September

September

“பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் துரித அபிவிருத்தியை அடைய வேண்டும் என்பது அரசாங்கம் மற்றும் மக்களின் அபிலாஷையாக இருந்தது“ – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

“2009 ஆம் ஆண்டு பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் துரித அபிவிருத்தியை அடைய வேண்டும் என்பது அரசாங்கம் மற்றும் மக்களின் அபிலாஷையாக இருந்தது“ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியது எனினும் அது வர்த்தக நோக்கில் மாத்திரமே பயன்படுத்தப்பட்டு வருகிறது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

இலங்கைக்கான தூதுவர்களாக நியமிக்கப்பட்ட 4 ராஜதந்திரிகள் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி,

பயங்கரவாதம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சிக்கு உள்ளானது. இதனால், துரித அபிவிருத்தியை செய்ய எமக்கு வெளிநாட்டு உதவிகள் தேவைப்பட்டன. இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடு செய்ய சீனா முன்வந்தது. எமது நாடுகளுக்கு இடையில் கொடுக்கல் வாங்கல்களே நடந்தன. எனினும் சிலர் இதனை சீனாவுக்கு சார்பான நடவடிக்கையாக வர்ணித்தனர். இலங்கை சகல நாடுகளுடனும் நட்புறவுடன் இருக்கின்றது.

இலங்கை பூகோள ரீதியில் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. இதனால், எமது நாடு பல தரப்பினரை ஈர்த்துள்ளது. இந்த சூழ்நிலையில் இலங்கை நடு நிலையான வெளிநாட்டுக் கொள்கையை தெரிவு செய்துள்ளது. நெருக்கமான பிரதிபலன்களுடன் கூடிய அபிவிருத்திக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம். இலங்கை வெளிநாட்டு முதலீடுகளுக்காக திறந்துள்ளது.

இந்து சமுத்திரத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் திறக்கப்பட்ட மற்றும் சுதந்திரமான பிராந்தியமாக இருக்க வேண்டும். இந்து சமுத்திர பிராந்தியத்தை அமைதியான பிராந்தியமாக மாற்ற வேண்டும் என இலங்கையையே 5 தசாப்தங்களுக்கு முன்னர் முதலில் யோசனை முன்வைத்தது. 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் துரித அபிவிருத்தியை அடைய வேண்டும் என்பது அரசாங்கம் மற்றும் மக்களின் அபிலாஷையாக இருந்தது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜோன்க் ஹூன்ஜிங்க் இலங்கைக்கான தென் கொரிய தூதுவராகவும் ஹோல்கர் லோதர் சோய்பொயட், இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவராகவும் மொன்சிஞ்ஞோர் யுரந்தர பிரயன் உடய்வே, இலங்கைக்கான வத்திகான் தூதுவராகவும் டொமினிக் ஃபர்க்லர் இலங்கைக்கான சுவிஸர்லாந்து தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

“சீனாவில் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராகக் கொடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன” – எச்சரிக்கிறது ஜேர்மனி !

சிறுபான்மையினருக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளை ஜேர்மனியின் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ஜேர்மனி அதிபர் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல் கூறும்போது, ”நாங்கள் சீனாவில் நடந்து கொண்டிருப்பதைக் கவனித்து வருகிறோம். சீனாவில் சிறுபான்மையினருக்கு எதிராகக் கொடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன” என்றார்.

மேலும், ஹாங்காங்கில் சீனாவின் நிலைப்பாட்டையும் மெர்கல் விமர்சித்தார்.

சீனாவின் வடமேற்கில் உள்ளது நிங்ஜியா மண்டலம். இது தன்னாட்சி அதிகாரம் பெற்றதாகும். இங்குள்ள டாங்ஜிங் கவுன்டியின் வெய்ஸு பகுதியில் ஹூய் இன முஸ்லிம்கள் அதிகமானோர் வாழ்கின்றனர். சீனாவின் ஜிங் ஜியாங் பகுதியில் உய்குர் இன முஸ்லிம்களுக்கு அடுத்தபடியாக வெய்ஸு பகுதியில் ஹூய் இன முஸ்லிம்கள் உள்ளனர்.

