September

September

“இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு தற்கொலை தாக்குதல் நடத்துமளவுக்கு எந்த பிரச்சினையோ அல்லது தேவையோ இல்லை” – முஜிபுர் ரஹ்மான்

“இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு தற்கொலை தாக்குதல் நடத்துமளவுக்கு எந்த பிரச்சினையோ அல்லது தேவையோ இல்லை” என  பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு காரணமானவர்கள் யாரென சரியான தகவலை தெரிந்துகொள்ள வேண்டுமாயின் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் சாரா எனும் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் சாரா எனும் பெண் இந்தியாவில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனால் அவரை உடனடியாக அங்கிருந்து இலங்கைக்கு அழைத்து வர முடியுமாயின் தாக்குதல் தொடர்பில் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என ஆணைக்குழுவிடம் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

விஷேடமாக இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு தற்கொலை தாக்குதல் நடத்துமளவுக்கு எந்த பிரச்சினையோ அல்லது தேவையோ இல்லை எனவும் அதனால் சஹ்ரான் இதனை வேறு யாரே ஒருவரின் தேவைக்காவே இவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

“வடக்கு- கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது” – மாவை சோ.சேனாதிராசா

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார் .

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நேற்று தமிழ் தேசிய கட் சிகளின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற கதவடைப்பு போராடடம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார்.

உலகில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் கடப்பாடுகள் மனித குலத்தினாலும் ஐ.நா. சாசனத்தினாலும் உடன்படிக்கைகளினாலும் அங்கீகரிக்கப்பட்ட கடப்பாடாகும் என்றும் மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகம் முழுவதும் இக்கடப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றபோதும் இலங்கையில் இறந்தவர்கள் நினைவு கூரும் கடப்பாடுகள் அரசுகளினால் மறுக்கப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் வருவதாக குற்றம் சாட்டினார்.

இதேவேளை 20ஆவது திருத்தச்சட்ட வரைவை நாடாளுமன்றில் நிறைவேற்றினால் நாடாளுமன்ற ஜனநாயகம் பலவீனப்படுத்தப்பட்டு சர்வாதிகார பலத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் நாட்டில் இராணுவ மயமான பொலிஸ் அதிகாரமுமான ஆட்சி ஏற்படும் என்றும் மாவை சேனாதிராஜா தனது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

“இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கையின் பல விடயங்கள் இலங்கையின் சிங்கள மொழி மூலமான கூட்டறிக்கையில் இல்லை ” – எம்.ஏ. சுமந்திரன்

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் – இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று முன்தினம் இணையவழி மூலமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை சம்பந்தமாக வெளியிடப்பட்ட  இலங்கையின் கூட்டறிக்கையில் அதிக விடயங்கள் தவிர்க்கப்பட்டே சிங்களமொழியில் மட்டும் அது வெளியிடப்பட்டுள்ளதாக கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்   தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஸ்ரீலங்காப் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இணையவழி ஊடாக இரு தரப்பு பேச்சுவார்த்தையில் தமிழ்மக்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்குமாறு இந்திய பிரதமர் வலியுறுத்தியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் இணைய ஊடகம் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்குப் பதில் வழங்கிய சுமந்திரன்,

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று முன்தினம் இணையவழி மூலமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை சம்பந்தமாக ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளியிடப்பட்ட மூன்று கூட்டறிக்கைக்கு பின்னர் தற்பொழுது தான் ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு இடைப்பட்ட காலங்களின் எந்தவொரு கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டிருக்கவில்லை. முன்னைய கூட்டறிக்கைகளை விட இந்த கூட்டறிக்கையில் என்ன விஷேசம் என்றால் ‘நீதி’ என்ற சொல் முதற்தடவையாக கூறப்பட்டிருக்கிறது. இந்த விடயம் மிக முக்கியமானதொன்று.

இந்நிலையில் இரு நாடுகளும் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டிருந்த நிலையில், இலங்கை வெளிவிவகார அமைச்சு தனியாக ஒரு அறிக்கையை சிங்கள மொழியில் மாத்திரம் வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் இரு நாடுகளும் (இலங்கை – இந்தியா) இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்ட பல விடயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.

இரண்டு நாடுகள் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டால், அதன் பின்னர் தனியாக ஒரு நாடு அறிக்கையை வெளியிடுவதில்லை. ஆனால் அரசாங்கம் அந்த செயற்பாட்டை செய்திருக்கிறது. இதன் மூலம் நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்பது தெரிகிறது.

