மாணவர்கள், ஆசிரியர்கள் இதற்குரிய கட்டுப்பாடுகளுடன் வகுப்புகளுக்கு வரவேண்டும். நேரடி தொடர்பு இல்லாமல் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது அவசியம் என்று பிரிட்டன் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதே போல் முகக்கவசங்களும் அவசியம். புதிய பள்ளி ஆண்டில் பலருக்கு இது கல்வியாண்டின் முதல்நாள், முழுநேர கல்வி அனைவருக்கும் திறக்கப்படுவதையடுத்து அங்கு மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக பிரிட்டன் கல்விச் செயலர் கேவின் வில்லியம்சன் கூறும்போது, கடந்த சில மாதங்கள் மாணவர்கள் எத்தகைய சவால்களை சந்தித்து இருப்பார்கள் என்பதை நான் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை, எனவே பள்ளிகள் திறக்கப்படுவது அவர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது எனக்குத் தெரியும். கல்விக்காக மட்டுமல்ல, அவர்களின் வளர்ச்சி, நல்லுணர்வு ஆகியவற்றுக்கும் பள்ளிகள் திறப்பு அவசியம்.
ஆனாலும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எதுவும் சுலபமல்ல. ஆனால் பெற்றோர் ஆதரவு இல்லாமல் நாங்கள் எதுவும் செய்ய முடியாது, எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
நாட்டில் உள்ள தலைமை மருத்துவ அதிகாரிகளை ஆலோசித்ததன் பேரில் கோவிட்-19 வைரஸ் குழந்தைகளைப் பாதிப்பது மிகவும் குறைவே என்றனர், மேலும் இளம் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தால் அவர்களது நல்லுணர்வு பாதிக்கப்படும் என்று அவர்கள் ஆலோசனை வழங்கினர், என்றார் கேவின் வில்லியம்சன்.
பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் ஆய்வின்படியும் கரோனாவினால் குழந்தைகளுக்கு தீவிர நோய் ஏற்படும் வாய்ப்பு மிகமிகக் குறைவு என்று தெரிவித்துள்ளது.
பிரதமர் போரிஸ் ஜான்சன் முதலில் லெய்சஸ்டர்ஷயர் பள்ளிகளுக்கு சென்று நோய்ப்பரவல் தடுப்பு நடைமுறைகளைப் பார்த்து உறுதி செய்தார். கல்வி அமைச்சர் உட்பட அமைச்சர்களும் பள்ளிகளுக்கு வருகை தந்து கோவிட் 19 தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ வசதிகள் ஆகியவற்றை உறுதி செய்த பின்னரே பள்ளிகள், கல்லூரிகள் திறப்புக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.
40% பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. ஸ்காட்லாந்து, வேல்ஸ், நாதர்ன் அயர்லாந்து ஆகியவை வேறுபட்ட தேதிகளில் திறக்கப்படுகின்றன. இங்கு சில பள்ளிகள் ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் பள்ளிகளுக்கு நடந்தோ, சைக்கிள் மூலமோ அல்லது இருசக்கர மோட்டார் வாகனம் மூலம் வர வேண்டும். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வீடுகளிலிருந்து பள்ளிகளுக்கு போக்குவரத்துக்காக 40 மில்லியன் பவுண்டுகளை கூடுதலாக பிரிட்டன் அரசு ஒதுக்கியுள்ளது.