இந்நிலையில், வெய்ஸு பகுதியில் ஏற்கெனவே இருந்த மசூதியை இடித்துவிட்டு புதிதாக மசூதி கட்டப்பட்டுள்ளது. ஆனால், அனுமதி இல்லாமலும், விதிகளை மீறியும் கட்டப்பட்டதாக உள்ளூர் அரசு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அதில், மீறினால் மசூதியை அரசே அப்புறப்படுத்தும் என்று சமீபத்தில் எச்சரிக்கப்பட்டது.

சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணம் ரஷ்யா, மங்கோலியா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகளுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.

இங்கு வசிக்கும் உய்குர் முஸ்லீம் மக்களை சீன மயமாக்க, அந்நாட்டு அரசு முயற்சி செய்து வருவதாகப் பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், உய்குர் இன மக்களை சீன மயமாக்க, ஆவணப்படுத்தப்பட்ட அகதிகள் முகாம் மற்றும் சிறைகளை சீனா ரகசியமாக வைத்துள்ளதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

“இலங்கை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, பல இனங்களைக் கொண்ட நாடென்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

“இலங்கை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, பல இனங்களைக் கொண்ட நாடென்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

20ஆம் திருத்தத்திற்கு எதிராக சமூக நீதிக்கான தேசிய இயக்கம், இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான கட்சிகளை இணைத்து கொழும்பிலுள்ள ஜானகி ஹோட்டலில் நடத்திய சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

இந்த நாட்டின் அரசியலமைப்பை கேள்விக்கு உட்படுத்திக்கொண்டு, நிராகரித்துக்கொண்டு
இருப்பவர்களாகிய நாங்கள், ஏன் இந்த அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள 20ஆம் திருத்தத்தை எதிர்க்கும் இந்த நிகழ்வில் உங்களுடன் இணைந்திருக்கிறோம் எனும் கேள்வி சிலருக்கு எழலாம்.

உண்மையில் தமிழர்களை பொறுத்தவரை இலங்கையின் அரசியலமைப்புக்கள் எதுவும் தமிழர்களுக்கு ஒரு போதும் நேர்மையாக இருந்திருக்கவில்லை. இந்த நாட்டில் நிறைவேறிய, பெரும்பான்மைத்துவ வாதத்தை மையப்படுத்திய மூன்று ஒற்றையாட்சி அரசியலமைப்புகளுமே, அடிப்படையில் தமிழர்களுக்கு எதிரான ஒரு ஜனநாயக மீறலாகவேதான் அமைந்திருந்தன.

இந்த அரசியலமைப்பில் ஏற்படுத்தப்படுத்தப்பட்ட 17ஆம் 19ஆம் திருத்த சட்டங்கள் மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என சொல்லப்பட்ட போதிலும் உண்மையான நடைமுறையில் தமிழர்களுக்கு எதுவித நீதியும் ஜனநாயகப் பாதுகாப்பும் கிடைத்திருக்கவில்லை என்பது தான் உண்மை.

கடந்த 72 வருடமாக, எண்ணிக்கையில் சிறிய இனங்களின் ஜனநாயக உரிமைகளை தொடர்ச்சியாக பறித்து பழக்கப்பட்டு வந்த சிங்கள அரசுகள், இன்று இந்த 20ஆம் திருத்த சட்டத்தின் மூலம் எதுவித கூச்சமும் இன்றி தனது சொந்த மக்களின் ஜனநாயக உரிமைகளிலேயே கைவைக்க தொடங்கியிருக்கிறது. இன்று உங்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு ஜனநாயக உரிமைகள் மட்டுப்படுத்தப்படுகின்ற போது அதற்கு எதிராக நாமும் உங்களுடன் இணைந்து குரல்கொடுக்க முன்வந்துள்ளோம். மேலும், 20ஆம் திருத்ததுக்கு எதிரான சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துவதுடன் அதற்கான எமது பூரண ஆதரவையும் இத்தால் வெளிப்படுத்துகின்றேன் என்றார்.

