September

September

“இந்தியாவின் அழுங்குப் பிடியிலிருந்தும், அதை நிறைவேற்றுவோம் என்று இலங்கை அளித்துள்ள வாக்குறுதியிலிருந்தும் ராஜபக்ச அரசு தப்பவே முடியாது” – எச்சரிக்கிறார் இரா.சம்பந்தன் !

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றக் கோரும் இந்தியாவின் அழுங்குப் பிடியிலிருந்தும், அதை நிறைவேற்றுவோம் என்று இலங்கை அளித்துள்ள வாக்குறுதியிலிருந்தும் ராஜபக்ச அரசு தப்பவே முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடனான காணொளிக் கலந்துரையாடலில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் இரா.சம்பந்தனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையும் இந்தியாவும் ஒருமித்துச் செயற்படுவதை நாங்கள் வரவேற்கின்றோம். பல துறைகளில் ஒருமித்துச் செயற்படுவதற்கு இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சம்மதமும் தெரிவித்திருக்கின்றார்கள். இதுவும் வரவேற்க வேண்டிய விடயம்.

விசேடமாக இரு நாட்டு மக்களுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதற்குப் பல வசதிகளை இரு நாட்டு அரசுகளும் செய்துள்ளன. அதுவும் வரவேற்க வேண்டிய விடயம்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பொறுத்த வரையில் நீதியின் அடிப்படையில் – சமத்துவத்தின் அடிப்படையில் – கௌரவத்தின் அடிப்படையில் – சமாதானத்தின் அடிப்படையில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இந்திய அரசின் தொடர்ச்சியான கருத்தாகவும் வலியுறுத்தலாகவும் உள்ளது.

இந்தியாவின் இந்தக் கருத்தை தற்போதைய பாரதப் பிரதமரும் முன்னாள் பிரதமர்களும் தற்போதைய அரசும் முன்னாள் அரசுகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளன.

இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை இலங்கை அரசு நிறைவேற்றியே ஆகவேண்டும்.

அதை நிறைவேற்றுவதற்கு நல்லிணக்கப் பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அதேவேளை, அரசமைப்பில் உள்ள சகல விடயங்களும் நிறைவேற்றப்பட வேண்டும்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் பல விடயங்கள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. அவை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.

இதனூடாகத் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரமான – உறுதியான தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது மிகவும் அத்தியாவசியமானது. இதைப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அரசிடம் மீண்டும் இடித்துரைத்துள்ளார்.

அதேவேளை, இலங்கை அரசும் அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவோம் என்று இந்திய அரசிடம் மீண்டும் வாக்குறுதியளித்துள்ளது. எனவே, என்ன நடக்கப் போகின்றது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

மன்னாரில் பெண்ணிடம் முத்த இலஞ்சம் கோரிய கிராமசேவகர் கைது !

மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்தரிப்புத்துரையை சேர்ந்த பெண் ஒருவரிடம் ஆவணம் ஒன்றை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோரிய கிராம சேவகர் ஒருவர் நேற்று (29.09.2020) இரவு சிலாவத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,

முத்தரிப்பு துறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆவணம் ஒன்றை கிராம சேவகரிடம் கோரியிருந்த நிலையில் குறித்த கிராம சேவகர் பிரதேச செயலகத்தில் நாளைய தினம் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பெண்ணை கஷ்டப்படுத்த கூடாது என்பதற்கான தான் வீட்டிலேயே கொண்டு வந்து தருவதாக தெரிவித்ததுடன் ஆவணத்துடன் முத்தம் ஒன்றும் தருவதாக தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை உடனடியாக முசலி பொலிஸாருக்கு பெண் கொண்டு சென்றதை தொடர்ந்து குறித்த கிராம சேவையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முத்தரிப்பு துறை மேற்கு கிராம அலுவலராக கடமையாற்றும் கிராம அலுவலகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கிராம அலுவலர் ஆவணம் ஒன்றை உறுதிப்படுத்துவதற்காக பாலியல் இலஞ்சம் கோரியதாக மனித உரிமை ஆணைக்குழு, மற்றும் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து நேற்று மாலை சிலாவத்துறை பொலிசாரால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை சிலாவத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“திலீபன் ஒரு கொலையாளி , எனது தம்பியையும் அவர்தான் கடத்தி கொன்றார்” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தியாகி திலீபன் ஒரு கொலையாளி என்றும் அவரை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி, வானொலி நிலையங்களின் செய்தி பணிப்பாளர்களுடன் அலரி மாளிகையில் இன்று (29.09.2020) இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் ‘வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு மற்றும் உண்ணாவிரதம் குறித்து பிரதமரிடம் கேள்வியெழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த டக்லஸ் தேவானந்தா, திலீபன் ஒரு கொலையாளி. அவருக்கு நினைவேந்தல் நடத்த வேண்டியதில்லை. எனது தம்பியையும் அவர்தான் கடத்தி கொன்றார். அவரை வைத்து அரசியல் செய்கிறார்கள் என கூறினார்.

