் புதுப்பித்தல் மற்றும் பயிற்றுவித்தல், விளையாட்டுப் பள்ளிகளில் தற்போதுள்ள தங்குமிட வசதிகளை மேம்படுத்துதல், வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானங்கள் இல்லாமை, விளையாட்டுப் பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பதில் வகுப்பறை வசதிகள் போதாமை ஆகியவைகள் குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

இதற்கமைய, விளையாட்டுப் பாடசாலைகளில், மாணவர்களைச் சேர்ப்பதற்கான ஒரு குறிப்பிட்ட வழிமுறையை வகுப்பதற்கு இதன்போது முன்மொழியப்பட்டது.

தென்சீனக்கடல் பகுதியில் 2 ஏவுகணைகளை செலுத்தி சீனா போர்ப்பயிற்சி.! – அமெரிக்காவுக்கு சீனா பதிலடி..?

தென் சீனக் கடல் பகுதியில் 2 ஏவுகணைகளைச் செலுத்தி போர்ப் பயிற்சி மேற்கொண்டது, சீன ராணுவம், இதனை அமெரிக்காவுக்கான எச்சரிக்கை என்று சீன ஊடகங்கள் வருணித்துள்ளன.

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல்பகுதியில் சீனாவின் ஆதிக்கம் குறித்து பலதரப்புகளிலிருந்தும் கேள்விகள் பிறந்துள்ள நிலையில் இந்த ஏவுகணைச் சோதனையும் அதை அமெரிக்காவுக்கு எதிரான எச்சரிக்கை என்று சீனா வருணித்துள்ளதும் புதிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

ஹைனன் பகுதிக்கும் பாராசெல் தீவுகளுக்கும் இடையே தென் சீனக் கடலில் சீனா ஏவுகணைகளைச் செலுத்தியது.

சீனாவின் ராணுவப் பயிற்சி இடத்துக்கு மேலே அமெரிக்க உளவு விமானங்கள் பறந்ததையடுத்து சீனா பதிலடி கொடுத்துள்ளது.

ஹாங்காங்கை சேர்ந்த தென் சீன மார்னிங் போஸ்ட் என்ற ஊடகம் தன் செய்தியில் டி.எஃப் 26பி என்ற ஏவுகணையை வடமேற்கு குயிங்காய் மாகாணத்திலிருந்து சீனா ஏவியதாக தெரிவித்துள்ளது. மற்றொரு டிஎஃப்-21 கப்பல் அழிப்பு ஏவுகணை, அதாவது, ‘போர் விமானம் சுமக்கும் கப்பலை அழிக்கும்’ ஏவுகணை கிழக்குக் கடல் பகுதியான ஷீஜியாங் பகுதியிலிருந்தும் ஏவப்பட்டுள்ளது.

சீனா ஒரே நேரத்தில் போஹாய் கடல், மஞ்சல் கடல், கிழக்கு சீன கடல், தென் சீன கடல் ஆகிய 4 பகுதிகளிலும் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

கப்பல் அழிப்பு ஏவுகணையை சீனா செலுத்தலாம் என்று அமெரிக்க உளவுத்துறை செய்தி அவர்களுக்குக் கிடைத்திருக்கலாம் அதனால் தென் சீனக் கடல் பகுதியில் சீன ராணுவப் பயிற்சி முகாம்கள் மீது உளவு விமானத்தை அமெரிக்கா பறக்க விட்டிருக்கலாம் என்று சீன ராணுவ வல்லுநர் ஒருவர் குளோபல் டைம்ஸில் தெரிவித்துள்ளார்.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ழாவோ லிஜியான், “சீனா தன் பகுதியில் மேற்கொள்ளும் கட்டுமானப்பணிகள் அதன் இறையாண்மைக்குட் பட்டதே. இதற்கு ராணுவமயமாக்கலுக்கும் தொடர்பில்லை” என்றார்.

ஆவா வாள்வெட்டுக்குழுவினர் எனும் சந்தேகத்தின் பேரில் ஆறுபேர் கைது!

ஆவா வினோதன் உட்பட 6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிறந்தாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக 12 பியர் ரின்களுடன் தயாராகிய போது சந்தேக நபர்கள் 6 பேரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் வாள்வெட்டுக் குழு சந்தேக நபர்களுக்கு நீதிமன்றில் பிணையாக கையொப்பமிட்ட ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் தலா 3 வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மானிப்பாய் பொலிஸார் கூறினர்.

மானிப்பாய் – பொன்னாலை வீதி, துர்க்கா மில் பகுதியில் ஆவா வாள்வெட்டுக் குழுவின் வீனோதன் உள்பட 6 பேர் கூடியுள்ளனர் என்று இரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பிரகாரம் இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ஆவா வினோதன் உள்ளிட்ட 6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

ஆவா வினோதன் இணுவிலைச் சேர்ந்தவர். ஏனைய 5 பேரும் கைதடியைச் சேர்ந்தவர்கள். சந்தேக நபர்கள் தொடர்பில் மானிப்பாய் பொலிஸில் வழக்கு நிலுவைளோ அல்லது பிடியாணையோ இல்லை.

எனினும் சந்தேக நபர்களின் சந்தேகமான நடமாட்டத்தால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொடர்பில் ஏனைய பொலிஸ் நிலையங்களில் வழக்கு நிலுவைகள் உள்ளனவா? என விசாரணைகள் நிறைவடைந்ததும் அவர்களை பிணையில் விடுவிப்பது தொடர்பில் ஆராயப்படும்.

