தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான திலீபன் உண்ணாவிரதம் காரணமாக உயிரிழக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.
நோய் காரணமாகவே திலீபன் உயிரிழந்தார் என கமால் குணரட்ன குறிப்பிட்டுள்ளார்.
பூசா சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் கைதிகள் தொடர்பில் கண்டியில் வைத்து கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
“பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இந்த நாட்டின் மிகப் பெரிய குற்றவாளிகளாவர். இந்தக் கைதிகளின் கோரிக்கைகள் அநீதியானவை அவற்றை நிறைவேற்ற முடியாது. தங்களது சட்டத்தரணிகள் சார்பிலும் போராடுகின்றனர். சட்டத்தரணிகளையும் சோதனையிடக் கூடாது என கோரியிருந்தனர். அந்த விடயம் அவர்களுக்கு தேவையற்றது.”
நான் இந்த நாட்டின் பாதுகாப்புச் செயலாளர். நான் பூசா சிறைச்சாலைக்கு சென்றாலும் என்னையும் சோதனையிடுவார்கள், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சென்றாலும் சோதனையிடுவார்கள். இந்தச் சிறைச்சாலை அதி உயர் பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலையாகும்.”
“இலங்கை வரலாற்றில் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து உயிரிழந்த ஒருவரே இருக்கின்றார் அவர் திலீபன்” ஆவார், திலீபன் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக உயிரிழக்கவில்லை, திலீபன் ஓர் நோயாளி, நோயுற்றிருந்த திலீபனை பிரபாகரன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுமாறு பணித்தார்.”
“இது தவிர ஏனையவர்கள் இரண்டு மூன்று நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து பின்னர் தங்களது போராட்டத்தை கைவிட்டு விடுவார்கள், ஏதேனும் ஓர் காரணத்திற்காக இவ்வாறு உண்ணாவிரதம் கைவிடப்படுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பூசாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் கைதிகளுக்கு உணவு காணப்படுகின்றது தேவையென்றால் அவர்கள் உணவு உட்கொள்ள முடியும். சிலர் சாப்பிட மாட்டோம் என்று போராடி வருகின்றனர் இன்னும் சில நாட்களில் அவர்கள் சாப்பிடுவார்கள், அது ஒரு பிரச்சினையல்ல.”
“குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் தராதரம் அவர்கள் சீருடை அணிபவர்களா? என்பது பற்றியெல்லாம் நாம் கரிசனை கொள்ளப் போவதில்லை, அனைவருக்கும் ஒரே விதமாகவே சட்டம் அமுல்படுத்தப்படும்” என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.
ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து 1987ம் ஆண்டில் திலீபன் 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர் நீத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.