“இலங்கையில் பன்னாட்டு பொறுப்புக் கூறல் பொறிமுறையை நிறுவவேண்டும்” – ஐ.நா கூட்டத்தொடரில் அபிவிருத்தி மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைப்பின் பிரதிநிதி கெவின் கணபதிபிள்ளை.

“நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிலையில், இந்த மனித உரிமை பேரவை இலங்கையில் பன்னாட்டு பொறுப்புக் கூறல் பொறிமுறையை நிறுவவேண்டும்” என அபிவிருத்தி மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைப்பின் பிரதிநிதி கெவின் கணபதிபிள்ளை தெரிவித்துள்ளார்.

இதன்போது, மனித உரிமை பேரவை இலங்கையில் பன்னாட்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது .

இதில் இரண்டாவது வாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில், அனைத்து மனித உரிமைகள் உட்பட சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான பொது விவாதம் இடம்பெற்றது.

இதன்போது, அபிவிருத்தி மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைப்பின் (Society for Development and Community Empowerment) சார்பாக உரையாற்றிய கெவின் தனது உரையில் இதனை வலியுறுத்தினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், “ஈழத்தமிழர்கள் தங்களது அரசியல் பண்பாட்டு உரிமைகளை நிலைநிறுத்த அரசு தடைவிதிப்பது மனித உரிமை மீறல் என்று இந்த அவையின் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.

இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மக்களாட்சி நடைமுறைகள் இடம்பெறவில்லை.

இலங்கை பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கிழக்கு, வடக்கு மாகாண வேட்பாளர்களை குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இயங்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சி வேட்பாளர்களையும் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் இயங்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களையும் இராணுவமும் பொலிஸாரும் அச்சுறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

தேர்தல் பரப்புரையின்போது கண்காணிப்பு குழுவையும் இருசக்கர வாகன குழுவையும் இராணுவம் பயன்படுத்தியது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் தேர்தல் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள கட்டாயப்படுத்தல், வேட்பாளர்களை அச்சுறுத்தல் போன்ற செயல்களை இராணுவத்தின் புலனாய்வு பிரிவு தொடர்ந்து செய்ததென வழக்கு பதிவு செய்தது. குருநகருக்கு பரப்புரைக்காக சென்ற விக்னேஸ்வரனை இருசக்கர வாகன குழு இடையூறு செய்தது.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிலையில், இந்த மனித உரிமை பேரவை இலங்கையில் பன்னாட்டு பொறுப்புக் கூறல் பொறிமுறையை நிறுவவேண்டும்” என தனது உரையில் அவர் வலியுறுத்தினார்.

கொரோனா வேலையிழப்பு தொடர்கிறது – 28 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வால்ட் டிஸ்னி பூங்கா முடிவு !