 

அமெரிக்காவில் சுமார் 2,80,000 குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு !

அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதம் முதல் சுமார் 2,80,000 குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நோய்த் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் கூறும்போது, “அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதிலிருந்து மார்ச் மாதம் முதல் சுமார் 2,80,000 குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மருத்துவமனைகளில் குழந்தைகள் இறப்பு மற்றும் சேர்க்கை சதவீதம் குறைந்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 70 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். அமெரிக்காவின் தென் பகுதியில் தொடர்ந்துகொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகின் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் 20% அமெரிக்காவில் உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் கலிபோர்னியா மாகாணம் முதலிடத்தில் உள்ளது. அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு 8 லட்சத்தை நெருங்கவுள்ளது. பலி எண்ணிக்கையில் நியூயார்க் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 33 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸால் தற்போது உலகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைதளத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் – பொதுமக்கள் 5 பேர் பலி !

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் புரட்சி பாதுகாப்பு படையின் முக்கிய தளபதி காசிம் சுலைமானி, ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய கமாண்டர் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.
ஈரான் நாட்டின் அதிபருக்கு அடுத்த நிலையில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட காசிம் சுலைமானி அமெரிக்க தாக்குதலால் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஈரான் முழுவதும் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றது
இதையடுத்து, சுலைமானியின் மரணத்திற்கு நிச்சயம் பலி வாங்குவோம் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் மற்றும் அதன் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் குழுவான ஹிஸ்புல்லாவும் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த ஏவுகணை தாக்குதல் சில சமயங்களில் தவறுதலாக பொதுமக்கள் குடியிருப்பை தாக்கி அப்பாவிகளில் உயிர்களை காவு வாங்கி வருகிறது.
இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்திற்கு அருகே அமைக்கப்பட்டுள்ள ராணுவ தளத்தில் உள்ள அமெரிக்க படையினரை குறிவைத்து நேற்று திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தவறுதலாக ராணுவ தளத்திற்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதியை தாக்கியது.
இதில் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த ஈராக் நாட்டை சேர்ந்த இரண்டு 2 பெண்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைதளத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் - பொதுமக்கள் 5 பேர் பலி

இலங்கையில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதை தடைசெய்வது தொடர்பான பிரதமர் மஹிந்தவின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி !

இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்வது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்த யோசனைக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதன்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் 8ஆம் திகதி, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் முன்மொழியப்பட்ட குறித்த திட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்திலும் அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன், நாட்டில் மாடுகளை வெட்டுவதற்கு பதிலாக ஏனைய நாடுகளில் இருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதற்கான திட்டத்தையும் பிரதமர் முன்வைத்திருந்தார்.

இந்நிலையிலேயே மஹிந்தவினால் முன்மொழியப்பட்ட, மாடுகளை வெட்டுவதை தடை செய்வது தொடர்பான திட்டத்திற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“உள்நாட்டு பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும்” – பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ

“உள்நாட்டு பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும். அதற்கு உள்நாட்டு தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுத்து வருகிறது“ என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி, வானொலி நிலையங்களின் செய்தி பணிப்பாளர்களுடன் அலரி மாளிகையில் இன்று (29.09.2020) இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஊடகவியலாளர்: பிரதமர் அரசியலிலிருந்து ஓய்வு பெற போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

பிரதமர்: அரசியல்வாதிகள் எக்காலத்தில் ஓய்வு பெற்றனர்? நான் ஓய்வு பெற போவதில்லை.

ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற இடமளிக்க போவதில்லை என்று ஒரு தரப்பு கூறும்போது, 20இற்கு 20 எடுப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.

பிரதமர்: எங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை மக்கள் வழங்கியுள்ளனர். கட்சிகளுக்கும், தனி நபர்களுக்கும் வேறுபட்ட கருத்துக்கள் காணப்பட கூடும். எமக்கு நிலையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுகின்றது. அதில் சந்தேகம் கொள்ள தேவையில்லை.

ஊடகவியலாளர்: கொவிட்-19 காரணமாக உலகின் அனைத்து நாடுகளினதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது? வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியுமா?

பிரதமர்: உள்நாட்டு பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும். அதற்கு உள்நாட்டு தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுத்து வருகிறது. நாம் என்ன இடம்பெற்றாலும் உரிய நேரத்திற்கு கடன்களை செலுத்தியுள்ளோம்.

ஊடகவியலாளர்: தேங்காய் குறித்து ஒரு பாரிய பிரச்சினை காணப்படுகிறது?