13 ஆவது திருத்த சட்டத்தில் ஆரம்பித்து தமிழ் மக்களுடைய அபிலாஷைகள் பூர்த்திசெய்யப்படவேண்டுமென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்திருக்கிறார்.

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கப்போவதாக அரசாங்கம் கூறிவருகின்ற நேரத்தில் இந்திய பிரதமரின் இந்த அறிவிப்பு மிக முக்கியமான ஒரு விடயமாகும். இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டுமென்பதை இந்திய பிரதமர் ஆணித்தரமாக கூறியிருக்கிறார். இதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளியிடப்பட்டிருந்த முன்னைய கூட்டறிக்கைகளிலும் 13 ஐ முழுமையாக அமுல்படுத்தி, அதற்கு அப்பாலும் சென்று அதிகாரப்பகிர்வை அர்த்தமுள்ளதாக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது.

13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதை நாங்கள் வரவேற்கின்றோம். மாகாணத்தை அடிப்படை அலகாக கொண்ட ஒரு அதிகாரப்பகிர்வு முறை தான் 13 இல் இருக்கிறது. வட-கிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரங்கள் போன்றன 13 இல் இருக்கின்றன. எனவே மேற்சொல்லப்பட்ட அடிப்படையில் அது நிறைவேற்றப்படவேண்டும் என்றும் அதற்கு அப்பாலும் சென்று தமிழ் மக்களுடைய அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படவேண்டுமென்றும் கூறப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் இது மிக மிக வரவேற்கக்கூடிய விடயம்.

எனவே இரு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றினூடாக இந்த விடயங்களை கூறியிருப்பதனால், இலங்கை அரசாங்கம் இவற்றுக்கு இணங்கியிருக்கிறது. சர்வதேசத்துக்கும் இந்தியாவுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறி செயற்படமுடியாது என்பதை நான் பல தடவைகள் கூறியிருக்கின்றேன். அதேபோல் மீண்டும் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் ஒரு வாக்குறுதியை கொடுத்திருக்கிறது. ஆகவே இவற்றை இலங்கை அரசாங்கத்தால் மீறி செயற்படமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

“அச்சுவேலியில் கடைகளை திறக்கக்கோரி பொலிஸாரும் இராணுவத்தினரும் நேற்று மாலை முதல் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்” – தவிசாளர் தியாகராஜா நிரோஷ்

அச்சுவேலிப்பகுதியில் இராணுவத்தினரும் இராணுவப்புலனாய்வாளர்களும் நேற்று மாலை முதல் அச்சுறுத்தல் விடுத்து கடைகளைத்திறக்க வலியுறுத்தி, கடைகளைத் திறந்திருந்தனர். எனினும் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் 11 மணியளவில் நேரில் சென்று எவரும் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியத்தேவையில்லை. கர்த்தாலுக்கு ஒத்துழைப்பதை எவரும் தடைசெய்ய முடியாது என்று கேட்டுக்கொண்டதற்கு அமைய திறந்திருந்த பல கடைகள் பூட்டப்பட்டன.

இது பற்றி ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த தவிசாளர் தியாகராஜா நிரோஷ்..

இராணுவத்தினரும் புலனாய்வாளர்களும் கடை உரிமையாளர்களை அச்சுறுத்தி கடைகளைத் திறந்து வைத்திருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து, நானும் உப தவிசாளர் மகேந்திரலிங்கம் கபிலனும் அச்சுவேலி நகரத்திற்கு சென்றிருந்தோம். நாம் கடை உரிமையாளர்களுடன் அவர்களுக்கு அவர்களுக்கு ஏற்பட்டுள்ள துர்ப்பாக்கிய நிலை பற்றி, அறிய முற்பட்ட போது பொலிசார் எம்மை அணுகி வர்த்தகர்கள் மீது பலவந்தத்தினை பிரயோகித்தீர்கள் என்ற வகையில் கைது செய்ய வேண்டிவரும் என்றனர்.

அதற்கு நான் தவிசாளர் என்ற வகையில் கடை உரிமையாளர்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்படுவது தொடர்பில் நிலைமைகளை ஆராய்கின்றோம் என்றேன். உங்கள் நடவடிக்கையினை எடுங்கள் என்று அவர்களது இடையூறுகளைப் பொருட்படுத்தாமல் வர்த்தகர்களுடன் அவர்களுக்கு பாதுகாப்பாக நாம் நின்றபோது வர்த்தகர்கள் கடைகளை பூட்டினர்.