உலகின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு பூங்கா வால்ட் டிஸ்னி  பூங்காக்கள் கலிபோர்னியா, புளோரிடா, பாரீஸ், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களில் உள்ளது.
வழக்கமாக இந்த பூங்காக்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வருகைபுரிவதுண்டு. மக்கள் கொண்டாடங்கள் மிகுந்து காணப்படும் இந்த வால்ட் டிஸ்னி பூங்கா கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று காரணாமாக மூடப்பட்டிருந்தது.
இதனால், பல கோடி கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், பூங்காவில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
இதற்கிடையில், புளோரிடாவில் உள்ள வால்ட் டிஸ்னி பூங்கா கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் திறக்கபட்டது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வருகை பெருமளவு குறைந்துள்ளது. மேலும், எஞ்சிய பூங்காக்கள் இன்னும் திறக்கப்படாததால் அந்நிறுவனம் பல கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், நிலைமையை சமாளிக்கும்வகையில் உலகம் முழுவதும் தனது பூங்காக்களில் வேலை செய்துவரும் ஊழியர்களில் 28 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய வால்ட் டிஸ்னி முடிவு செய்துள்ளது.
பணிநீக்கம் செய்யப்படுவர்களில் அனைவரும் அமெரிக்காவில் உள்ள வால்ட் டிஸ்னி பூங்காக்களில் வேலை செய்பவர்கள் என தகவல் வெளியாகியுள்ளதால் ஊழியர்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். 28 ஆயிரம் ஊழியர்களின் பணிநீக்கம் தொடர்பான அறிவிப்பு விரைவில் முறைப்படி வெளியிடப்படும் என வால்ட் டிஸ்னி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த கோமாளியிடம் இருந்து எந்த வார்த்தையையும் பெறுவது கடினம் – இந்த நபரை மன்னியுங்கள்” – நேரடி விவாதத்தில் ட்ரம்ப் மீது ஜோ பிடன் பாய்ச்சல்.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்பும் ஒருவரை ஒருவர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரமான வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதம் தொடங்கி உள்ளது.
ஓஹியோ மாநிலம் கிளீவ்லேண்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் நேரடி விவாதத்தில் டிரம்பும் -ஜோ பிடனும் அனல் தெறிக்கும் விவாதத்தில் ஈடுபட்டனர்.
நேரடி விவாதத்தில் டிரம்பை கோமாளி என அழைத்த ஜோ பிடன்... விறுவிறுப்படையும் தேர்தல் பிரச்சாரம்
மொத்தம் 90 நிமிடங்கள் விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஜோ பிடன் மற்றும் ஃபாக்ஸ் நியூஸின் நடுவர் கிறிஸ் வாலஸ் குறித்து ஜனாதிபதி டிரம்ப் பலமுறை பேசியதால், விவாதம் முதல் 20 நிமிடங்களில் குழப்பமாக மாறியது. டிரம்ப், விவாதத்தின் தொடக்க பிரிவின் போது, பிடன் தனியார் காப்பீட்டை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக குற்றம் சாட்டினார். பிடன் அதை மறுத்தார்.
உச்சநீதிமன்றம் மற்றும் வேட்பாளர்களின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த பிடனின் ஒவ்வொரு பதிலுக்கும், அதே போல் டிரம்பின் குற்றச்சாட்டுகளை பிடன் மறுத்ததற்கும் டிரம்ப் தொடர்ந்து குறுக்கிட்டார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மிகப்பெரிய பெரிய பேரணிகளை டிரம்ப் ஏன் நடத்தினார்? என்று பிடன் கேட்டார். இதற்கு பதிலளித்த டிரம்ப், நான் சொல்வதை மக்கள் கேட்க விரும்புவதால் நடத்தியதாக பெருமையாக கூறினார்.
மார்ச் நடுப்பகுதியில் உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸை உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்ததில் இருந்து, டிரம்ப் 21 பிரச்சார பேரணிகளை நடத்தியுள்ளார். அந்த பேரணிகள் – துல்சா, ஓக்லஹோமா, பீனிக்ஸ், அரிசோனா, மற்றும் நெவாடாவின் ஹென்டர்சன் ஆகிய இடங்களில் நடைபெற்றது. ஆதரவாளர்கள் பெரும்பாலும் முககவசங்களை அணியல்லை, மேலும் சமூக விலகல் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. இதுபற்றி பதில் அளித்த டிரம்ப் இதுவரை, எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.
ஜோ பிடன் தொடர்ந்து டிரம்பைத் தாக்கி பேசினார். அவரை “முற்றிலும் பொறுப்பற்றவர்” என்று அழைத்ததோடு, நோய் பரவலை தடுப்பதில் அக்கறை இல்லை, அங்குள்ள மக்கள் சுவாசிப்பதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை என கூறினார்.
அப்போது குறுக்கிட்ட டிரம்ப்,  “நீங்கள் கூட்டத்தைப் கூட்ட முடிந்தால், நீங்களும் அதையே செய்திருப்பீர்கள். ஆனால் உங்களால் முடியாது, அப்படி கூட்டத்தை கூட்ட யாராலும் முடியாது, என கூறினார். இதனால் தொலைக்காட்சி விவாதத்தில் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் பிடன் டிரம்பை ஒரு “கோமாளி” என்று அழைத்தார். “இந்த கோமாளியிடம் இருந்து எந்த வார்த்தையையும் பெறுவது கடினம் – இந்த நபரை மன்னியுங்கள்” என்று பிடன் கூறினார்.

செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் 20 கிலோ மீட்டர் அகலமுள்ள 3 ஏரிகள் கண்டுபிடிப்பு !

மெல்லிய வளி மண்டலம் கொண்ட செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் திரவ நிலையில் நீர் இருப்பது சாத்தியமற்றது. ஆனால் தரைக்கு கீழே நீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளன என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்த நிலையில்  இதுதொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2003-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் ஐரோப்பிய விண்வெளி அமைப்புக்கு சொந்தமான மாஸ்எக்ஸ்பிரஸ் என்ற ஆய்வு களத்தின் ரேடாரில் உள்ள தரவுகளை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதில் 2018-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் நிலப்பரப்புக்கு அடியில் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 20 கிலோ மீட்டர் அகலமுள்ள ஏரி இருப்பதற்கான அறிகுறிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தின் அருகில் நிலத்துக்கு அடி யில் 1.5 கிலோ மீட்டர் கீழே புதைந்துபோன 3 ஏரிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ஆய்வின்போது கண்டறியப்பட்ட 4-வது ஏரி ஒன்று இருப்பதையும் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

திரவ நிலையில் நீர் இருப்பது என்பது உயிர்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாது. எனவே இந்த கண்டுபிடிப்பு சூரிய குடும்பத்தில் வேறு எங்கும் வாழ்வதற்கான சாத்தியகூறுகள் உள்ளனவா? என்று ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஏரிகள் அனைத்தும் உப்புதன்மை வாய்ந்தவையே என்று கருதப்படுவதால் அதில் நுண்ணுயிர்கள் உயிர் வாழ்வது குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.

குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் காலமானார் !

கடந்த 2006-ம் ஆண்டு முதல் குவைத் மன்னராக  உள்ளவர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் ( வயது 91) .   தந்தையின் மறைவுக்குப் பின் நீண்டகாலம் ஆட்சிப் பொறுப்பை நிர்வகித்து வந்த நிலையில் இவர் வயது (91) முதிர்வுகாரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஜூலை 18-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு ஜூலை 23-ம் தேதி அழைத்து செல்லப்பட்டார். அவரது சிகிச்சை விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அவருக்கு பதிலாக, குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் நவாப் அல் அகமது சபா(83), தற்காலிக மன்னர் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் இன்று காலமானார். மன்னர் இறப்பை அடுத்து, குவைத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

எண்ணெய் வளம்மிக்க நாடான குவைத், அமெரிக்காவுடனும், இங்கிலாந்துடனும் நெருங்கிய நட்பு பாராட்டியதற்கு வழிவகுத்தவர் அமீர் ஷேக் சபா. அரபு நாடுகளில் முக்கிய நாடாக குவைத் மாறியதற்கு அமீர் ஷேக் சபாவின் வெளியுறவுக் கொள்கை முக்கிய பங்காற்றியது எனக்கூறப்படுகிறது. அமீர் ஷேக் சபாவின் ஆட்சிக் காலத்தில் குவைத் பொருளாதார ரீதியில் சக்தி வாய்ந்த நாடாக மாறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

குவைத் மன்னர் ஷேக் சபாவின் மறைவுக்கு இலங்கை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இரங்கலை தெரிவித்துள்ளார். குவைத் மன்னர் ஷேக் சபாவின் மறைவு தொடர்பான இரங்கல் பதிவை  தனது ருவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி பதிவேற்றியுள்ளார்.

குறித்த இரங்கல் பதிவில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “கெளரவத்துக்குரிய குவைத்தின் எமிரான ஷேக் சபா அல்-அஹமட் அல்-ஜாபர் அல்-சபாவின் இழப்பை கேட்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இந்நிலையில் இலங்கை மக்கள் சார்பாக அவரது குடும்பத்தினருக்கும், குவைத் மக்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

“20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை ஐக்கியதேசியகட்சி முழுமையாக எதிர்க்கின்றது” – அகிலவிராஜ் காரியவசம்.