பிரதமர்: தேங்காய் தொடர்பில் எப்போதும் இவ்வாறானதொரு நிலை காணப்பட்டது. எமக்கு நுகர்வோர் முக்கியம். அதனால் கட்டுப்பாட்டு விலை தொடர்பிலான முன்மொழிவு சிறப்பானதாகும். அதனை முறைப்படி அமைச்சரவையில் முன்வைப்போம்.

ஊடகவியலாளர்: அரசாங்கம் வர்த்தமானி வெளியிடுகிறது. பின்னர் மீண்டும் திரும்பப் பெற்று கொள்கிறது என்ற குற்றச்சாட்டு காணப்படுகிறது?

பிரதமர்: அதன் மூலம் வெளிப்படுவது ஜனநாயகமே தவிர வேறொன்றும் இல்லை. தேங்காய் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணுவது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அது குறித்து அறிவிப்பேன்.

ஊடகவியலாளர்: மஞ்சள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை மஞ்சளை இறக்குமதி செய்ய முடியாதா?

பிரதமர்: உள்ளூர் விவசாயிகள் தற்போது மஞ்சளை பயிரிட ஆரம்பித்துள்ளனர். அவர்களை எம்மால் அதைரியப்படுத்த முடியாது. அதனால் உள்நாட்டு மஞ்சள் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளை தைரியப்படுத்த வேண்டுமாயின் நாம் இந்த நிலைமைக்கு முகங்கொடுத்து முன்னோக்கி செல்ல வேண்டும். வெளிநாடுகளிலிருந்து மீண்டும் நாம் மஞ்சள் இறக்குமதி செய்தால் விவசாயிகள் மஞ்சள் பயிர்செய்கையை கைவிட்டுவிடுவார்கள் என்றார்.

குறித்த சந்திப்பில் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தொழிற்துறை அமைச்சர் விமல் வீரவன்ச, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

20 ஆவது திருத்தத்திற்கு எதிராக நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 39மனுக்கள் உயர் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு !

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு எதிராக நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் உயர் நீதிமன்றில் இன்று (29.09.2020) விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பிரதம நீதியரசர் தலமையிலான 5 நீதியரசர்களை கொண்ட குழுவினால் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இது குறித்து மேலும் தெரியவருவதாவது ,

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20வது திருத்த வரைபிற்கு எதிராக இதுவரை 39 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரட்னஜீவன் கூல், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன .

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன், 20வது திருத்தத்தை மேற்கொள்ள சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரிய, நீதிபதிகள் புவனேக அலுவிஹார, நீதிபதி சிசிர டி அப்ரூ, நீதிபதி பிரியந்த ஜெயவர்தன, நீதிபதி விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு முன் விசாரிக்கப்படும்.

கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் 20வது திருத்தத்தை நீதியமைச்சர் அலி சப்ரி தாக்கல் செய்திருந்தார் . அதை சவாலுக்கு உட்படுத்த ஒரு வார அவகாசமுள்ளதாகவும் இன்றிலிருந்து 21 நாட்களிற்குள் உயர்நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

இதயம் சார்ந்து நோய் காரணமாக நாளொன்றுக்கு 100 பேர் வரை மரணம். – இதயம்சார் நோய் விஷேட தடுப்பு பிரிவு அதிர்ச்சித்தகவல்!

இலங்கையில் இதயம்சார் நோய் காரணமாக நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பதாக இதயம்சார் நோய் விஷேட தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், உலகளாவிய ரீதியில் வருடமொன்றுக்கு 17 மில்லியன் பேர் உயிரிழப்பதாகவும் அந்தப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. குணப்படுத்தக் கூடிய இந்நோயிலிருந்து பாதிக்கப்படுபவர்களை பாதுகாக்கும் நோக்கில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக வருடாந்தம் செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி சர்வதேச இதய தினம் கொண்டாடப்படுகிறது.

தொற்றா நோய்களால் உலகலாவிய ரீதியில் 83 சதவீத மரணம் ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் மரணத்திற்கு பிரதான காரணியாக இருப்பது இதயம் மற்றும் இரத்த குழாயுடன் தொடர்புடைய பிரச்சினைகளாகும். இதனால் உலகலாவிய ரீதியில் வருடமொன்றுக்கு 17.9 மில்லியன் உயிரிழப்புக்கள் பதிவாகின்றன என கண்டறியப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியிலுள்ள மொத்த சனத்தொகையில் 1.13 பில்லியன் மக்கள் அதிக இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளதோடு, இந்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பகுதியினர் குறைந்த அல்லது மத்திய வருமானம் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றா நோய்களால் பதிவாகின்ற மரணங்களில் 50 வீத மரணங்களுக்கான பிரதான காரணியாகவும் இதயம் மற்றும் இரத்த குழாயுடன் தொடர்புடைய பிரச்சினையே காணப்படுகிறது.