எனினும் படையினர் சைகையில் கடைகளை பூட்ட வேண்டாம் என வர்த்தகர்களை எச்சரித்தனர். தொடர்ந்து அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரியும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பேசியபோது எவரும் எவர் மீதும் கட்டாயப்படுத்த முடியாது.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வர்த்தகர்களை கட்டாயப்படுத்தி கடைகளை திறக்க வலியுறுத்துவதில் இருந்து சகலரும் விலகவேண்டும் என தெரிவித்திருந்தேன்.

அநேக வர்த்தகர்கள் அச்சத்தின் காரணமாக திறந்து வைத்திருந்த கடைகளை பூட்டி ஒத்துழைத்தனர். இராணுவத்தினர் நேற்று மாலை முதல் தம்மை வெகுவாக அச்சுறுத்தியதன் நிமிர்த்தமாக கடைகளை திறக்கப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்பதை மனவருத்துடன் எனது கவனத்திற்குக் கொண்டு வந்தனர். வர்த்தகர்கள் கடைகளை பூட்ட எத்தனித்த போது இராணுவத்தினரின் அதிசெகுசு பஜரோக்களில் வருகை தந்த இராணுவ அதிகாரிகள் என்னை அச்சுறுத்தும் வகையில் வீடியோ பிடித்தனர். எனது வாகனத்தினை நடு வீதியில் மறித்து வீடியோ எடுத்தனர். அச்சுவேலி நகரத்தினை யுத்த பிரதேசம் போன்று இராணுவத்தினர் சூழ்ந்து நின்று கர்த்தாலை குழப்புவதற்கு முயற்சிக்கின்றனர்.

மேலும், அடிப்படையில் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு இராணுவத்தினர் அச்சுறுத்தல்களைப் பியோகித்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர் என்பதுவே உண்மை. என்னையும் அச்சுறுத்தும் வடையில் இராணுவத்தினர் செயற்பட்டனர்” என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

“கடைகள் வர்த்தக நிலையங்களை மூடி மேற்கொள்ளப்படும் ஹர்த்தால் ஈழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் அழுத்தம் ” – அம்பிட்டிய சுமணரத்ன தேரர் அதிருப்தி !

10 தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனத்திற்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் வடக்கு கிழக்கில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஹர்த்தால் தனித் தமிழீழத்தை கோரி கொடுக்கப்படும் அழுத்தம் - அம்பிட்டிய  சுமணரத்ன தேரர் - Tamilwin

இந்நிலையில் வடக்கு – கிழக்கில் மேற்கொள்ளப்படும் ஹர்த்தால் தொடர்பாக  மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன் இவற்றுக்கு தலைமை தாங்குவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில் இன்று மேற்கொள்ளப்பட்டு வரும் ஹர்த்தால் நடவடிக்கை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மட்டக்களப்பு நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் ஈழவாதியான திலீபனை நினைவுகூருவதற்காக இவ்வாறு கடைகள்,அரச நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக நான் நினைக்கின்றேன். எமது நாட்டில் சட்டம் அமுல்படுத்தப்படுமாயின் வர்த்தக நிலையங்கள் மூட முடியாது.

இது ஈழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் அழுத்தம். ஏன் இந்த வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்பது குறித்து பாதுகாப்பு தரப்பினர் முறைப்பாடுகளை பதிவு செய்ய வேண்டும்.அவர்கள் இன்னும் எமக்கு அழுத்தம் கொடுக்கின்றனர் என்பதை மக்கள் அறிந்துக்கொள்ள இது நல்ல செய்தி.

வடக்கு – கிழக்கில் வர்த்தக நிலையங்களை மூட அவர்கள் விடுதலைப் புலிகளின் ஈழத்தையும் திலீபனையும் நினைவுகூரும் மிகப் பெரிய நிகழ்வை அவர்கள் அதே விதமாக நடத்துகின்றனர்.இவற்றுக்கு தலைமை தாங்குவது யார்? இதனை செயற்படுத்துவது யார்? இதில் இருக்கும் அதிகாரிகள் யார்? இவற்றை தேடி அறியும் பொறுப்பு நாட்டின் பாதுகாப்பு தரப்பினருக்கு உள்ளது.

நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கி, சரியான சிங்கள பௌத்த தலைவரை தெரிவு செய்துள்ள தருணத்தில் இப்படியான சம்பவங்கள் நடக்குமாயின் நாங்கள் தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டிருக்க முடியாது என்பது நாட்டுக்கு மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய விடயம். இவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தி காட்டினால், அதுதான் நாங்கள் பெறும் மிகப் பெரிய வெற்றி என்பது நான் இந்த நேரத்தில் நினைவூட்டுகிறேன் என சுமணரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அச்சுறுத்தும் கொரோனா ! – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.32 கோடியைத் தாண்டியுள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.45 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா       –  பாதிப்பு – 73,20,669, உயிரிழப்பு – 2,09,453, குணமடைந்தோர் – 45,60,038
இந்தியா       –    பாதிப்பு – 60,73,348, உயிரிழப்பு –   95,574, குணமடைந்தோர் – 50,13,367
பிரேசில்       –    பாதிப்பு – 47,32,309, உயிரிழப்பு – 1,41,776, குணமடைந்தோர் –  40,60,088
ரஷியா        –    பாதிப்பு – 11,51,438, உயிரிழப்பு –   20,324, குணமடைந்தோர்  – 9,43,218
கொலம்பியா  –     பாதிப்பு –  8,13,056, உயிரிழப்பு –   25,488, குணமடைந்தோர்  – 7,11,472

டொனால்டு டிரம்ப் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை – நியூயோர்க் டைம்ஸ் பரபரப்பு செய்தி !

டொனால்டு டிரம்ப் தனது ரியாலிட்டி தொலைக்காட்சி திட்டம் மற்றும் பிற உரிம ஒப்பந்தங்களில் இருந்து 2018 க்குள் 7 427.4 மில்லியன் டாலர் வருமானம் பெற்றிருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரிகளை செலுத்தவில்லை. 2016 மற்றும் 2017 இரண்டிலும் கூட்டாட்சி வருமான வரிகளில் $ 750 செலுத்தி உள்ளார்.  டிரம்ப் தனது வணிக சாம்ராஜ்யம் முழுவதும் பெரும் இழப்புகளைப் சந்தித்து வருவதாக கூறி வருமான வரியை குறைத்து காட்டி உள்ளார். 2018 ஆம் ஆண்டில் டிரம்ப் 47.4 மில்லியன் டாலர் இழப்பைக் கோரியதாகவும் ஆனால் அந்த ஆண்டு நிதி வெளிப்பாட்டில் குறைந்தபட்சம் 4 434.9 மில்லியன் வருமானம் கிடைத்ததாகக்  நியூயோர்க்டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் டிரம்ப் இந்த செய்தியை மறுத்துள்ளார்.
இது முற்றிலும் போலியான செய்தி. உண்மையில், எனக்கு கிடைத்த வருமானத்திற்கு நான் வரி செலுத்தி உள்ளேன், அது  தணிக்கைக்கு உட்பட்டது,  என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.
டிரம்ப் நிறுவனங்களின் வழக்கறிஞரான ஆலன் கார்டன், நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த அறிக்கையில்,”கடந்த தசாப்தத்தில், ஜனாதிபதி டிரம்ப் மத்திய அரசாங்கத்திற்கு பல்லாயிரக்கணக்கான டாலர்களை தனிநபர் வரியாக செலுத்தியுள்ளார், இதில் 2015 இல் தனது வேட்புமனுவை அறிவித்ததிலிருந்து மில்லியன் கணக்கான தனிப்பட்ட வரிகளை செலுத்தி உள்ளார். என்று  கார்டன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் மற்றும் அவரது வணிக நிறுவனத்தில் உள்ள நிறுவனங்களுக்காக இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக வரிவிதிப்பு தரவைப் பெற்றுள்ளதாக டைம்ஸ் கூறி உள்ளது. அதில் 2018 அல்லது 2019 முதல் அவர் பெற்ற தனிப்பட்ட வருமானம் குறித்த தகவல்கள் இல்லை. ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான நிலையான நடைமுறையிலிருந்து விலகி, தனது வரிகளை வெளியிட டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார் என கூறி உள்ளது.

வவுனியாவில் கடையடைப்பில் ஈடுபட்டோருக்கு பொலிஸ் அச்சுறுத்தல் !

வடக்கு- கிழக்கில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக, ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ், இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

வவுனியா நகர்ப்பகுதியில் குவிக்கப்பட்ட பொலிஸார், வர்த்தக நிலையங்கள் ஒவ்வொன்றாக சென்று திறக்குமாறு தெரிவித்து வருகின்றனர். மேலும் கடைகளை திறக்காதவபிடத்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கடையடைப்பில் ஈடுபட்டவர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதே நேரத்தில் ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பூரண கர்த்தாலுக்கு கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

20200928 090943

 

“இணைய வழி சந்திப்பின் போது இலங்கை அரசு சிறுபான்மையினரான தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார் ” – இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகம்