மக்களின் இறையாண்மை தனிநபர் ஒருரிடம் வரையறுக்கப்படுகின்றமைக்கு நாங்கள் எதிரானவர்கள் என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைக்காக, நேற்று (29.09.2020) நீதிமன்றத்திற்கு அவர் வருகை தந்திருந்தார்.இதன்போது ஊடகவியலாளர்களை சந்தித்த அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“ஐக்கியதேசியக் கட்சி 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக 2 மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்தவகையில், நாங்கள் 20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை முழுமையாக எதிர்க்கின்றோம்.

மக்களின் இறையாண்மை தனிபர் ஒருவரிடம் வரையறுக்கப்படுகின்றமையே நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம்.

குறிப்பாக, சுயாதீன ஆணைக்குழுக்கள், கணக்காய்வு திணைக்களம் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரம் உள்ளிட்ட முக்கிய பல விடயங்களில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்.

அதாவது, ஐக்கிய தேசியகட்சி என்ற வகையில் குறித்த 20ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பை தெரிவிப்பது மட்டுமன்றி  அதற்காக நீதிமன்றம் செல்ல முடிவு செய்தோம்.

குறித்த 20ஆவது திருத்த சட்டமூலத்தை நாடாளுமன்றம் முழுமையாக ஒப்புக் கொண்டால், அது ஒரு பிரச்சினையாக இருக்காது.

ஆனால் பிரச்சனை என்னவென்றால், அரசாங்கம் 20ஆவது திருத்த சட்டமூலத்தை, வரைவாகக் கொண்டு வந்ததைப் பார்க்கும்போது, ​​இந்த நாட்டின் சுதந்திரத்தையும் மக்களின் இறையாண்மையையும் மதிக்கும் எவருடனும் நாம் ஒருபோதும் உடன்பட முடியாதென தோன்றுகிறது. ஜனாதிபதிக்கு மக்களின் இறையாண்மை வழங்கப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே  வழங்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நாமல் ராஜபக்ஸவினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை இதுவரையில் அவர் நிறைவேற்றவில்லை ” – துரைராசா ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பல வீட்டுத்திட்டங்கள் நிதிகள் கிடைக்கப்பெறாததால், இடை நடுவே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களுக்கான, உதவிகளை ஆறு மாதங்களுக்குள் பெற்றுத்தருவதாக நாமல் ராஜபக்ஷ வாக்குறுதியளித்திருந்தார்.தற்போது ஆறுமாதங்கள் கடந்த நிலையிலும் குறித்த வாக்குறுதியை நாமல் ராஜபக்ச நிறைவேற்றவில்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று(29.09.2020) இடம்பெற்ற நிலையில் அங்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட கடன் வீட்டுத்திட்டம், மாதிரிக் கிராம வீட்டுத்திட்டம், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான வீட்டுத்திட்டம் போன்ற திட்டங்களுக்கான நிதிகள் கிடைக்கப்பபெறாமையினால் குறித்த திட்டங்கள் இடை நடுவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

எனவே குறித்த திட்டங்களுள் உள்ளீர்க்கப்பட்ட பயனாளிகள் மிகுந்த சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற துணுக்காய் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் இந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைகள் தொடர்பாகப் பேசப்பட்டது.

அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் இந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், நாமல் ராஜபக்ஷ ஆறு மாதகாலத்திற்குள் குறித்த வீட்டுத்திட்டங்கள் தொடர்பான உதவிகளை பெற்றுத் தருவதாக கூறியிருந்ததாக கடந்த கூட்டத்தின் அறிக்கையும் சுட்டிக்காட்டுகின்றது.

இந்த மக்களுக்கு பொறுப்பு வாய்ந்தவர்கள் வாக்குறுதி வழங்கியிருந்தும், அவ்வாறு வழங்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் தற்போதும் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றனர். இதை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன் என்றார் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.