சுகாதார முறைப்படி உணவு உட்கொள்ளாமை, செயற்பாடுகளில் மந்த நிலைமை, புகையிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புகைப்பொருட்களை உபயோகித்தல் என்பன இதற்காக பிரதான காரணிகளாக கூறப்படுகின்றன.

இலங்கையைப் பொறுத்தமட்டில் மொத்த சனத்தொகையில் 26.5 சதவீதமானோர் அதிக இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர் என கூறப்படுகிறது. இலங்கையில் அதிக இரத்த அழுத்தம் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களில் 35 சதவீதமானோர் உரிய முறையில் மருந்துகளை உட்கொள்வதில்லை என்பதோடு, 30 சதவீதமானோர் தமக்கு அதிக இரத்த அழுத்தம் உள்ளது என்பதையே அறியாமலுள்ளனர் என கூறப்படுகிறது.

2016 இல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பின்படி தொற்றா நோய்களால் பதிவாகும் மரணம் 83 சதவீதமாகும். இதில் 34 சதவீத மரணம் இதயம் மற்றும் இரத்த குழாயுடன் தொடர்புடைய பிரச்சினைகளினாலாகும். அதிக இரத்த அழுத்தமானது நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் என்பதோடு, இதன் காரணமாக இதயம், மூளை மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட உடலிலுள்ள முக்கிய பாகங்களும் பாதிப்படையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

“பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டை பிளவுப்படுத்தும் விடயங்களை கூறுவாரென நான் நினைக்கவில்லை” – இரா.சாணக்கியன்

13 ப்ளஸ் என்பது நான் கூறியதல்ல. அது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கூறியதாகும். ஆகவே, அவர் நாட்டை பிளவுப்படுத்தும் விடயங்களை கூறுவாரென நான் நினைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்திற்கான இளைஞர் என்ற தலைப்பில் தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் 27.09.2020(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ´பொருளாதாரம், வேலை வாய்ப்பு மற்றும் வீட்டுத் திட்ட பிரச்சினை என்பன அனைத்து இலங்கை இளைஞர்களுக்கும் இருக்கும் பாரிய பிரச்சினை. 30 வருட கால யுத்தம் இருந்தமையினால் தெற்கைவிட 10 வீதம் அதிகளவான பிரச்சினைகள் வட, கிழக்கில் இருக்கின்றன. அரசியல் ரீதியான நல்லிணக்க பிரச்சினைக்கு பொருளாதார ரீதியிலான தீர்வை கொடுப்பதாயின் நீண்ட காலத்திற்கு முன்னரே அந்த பிரச்சினைக்கான தீர்வை வழங்கியருக்க முடியும்.

அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவருடைய காலத்தில் பொருளாதார பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கியிருந்தால் மலையத்திலுள்ளவர்கள் இன்றுவரை வாக்குரிமைக் கூட இல்லாதிருந்திருக்கும்.

ஆகவே, இந்த நாட்டிலுள்ள தமிழ் இளைஞர்களின் அதிகளவான பிரச்சினைகளுக்கும் யுத்தத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குமான தீர்வை புதிய அரசியலமைப்பின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியுமென்பதால் இந்த நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவையென்றேன நான் கூறுவேன்.

1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் முக்கியஸ்தர்கள் மரணித்துள்ள போதிலும் அதனால் ஏற்பட்ட பிரச்சினைகளை நாங்களே எதிர்க் கொள்கின்றோம்.
19 ஆவது திருத்தத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாக 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டாலும் அவசர அவசரமாக 20 ஐ கொண்டுவராது புதிய அரசியலமைப்பை கொண்டுவருவது பொருத்தமானதாகும்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது 13 ப்ளஸ் என்பதன் ஊடாக இந்த நாட்டிலுள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியுமெனக் கூறியிருந்தார்.

ஆகவே, இளம் வயதுடையவர்கள் அதிக காலம் வாழ முடியுமென்பதால் எதிர்காலத்தை பற்றி சிந்தித்து முடிவெடுத்தால் அனைத்து பிரச்சினைகளுக்கும் பதில் கிடைக்கும். 13 ப்ளஸ் என்பது நான் கூறியதல்ல. ஆது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கூறியதாகும். ஆகவே, அவர் நாட்டை பிளவுப்படுத்தும் விடயங்களை கூறுவாரென நான் நினைக்கவில்லை. 13 ப்ளஸ் என்பது நாட்டை பிளவுப்படுத்தும் விடயமல்ல. நாட்டிலுள்ள அரசியலமைப்பிலுள்ள விடயங்கள் என்பதால் அதனை மேலும் பலப்படுத்துமாறே நாங்கள் வலியுறுத்துகின்றோம்.