இதேவேளை, வாள்வெட்டு வன்முறைக் கும்பல் ஒன்றின் சந்தேக நபர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு பீடிக்குள் கஞ்சா போதைப்பொருளை மறைத்து நுகர முயன்ற குற்றச்சாட்டில் ஒருவரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் மஹிந்தராஜபக்ஷ – நோர்வே தூதுவர் இடையே அலரி மாளிகையில் சந்திப்பு!

இலங்கைக்கான நோர்வே தூதுவர் டீரீன யுரன்லி எஸ்கடேல், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பை மேற்கொண்டார். கொழும்பு அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு நேற்றைய தினம் (27.08.2020) இடம்பெற்றது.

பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டியமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்ததுடன், தேர்தலை முறையாக ஏற்பாடு செய்து, சமாதானமான முறையில் கொவிட்-19 பாதுகாப்பு வழிமுறைகளுக்கமைய முன்னெடுத்திருந்தமையையும் பாராட்டியிருந்தார். ஆரம்ப கட்டத்தில் இனங்கண்டு, துரித கதியில் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததனூடாக கொவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதில் இலங்கை வெற்றிகரமாக செயலாற்றியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற நோர்வே எதிர்பார்ப்பதாக பிரதமரிடம் தூதுவர் எஸ்கடேல் குறிப்பிட்டதுடன், இலங்கையுடன் நீண்ட காலமாக பேணி வரும் பங்காண்மை மற்றும் பரஸ்பர உறவுகளையும் பாராட்டியிருந்தார்.

இரு நாடுகளுக்கிடையேயும் கடல்சார் பொருளாதாரங்கள், தனியார் துறை கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் பொதுவான ஈடுபாடுகளைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்குமிடையிலான வணிக உறவுகளை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்கு அதிகளவு வாய்ப்புகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்த அவர், இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க வலு, சூரிய சக்தி, காற்றாலை மற்றும் நீர் மின் பிறப்பாக்கல் மற்றும் கடற்றொழிற்துறை போன்றவற்றில் நோர்வே நாட்டின் முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

2013 முதல் 2019 வரையான காலப்பகுதியில் 2.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கையின் மீன்பிடித் துறைக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், செப்டெம்பர் மாதத்தில் இலங்கையுடன் மீன்பிடி நிர்வாக சாதனங்களை கட்டியெழுப்புவது தொடர்பில் புதிய உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக எழுந்துள்ள பொருளாதார தாக்கங்கள் தொடர்பிலும் பிரதமர் ராஜபக்ச மற்றும் தூதுவர் எஸ்கடேல் ஆகியோர் கலந்துரையாடியிருந்தனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், கொவிட்-19 தொடர்பான ஐக்கிய நாடுகளின் பன்முக நன்கொடை நம்பிக்கை நிதியத்தினூடாக நீண்ட கால அடிப்படையில் சமூக-பொருளாதார தாக்கங்களை குறைத்துக் கொள்வதற்கு உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளை நோர்வே மேற்கொண்டிருந்தது. இதன் பிரகாரம், இலங்கைக்கு இதுவரையில் 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 தொற்றுப் பரவலுடன், தேசிய பாதுகாப்பு மற்றும் தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றுக்கிடையே சமநிலையை பேண வேண்டிய தேவை எழுந்துள்ளதாக குறிப்பிட்ட தூதுவர், பிரதமரும் புதிய அரசாங்கமும் தமக்கு கிடைத்த தெளிவான மக்கள் ஆணையைப் பயன்படுத்தி, பொது மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை முன்னெடுப்பதற்கும், சகல இலங்கை மக்களுக்கும் உள்ளார்ந்தமான சமூகத்தை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் கவனம் செலுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

அன்னதானக்கந்தனின் கோயிலில் அன்னதானத்துக்கும் தாகசாந்திக்கும் தடை!

வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவில் அங்கப் பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வல்வெட்டித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது.

இதனால் நேற்று (27) ஆலயத்துக்கு வருகை தந்த காவடிகள் தடுக்கப்பட்டன.

தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய பெரும் திருவிழா சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் இடம்பெற்று வருகிறது. வரும் செப்ரெம்பர் 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தேர்த் திருவிழா இடம்பெறவுள்ளது.

ஆலயத்துக்கு வருகைதரும் அடியவர்கள், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சமூக இடைவெளியை பேணுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றில் இருந்து அடியவர்களை பாதுகாக்கும் வகையில், இக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், பருத்தித்துறை பிரதேச செயலகம் தெளிவுபடுத்தியுள்ளது. பிரதேச செயலகம் விடுத்துள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; அந்த வகையில் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் உற்சவகாலத்தில் 150 அடியவர்கள் மாத்திரம் வழிபாடு செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அடியவர்கள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தை எடுத்துவருதல் கட்டாயமானதாகும். இவை வீதித் தடைகளில் ஒவ்வொரு தடவையும் பதிவு செய்யப்படும். முகக்கவசங்களை அணிந்திருந்தல் கட்டாயமானதாகும்.

சமூக இடைவெளியை அடியவர்கள் பின்பற்ற வேண்டும். கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டவர்கள், சுய தனிமைப்படுத்தப்பட்டவர்கள், தனிமைப்படுத்தலை நிறைவு செய்தமைக்கான ஆவணத்தை தம்வசம் வைத்திருக்க வேண்டும். காய்ச்சல், தடிமன், தும்மல், இருமல் உள்ளவர்கள் ஆலயத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

தாகசாந்தி, அன்னதானம் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அங்கப் பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திருவிழாக் காலங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளின் போது 20 நபர்களுக்கு மாத்திரம் அனுமதி. விசேட போக்குவரத்துச் சேவை இம்முறை இடம்பெறமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.