இலங்கை அரசு சிறுபான்மையினரான தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார் என்றும் சமத்துவம், நீதி, அமைதி, கௌரவம் ஆகியவற்றை எதிர்பார்க்கும் தமிழர்களின் அவாவை நிறைவேற்ற வேண்டும் என்றும் அமைதி மற்றும் சமாதானத்துக்கான பேச்சை முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதாக இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா- இலங்கை நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு கடந்த சனிக்கிழமை(26.09.2020)  காணொளி வாயிலாக நடைபெற்றது.இதன்போது இலங்கை பிரதமருடன் இந்திய பிரதமர் நடத்திய பேச்சின் போதே மேற்கண்டவாறு வலியுறுத்தியதாக இந்திய மத்திய வெளியுறவு அமைச்சக இந்தியப் பெருங்கடல் பிரிவு இணைச் செயலர் அமித் நரங் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ராஜபக்சவுக்கு மோடி வாழ்த்துக்களை கூறினார். மேலும், தனது அழைப்பை ஏற்று, இந்தியா – இலங்கை நாடுகளுக்கு இடையேயான மெய்நிகர் உச்சி மாநாடு நடத்த ஒப்புதல் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

“ இந்த உச்சி மாநாட்டின் விளைவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. முன்னோக்கிச் செல்வது மற்றும் உறவுகளை மேலும் ஆழப்படுத்த மிகப்பெரிய திட்டத்தை வழிவகுக்க உதவும்”.

இருதலைவர்களும் மீனவர்கள் பிரச்சினை குறித்தும் விவாதித்தனர், இதில் இதுவரை இருந்து வரும் “ஆக்கப்பூர்வமான, மனிதநேயவாத அணுகுமுறையே கைகொடுக்கும்” என்று இருவரும் ஒப்புக் கொண்டதாக நரங் தெரிவித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது இலங்கையுடனானபௌத்த உறவுகளை வளர்க்க பிரதமர் மோடி 15 மில்லியன் டொலர்கள் உதவி அறிவித்தார்.

பேச்சின் தொடக்கத்தில் பிரதமர் மோடி, “உங்கள் கட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து இந்திய-இலங்கை உறவுகளில் புதிய அத்தியாயம் தொடங்க நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. இருநாட்டு மக்களும் நம்மை புதிய நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புகளுடன எதிர்நோக்குகின்றனர்” என்று மோடி கூறியதாக நரங் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இரு தலைவர்களும் சமாதானப் போக்கு குறித்து ஆலோசித்தனர் என்று கூறிய நரங், “பிரதமர் மோடி, தமிழர்களுக்கு சமத்துவம்,நீதி அமைதி, மற்றும் கௌரவம் கிடைக்க ஒருங்கிணைந்த இலங்கையில் சமாதானம் ஏற்பட அரசு பணியாற்ற வேண்டும்”

“அத்துடன் 13வது சட்டத்திருத்தம் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்கிறது. அதன் படி தமிழர்களுக்குஅதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தியது.”என்று கூறியதாகத் தெரிவித்தார்.

இதேவேளை இந்த காணொளி உரையாடலில் பேசிய ஸ்ரீலங்கா பிரதமர் பிரதமர் மகிந்த ராஜபக்ச, ”கொரோனா காலத்தில் மற்ற நாடுகளுடன் பொதுநலத்துடன் செயல்படும் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இலங்கையின் பிரதமாராக ஓகஸ்ட் 9-ஆம் திகதி பதவியேற்ற பின்னர் இந்தியாவுடன் முதல் மாநாட்டில் கலந்துகொள்கிறேன்.

இலங்கை கடற்பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தீப்பிடித்து எரிந்த எம்.டி. நியூ டைமண்ட் கப்பலில் இந்திய கடற்படையினர் சிறப்பான முறையில் மீட்பு பணிகளை மேற்கொண்டு ஒத்துழைப்பு அளித்தனர்” என்று ராஜபக்ச கூறினார்.

கொரோனா அச்சுறுத்தலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை மீண்டும் கட்டி எழுப்பிய உலக நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம் !

கொரோனா வைரஸ்  அச்சுறுத்தலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை மீண்டும் கட்டி எழுப்பிய உலக நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

சீன முதன்மை புலனாய்வு ஆய்வு நிறுவனமான ´இகாயி´ நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. தொற்று நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தமை, பொருளாதாரத்தை மீண்டும் கட்டி எழுப்பியமை மற்றும் சர்வதேச உறவுகளை வலுப்படுத்தியமை உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

108 நாடுகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் சீனாவுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி சீனா, இலங்கை, தென்கொரியா, மியன்மார், அவுஸ்திரேலியா, தாய்லாந்து, நியூசிலாந்து, வியட்நாம், கம்போடியா மற்றும் கானா ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.